நித்யாவின் தொழுகை, ஊட்டி குருகுலம்- கடிதம்

இஸ்லாமிய -சூஃபி மரபை அறிதல்

ஜெ,

இஸ்லாமியசூஃபி மரபை அறிதல் கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்த நித்யா தொழுகை செய்யும் ஓவியத்தை புகைப்படமாக உங்களுக்கு அனுப்பவே இதை எழுதுகிறேன்

நான் சென்ற மாதம் 12,13,14-ம் தேதிகளில் நாரயண குருகுலம், ஊட்டியில் நடந்த குரு பூஜை மற்றும் குரு நித்ய சைதன்ய யதி பிறந்து நூறாவது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு மூன்று நாட்கள் ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். முதல் நாள் மாலை வரை டாக்டர் ஜெகன் மற்றும் தாமரை கண்ணன்அவினாசி இருந்துவிட்டு கிளம்பினர். கேரளா மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். படுக்கவே இடமில்லை. எதிரில் இருந்த கெஸ்ட் ஹவுஸை வாடகைக்கு எடுத்து, அதிலும் ஆட்களை தங்க வைத்தார்கள். நானும் அதில் தான் தங்கியிருந்தேன். அனைவரும் மலையாளிகள். நான் மட்டுமே உள்ளூர். 

சௌகத் எழுதிய ஹிமாலயத்தில் உடன் பயணியான காயத்ரி அவர்களையும், உங்கள் கட்டுரைகளில் மட்டுமே படித்திருந்த தியாகி சாமி, வியாசா மாஸ்டர் ஆகியோரை முதல் முறை சந்தித்தேன். சுவாமி முனி நாரயண பிரசாத் எழுதிய ‘Pure Philosophy simplified for youth’ புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். கலீல் கிப்ரான் எழுதி, நித்யா மலையாளத்தில் மொழிபெயர்த்தமானுட மைந்தன் ஏசுஎன்ற சிறிய புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று தான் இருந்தது. டாக்டர் ஜெகன் வாங்கி என்னிடம் படித்துவிட்டு தரும்படி கொடுத்துவிட்டார்.

இந்த வருடம் ஊட்டியில் அதீத வெயில். மழையே பெய்யவில்லை என்றார்கள். நான் இருந்த முதல் இரண்டு நாட்களும் நல்ல மழை. ஆனால் குளிர் குறைவாகவே இருந்தது. கொஞ்சம் மூடுபனி. இரவில் வானத்தை மின்னல்கள் வரைந்து காட்டிக் கொண்டிருந்தன. மூன்று நாட்களும் கேரள சாப்பாடு. இரவில் பெரிய அரிசி சுடுகஞ்சியும், பயிரும் அந்த குளிருக்கு சுவையாக இருந்தது. பிரேயர் ஹாலில் தொடர்ந்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். அதிகமும் நித்யாவின் சமாதியில் அமர்ந்து அவர் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் ஶ்ரீநிவாசன் மாமாவின் நித்ய சைதன்யம்மில் இருந்த கட்டுரைகளையே படித்து கொண்டிருந்தேன்.

ஆசிரமம் எங்கும் பல வண்ணங்களில் மலர்கள் மலர்ந்திருந்தன. மூன்றாம் நாள் நித்யாவின் சமாதியை மலர்களால் அலங்கரித்தோம்நடுவில் யின்யான் முத்திரை மலர்களாலேயே வரையப்பட்டிருந்தது. அதை புகைப்படம் எடுக்காமல், மனத்தில் இருத்திக் கொண்டேன். ஒரு மாபெரும் விருட்சத்தில் மலர்ந்த மலரின் தேனை மட்டும் அருந்திய சிறு பறவை ஒன்று உள்ளிருக்கிறது.

பூக்களுக்கு அடியில் இருக்கும் தேனும், மகரந்தமும் போல நித்யா உள்ளிருக்கிறார் என நினைத்து கொண்டேன். பூரண மங்கல உணர்வு. அன்று நிகிதா மற்றும் மீனாம்பிகை வந்திருந்தனர். ஆசிரமத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தேன். லைப்ரரியில் சுற்றியும் மாட்டப்பட்டிருந்த படங்களை பார்த்து கொண்டிருந்தேன். ஒரே ஒரு பெண் படம் மாட்டப்பட்டிருந்தது. அது சிமோன் தி பொவாவின் படம். நீலி மின்னிதழில் விக்னேஷ் ஹரிஹரன் அவர் பற்றி எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அங்கிருந்து திரும்பி நடந்து வரும் வழியில் வியாசா மாஸ்டரிடம் இளைஞர் ஒருவர் what is Vedanta? என்றார், வியாசா மாஸ்டர் ‘Philosophy Starts with a question, What’s your question? என்றார். அவர்களை கடந்து வந்துவிட்டேன்

ஒரு ஓவியர் வந்திருந்தார். பார்க்க கௌபாய் போல உடையணிந்திருந்தார். அவர் வரைந்த ஓவியங்களை செடிகளில் மாட்டி வைத்திருந்தார். கிறிஸ்து பெண்களுடன் காதல் செய்வது போலவும், புத்தர் ஓவியங்களுமே அதிகமும் இருந்தது. நான் அவரிடம் பேசினேன். அவர் ஒரு மலையாளி, இந்து. தமிழ் திக்கி திக்கி பேசினார். எதையும் கோர்வையாக பேச முடியாத கலைஞன் என்று தெரிந்தது. அவரிடம் உங்கள் படங்களில் ஏன் இந்து தெய்வங்களே இல்லை? என்றேன். அவர் அலட்சியமாக, அங்க எல்லாம் மாத்தி மாத்தி சண்டை தானே நடக்குது? எனக்கு உள்ள இருந்து அது எதுவும் வர்ரதில்லை என்றார். 

அவர் என்னை சமையலறைக்கு அழைத்து சென்று ப்ளாக் டீ போட்டுத் தந்தார். அப்போது அங்கு அமருமிடத்திற்கு எதிரில் தான்நித்யா தொழுகை செய்யும் ஓவியம்பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. யாரோ சூஃபி ஞானி என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் இளமையான நித்யாவின் முகத்தில் முடி பறந்து கொண்டிருந்தது. பாலை வனத்தின் விரிவும், வானமும், காற்றும், மென்மையாக உள்ளடங்கிய பல நுட்பமான நிற வேறுபாடுகளும், அதில் அரைக்கண்கள் மூடி ஏதோ மயக்க நிலையில் இருப்பது போல நித்யா தொழுகை செய்து கொண்டிருந்தார். அருகே சென்றால் பாலைவனத்தில் பூத்த ரோஜாவின் மணமும், சந்தனத்தின் வாசமும் ஓவியத்திலிருந்து எழுந்து வருமோ என்கிற பிரம்மை ஏற்பட்டது. 

நித்யாவின் படங்கள் மற்றும் வேறு சில ஓவியங்களை பார்த்திருந்தேன். ஆனால் இந்த ஓவியம், இதிலிருக்கும் நித்யா என்னை ஏதோ செய்தார்.  ‘வைரக்கற்கள் பதித்த உறைகொண்டு மூடப்பட்ட கூரிய வாள்வைத்திருக்கும் சுல்தான் அல்லவா இவர். அது நித்யா மட்டுமா என்ன? இந்த மண்ணின், பண்பாட்டின் உச்ச சாரத்தின் வெளிப்பாடு அல்லவா இது. இங்கிருக்கும் அனைத்தும் அந்த ஒன்றின் வெளிப்பாடுகளே என்று பல ஆயிரம் ஆண்டுகளாக திரட்டி எடுத்து தரப்பட்டிருக்கும் ஞானத்தின் ஆகிருதியல்லவா இந்த ஓவியம். இன்றைய நிலைமையில், இது இந்தியா எனும் ஞான பூமியின் நெற்றியில் ஆணியடித்து தொங்கவிடப் பட வேண்டிய ஓவியம்

கோவில் கருவறையிலிருந்து கொண்டு வரும் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வது போல, எனது போனின் கண்களால் அதை ஒற்றி எடுத்து, அதன் முகத்தில் தொழுகை செய்யும் நித்யாவை பூசிக்கொண்டேன். இன்னும் அழிக்கவில்லை. உயிருள்ளவரை அழிக்கப் போவதுமில்லை. இன்றைய இந்தியா என்பது போன் தானே. அதன் நெற்றியில் இந்த ஓவியத்தை அறைந்து வைத்தாயிற்று என்ற திருப்தி ஏற்பட்டது

டீ குடித்துவிட்டு வெளியே வந்த போது, ஓவியர்  மரத்துண்டுகளை செதுக்கி செய்த ‘Wooden art’-களை காண்பித்தார். அதில் சூஃபி முகங்கள், எகிப்திய சாயல் கொண்ட முகங்கள், கழுகு, ஆண்பெண் முகங்கள் என பல தொங்கிக் கொண்டிருந்தது. அதில் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோண்றி கொண்டே இருந்தது. ஆனால் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன். மதியம் நித்யா சமாதியில் அமர்ந்திருக்கும் போது, அந்த ஓவியர் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு சென்றார். நான் அவரது ஒரு கலை பொருளையாவது வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆண்பெண் தலையில் கழுகு உள்ள மர ஓவியத்தை வாங்கலாம் என்று சென்று பார்த்தேன். ஆனால் கழுகின் வாய் லேசாக உடைந்திருந்தது. நான் பார்க்கும் போது பூரணமாக உணரும் ஒரு மர ஓவியத்தை வாங்க வேண்டும் என்றே தோன்றியது. ஒரு சூஃபி மர ஓவியம் முழுமையாக இருப்பதாக உணரச் செய்தது. ரெம்ப பிடித்தது. வாங்கி விட்டு, கிளம்பி சத் தர்சன் வந்துவிட்டேன்

அடுத்த நாள் சிறுகதை விவாதத்திற்காக உங்களதுபத்துலட்சம் காலடிகள்கதையை படித்து கொண்டிருந்தேன். படித்து முடித்த போது ஏதோ ஆழமான உணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். என்னவென்று சொல்லத் தெரியவில்லை. வேகமாக ஓடி, நேராக அறைக்குச் சென்று பைக்குள் பேப்பர் சுற்றி இருந்த சூஃபி மர ஓவியத்தை பிரித்துப் பார்த்தேன். கம்பீரமான, பூரணமான முகம். பார்க்க பார்க்கப் இன்னும் ஆழமான உணர்வு ஏற்பட்டது. இது தான் எம்..அப்துல்லா சாகிப். ஆம், ஆம் என்றது மனம். சட்டென்று அந்த முகத்தில் அப்போது தான் ஒன்றை கவனித்தேன். அதன் வலது கண்ணில் கீரல் விழுந்து லேசாக உடைபட்டு கலங்கியது போல் இருந்தது. அய்யோ! பூரணம் கெட்டு விட்டதே என்ற திகைப்பு ஒரு நொடி, மறு நொடியில் ஆண்டவா இதுலகெத்தேல் சாகிப்புமுலஇருக்காரு என்று உணர்ந்த மனம் பூரித்து தளும்பிக் கொண்டே இருந்தது.

பேரன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

இஸ்லாமிய மெய்யியல் அறிமுகப் பயிற்சி முகாம்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைIs it wrong to believe in a single God?
அடுத்த கட்டுரைசெபாஸ்டியன் கவிதைகள்