ஈழம், சிங்களம் – கடிதம்

தளிர்மேல் பாறை

அன்புள்ள ஜெ

ஈழப்படைப்பாளிகள் சிங்கள எழுத்துக்கள் சினிமாக்கள் பற்றி பேசியதில்லை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். டி.செ.தமிழன் என்பவரும், தர்மினி என்பவரும் முகநூலில் அவர்கள் அண்மையில் சிங்கள சினிமா, சிங்கள எழுத்துக்களைப் பற்றி எழுதியிருப்பதாகவும் அவர்களை நீங்கள் இருட்டடிப்பு செய்வதாகவும் எழுதியிருக்கிறார்கள்.

(அவர்களின் மொழிநடை வசை சார்ந்ததாக உள்ளது. பின்னூட்டங்களும் அப்படித்தான். ஆகவே இணைப்பைப் பகிரவில்லை)

ஈழ எழுத்தாளர்களில் எம்.ரிஷான் ஷெரீப் அதிகமாக சிங்கள எழுத்துக்களை அறிமுகம் செய்து வருகிறார். மலேசியாவின் இலக்கியத்தை வல்லினம் குழுவினர் அறிமுகம் செய்துவருகின்றனர். உங்களுக்கும் அவை தெரிந்திருக்கும்.

முன்னர் செங்கை ஆழியான் மொழியாக்கத்தில் சிங்களச் சிறுகதைகள் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. அனுஷா சிவலிங்கம் சிங்களச் சிறுகதைகளை மொழியாக்கம் செய்துள்ளார். நம் அயலவர் என்று ஒரு தொகுப்பு வந்துள்ளது. ஆனால் இவையெல்லாம் ஒருவகையான உதிரி முயற்சிகளே ஒழிய ஒரு தொடர் உரையாடலும் கவனிப்பும் நிகழவில்லை என்பது உண்மையே.

ஜே.எம்.ஆர், ரவீந்திரன்

அன்புள்ள ரவீந்திரன், ’

அண்மைக்காலமாக சிங்கள எழுத்துக்களையும் சினிமாவையும் தமிழர்கள் கவனிப்பது தெரிந்ததுதான். நானே அவற்றைப்பற்றி எழுதியுள்ளேன். ரிஷான் ஷெரீஃப் என் தளத்திலேயே எழுதியுள்ளார். மலேசியாவில் வல்லினம் குழு உருவாக்கும் உரையாடலையும் அறிவேன். அவர்கள் வழியாகவே சென்ற விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டார்.

நான் கூறியது சென்ற எழுபத்தைந்தாண்டுக்காலப் பொதுச் சித்திரம். அறியப்பட்ட விமர்சகர்கள், அறிவியக்கவாதிகள் என்ன பேசினார்கள் என்பதுபற்றி. என்னென்ன முக்கியமான நூல்கள் வெளிவந்துள்ளன என்பது பற்றி. முகநூலுடன் எனக்கு உறவில்லை. அவற்றில் பலர் அண்மைக்காலமாக எழுதியிருக்கலாம். நல்லெண்ணத்துடன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றால் நல்லது, சிறப்பு, தொடரட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்துமதத்தை கட்டிக்கொண்டு அழுகிறேனா?
அடுத்த கட்டுரைஅக்னிபுரீஸ்வரர் ஆலயம்