இறகிசை, கடிதம்

இறகிசைப் பிரவாகம்: வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்

130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகளை கவிஞர் இரா. கவியரசு தொகுத்து சிறகிசைப் பிரவாகம் என்ற பெயரில் தேநீர் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலை வாசித்தேன்

இந்நூலில் க.நா.சு, ஞானக்கூத்தன், கலாப்பிரியா தொடங்கி கல்யாண்ஜி, எம்.யுவன், சுகுமாரன் எனத் தொடர்ந்து இளங்கவிஞர்களான மதார், ஆனந்த் குமார் வரை அத்தனை முக்கியமான கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு கவிஞருக்கும் வெவ்வேறான கோணமும் மொழியும் அழகியலும் அமைந்திருக்கும். உதாரணமாக ஒரே படித்துறையில் நின்றாலும் கல்யாண்ஜி பார்க்கும் தாமிரபரணி ஒரு தந்தை காண்பதைப் போலவும் விக்கிரமாதித்யன் பார்க்கும் தாமிரபரணி ஒரு சித்தன் பார்ப்பது போன்றும் நமக்குத் தோன்றும்

சிறகிசைப் பிரவாகம் நூலில் வெவ்வேறு அழகியலும் பார்வையும் கொண்ட கவிஞர்களின் உலகில் பறவைகள் என்னவாக விளங்குகின்றன என்பதைக் காண்பது மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. உதாரணமாக கவிஞர் செல்வசங்ரனின்  பறவையால் சாலைவெளியில் ஓடித் திரிகின்ற பேருந்தெதையும் நிறுத்தமுடியாது. ஆனால்,   வெளிர்நீலநிற வானை சாலையில் திடீரென தோற்றுவிக்க முடியும். கவிசர் வ. அதியமானின் குருவி

உச்சிப்பாறையின் பிரார்த்தனையையும் அடிவாரத்துக் கூழாங்கல்லின் பிரார்த்தனையையும் கொத்தி வாய் கவ்விக் கொண்டு பறக்கிறது  

நான் இதுவரை காணாத பறவைகள் வெவ்வேறு வேடம் பூண்டு சிறகசைத்து என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. சில விசும்பவும் வைக்கின்றன. கவிஞர் அழகிய பெரியவனின் சிட்டுக்குருவியின் உண்மை இறக்கையை உலோகத்தின் போலி இறக்கைகள் முறித்துவிட அது குரோட்டனின் வேரில் புதைக்கப்படுகிறது. உயரம் வேண்டிச் சீறும் கவிஞர் சல்மாவின் பறவை நெகிழ்ந்து கொடாத மேகத்தின் கூர்விளிம்பில் சிக்கி கிழிபட்டு வானவில்லின் எட்டாவது வண்ணமாய் குருதி சொட்டுகின்றது

இந்த நூலை வாசித்தபின் வானில் தெரியும் ஒவ்வொரு பறவையையும் இது எந்தக் கவிஞரின் பறவை என ஒருகணம் சிந்திக்கத் தொடங்குவோம் எனத் தோன்றுகிறதுகவிஞர் ந. பெரியசாமியின் மூதாதைப் பறவையை யாரோ ஒருவன் அழைத்துக் கொண்டேயிருக்கிறான் உணவூட்டலுக்கு. வே.நீ. சூர்யா வானத்தையோ பறவையென்பதையோ மறந்து உட்கார்ந்திருக்கும் பறவையை கையில் தூக்கி பறக்கவிடுகிறார்மீண்டும் அதேயிடத்திற்கே வந்துகொண்டிருந்தபோதும்  நிறுத்தாமல்

இந்நூல், இது வரைக்கும் பறவைகளை பார்த்ததே இல்லையே எனும் குற்றவுணர்வை பலருக்கு ஏற்படுத்திவிடக்கூடும். கல்யாண்ஜி இரண்டு விதமான பறவைகளை பற்றி விவரிக்கிறார். எம். யுவன் பச்சைக்கிளி என்பது எவற்றையெல்லாம் குறிக்கும் என விவரிக்கிறார். இவ்விருவரின் கவிதைகளும் அடடா என ஒருவித பரவசத்தை அளித்தன

 இப்படியே சொல்லிக்கொண்டு போனால் அனைத்து கவிதைகளையும் சிலாகிப்பது போலாகிவிடும். மரத்தின் மீது விதையைத் தூவி பறக்கிற கவிஞர் மதாரின் பறவை மரத்தின் மேல் மரத்தின்மேல் மரம் வளரும் அடுக்குமாடி குடியிருப்பை கனவு காண்கிறது. கவிஞர் இசையின் பறவையோ புல்வெளியும் கருவானமும் பாடகனும் பார்த்துக் கொண்டிருப்பவனும் சேர்ந்து பறக்க, பாட்டை தூக்கிக் கொண்டு பறக்கிறது. இம்மாதிரிக் கவிதைகளை சிலாகிக்காமல் எப்படிக் கடக்க முடியும்.

சில  தலைப்புகளே கவிதையை மேலும் மேலும் விரித்துக் கொள்வதற்கான அகத்தூண்டியாக உள்ளன. ஜெ. பிரான்சிஸ் கிருபாவின்ஆயிரம் சிறகுள்ள பறவைமற்றும் சந்திரா தங்கராஜின்  “தானியங்களுக்கு காவலிருக்கும் பட்சிகள்கவிதைகளை அதன் தலைப்புகளே இன்னும் மேலே தூக்கிச் செல்கின்றன.

இறகிசைப் பிரவாகம் நூலிலுள்ள பறவைகள் ஒவ்வொன்றும் அதை எழுதிய கவிஞர்களின் பெயரை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு பறக்கின்றன. அதைப் போன்ற  பறவைகள் நம் வாழ்வில் எப்போதாவது எதிர்ப்படும்போது அக்கவிஞர்களின் பெயரை மனதில் மீட்டிக் கொள்வதோடு இந்த நூலினையும் எண்ணிக் கொள்வோம்பெருமுயற்சி எடுத்து தொகுத்த கவிஞர் இரா. கவியரசுவிற்கு என் வாழ்த்துகள்

அன்புடன்

கா. சிவா

முந்தைய கட்டுரைFreedom of Speech, till whither?
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா, எதிர்வினைகள்