வணக்கம் ஜெ,
‘நீங்கள் மதச்சார்பாளரா?’ என்ற தலைப்பில் நீங்கள் பேசியிருக்கும் வீடியோவைப் பார்த்தேன். கிட்டத்தட்ட அந்த உரை மனப்பாடமே ஆகிவிட்டது.
சில நேரடிக் கேள்விகளுக்கும், பல மறைமுகக் கேள்விகளுக்கும் நான் சொல்லவேண்டிய பதில் அது. தவிர, கேள்வியே கேட்காமல் தன்னிச்சையாக அனுமானித்துக் கொள்வோரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க, எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டியதும் அதுவே.
இந்த விபூதி வைத்திருப்பதால் உயரும் புருவங்களையும், எழும் கேள்விகளையும், சில ஏளனப் புன்னகைகளையும் சதா எதிர்கொள்வது சில சமயம் மிகுந்த அலுப்பைத் தந்துவிடுகிறது. வேறு சில சமயங்களில் அதுவே வேடிக்கையாகவும் இருந்தது உண்டு. ‘சைவ சாப்பாடு அந்தப் பக்கம்‘ என்று கேட்காமலேயே சொல்வார்கள். இப்போதெல்லாம் பதில் எதுவும் சொல்லாமல் எதிர்த் திசையில் நடக்கப் பழகிக்கொண்டுவிட்டேன்.
உங்கள் இந்த உரையிலிருந்து எந்தப் பகுதிகள் மட்டும் கத்தரித்து சுற்றில் விடப்படும் என்பதுவரை இப்போது புரிகிறது. ஒருவேளை இதனை எழுத்து வடிவில் வலைத்தளத்தில் பதிந்தால், அதே பகுதிகள்தான் ஸ்க்ரீன்ஷாட் ஆகும். ஒரு முழுமையான உரை இப்படித் துண்டாடப்படுவதை இத்தனை முறை கண்டபிறகும் நீங்கள் இந்தத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்குவதை வியப்புடன் பார்க்கிறேன். நன்றி.
என் பக்கம் நின்று நான் வாழ்த்துவோரை வாழ்த்து… இல்லாவிட்டால் நீ யாரென்று நானே தீர்மானிப்பேன் என்பதுதானே இன்று இங்கே இலக்கியத்திலும் அரசியலிலும் நிலவும் சூழலாக இருக்கிறது. ஓர் ஒற்றை, அது இல்லாவிட்டால் இன்னோர் எதிர் ஒற்றை. அவ்வளவுதான். இது அறிவுசார் வன்முறை ஆகாதா? இப்படித் திணிப்பது எந்த இலக்கிய, அரசியல் தத்துவத்தின் அடிப்படையிலாவது சரி என்று ஆகுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரும் பதில் சொல்வதே இல்லை. கேள்வி கேட்பதற்குமே அந்த ஒற்றைச் சார்புதான் அடிப்படைத் தகுதி என்றே நினைக்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள், மதிப்புக்குரிய ஆளுமைகள் என்று பலரும் இப்படி வட்டங்களுக்குள் நிற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு குமைச்சலுக்கு மத்தியில், ‘அவன் எப்படி கோஷம் போடப் போவான்?’ என்ற உங்கள் கேள்வி மிகுந்த ஆறுதலைத் தந்தது. இப்படித் தொகுத்துச் சொல்லும்போது கிடைக்கும் முழுமையைத் தவறவிடுவோருக்கு ஒரு கணம் அனுதாபப்பட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி!
மீண்டும்… நன்றி!
அன்புடன்,
தென்றல்.