நுகர்வோரும் பயில்வோரும்

The Desecration of Adam: jflaxman

வணக்கம் ஜெ

என் நண்பர் ஒருவர் முழுமையறிவு நிகழ்வுகளில் அவர் பங்கெடுக்கவேண்டாம் என நீங்கள் கூறிவிட்டதாகச் சொன்னார். அவ்வாறு சிலரை விலக்குவது எந்த அடிப்படையில்? அளவுகோல்கள் என்ன?

ஆர்

அன்புள்ள ஆர்,

எங்கள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவருமே மிகுந்த உவகையுடன் சொல்லியிருக்கும் பொதுவான அம்சம் அங்கே அவர்கள் அடையும் ’இணையுள்ளங்கள்’. ஒரே மனநிலையில் நின்று ஒன்றை கற்றுக்கொள்ளும் இன்பம். பலர் தங்கள் அறிவுச்சுற்றத்தை இங்கே கண்டடைந்ததாக உணர்கிறார்கள்.

அதுவே முதன்மையானது, அதை உருவாக்க மட்டுமே முயல்கிறோம். அதற்கு தகுதியானவர்களை உள்ளே கொண்டு வருவது போலவே ஒவ்வாதவர்களை விலக்குவதும் முக்கியம். அதில் சமரசம் இல்லை. ஏனென்றால் இது வணிக நோக்கம் கொண்ட நிகழ்வு அல்ல.

எவ்வகையானவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள்? நுகர்வுமனநிலை கொண்டவர்கள் மட்டுமே தவிர்க்கப் படுகிறார்கள். இன்று நாமனைவருமே வெறும் நுகர்வோர் ஆக மாற்றப்பட்டுள்ளோம். விளம்பரங்கள் நம்மிடம் ‘நுகர்வு, மேலும் நுகர்வு!’ என சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நம் நுகர்வை மேலும் நுட்பமானவையாக ஆக்குவதாகவும், நமக்கு மேலும் மேலும் வசதிகளை அளிப்பதாகவும் அவை கூறுகின்றன.

ஒரு சாதாரண பல்துலக்கும் தூரிகை வாங்குவதென்றால்கூட விதவிதமான வண்ணங்கள், வடிவங்கள், தனித்தனி வசதிகள் சந்தையால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை நுகர்வதே இன்பம் என்றும், அவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்றும் நம்பச் செய்யப்பட்டுள்ளோம். அவற்றை நுகர்வதே கௌரவம் என்றும், ஆடம்பரம் என்றும் ,மகிழ்ச்சி என்றும் எண்ணவைக்கப் படுகிறோம்.

இதெல்லாமே நவமுதலாளித்துவம் உருவாக்கும் மாயங்கள் மட்டுமே. உற்பத்தி செய்து குவிக்கப்படும் பொருட்களை நாம் வாங்கும் பொருட்டு இவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மேலும் மேலும் நாம் நுகரவேண்டும் என்பதே நோக்கம். தேவையின் பொருட்டு நுகர்பவர் குறைவாகவே நுகர்வார். ஆணவம், ஆடம்பரம், வசதி, அழகுணர்ச்சி ஆகியவற்றின் பொருட்டு நுகர்பவர் முடிவிலாது நுகர்வார்.

மிகைநுகர்வு கொண்டவர் அதற்கேற்றபடி செலவும் மிகுந்தவர். அதற்கேற்ப அவர் கூடுதலாக உழைப்பார். அவ்வாறு மொத்தச் சமூகமும் வெறிகொண்டு உழைக்கிறது. அவ்வுழைப்பால் உற்பத்தி கூடுகிறது. உற்பத்தி கூடுவதனால் விற்பனையும் கூடியாகவேண்டும். விற்பனையைக் கூட்ட நுகர்வைப் பெருக்கவேண்டும். நுகர்வு பெருகினால் செலவு பெருகும். செலவை ஈடுகட்ட மேலும் மிகையாக உழைக்கவேண்டும் – இதுதான் இன்றைய வட்டம்.

இந்த வட்டச்ச்சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து, இதிலிருந்து விடுபட்டு ஒரு சொந்தவாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள் மட்டுமே எங்களுக்குத் தேவை. அவர்களைக்கொண்டு ஒரு தனிச்சூழலை உருவாக்கவே நாங்கள் முயல்கிறோம். ஆகவே நுகர்வோர் மனநிலை கொண்டவர்கள் எங்களுக்கு நேர் எதிரானவர்கள்.

நுகர்வோர்மனநிலை மூன்றுவகையில் வெளிப்படும்.

அ. இப்பயிற்சிகளை ஒரு வணிகச்சேவை அல்லது நுகர்வுசேவை என கருதி, ஒரு நுகர்வோராக இதை மதிப்பிடுவார்கள். அவர்கள் பேரம் பேசுவார்கள். நாங்கள் மாணவர்கள் மற்றும் பணம் கட்ட வசதியற்றோருக்கு இலவசமாகவே இடமளிக்கிறோம். ஆனால் ஒருவர் பேரம்பேசினால் அவர் ஏற்கத்தக்வர் அல்ல. அந்த மனநிலையே எங்களுக்கு ஒவ்வாதது. பேரம் பேசி கல்வியை வாங்க முடியாது, ஏனென்றால் கல்வியின் அளவு என்பது அளிக்கப்படுவது அல்ல, பெறப்படுவது. எதையும் பெறாத ஒருவர் தனக்கு கல்வி அளிக்கப்படவில்லை, பணத்துக்கான மதிப்பு கிடைக்கவில்லை  என்றே சொல்லிவிட முடியும்.

ஆ. சேவையின் மதிப்பை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை ‘வாங்கலாமே’ என நினைப்பார்கள். ஆகவே என்ன வகையான பயிற்சிகள் உள்ளன, பாடத்திட்டம் என்ன, ஆசிரியரின் தகுதி என்ன என என கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். நல்ல நுகர்வோர் என்றால் ஏராளமான கேள்விகளைக் கேட்கவேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள். ஒரு சேவையை விற்பவர்கள் சலிக்காமல் அக்கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

நாங்கள் செய்வது விற்பனை அல்ல. ஆகவே அத்தனை கேள்விகளுக்குப் பதில் சொல்லுமளவுக்கு எங்களிடம் ஆள்வசதி இல்லை. அத்தனை கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரு விற்பனையாளர் அக்கேள்வி-பதிலுக்கும் சேர்த்தே லாபம் வைத்திருப்பார் . எங்கள் பணி அத்தகையது அல்ல.

ஓர் ஆசிரியர் எவ்வகையில் எதைக் கற்பிக்கப்போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆசிரியரின் தகுதியை மட்டுமே நாங்கள் பார்க்கமுடியும். கல்வி என்பது அங்கே தன்னியல்பாக நிகழ்வது. அது ஆசிரியர் அளிக்கும் கட்டணச் சேவை அல்ல. கற்பவரின் தகுதி, கவனம் ஆகியவையும் அங்கே முக்கியம். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு இன்னின்ன நன்மைகளை அளிக்கமுடியும் என்று நாங்கள் சொல்லமுடியாது.

இ. தங்களுக்கான தனிவசதிகள், தங்கள் தனித்தேவைகளை சொல்பவர்களை தவிர்க்கிறோம். அது நவீன நுகர்வோரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மனநிலை. அவர்களின் ரசனையும் தேவையும் மிக நுணுக்கமானவை என நம்புகிறார்கள். ஒருமுறை ஒரு சினிமா நண்பர் பற்பசை கொண்டுவர மறந்துவிட்டார். நட்சத்திர விடுதியில் பற்பசை இருந்தது. ஆனால் எனக்கு ‘ஆரஞ்சுச்சுவை கொண்ட பசைதான் வேண்டும். அதுதான் என் வழக்கம்’ என அடம்பிடித்தார். அப்பற்பசை வந்து அவர் பல்தேய்க்க இரண்டு மணிநேரம் ஆகியது. அவ்வளவு நேரம் அவர் அதற்காகவே பாடுபட்டார். இருபதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். பதற்றம், எரிச்சல்.

இந்த மனநிலை எந்தவகையான கற்றலுக்கும் எதிரானது. இது ஒரு பெரும் அடிமைத்தனம். கல்வி என்பது விடுதலை வழியாக அடையக்கூடியது. மருத்துவ வசதி போன்றவை வேறு. ஆனால் ஆடம்பரம், தனிச்சுவை சார்ந்த வசதிகளைக் கோருபவர் நுகர்வோர் மட்டுமே. அவர் வணிகச்சேவைகளை மட்டுமே நாடமுடியும்.

அவர்களை ஏன் தவிர்க்கிறோம் என்றால் அவர்கள் கொண்டுள்ள அம்மனநிலையை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பதனால்தான். நுகர்வு மனநிலை கொண்டவர்களிடம் இருக்கும் பொது இயல்பு இது. தாங்கள் நுட்பமான நுகர்வோர், சூட்டிகையான நுகர்வோர் என்பதை அவர்கள் பிறரிடம் காட்டிக் கொண்டே இருப்பார்கள். இனிமேல் கவனியுங்கள், நுகர்வோர் இரண்டே தலைப்பில்தான் பேசுவார்கள். பொருட்களை எப்படி நுணுக்கமாக ஆராய்வது, எப்படி பேரம்பேசுவது. தங்களை எவரும் ஏமாற்ற முடியாது என்பதையே வெவ்வேறு வழிகளில் சொல்வார்கள்.

அது அவர்களின் மனநிலை அல்ல. அந்த மனநிலையைத்தான் விளம்பரங்கள் வழியாக வணிகர்கள் உருவாக்குகிறார்கள். விளம்பரங்களை கவனியுங்கள், அவை நுகர்வோரிடம் அவர்களின் நுட்பமான தனிரசனைகள் தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. ‘உங்களை எவரும் ஏமாற்றமுடியாது’ என்று சொல்கின்றன. தரம்குறைந்த பொருளை முகச்சுளிப்புடன் தள்ளி ஒதுக்கி ’தரமான’ பொருளை முகம் மலர்ந்து எடுத்துக்கொள்ளும் நுகர்வோர் நம் விளம்பரங்களில் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

’நுட்பமான, சூட்டிகையான நுகர்வோர்’ என்பது வணிகர்களால் விளம்பரங்கள் வழியாக உருவாக்கப்பட்ட ஓர் உருவகம். முற்றிலும் வணிகப்பொய் அது. அதை தங்களுக்கென எடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள் பலகோடிப்பேர். அவர்கள் மிகப்பெரிய ஏமாளிகள். அவர்கள் அந்த நுட்பத்துக்கு அளிக்கும் விலை பலமடங்கு. சாதாரணப் பற்பசைக்கும் ஆரஞ்சுச் சுவைகொண்ட பற்பசைக்கும் இடையே விலைவேறுபாரு எட்டு மடங்கு. பயன்பாடு முற்றிலும் நிகரானது.

அந்த கூடுதல் விலையைக் கொடுக்க உழைப்புச்சுழற்சியில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையின் எல்லா மெய்யான இன்பங்களையும் இழக்கிறார்கள் இந்த மிகைநுகர்வோர். அவர்களுக்கு அழகனுபவம் இல்லை, இயற்கையின் அனுபவம் இல்லை, கலையின்பம் இல்லை, கற்றலின் இன்பமும் இல்லை. நவீன உற்பத்திப் பண்பாட்டின் உருவாக்கங்களான பேதைகள்.

அப்பேதைகள் தங்களை நுட்பமும் சாமர்த்தியமும் கொண்டவர்களாக எண்ணிக் கொள்வதனால் பேசிக்கொண்டே இருப்பார்கள். சூழல் மேல் ஒவ்வாமையை வெளிப்படுத்துவார்கள். அதிருப்தி கொண்டவர்களாகவே எப்போதும் இருப்பார்கள். தன் தகுதிக்குரிய பொருள் இன்னும் கிடைக்கவில்லை என்னும் பாவனை கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்கள் எச்சூழலிலும் அதிருப்தியை, மகிழ்ச்சியின்மையை உருவாக்கிவிடுவார்கள்.

அவர்கள் நோய்த்தொற்று கொண்டவர்கள். கல்வி நிகழுமிடங்களில், ஆன்மிக மையங்களில் அவர்கள் பெரிய தடை. பொதுவாகவே நம் வாழ்க்கையில்கூட அத்தகையவர்களை கூடுமானவரை தவிர்த்துவிடுவதே நல்லது. ஏனென்றால் நுகர்வுநோய் என்பது மிக ஆபத்தான தொற்று,.நாம் எவ்வளவு தெளிவானவராக இருந்தாலும் நம்மையறியாமலேயே அந்த நோய் நம்மில் தொற்றிவிடும்.

ஒருமுறை இந்தியாவின் முக்கியமான திரைஒளிப்பதிவுக் கலைஞர் ஒருவருடன் ஓர் உயர்விடுதியில் உணவகக்கூடத்தில் ஒரு காபி அருந்தச் சென்றேன். அங்கே ஒரு வட இந்திய நடுவயது ஆள் அமர்ந்திருந்தார். பெரும்பணக்காரர் என அவர் உடலே சொல்லிக்கொண்டிருந்தது. மூன்று மடிப்புத்தாடை, மொழுமொழு முகம். சிவப்பு உதடுகள், பனிப்படலம் போன்ற கண்ணாடி, உயர்தர உடை, உயர்தர வாட்ச்.

அத்தனைக்கும் மேல் மாறாத நிறைவின்மை கொண்ட முகம். அவருக்குத் தேவை ஒரு ஆம்லெட். அதில் மஞ்சள்கரு இருக்கலாகாது. நொறுங்கிய வெங்காயமும் பச்சை மிளகாயும் இருக்கவேண்டும். ஆலிவ் எண்ணையில் அதை செய்யவேண்டும். ஆனால் ஆலிவ் எண்ணையின் மணம் மாறுபடும் அளவுக்கு எண்ணை கொதிக்கக்கூடாது.  முட்டையை நன்றாக நுரைக்கவைக்க வேண்டும்.

அப்படியே பத்துப்பதினைந்து நிபந்தனைகள். தன் தேவையை சமையற்காரரிடம் சொன்னார். ஆம்லெட் வந்தது.அதை பார்த்துவிட்டு சரியாக வரவில்லை என திரும்ப அனுப்பினார். அடுத்த ஆம்லெட். அதுவும் சரியில்லை. அடுத்த ஆம்லெட். தொட்டுப்பார்த்தும் முகர்ந்தும் அதிருப்தி அடைந்துகொண்டே இருந்தார். ஆனால் பொறுமையிழக்கவுமில்லை.

அவர் நான்காவது ஆம்லெட்டுக்குச் சொன்னபோது ஒளிப்பதிவாளர் எழுந்துவிட்டார். “நாம் வெளியே போய் காபி சாப்பிடுவோம்” என்றார். “என்னால் இந்த ஆளை தாங்கவே முடியவில்லை. இவன் இருக்கும் அறைக்குள் நானும் இருக்க முடியாது. என் நரம்புகள் உடைந்துவிடும்”

நான் அவருடன் வெளியே வந்து அமர்ந்துகொண்டேன். காபியை அங்கே குடித்தோம். அவர் வெயிலின் காதலர். சூரிய ஒளியில் ஒரு குறிப்பிட்ட வண்ணம் உருவாவதற்காக மணிக்கணக்காக காத்திருப்பவர். திரும்பத் திரும்ப காமிராவில் அதை சரியாக அள்ள முயல்பவர். அதற்காக அவர் ஒரு பெரு ம்தவம் செய்வதுபோலத் தோன்றும்.

இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடென்ன என உணர்ந்தவர்களே எங்களுக்குத் தேவை. அவர்கள் மட்டுமே தேவை.

 

ஜெ

முந்தைய கட்டுரைஜெயந்தி நாகராஜன்
அடுத்த கட்டுரைஇரு பெருநிலைகள் உரை