முழுமையறிவு என்னும் யூடுயுப் பக்கத்தில் தங்களது ஒரு காணொளியை கண்டேன், அனைத்தையும் கற்று அறிதல் அதாவது ஒரு நுண்ணுயிரியின் அறிவைக்கூட கற்றறிய இயலும் என்றால் அதையும் கற்கவேண்டும் என்றீர்கள். அவ்வாறு அறிவின் முழுமையை சென்று அறிதலே ஞான மார்க்கம் என்றீர்கள். அனைத்தையும் கற்றலின் வழியாகவே ஒரு முழுமையான ஞானத்தை அடைய முடியுமா? அவ்வாறு இயலும் என்றால் அனைத்தையும் கற்றல் சாத்தியமா?
மேக்சின்
அன்புள்ள நண்பருக்கு,
ஒரே ஒரு குறிப்பிட்ட துறையில் மேதை எனப்படுபவர்கூட அத்துறையின் ஒரு சிறு பகுதியையே அறிய முடியும். அதாவது ஐன்ஸ்டீனேகூட இயற்பியலில் ஒரு சிறு பகுதியை அறிந்தவர்தான். அப்படியென்றால் எல்லா துறைகளிலும் ஒருவர் முழுமையான அறிவை பெற முடியுமா என்ற வினாவுக்கே இடமில்லை.
மனித மூளை என்பது பலகோடி நியூரான்களின் தொகை. அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக அறிதலை அடைபவை என்று நரம்பியலாளர் ரிச்சர்ட் ரீஸ்டாக் தன் நூலில் சொல்கிறார். பலகோடி மானுடமூளைகள் இணைந்தது மானுட சிந்தனை. அதை ஒற்றை மூளை என்று கொண்டால் நம் ஒவ்வொருவரின் மூளையும் அதில் ஒரு நியூரான் மட்டுமே. மானுடஞானம் போல இங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான ஒட்டுமொத்த ஞானம் உள்ளது. விலங்குகள், மீன்கள், பூச்சிகள். கிருமிகள், தாவரஙள் ஒவ்வொன்றுக்கும். அவையனைத்தும் இணைந்துருவான இயற்கையின் அறிவு ஒரு மாபெரும் மூளை. இயற்கையின் அறிவு என்பது இப்பிரபஞ்சத்தின் அறிவின் ஒரு மீச்சிறு துளி. இந்த தன்னுணர்வு கொண்டவன் ‘எல்லாவற்றையும் அறிதல்’ என்ற எண்ணத்தையே அடையமுடியாது.
எனில் அடைவது எதை? முழுமையறிவென்றால் என்ன?
கடல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நாம் அள்ளும் கைப்பிடி நீர்தான் நமது கடல். இந்த பூமியில் எண்ணற்ற உணவுகள் இருந்தாலும் நாம் உண்பதே நமது உணவு. நாம் பேசுவது அதைப்பற்றி மட்டுமே. அந்தக் கைப்பிடியில் உள்ள நீர் சமநிலை கொண்டதாக, முழுமையானதாக இருக்கவேண்டும். அதைத்தான் முழுமையறிவு என்கிறோம். தற்செயலாக நம் கைக்கு ஒன்று சிக்கியமையாலேயே அது மட்டுமே உண்மை என நினைப்பதுதான் அறிவுக்கு எதிரான மனநிலை. நம்மால் முடிந்தவரை நம் கைப்பிடிக் கடலை முழுமைக்கடலின் சரியான ஒரு துளியென ஆக்கிக்கொள்ளுதலே முழுமையறிவு.
அறிவை அறிவின்மை சூழ்ந்துள்ளது என்னும் உருவகம் வேதாந்த மரபில் உண்டு. கருவை கருப்பை போல, தீயை புகை போல, கண்ணாடியை பிசுக்கு போல ,நீரை அது இருக்கும் கலம் போல, அறிவை அறிவின்மை மூடியிருக்கிறது, (நான்கு உவமைகளும் வெவ்வேறு கோணங்களில் அறியாமையை விளக்குபவை.) நம் அன்றாடத்தில் நாமறிந்தபடி நம் அறிவை எல்லையிடுபவை முக்கியமாக கீழ்க்கண்டவை
- நம் வாழ்க்கைச்சூழல், கல்விச் சூழல், அறிவுச்சூழல் ஆகியவை நம் அறிதலை தீர்மானிக்கின்றன. பிறப்பிலேயே பெரும்பகுதி தீர்மானமாகிவிடுகிறது. (கரு-கருப்பை)
- நம் தேவைகள், அச்சங்கள், விழைவுகள் ஆகியவை நம் அறிதலை வடிவமைக்கின்றன. நாம் அறிவுத்தேடல் கொள்வதே இதற்காகத்தான். (தீ-புகை)
- நம் சுய மையப் பார்வை. நாம் நம் இனம், மொழி, தேசம், மதம் ஆகியவை சார்ந்த தன்முனைப்பை அடைந்து அதைக்கொண்டே அறிவை மதிப்பிடுகிறோம். நம் அறிவுத்திறன் மற்றும் ரசனைத்திறனை அறிவுக்கான அளவுகோலாக இயல்பாகவே கொள்கிறோம் (கண்ணாடி- பிசுக்கு)
- கடைசியாக, நாம் முன்னரே அறிந்த அறிவு நம் புதிய அறிவை தடைசெய்கிறது. பௌத்த மெய்யியல் இதையே முதன்மைத்தடையாக முன்வைக்கிறது . ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அறிந்ததினின்றும் விடுதலை என இதையே சொல்லிக்கொண்டிருந்தார். (நீர்- கலம்)
இந்த தடைகளைக் களைந்து நாம் அறிவதை முழுமையாக அறிவதுதான் முழுமையறிவு. நாம் ஒரு கோணத்தில் ஒன்றை அறிகிறோம், அதற்கு மறுபக்கங்களை அறிந்துகொள்வது அறிவை முழுமை செய்கிறது. நாம் ஒன்றின் ஒரு பகுதியை அறிகிறோம், அதன் மற்ற பக்கங்களை அறிவது அறிவை முழுமைசெய்கிறது. நம்மிடமிருக்கும் அறிவு எந்த அளவுக்கு முழுமையானதோ, பிழையற்றதோ அந்த அளவுக்கு நம் விடுதலை அமைகிறது.
ஞானமார்க்கம் என்பது கடைசியாக எய்தப்படும் ஒரு ஞானம் உண்டு என்றும், அதை எய்துவது வரை நாம் அஞ்ஞானத்தில் இருக்கிறோம் என்றும் கூறுவதில்லை. அடையுந்தோறும் விடுதலை அளிப்பதே ஞானம். மீச்சிறிய ஞானம்கூட அந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே. உங்களுக்குத் தெரியாத ஒன்று எவ்வளவு அச்சுறுத்துகிறது, துயரளிக்கிறது என்று பாருங்கள். அதை அறிந்ததுமே சட்டென்று நீங்கள் அடையும் விடுதலையை எண்ணிப்பாருங்கள். அவ்விடுதலையை அடைவதே ஞானமார்க்கம் எனப்படுகிறது. அது தொன்மையான சாங்கியம்- யோகம்- நியாயம்- வைசேஷிகம் ஆகிய தரிசனங்களின் வழி.வேதாந்தம் அதை ஏற்றுக்கொண்டு விரிவாக்கியது. பௌத்தம் முன்னெடுத்தது.
எந்த அறிவுப்பாதையானாலும் அதிலுள்ள மிகப்பெரிய இன்பம் என்பது சட்டென்று இரண்டு அறிதல்கள் மிகச்சரியாக இணைந்துகொள்வதை உணரும்போது உருவாகும் மகிழ்ச்சிதான். சாதாரணமான தொழில், கல்வி ஆகியவற்றிலேயே அப்படி எவ்வளவு அறிதல்களை அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என எண்ணிப்பாருங்கள். அப்படி ஒவ்வொன்றும் இணைந்துகொண்டே இருப்பதை அறிய அறிய நாம் விரிந்துகொண்டே இருக்கிறோம். அந்த விரிவே ஞானத்தின் பாதை.
ஞானத்தின் வழி என்பது ‘அறிந்துகொள்ளுதலில்’ மட்டும் இல்லை. ‘உணர்ந்துகொள்ளுதலிலும்’ உள்ளது. உங்கள் கைப்பிடியில் இருக்கும் நீரில் சட்டென்று நீங்கள் முழுக் கடலையும் உணர்ந்துகொள்ள முடியும். அந்த நுண்ணறிதல் நோக்கிச் செல்லவே எல்லா அறிதல்களும் உதவுகின்றன. ஏதோ ஓர் அறிதல் ஒரு கணத்தில் ஒரு குறியீடாகவோ, பிரதிநிதியாகவோ ஆகி ஓர் முழு உண்மையை உங்களுக்குக் காட்டும் அனுபவம் நிகழ்ந்தது உண்டு அல்லவா?
அறிந்து அறிந்து ‘இதுதான், இதுதான்’ என்றும் ‘இது அல்ல, இது அல்ல’ என்றும் செல்லும் வழியில் அந்த கண்டடைதல் அடிக்கடி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ‘அட!’ என்று வியக்கிறோம். ‘ஆ!’ என சொல்லழிகிறோம். அந்த கணங்கள் பெருகிக்கொண்டே இருந்தது என்றால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று பொருள்.
சிறுவயதில் ஒரு விளையாட்டை ஆடியிருப்போம். இருபதுபேர் சுட்டுவிரலைக்கொண்டு ஒருவனை தூக்குவது. உடலில் இருபது வெவ்வேறு புள்ளிகளில் தொட்டால் உடலை மிக எளிதாக தூக்க முடியும். தூக்கபட்டவன் காற்றில் மிதப்பவனாகவும் உணர்வான். அதேதான், எல்லா ஞானமும் இணைந்து மெய்ஞானமென்றாவதற்கான உதாரணம்.
ஜெ