அண்ணா நலமா , நலமுடன் இருக்க வேண்டுகிறேன்,
ரொம்ப நாட்களாக உங்களுக்கு எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு தலைப்பு அயல்நாடுகளில் தமிழ் சங்கம் .
எனக்கு எப்பொழுதும் அமெரிக்க தமிழ் சங்கங்களின் மேல் ஒரு ஒவ்வாமை இருந்துகொண்டே உள்ளது. இந்த தமிழ் சங்கங்களின் உண்மையான குறிக்கோள்கள் என்ன என்பது புரிவதே இல்லை .நான் பார்த்த வரையில் சினிமா பாடல்கள்தான் தமிழ் சங்கங்களின் தேசியக்கீதமோ என்று நினைக்க தோன்றுகிறது .
என் நண்பர் ஒருவர் அவரின் 4 வயது மகளுக்கு தமிழ் கலாச்சாரமும் தேவை என்று சேர்ந்தபோது , அவரின் மகள் அரிய வாய்ப்பாக மேடையில் கடைசி வரிசையில் rerelease மறு திரையிடல் ஆன கில்லி படத்தின் “அப்படி போடு அப்படி போடு” பாடலுக்கு அழுதுகொண்டு இடுப்பை ஆட்டும் வாய்ப்பை பெற்றாள் .
இந்த மேடையேறுவதில் இருக்கும் அரசியலும் அதிகம் , board மெம்பெர் குழைந்தைகள், நீண்டகால உறுப்பினர் குழைந்தைகள் முதல் வரிசையிலும் மற்றவர்கள் கடைசி வரிசையிலும் இருக்க வேண்டும். எல்லாரும் ஒரே விதமான கட்டணம் மேடையேறுவதற்கு செலுத்தவேண்டும் .கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே நான்கு பேரை சேர்த்துக்கொண்டு புதிதாக இன்னொரு தமிழ் சங்கத்தை துவங்குவது .
தமிழ் சங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உண்மையான தமிழ் கலாச்சாரமோ ,இலக்கியமோ , வரலாறோ தெரியுமா என்பது கேள்விக்குறியே .இவர்களின் அதிகபட்ச தமிழ் கலை வளர்ப்பு சிறுபிள்ளைகள் பறையை வைத்து ஒரு நிகழ்ச்சி மற்றும் ஒரு கரகாட்டம் .
நான் வாழும் சான் அன்டோனியோ மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான FeTNA எனும் Federation of Tamil Sangams of North America ஆண்டு கூடுகை நடைபெறுகிறது . இதில் தொழில் முனைவர்க்கான பயனை தாண்டி தமிழ் கலை , இலக்கிய, வரலாறு சார்ந்து உண்மையான முன்னெடுப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை .ஆல் இன் ஆல் ஆவுடையப்பன் என்னும் VJ வை கூப்பிட்டு (கோபிநாத் கட்டணம் அதிகமாக இருந்திருக்கவேண்டும் ) நீயா நானா போல ஒரு விவாதம் மற்றும் கண்டிப்பா ஆடலும் பாடலும் நடைபெறும்
நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று இருப்பதால் , தமிழ் சங்கங்கள் உண்மையாக எப்படி நடக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா ?
பின்குறிப்பு : இந்த வருட அக்டோபர் மாத அமெரிக்க இலக்கியமுகாமை எதிர்நோக்கி மற்றும் உங்களையும் அக்காவையும் சந்திப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா .
அன்புடன்
கோபி
அன்புள்ள கோபி,
தமிழ்ச்சங்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி எனக்கும் மிகக்கடுமையான எதிர்க்கருத்துக்கள் உண்டு. அதையெல்லாம் விரிவாக எழுதி அவர்கள்மீதான விமர்சனப்பார்வையை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். அவர்களால் அதன்பொருட்டு கடுமையாக வெறுக்கவும் படுகிறேன்.
என் விமர்சனங்கள் இவை
- அவர்கள் தமிழகத்திலுள்ள பொதுப் பண்பாட்டின் மிகக் கீழ்நிலையிலுள்ளவற்றை மட்டுமே தமிழ்ப்பண்பாடாக அமெரிக்காவில் முன்வைக்கிறார்கள். தரமற்ற சொற்பொழிவுகள், தரமற்ற கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நிகழ்த்துகிறார்கள்
- வணிக சினிமா சார்ந்து மட்டுமே அவர்களின் பார்வை செயல்படுகிறது. சராசரி சினிமாரசிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள். சினிமாவின் சீரழிந்த வெளிப்பாடாகவே எல்லா நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். தமிழ்ப்பண்பாட்டின் கலை, இலக்கியம், மரபு எதிலும் அவர்களுக்கு ஆர்வமில்லை. அவற்றை முன்வைப்பதுமில்லை. அவற்றைப் பற்றிய எளிய அறிமுகம்கூட அவர்களிடமில்லை. பெரும்பாலானவர்கள் தீவிரமான கலையிலக்கியச் செயல்பாடுகளுக்கு எதிரான மனநிலையும், ஏளனமும் கொண்டிருக்கிறார்கள்.
- அமெரிக்கச் சூழலில் தமிழர்களை ஒருங்கிணைப்பது மட்டுமே தமிழ்ச்சங்கங்களின் நோக்கம். ஆகவே தமிழ்ச்சங்கம் ஒருபோதும் எந்த அரசியலையும் கொண்டிருக்கக் கூடாது. அமெரிக்க அரசியலோ , தமிழக அரசியலோ, இந்திய அரசியலோ. ஏனென்றால் அது தமிழர்களிடையே பிளவுகளை உருவாக்கும். ஆனால் இவர்கள் தமிழகத்திலுள்ள சில்லறைக் கட்சியரசியலை அங்கே வளர்க்கிறார்கள். கட்சியரசியலின் காழ்ப்புகளை பேசுபவர்களை முன்வைக்கிறார்கள்.
- அமெரிக்கப் பண்பாடு, கலையிலக்கியம் ஆகியவற்றுடன் ஓர் ஆக்கபூர்வமான உரையாடலுக்கு அவர்கள் முயல்வதே இல்லை. அங்குள்ள தீவிரமான அறிவியக்கம் பற்றி முழுமையான அறியாமையே இவர்களிடம் உள்ளது. அங்குள்ள அறிவியக்கத்துடன் உரையாடவேண்டும் என்றல் இங்குள்ள தரமான அறிவியக்கத்தையே கொண்டுசெல்லவேண்டும். ஆனால் அதை இவர்கள் அறிந்திருப்பதில்லை
- இதன் விளைவாக இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளரும் தங்கள் குழந்தைகள் முன் மிகக்கீழ்மையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் இதற்கான முழுப்பொறுப்பையும் இச்சங்கங்கள் மேல் சுமத்த முடியுமா?
தமிழ்ச்சங்கங்களில் மெய்யாகவே நல்ல வாசிப்பும், ரசனையும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். என் நண்பர் வாஷிங்டன் பீட்டர் உண்மையான நல்ல நோக்கம் கொண்டவர். ஆனால் அவர் என்ன செய்ய முடியும்?
நம் மக்கள் சினிமா, பொதுக்கலாச்சாரம் தவிர எதிலுமே ஆர்வம் காட்டுவதில்லை. மிகக்குறைவான ஆர்வம் கூட அவர்களிடமில்லை. ஆர்வமில்லை என்பது மட்டுமல்ல எதிர்ப்பும் ஏளனமும்கூட உள்ளது. நம் மக்களிடம் வாசிக்கும் பழக்கமே இல்லை. எந்த மொழியிலும் எதையும் வாசிக்காத ஒருவகையான நவீன, தொழில்நுட்பத் தற்குறிகள் நம்மவர்கள்.
அது இயல்பு. நம்மில் பெரும்பாலானவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் அதிதீவிர பள்ளிப்பாடப்பயிற்சி மட்டுமே அடைந்தவர்கள். எளிமையான தொழிற்கல்வி மட்டும் கற்று அப்படியே வேலைக்குச் சென்றவர்கள். பண்பாட்டுக் கல்வி அறவே இல்லை,எந்த துறையிலும். மிக மிக எளிய தொழில்நுட்ப அடிப்படை உழைப்பாளிகள். அது கணிப்பொறித்துறையாக இருந்தாலும், பொறியியலாக இருந்தாலும், மருத்துவமாக இருந்தாலும். உதாரணமாக, பல உயர்நிலை மருத்துவர்களின் அறிவுத்திறனும் ரசனையும் எல்லாம் நம் பாமரரை விட கீழே நிற்பவை.
இவர்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும்? தமிழ்ச்சங்கம் என்பது ஒரு மக்களியக்கமாக, பெருவாரியான பங்கேற்பு கொண்ட அமைப்பாகவே திகழ முடியும். அப்படித் திகழ்ந்தால் மட்டுமே அது ஓர் இக்கட்டில் தமிழர்களுக்குக் குரல்கொடுக்கும் அமைப்பாகத் திகழமுடியும். அதன் வலிமை என்பது அதன் உறுப்பினர் எண்ணிக்கை, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கைதான். ஆகவே அவர்கள் மக்களை திரட்டியாக வேண்டும். அதற்கு மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுத்தாகவேண்டும்.
ஒரு சாதாரண நடிகர், ஓரு சில்லறை வேடிக்கைப்பேச்சாளர், டிவியில் அசட்டு நகைச்சுவை செய்யும் கூட்டம் அங்குள்ள மக்களை பெருவாரியாக கவர்கிறது. அவர்களைப் பார்க்க அம்மக்கள் வந்து குழுமுகிறார்கள். ஆனால் ஓர் எழுத்தாளர் வந்தால் பத்துபேர் கூட எட்டிப் பார்ப்பதில்லை. அப்படியென்றால் சங்க நிர்வாகிகள் என்ன செய்யமுடியும்? மக்கள் வந்தால்தான் நிகழ்வு பெரிதாகும், அவற்றுக்குத்தான் நன்கொடை கிடைக்கும், நன்கொடை கிடைத்தால்தான் அமைப்பு பெரியதாகும். அப்படி மக்கள் விரும்பும் நிகழ்வுகளை தவிர்த்தால் அவற்றை நிகழ்த்தும் வேறு கும்பல்களுக்கு பின்னால் மக்கள் செல்வார்கள். முதன்மை அமைப்புகள் வலுவிழந்து அழியும்.
அமெரிக்காவில் பல நகர்களில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் கிளைகளை இன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டு தோறும் முகாம்களை நடத்துகிறோம். விழாக்கள், சந்திப்புகள் என விரிவாகிக் கொண்டே செல்கிறோம். மிகத்தீவிரமான தத்துவமும் இலக்கியமும் பேசப்படுகிறது. ஆர்வம் கொண்ட ஒரு சிறு சுற்றத்தை திரட்டியிருக்கிறோம். அதன் பங்களிப்பும் பெரியது.
ஆனால் நாளை தமிழர்களுக்கு அமெரிக்காவில் ஒரு பொதுப்பிரச்சினை என்றால் எங்களுடைய இந்தச் சிறுகுழு என்ன செய்ய முடியும்? இதன் குரலுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? எங்கள் பங்களிப்பு என்பது தீவிரமான சிந்தனைக் களத்தில் நிகழ்வது, அதன் பயன் என்பது மெல்லமெல்லத்தான் உருவாகி வரும். ஒரு தலைமுறைக்குப் பின்னரே தெரியவரும். தமிழ்ச்சங்கம் போன்ற பெருவாரியான பிரதிநிதித்துவம் கொண்ட பெரிய அமைப்புகள் மட்டுமே உடனடியான பிரச்சினைகளில் ஏதேனும் செய்யமுடியும். ஆகவே தமிழ்ச்சங்கங்கள் வலுவாக, உள்முரண்கள் இல்லாமல் இருந்தே ஆகவேண்டும். அவற்றில் மக்கள்பங்கேற்பு இருந்தே ஆகவேண்டும். அந்த மக்கள் சினிமாக் கவற்சிக்கும் கீழ்த்தரக் கொண்டாட்டங்களுக்கும் மட்டும்தான் வருவார்கள் என்றால் வேறு வழியே இல்லை.
ஒன்று செய்யலாம். அந்த ‘பெருவாரியான’ மக்கள் பங்கேற்புள்ள நிகழ்வுகளுடன் கூடவே தீவிரமான கலையிலக்கியச் செயல்பாடுகளுக்கும் இடமளிக்கலாம். அவையிரண்டையும் இணைத்து ஒன்றாகச் செய்யக்கூடாது. பொதுக்கலாச்சாரக் கொண்டாட்டத்துக்காக வரும் கூட்டம் கலையிலக்கியவாதிகளை, சிந்தனையாளர்களை புறக்கணித்து அவமதிக்கும். (ஏற்கனவே ஃபெட்னா தமிழ்ச்சங்கங்களில் அதுவே நடந்துகொண்டிருக்கிறது.) கலையிலக்கியம், சிந்தனை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே வரும் சிறிய நிகழ்வுகளை தனியாக நிகழ்த்தவேண்டும்.
தீவிர நிகழ்வுகளுக்கு பங்கேற்பு குறைவாக இருக்கலாம், ஆனால் அவையே முக்கியம் என்னும் உணர்வு அமைப்பாளர்களுக்குத் தேவை. அவையே அடுத்த தலைமுறைக்கு உரியவை என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.
என்னென்ன செய்யலாம்?
- பொதுவாக நடத்தப்படும் திருவிழாக்கள் தேவைதான், ஆனால் அதைவிட முக்கியத்துவத்துடன் அறிவார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும். அவற்றில் கூட்டம் இல்லையென்றாலும் நடத்தப்பட்டாகவேண்டும். பெருவாரியான நிகழ்வுகளின் நிதியை இதற்கு திருப்பிவிடலாம்.
- அடிப்படைத் தமிழ் கற்றுக்கொடுப்பது முக்கியம்தான். ஆனால் அதற்கிணையாகவே ஆங்கிலத்தில் கிடைக்கப்பெறும் தமிழ் நூல்கள் அங்குள்ள தமிழ் இளைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அவை எளிமையான அரசியல் சார்புள்ள நூல்களாக அல்லாமல், தரமான இலக்கியப்படைப்புகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளாக இருக்கவேண்டும். தமிழ்ப்பெற்றோரின் ரசனையும் அறிவுத்திறனும் மிகச்சாதாரணமானவை என்பது வெளிப்படை. அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடாது. முந்தைய தலைமுறையின் தனிப்பட்ட காழ்ப்புகள், தெரிவுகளுக்கு இடம்தராமல் மெய்யாகவே உலக அளவில் மதிப்புக்குரிய தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும் அடுத்த தலைமுறையினரை சென்றடையவேண்டும்.
- எந்தவகையிலும் அரசியலை நுழைக்கக்கூடாது. அரசியல்போல ஒரு சமூகத்தை பிளவுபடுத்தும் விசை வேறில்லை. எல்லா அரசியலுக்கும் இடம்கொடுக்கிறோம் என்ற பேரில் அரசியலை உள்நுழைத்தாலும் பிரச்சினையே உருவாகும். அரசியலற்ற பண்பாட்டு கூட்டமைவுகளாகவே இவை நிகழவேண்டும். மதம், சாதி சார்ந்த சார்புகளோ எதிர்ப்புகளோ இவற்றுக்குள் உருவாகவே கூடாது. அப்படிப்பட்ட பேச்சுக்களுக்குரியவர்கள் முன்னிலைப்படுத்தப்படலாகாது.
இன்று தமிழ்மக்கள் பெரும்பாலானவர்கள் ஊழியர்கள். வருங்காலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் தமிழ்மக்கள் அரசியதிகாரம், பொருளியலதிகாரம் நோக்கிச் செல்லக்கூடும். அப்போது இத்தகைய கூட்டமைப்புகளின் உதவி மிகவும் தேவைப்படும். அன்று தமிழர்கள் பண்பாட்டு ரீதியாகவும் தங்களை முன்வைக்கவேண்டியிருக்கும். அதற்கு இத்தகைய அமைப்புகளே பங்களிப்பாற்ற முடியும்.
அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் போக்குகளுடன் உடன்பட என்னால் இயலவில்லை, என் இயல்புப்படி விமர்சனங்களை முன்வைத்தேன். நான் எழுத்தாளன் என்னும் நிலையில் அமைப்புகளை, பொதுப்பண்பாட்டை விமர்சிக்கும் தகுதியும் கடமையும் கொண்டவன். ஆனால் அவர்களின் எதிர்ப்புக்கும் காழ்ப்புக்கும் ஆளானேன். எந்த அளவில் என்றால் இன்று தமிழ் பண்பாட்டியக்கத்தின் முக்கியமான பகுதியாக அமைந்துள்ள தமிழ்விக்கி தொடங்கப்பட்டபோது அந்த வெளியீட்டு நிகழ்வுக்கு அந்த அமைப்புகளில் செயல்படுபவர்கள் கடுமையான தடைகளை உருவாக்கினார்கள். அது தங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது என்று கொண்டாட்டமிட்டனர். அவர்களை மீறி அதை வெற்றிகரமாக நிகழ்த்தினோம்.
தமிழ்ச்சங்கங்களின் தரவீழ்ச்சி, சில்லறைத்தனம் என்பது நம் சமூகத்தில் இருக்கும் சராசரித்தன்மையின் இயல்பான வெளிப்பாடுதான். பொதுச்சமூகம் எப்படி இருக்கிறதோ அப்படியே அமைப்புகளும் இருந்தால் இந்த தரம்தான் இருக்கும். இங்கே இந்தியாவிலேயே மும்பைத் தமிழ்ச்சங்கம், டெல்லி தமிழ்ச்சங்கம் என பல அமைப்புகள் உள்ளன. அவை அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களை விடவும் பெரியவை. பழைமையானவை. அவை அண்மையில் ஏதாவது உருப்படியாகச் செய்தன என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களாவது குறைந்தபட்சம் செயலூக்கத்துடனாவது உள்ளன, ஏதாவது செய்கின்றன.
சமூகத்தின் பொதுச்சராசரியை விட கூடுதலாக ரசனை, அறிவுத்திறன், எதிர்கால நோக்கு கொண்டவர்களால் சங்கங்கள் நடத்தப்படவேண்டும். அப்போதுதான் அவை முன்னேற்றவிசையுடன் இருக்கும். அத்தகைய தலைமை இல்லாமலாகும்போது சராசரிப்பார்வையே கொண்டவர்கள் தலைமைக்கு வருகிறார்கள். அப்போது இச்சங்கங்கள் பொதுக்கும்பலின் பொதுவான சராசரித்தன்மையை நோக்கி கீழிறங்கும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கோ.சாரங்கபாணி போன்ற பெருந்தலைவர்கள் வழிநடத்திய காலகட்டத்தில் அங்கிருந்த தமிழ்ச்சங்கங்கள் முன்னேற்றத்திற்கான விசையை அளிக்கும் சக்திகளாக இருந்தன. அவர்களின் மறைவுக்குப் பின் மெல்லமெல்ல அவை பொதுச் சமூகத்தின் சராசரித்தனத்தையே தாங்களும் வெளிப்படுத்த ஆரம்பித்து கீழிறங்கி அறிவியக்கத்துக்கு எதிரான சக்திகளாகவே இன்று ஆகிவிட்டிருக்கின்றன.
என்னதான் காழ்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்கினாலும் இத்தகைய விமர்சனங்கள் ஆக்கபூர்வமான மாற்றத்தை சிறிய அளவிலேனும் உருவாக்குகின்றன என்பதே நான் கண்டது. இந்தியாவில் இருந்து செல்பவர்கள் ஃபெட்னா போன்ற அமைப்புகளை போற்றிப்புகழ்ந்து மெய்சிலிர்த்து திரும்புவதே வழக்கம், அவர்களுக்கு இவர்கள் காட்டும் நன்றிக்கடன் அது. அத்தகையவர்களையே அவர்கள் அழைக்கவும் செய்தனர். அவர்களின் செயல்பாடுகள் மேல் நான் கடும் விமர்சனங்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்வைத்தேன். அவர்கள் என்னை வெறுத்தாலும் மெல்ல மெல்ல அவர்களின் செயல்பாடுகளில் ஆக்கபூர்வமான மாறுதல்கள் உருவாகியிருப்பதை காண்கிறேன். பாராட்டுக்குரியது அந்த மாற்றம்.
எதிர்காலக் கனவுகளும், தரமான ரசனையும், விரிவான வாசிப்பும், அறிவுத்திறனும் கொண்ட புதிய தலைமுறை உருவாகி இச்சங்கங்களை வழிநடத்தும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தே ஆகவேண்டும்.
ஜெ