மறைக்கபட்ட வரலாற்றின் கண்ணீர்.

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

பின் தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க

அன்புள்ள ஆசானுக்கு வணக்கம்,

பின் தொடரும் நிழலின் குரல் நாவல் படித்து முடித்ததும் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் எதுவுமே தோன்றவில்லை, மனம் வெறுமையாக இருந்தது. நாவல் அளித்த எண்ணங்களும், உணர்வுகளும் ஆங்காங்கே சிதறி என்னால் தொகுத்துக் கொள்ள கடினமானதாக இருந்தது என்றாலும் ஒரு காலையில் எழுந்த உந்துதலால் இக்கடிதத்தை எழுத தொடங்கினேன்.

மெல்லிய தாளில் அச்சிடப்பட்டு, கடின அட்டையால் பிணைக்கப்பட்ட பின் தொடரும் குரலின் நிழல் புத்தக வடிவமைப்பும், அச்சுக் கோர்ப்பும் நான் விடுதி மாணவனாக இருந்த போது படித்த பைபிளை நினைவு கூற வைத்தது. எந்தப் பக்கத்தை திறந்தாலும் தன்னை மூடிக் கொள்ளாமல் மலர்ந்திருக்கும் அழகிய புத்தகம். பின் தொடரும் நிழலின் குரல் ஒருஅரசியல் நாவலாக இருந்தாலும், அது மனித உணர்வுகளின், வாழ்க்கையின் பல பரிணாமங்கள் மேல்பயணிக்கிறது. நாவலை வாசிக்கும் போது அருணாச்சலத்துடன் தொடங்கிய என் பயணம், வீரபத்ரபிள்ளையிடம் மாறி, புகாரினிடம் சென்று இறுதியில் உங்களிடம் வந்து முடிந்தது.

அருணாசலத்தை தார்மீகம் சார்ந்த, வாழ்க்கையின் அறம் சார்ந்த பல குழப்பங்கள், இக்கட்டுகளிலிருந்துமீட்ட நாகம்மையின் அன்பும், புகாரினை வரலாற்றில் இருந்து மீட்டெடுத்த அன்னாவின் அன்பும்,வீரபத்ர பிள்ளைக்கு வாழ்வின் எந்த சூழலிலும் கிடைக்காததே அவருக்கு அத்தகைய ஓர் முடிவைஅளித்தது என நான் நினைக்கிறேன்.நமக்கு எப்போதுமே நம் சிக்கல்களிலிருந்து விடுபட ஒரு கொழுகொம்பு தேவைப்படுகிறது. ஒரு அன்பு.நம் மீது பிறர் வைக்கும் அன்போ அல்லது நாம் பிறர் மீது வைக்கும் அன்போ என ஏதோ ஒன்று. அந்தஅன்பின் போதாமையே வீரபத்ர பிள்ளையை சொந்த வாழ்வில் கழிவிரக்கம் கொள்ள வைத்து, பொதுவாழ்வில் ஏதேனும் சாதிக்கத் தூண்டி, வரலாற்றின் சில மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொணரஒரு மூர்க்கதனமான நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் வரலாறு அவரைப் பொருட்படுத்தாமல்அவர் மேலே ஏறி செல்கிறது. கண்முன் இருக்கும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல்தன்னுள்ளே புழுங்கி சாகும் ஒரு கோழையாக தான் வீரபத்ர பிள்ளை எனக்கு தெரிந்தார்.

இதேபோன்ற கேள்விகளும், குழப்பங்களும் அருணாசலத்தையும் ஆட்டிப் படைக்கிறது. பலபொய்களின் மீது கட்டபட்ட கோட்டையாக அவன் நம்பிய கொள்கையும், கட்சியும், மனிதர்களும்தெரியும் போது, பல்வேறு தடுமாற்றங்களுக்கிடையே எதார்த்தத்தை புரிந்து கொள்கிறான், மனச்சிக்கல்களுக்கு ஆளானாலும் எப்படியோ மீண்டு விடுகிறான். அதற்கு ஒரே காரணம், நாகம்மையின் அன்பு. எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. நம் வாழ்க்கையில் நம்மாl எடுக்கபடும் முடிவுகள் அனைத்தும்தன்னளவில் சரியானவையே. ஆனால் காலத்தின் போக்கிலேயே அந்த முடிவுகள் எந்த அளவுக்குசரியானவை என நம்மால் உணர முடியும். அதுவும் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் மட்டுமேசாத்தியம். நம் தோல்விகளுக்காக, துன்பங்களுக்காக பிறர் மேல் பழி சுமத்துவதை விட முட்டாள்தனம்

வேறெதுவும் இல்லை.நாவலில் புகாரின் எடுத்த முடிவுகளின் விளைவுகளை கண்கூடாகப் பார்க்கும் போது, அவர் செய்ததவறின் அதிர்ச்சி மின்னல் போல அவரைத் தாக்குகிறது. எல்லாம் சிறப்பாக நடைபெறும் என்றநம்பிக்கை காலபோக்கில்  பல இலட்சம் அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்குகிறது. இறுதியில் தவறை உணர்ந்து, மனம் வருந்தி, கைது செய்யப்படும் தருவாயில் அன்னாவை தன் மீட்பராக விட்டுசெல்கிறார். அவளும் அவரை வரலாற்றில் இருந்து மீட்டெடுக்கிறாள். புகாரினின் மொத்தவாழ்க்கையும் ஒரு தரிசனம் போல என் மனதில் இறங்கியது.

உயிர்தெழுதல் அத்தியாயத்தை படித்து முடித்து போது என் மனம் அமைதியான சோகத்தில் இருந்தது. இனம்புரியாத ஏக்கம் உள்ளூர ஊறிக் கொண்டே இருந்தது, அப்போது யாரேனும் என்னிடம் சிறிதாக சினந்திருந்தாலும் நான் அழுதிருப்பேன். அப்படியான ஒரு இளகிய மனநிலையில் தான் இருந்தேன்.இயேசு ஒரு அரசர் அல்ல, சாதாரண மனிதர். வலிகளை தீர்ப்பவர் அல்ல மாறாக ஏற்றுக் கொள்பவர். முறையிடுபவர்களும், குறை கூறுபவர்களும் அவரிடம் செல்ல முடியாது. குழந்தைகளை போல வலிகளை மறந்து செல்பவர்களே அவர் மடியில் ஏறி அமர முடியும், அவரை முத்தமிட முடியும்.

நாவலில் சோவியத் ரஷ்யாவின் ஒரு நூற்றாண்டு காலம் பல்வேறு சிறுகதைகள், நாடகங்கள்,கவிதைகள் மூலம் சித்தரிக்கப்பட்ட போது ஒரு ஃபிளாஷ்பேக் போல என் மனக்கண்ணில் விரிந்தது.புதுவெள்ளம் சிறுகதை தொடங்கி புனிதர்களும் மதர்களும் நாடகம் வரை ஒவ்வொரு சிறுகதையும்,ஒவ்வொரு நாடகமும் எனக்கு விதவிதமான உணர்வுகளை அளித்த அதே நேரத்தில் ஒரு முழுமை உணர்வையும் அளித்தது ஆனால் அது என்ன என்று என்னால் தெளிவாக கூற முடியவில்லை. இந்தப்பகுதிகளை வாசிக்கும் போது விலகி இருந்து வேடிக்கைப் பார்ப்பது போலவே என் மனம் செயல்பட்டது. வாசித்து முடித்தவுடன் மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது ஆனால்நாவலை தொடர்ந்து வாசித்தேன். இந்த பகுதியில் உள்ள சிறுகதைகளும், நாடகங்களும், கவிதைகளும்தனி தனி வாசிப்புக்கு உரியவை என்றே இப்போது தோன்றுகிறது.

இந்த நாவலை படிக்கும் முன்பே, நான் உங்களின் பல உரைகளை கேட்டு, புத்தகங்களையும் படித்துள்ளதால் ஒரு வகையில் இந்த நாவல் எனக்கு உங்களையே பின்னோக்கி திரும்பி பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வைத் தந்தது. நாவலில் வரும் எஸ். எம் ராமசாமி கதாபாத்திரம் எழுத்தாளர் திரு.சுந்தர ராமசாமி அவர்களை மனதில் வைத்து எழுதியிருப்பீர்களோ என்று கூட தோன்றியது. பலதத்துவங்களையும், கொள்கைகளையும் அதற்கான நிறை குறைகளுடன் விளக்கி இன்றைய உலகில் அவற்றுக்கான இடம் என்ன என்பதை ஒரு புதிதாக உதிக்கும் சிந்தனைபொல என் மனதில்உருவாக்கினீர்கள். இன்றைய உலகில் எந்த கொள்கையும், எந்த அமைப்பும் உலகை முழுவதும் ஆளமுடியாது. ஒவ்வொன்றிற்கும் வரலாற்றில் அதற்கான இடம் உண்டு, அதில் மட்டுமே அவற்றால்செயல்பட முடியும் என்பது ஒரு காட்சி போல என் மனதில் புலனானது.

இந்த நாவல் என்னுள் கேள்விகளை எழுப்பவில்லை ஆனால் தெளிவுகளைக் கொடுத்தது.கொள்கைகளும், தரிசனங்களும் நமக்கு தேவை தான் ஆனால் அதன் மீதான முழுமுற்றான நம்பிக்கைதேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு கொள்கையையோ, தரிசனத்தையோ ஏற்றுபின்பற்றும் போது, அதனால் விளக்க முடியாத அல்லது நிரப்ப முடியாத ஒன்றை இன்னொருகொள்கையோ அல்லது தரிசனமோ விளக்கலாம். அதைப் பற்றிக் கொண்டு முன்னேறுவது தான் அறிவு வளர்ச்சிக்கான செயல்பாடு. இதனால் நமக்கு யார் மீதும் வெறுப்போ, பகைமை உணர்ச்சியோ வராது,ஏன் நம் மீது கூட சோர்வோ, விரக்தியோ ஏற்படாது. ஒரு ஆக்கப்பூர்வமான மனநிலை தன் உருவாகும்.

தவறுகளை ஏற்றுக்கொள்வதும், திருத்திக் கொள்வதுமே முன்னேற விழைய கூடிய ஒரு சமூகத்தின்இயல்பாக இருக்க வேண்டும். “மனிதகுலம்-ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு” என்ற நூலில் ருட்கர் பிரக்மென் சொல்வது போல மனிதர்கள் இயல்பிலேயே நேர்மறைப் பண்புகள் கொண்டவர்கள் தான்,எதிர்மறை பண்புகள் நாம் உருவாக்கிக் கொள்கிற பிரிவினைகளில் இருந்து தான் தோன்றுகின்றன. நம்சகமனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என நாம் நம்பவைக்கப் படுகிறோம் ஆனால் அதில்உண்மையில்லை.

ரோட்ரிக்ஸ்

முந்தைய கட்டுரைசைவசித்தாந்த வகுப்பு – கடிதம்
அடுத்த கட்டுரைசெ.சீனி நைனா முகம்மது