அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
இலங்கைச் சூழல் பற்றி அப்படி நீங்கள் தட்டையாகச் சொல்லிட முடியாது.
சமூக வலைத்தளக் கருத்துக்கள் எப்போதும் கள யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் எனக் கூற முடியுமா?
படைப்புச் சூழல் பற்றிய உங்கள் கருத்து சரியாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள நூலகங்களில் உள்ள தமிழ் நூல்களில் முக்கால்வாசி தமிழ்நாட்டு நூல்களே. வாசிக்கும் சூழல் பொதுவாக அதுவே.
இங்குள்ள புத்தகசாலைகளிலும் உங்கள் நூல்கள் கிடைக்கின்றன https://venpaa.lk/authors/jeyamohan
உங்கள் ஆக்கங்களில் விஷ்ணுபுரம், கொற்றவை போன்றவை எனது வீட்டு நூலகத்திலே உள்ளன.
சில வருடங்களுக்கு முன் வெண்முரசு இரவு பகலாக 40 நாட்கள் தொடராக வலைத்தளத்தில் வாசித்து முடித்திருந்தேன்.
கிடைக்காத புத்தகங்கள் Amazon Kindle இல் வாங்கியிருக்கிறேன். (இந்து மரபின் ஆறு தரிசனங்கள், இந்து மெய்மை, மலர்த்துளி மற்றும் அண்மையில் அஜிதனின் மைத்ரி உட்பட. )கொரோனாக் காலத்தில் புனைவுக் களியாட்டுக் கதைகள் எவ்வளவோ உதவின.
உங்கள் தளத்திலுள்ள அனேக சிறுகதைகள், தொடர்கள் ( படுகளம் உட்பட) வாசித்திருக்கிறேன். பல கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். சிலகருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும் வாசிப்பனுபவம் சிறப்பானதே. சிறப்பான ஆக்கங்களை கர்மயோகம் போல ஒவ்வொருநாளும் இணையத்தில் எழுதுவது உங்களைப்போல வெகு சிலரே.தன்னறம் பற்றிய உங்கள் கருத்துக்களை நண்பர்களுக்கு அனுப்பியிருந்திருக்கிறேன்.
கருத்து வெளிப்படுத்துவதில் விருப்பமின்மையோ தயக்கமோ காரணமாக உங்களுக்கு ஒருபோதும் அஞ்சல் அனுப்பியிருந்ததில்லை. ஆனால் நீங்கள் நினைப்பதைவிட உங்கள் வாசகர் வட்டம் பெரிது.
உங்கள் எண்ணம் ஈடேறி, பனி முகடுகள் ஒளிர்வதைப் பார்த்தபடி நீங்கள் எழுதப்போகும் படைப்புகளையும் வாசிக்கக் காத்திருக்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
முகுந்தன்
இலங்கை
அன்புள்ள முகுந்தன்,
கண்ணுக்குத் தெரியாத சிலர் வாசிப்பதில் மகிழ்ச்சி. இந்த இணைய ஊடகம் அப்படிப் பலரிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறது. அப்படி கண்ணுக்குத்தெரியாத வாசகர்களாக இருப்பதே நல்லது என்றும் தோன்றுகிறது. சூழல் உருவாக்கும் கடுமையான எதிர்மனநிலைகளுடன் மோதி ஆற்றலை வீணாக்காமல் இருக்கலாம்
பனிமுகடுகளை பார்த்து அமர்ந்திருக்கையில் ஏதேனும் எழுதுவேனா என்றும் ஐயமாக உள்ளது
ஜெ