ஈழம், சயந்தன் கடிதம்

அன்புள்ள ஜெ
இலங்கைக்குச் செல்வது படித்தேன். அந்த நாட்டில் பிறந்தவன் என்ற வகையில் துயரக் கசிவொன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடந்த 10,15 ஆண்டுகளில் நான் வந்தடைந்திருக்கிற இடமும் அதுவே. அங்கே வாசகர்களே இல்லை என்பதுதான்.
2022 இல் கிழக்கு இலங்கையில் வனம் இதழும் எனது ஆதிரை வெளியீடும் சேர்ந்து மொழி வழி கூடுகை என்ற ஓர் இலக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். சிங்கள தமிழ் எழுத்தாளர் கூடுகைதான் அது. ஆனால் அதற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும் வருவதாகவும் எப்படியோ கற்பனையில் ஒரு கருத்தைப் பரப்பி சமூக வலைத்தளத்தில் அதைக் கண்டித்து எழுதிக்கொண்டும் இருந்தார்கள். சில நண்பர்கள் என்னிடம் கேட்டபோது அவரை அங்கு அழைத்து அவமானப்படுத்த மாட்டேன் என்று சொன்னேன்.
சில சமயங்களில் தமிழக வாசக சூழல் பொறாமை கொள்ள வைக்கிறது. ஒரு வாசகர் எந்த “இயக்கமாகவும்” நின்று வாசிக்க மாட்டார் என்ற உணர்தல் பெரிய ஆசுவாசம். இலங்கையில் மட்டுமல்ல டயஸ்போராவிலும் கூட இலக்கியம் இயக்கப் பிரிவுகளுக்கிடையில்தான் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. இந்தச் சூழல் தருகின்ற மனச்சோர்வை தமிழ் நாட்டின் எங்கோ ஒரு பக்கத்தில் இருந்து வருகிற யாரென்று தெரியாத வாசகர் கடிதம் நீக்கி விடுகிறது. பகிர வேண்டும் போலத் தோன்றிற்று.
நன்றி
சயந்தன்
அன்புள்ள சயந்தன்,
ஒரு காயம், அல்லது நோய் அளவுக்கே கொடியது அதற்கு பிந்தைய காலகட்டம்.  நீங்களே பார்த்திருப்பீர்கள், ஒரு விபத்துக்குப்பின் சிலருடைய ஆளுமையே மாறிவிடும். இனியவர்கள் அதன்பின் கசப்பு நிறைந்தவர்களாக ஆகிவிடுவார்கள். பொதுப்பணியாளர்கள் அப்படியே தன்னலமிகளாக ஆகிவிடுவார்கள் (பொதுவாக வயிற்றுக்குள் புண் வருவது குணநலனில் எதிர்மனநிலையை உருவாக்கும் என்பார்கள்). ஈழநிலம் அப்படிப்பட்ட ஒரு கசப்பான காலகட்டத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஓங்கியொலிக்கும் குரல்கள் அதன் பிரதிநிதிகள். காலம் மாறும். நலன் திரும்பும்.
நீங்கள் என்னுடைய எல்லா இலக்கிய – அரசியல் கருத்துக்களுக்கும் எதிர்நிலையைத்தான் இதுவரை எடுத்துள்ளீர்கள் என்பதை நான் இப்போது மீண்டும் பதிவுசெய்கிறேன். எனக்கு உங்கள் படைப்புகள் பிடித்துள்ளன, நான் எழுதியுள்ளேன். அது அவற்றிலுள்ள மானுடவாழ்க்கை சார்ந்த நுட்பங்கள்மீதான அழகியல் மதிப்பீடு மட்டுமே.
நாம் நேரில் சந்தித்தமையால் உருவான ஒரு நல்லெண்ணப்பழக்கம் மட்டுமே நமக்குள் உள்ளது. அத்தகைய பொதுநல்லெண்ணம் என்பது ஐரோப்பா போன்ற மனமுதிர்ச்சி கொண்ட நாடுகளிலுள்ள பொதுவான பண்பாடு. மற்றபடி நமக்குள் எந்த தொடர்பும் இல்லை. அதை உங்கள் ஈழ நண்பர்களுக்காக வலுவாகவே சொல்கிறேன்.
 ஜெ
முந்தைய கட்டுரைநீலம், ஓவியம், தேர்தல்
அடுத்த கட்டுரைதத்துபூஜை