இலங்கை, கடிதம்

இலங்கைக்குச் செல்வது…

அன்புள்ள ஜெ,

உங்கள் இலங்கைப்பயணம் பற்றிய கட்டுரை கண்டேன்.

இன்றைய சூழலில் நீங்கள் இலங்கைக்கு இலக்கியப்பயணமாக வராமலிருப்பதே நல்லது. பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் கூடாது. நீங்கள் அறிந்த இலங்கை வாசகர்கள் இரண்டுபேரில் ஒருவராக இதை எழுதுகிறேன். இன்றைய இலங்கைச்சூழல் அப்படிப்பட்டது. கஸகிஸ்தான், மாலத்தீவு போலவே இலங்கையும் இன்று இந்தியாவுடன் நல்ல உறவுடன் இல்லை. இலங்கை இந்தியாவைக் கண்டு அடக்கி வாசிக்கிறது என்றாலும் எல்லா அதிகாரிகள் மட்டத்திலும் இந்திய எதிர்ப்புணர்ச்சி ஓங்கியிருக்கிறது. சாதாரணமாக ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் அது மிகச்சிக்கலாக ஆகிவிடும். சுற்றுலாப்பயணமாக பலர் இலங்கை வருகிறார்கள்.வருபவர்களில் பலருக்கு அதிகாரிகள் மற்றும் புத்த பிட்சுக்களிடமிருந்து சிறு சிறு பிரச்சினைகள் ஏதாவது வருகின்றன. செக்ஸ் டூரிசம் வருபவர்களுக்கு மட்டும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களின் ஏஜென்ஸிக்கள் மிக வலிமையானவை. ஏராளமான அதிகாரத் தொடர்பு கொண்டவை. நிறையப் பணமும் புழங்குகிறது. இலங்கை இன்று உங்களைப்போன்ற ஒருவர் வரும் தேசமாக இல்லை என்பதே உண்மை.

இலங்கையில் உங்கள் மேல் எதிர்ப்பு கொண்டவர்களில் தேசியவெறியர்கள் உண்டு. ஆனால் எந்த விஷயமும் தெரியாமல் எவராவது எங்காவது எழுதியதை நம்பி காழ்ப்பு கொண்டவர்களே மிகுதி. உங்கள்மேல் காழ்ப்பு நீங்கள் எழுதியதை வாசித்து வருவது அல்ல. நீங்கள் இங்கே எந்த வகை எழுத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என அவர்கள் நினைக்கிறார்களோ அந்த எழுத்தை எழுதிக்கொண்டிருக்கும் கூட்டம்தான் காழ்ப்பைப் பரப்புகிறது. இந்தக் கூட்டத்தில் பலரை எனக்குத் தெரியும். நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்று எதுவுமே தெரியாது. ஒரு படைப்பைக்கூட வாசித்திருப்பதில்லை. முகநூலில் கிடைக்கும் வம்புகள் மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும். தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோது  இங்கே எல்லா மேடைகளிலும் கூச்சல்போடும் ஒருவர் மேடையில் சொன்னார். ‘ஜெயமோகன் அரசாங்கப் பணத்தை எடுத்து தெளிவத்தை ஜோசப்புக்கு பரிசு கொடுத்துவிட்டார். அது ஊழல்’ என்று. விருது என்றால் சர்க்கார் பணம், அவ்வளவுதான் அறிவு. நான் அவரிடம் ஒரு வார்த்தை மறுத்துப்பேசவில்லை.

ஆனால் மிகப்பெரிய அளவில் காழ்ப்பைப் பரப்பிக்கொண்டிருப்பவர்கள் இங்குள்ள மதவெறியர்கள். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். சில இலக்கியக் காழ்ப்பு கொண்டவர்கள் அந்த மதவெறியர்களை தூண்டி விடுகிறார்கள். அவர்களுக்கு இன்றைய சிங்கள அரசுடன் நல்ல தொடர்பும் உண்டு. ஆகவே எப்போது வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் புகாராக அனுப்ப முடியும். தேவையற்ற செய்திகளைப் பரப்ப முடியும். அதெல்லாம் பெரிய சிக்கல்களாக ஆகிவிடும். சாரு நிவேதிதாவுக்கு அப்படித்தான் ஆகியது. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு விஷமப் பிரச்சாரம். செய்தவர்கள் நான் சொன்ன மதவெறிக் கும்பல்தான். சாருவுக்கு அவர் எவ்வளவு பெரிய பிரச்சினைகளில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார் என உண்மையிலேயே தெரியாது. அவர் மாட்டிக்கொண்டு ஜெயிலுக்குப்போகக்கூட வாய்ப்பிருந்தது. அத்தகைய சிக்கல்களில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஆகவே இந்தக் கடிதம்

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் ஒரு நேர்மையான இலக்கிய வாசிப்பு இங்கே எந்த எழுத்தாளருக்கும் கிடைப்பதில்லை. எல்லாருக்குமே கட்சியரசியல் சார்ந்த வாசிப்புதான். வாசிப்பே குறைவு. அதில் 99 சதவீதம் காழ்ப்பும் வெறுப்பும்தான் வாசிப்பாக முன்வைக்கப்படும். 1 சதவீதம் சம்பிரதாயமான புகழ்ச்சி. அவ்வளவுதான் இங்கே இலக்கிய வாசிப்பு. இலங்கை இன்றைக்கு ஆன்மாவில் காயம்பட்டு, செப்டிக் ஆகிக்கொண்டிருக்கும் ஒரு தேசம். தமிழரும் சரி சிங்களரும் சரி. ஆகவேதான் இந்த மனநோய். ஆனால் காலம் புண்களை ஆற்றும். நோயை குணமாக்கும். ஆரோக்கியமான புதிய தலைமுறை உருவாகும். அன்றைக்கு உங்கள் எழுத்துக்கள் வாசிக்கப்படும். அதற்கான வாசகர்கள் வருவார்கள். நீங்கள் இலங்கையை இப்போதைக்கு மறந்துவிடுங்கள். உங்கள் எழுத்துக்கள் காலாதீதமானவை. அவை அவற்றுக்கான வாசகர்களைக் கண்டடையட்டும்.

அன்புடன்

_

 

அன்புள்ள நண்பருக்கு,

நன்றி.

என் உளப்பதிவும் அதுவே. கண்டி, கதிர்காமம் எல்லாம் பார்க்கவேண்டும் என நான் எண்ணிய காலம் உண்டு. இன்று அந்த விருப்பம் இல்லை. ஓர் இடத்தைப் பார்க்காமலிருப்பதனால் இழப்பது என ஏதுமில்லை என இன்று தோன்றுகிறது.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைநித்யா சித்திரங்கள்
அடுத்த கட்டுரைபி. கோதண்டராமன்