எழுதுவதும் எதிர்வினை பெறுவதும்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சென்ற மாதத்தில் நான் எனது முதல் மூன்று சிறுகதைகள் எழுதி அது சொல்வனம், வாசகசாலை இதழ்களில் வெளிவந்துள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரிவு   –   https://vasagasalai.com/pirivu-sirukathai-gnana-sekar-vasagasalai-94/

நான் செப்டம்பரில் வெள்ளிமலையில் நடந்த வாசகர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன்.(அதற்கு முன் திரைரசனை முகாமும்,தியான முகாமும்)அந்த முகாமில் விவாதத்திற்கு நான் என்னுடைய ஐஸ்லாந்து பயணக்கட்டுரையை பகிர்வு செய்திருந்தேன். உங்களுக்கு நினைவு இருக்கலாம். எழுத விரும்புபவர்கள் முகாமில் தங்களது படைப்புகளை விவாதத்திற்கு அனுப்பலாம் என்ற அறிவிப்பு வந்ததும் நான் முதலில் சிறுகதை எழுதி அனுப்பலாம் என்றுதான் நினைத்தேன். ஒரு முழுக்கதையும் காட்சிகளாக மனதில் இருந்தது. ஆனால் சிறுகதையாக எழுத முயன்றபோது அது இரண்டு பத்தியை தாண்டவில்லை.

வெகு நாட்களாக உங்களை படித்து வருபவன். சில பயணக்கட்டுரைகள், கட்டுரைகள் எழுதி பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ ஆசை இருந்தும் கதைகள் அதற்கு முன் முயன்றதில்லை. தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். எல்லாக் கதைகளும் தான் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளனவே என்ற எண்ணமும், இன்னும் கொஞ்ச நாள் படித்துவிட்டு நாம் எழுதப் போகும் அந்தக்கதை தமிழ் இலக்கிய உலகையே புரட்டிப் போடும் என்ற பகற்கனவும் காரணம். என்றாலும் எனது வாசிப்பில் குறை இருந்ததாகவே உணர்ந்தேன். நான் முகாமில் கலந்து கொண்டதே வாசிப்பை எப்படி நுட்பமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். பின் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததும் அதற்காகத்தான். முகாமில் நீங்கள் வந்திருந்த இரண்டு கதைகளையும் என்னுடைய பயணக்கட்டுரையும் எடுத்து வைத்து கதைகள் கட்டுரைகள் என்பவை எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கினீர்கள். குறைகளை எங்களின் மனம் புண்படாத படி சுட்டிக்காட்டினீர்கள். பொதுவாக புதிதாக எழுத வருபவர்களிடம் எந்த எதிர்மறையான விமர்சனங்களையும் சொல்ல மாட்டீர்கள் என்பது தெரியும். அதனால் தான் நானே ஏற்கனவே எழுதி வைத்திருந்த பயணக்கட்டுரையை பகிர்ந்து கொண்டேன்.

அந்த முகாம் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. வாசிப்பு, எழுத்து பற்றிய கருத்துக்கள் நீங்கள் பலமுறை ஏற்கனவே எழுதி இருந்தாலும் அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியது அதிலும் ஆசிரியர் அருகமர்ந்து அதைக் கேட்பது நல்ல அனுபவமாக இருந்தது. இதை ஏதோ பக்தியின் காரணமாக சொல்லவில்லை. அருகிலிருந்து எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி நுட்பமாக கவனிக்கிறீர்கள் ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்தை எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள் என்பதையெல்லாம் கண்டது, வகுப்பாக மட்டும் இல்லாமல் சகஜமான உரையாடலாக காலை மாலை நடையின் போது மாற்றியது இன்னும் சிறப்பு.

நான் நினைத்தது முகாமிற்கு பின்பு எழுத்தின் சூட்சமம் ஓரளவு புரிந்துவிடும் எழுத தன்னம்பிக்கை வந்துவிடும் என்பதுதான். ஆனால் எனக்கு நடந்ததோ நேர்மாறாக. முகாம் முடிந்த பின் நான் உண்ர்ந்தது எனது போதாமையைத்தான். எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை. போகிற போக்கில் வரலாறு, தத்துவம், பண்பாடு என ஆரம்பித்து சினிமா அரசியல் கிசுகிசு வரை தொட்டுவிட்டு ஒரு வரைபடத்தை கண் முன் நீங்கள் உருவாக்கியது, கவிதை வகுப்பில் கண்முன்னே கரும்பலகையில் ஒரு கவிதையை உருவாக்கி விட்டு அந்த வகுப்பு முடிந்ததும் அதை அழித்துவிட்டது என மூன்று நாட்களும் நான் உணர்ந்தது என் போதாமையைத்தான். இவரும் இவரைப் போன்ற பிற எழுத்தாளர்களும் பார்க்காத ஒன்றை உணராத ஒன்றை நான் கவனித்து உணர்ந்து எழுத முடியுமா? என்பதே என்னை நோக்கி நான் எழுப்பிய கேள்வியாக இருந்தது. எழுதவேண்டும் என்று ஆசையும் எழுதலாம் என்ற தன்னம்பிக்கையும் முற்றாக போயிருந்தது.

எனக்குத் தெரிந்து முகாமில் பங்கு பெற்ற பெரும்பாலோர் அவ்வாறு தான் உண்ர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதன்பின் எழுதுவதை தவிர்த்தேன். ஆனால் தொடர்ந்து  சிறுகதைகள் படித்துக் கொண்டும்,தற்கால உலகத்திரைப்படங்கள் பார்த்துக்கொண்டும் இருந்தேன். (திரைப்படங்கள் பார்ப்பது, பயணம், வாசிப்பு இவை மூன்றும் தான் எனது ஆர்வங்கள்) அது மீண்டும் எழுதும் ஆசையை தூண்டியது. ஆனால் எதனால் நான் எழுதவேண்டும் என்ற கேள்வியை நானே கேட்டுக் கொண்டேன். ஒன்று தோன்றியது. என்னிடம் சில கேள்விகளும் நான் எனக்காக கண்டடைந்த பதில்களும் நான் வாசிக்க விரும்பும் கதைகளும், கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளன என்று என்னை சமாதானப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன்.

இந்த சிறுகதைகள் என்னுடைய முதல் முயற்சிஇன்னும் மொழியில் பயிற்சி வேண்டும், சரியான சொற்களை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும் போன்ற குறைகள் இருந்தாலும் சிறுகதை என்ற வடிவத்திலும் வாசிப்பனுபவத்திலும் ஒரளவு நன்றாக வந்ததாகவே நினைக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். கதைகளை எழுத ஆரம்பித்த பிறகு பிற கதைகளை நுட்பமாக படிப்பது முன்னேறியுள்ளது.

எனது கதைகளை, வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் எதிர்வினையைக் கேட்டிருந்தேன். சிலர் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களின் எதிர்வினை என் கதை மட்டும் அல்லாமல் சிறுகதை எனும் வடிவத்தை புரிந்து கொள்ள உதவியாய் இருந்தது. ஆனாலும் என்னைப் போன்ற புது வாசகர்கள் புது எழுத்தாளர்களை வாசிக்கும் போது உள்ள பிரச்சனை எங்களது முன்முடிவுகள். அந்தக் கதையில் எழுத்தாளனை தேடிக்கொண்டிருப்பது. அதுவும் அந்தக் கதை இன்று நிகழ்வதாய் இருந்து யதார்த்தவாத கதையாக இருந்தால் எளிதாகநீ வந்தது போனது எல்லாம் எழுதிக்கிட்டிருக்கஎன்ற நினைக்க தொடங்கி விடுகிறோம். எனது மற்ற இரண்டு கதைகளும் ஒரு சம்பவத்தை அதன் உச்சத்தை நோக்கி கொண்டு செல்லும் போது பிரிவு கதையை உச்சத்தை நோக்கி கொண்டு செல்லாமல் அதை ஒரு உரையாடல் போல அமைக்க திட்டமிட்டு womens talking எனும் பாணியில் விதவிதமான வயதுடைய பெண்கள் ஒரு விவாகரத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு விவாகரத்தைப் பற்றி பேசுவது போல் அமைத்தேன். ஆனால் அது பெரும்பாலும் அவ்வாறு வாசிக்கப் படவில்லை என்று புரிந்து கொண்டேன். அதனால் அதன் மீது வந்த நேர்மறையான விமர்சனம் எதிர்மறையான விமர்சனம் இரண்டையுமே என்னால் பொருட்படுத்த முடியவில்லை. அது கதையின் குறையாகவும் இருக்கலாம். அதனால் தான் உங்களிடமே என் கதைகளைப் பற்றி கேட்டு விடலாம் என்று நினைத்தேன்.

நேரம் இருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள் எதுவாகினும் கூறவும். நேர்மறையாக சொல்லும் பட்சத்தில் மேலும் இது போன்ற கதைகள் வரலாம் என்றும் எச்சரிக்கின்றேன்.

உங்கள் கஜகஸ்தான் பயணக்கட்டுரைக்காக காத்திருந்தேன். ஆனால் அங்கு உங்களுக்கு நடந்தது துரதிருஷ்டமானதே. சென்ற டிசம்பரில் நான் கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளில் பயணம் சென்று வந்தேன். கஜகஸ்தானில் எனது முதல் பனிப்பொழிவை அனுபவித்தது மிக மகிழ்ச்சியான தருணம். அதைவிட தெற்கத்தி நிறத்தில் இருந்த என்னை மத்திய ஆசிய மக்கள் எதிர்கொண்ட விதமும் என்னுடன் சேர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியதும் நான் என்னை செலிபிரட்டியாக உணர்ந்த நாட்கள். கண்டிப்பாக ஒரு முறை நீங்கள் பயணம் செய்ய வேண்டும். ஒரு நாட்டில் பயணம் செய்யும் போது அங்கு நமக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அந்த நாட்டையே வெறுக்க ஆரம்பித்து விடுவோம். அவ்வளவு தூரம் செல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எளிமையான மக்கள். நான் பயணம் செய்த வரை இன்னும் இந்தியர்களை வரவேற்கும் மக்கள் சோவியத் யூனியன் மக்கள்.ரஷ்யாவையும் சேர்த்து ஏழு சோவியத் நாடுகளில் பயணம் செய்ததை வைத்து சொல்கிறேன்.

இமிகிரேனில் நானும் கவனித்தேன்.பாஸ்போர்ட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் லென்ஸ் கொண்டு பார்த்தார்கள். இன்னும் அந்த நாடுகளில் பல விஷயங்கள் சோவியத் காலத்தில் இருந்ததையே பின் தொடர்கிறார்களோ என்று தோன்றும். அந்த நாடுகளில் சில இன்னும் டூரிஸ்ட் விசாவுக்கு இன்விடேஷன் லெட்டர் போன்றவற்றைக் கேட்கின்றன. ரஷ்யாவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த லெட்டர் கேட்பதை நிறுத்தியது. அவர்களை மட்டும் சொல்லியும் குற்றமில்லை. நம்முடைய அதிகாரிகளின் மெத்தனம். எனக்கு ஒரு முறை ECR ஸ்டாம்பிங் செய்து பாஸ்போர்ட் கொடுத்தார்கள். அதை வைத்து இரண்டு முறை வேலைக்கு வெளிநாடு சென்று சென்று வந்து மூன்றாவது முறை செல்லும்போது தடுத்துவிட்டார்கள். நல்ல வேலையாக சென்னையிலேயே தடுத்தார்கள். பாஸ்போர்ட் அலுவலகம் சென்று எதற்கு ஸ்டாம்ப் வைத்து கொடுத்தீர்கள் என்று கேட்ட போது நீங்கள் பணிரெண்டாவது, கல்லூரி சான்றிதழ்களைத் தான் கொடுத்திருக்கிறீர்கள் பத்தாவது வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இணைக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். அந்த ECR ஸ்டாம்பிங்க் பத்தாவது வகுப்புக்கு கீழே படித்தவர்களுக்கு இடுவது.

நீங்கள் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். அந்த வழியாக ஐரோப்பா செல்ல ஏதோ மார்க்கம் இருக்கிறது போல. நான் தஜிகிஸ்தானில் தங்கி இருந்த ஹாஸ்டெலில் ஒரு பதினைந்து பேர் வட இந்திய இளைஞர்கள் மூட்டைகளோடு தங்கி இருந்தார்கள். அதேபோல் அருகில் இருந்த இன்னொரு ஹாஸ்டலில் பங்களாதேஷிகள் தங்கி இருந்தார்கள். கேட்டபோது டூரிஸ்ட் என்றார்கள். ஆங்கிலம் தெரியவில்லை. தங்கியிருந்த மூன்று நாட்களும் ஹாஸ்டலை விட்டு வெளியே செல்லவில்லை. ஹாஸ்டலிலேயே சமைத்து சாப்பிட்டார்கள். நான்காம் நாள் அத்தனை பேரும் மறைந்திருந்தனர். என் அறையில் இருந்த ப்ரெஞ்ச்காரன் அவர்கள்டங்கியாக ஐரோப்பா வரக்கூடும் என்றான். ஆனால் டங்கியாக செல்வது எல்லாம் இப்போது மிக ஆபத்தானது பெரும்பாலும் இப்போது நடக்கவில்லை என்றே நினைத்தேன். ஆனால் இப்போது நினைத்தால் வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று சோவியத் நாடுகளைப் பார்த்து அந்த நாடுகளைப் பற்றி நீங்கள் கட்டுரை எழுத வேண்டும்.

நன்றி,

ஞானசேகர்.

அன்புள்ள ஞானசேகர்

இனி முன்னாள் சோவியத் நாடுகளுக்குச் செல்லும் உத்தேசமில்லை. அந்நாடுகளைப் பற்றிய ஆழமான கசப்பு உருவாகிவிட்டது – அது இனியுள்ள பயணங்களையும் கசப்பு கொண்டதாக ஆக்கும். கசகிஸ்தான் சென்ற நண்பர்களும் அந்நாட்டைப் பற்றி உயர்வாக ஒன்றும் சொல்லவில்லை. பயணம் வீண் என்பதே அரங்கசாமியின் உளப்பதிவாக இருந்தது. விமானநிலையத்திலிருந்து எனக்கு அம்மக்கள் பற்றி உருவான பிம்பம் அவர்கள் கல்வியறிவற்ற , அடிப்படைப் பண்பாடற்ற தற்குறி மக்கள்; ஆனால் வெள்ளையின மேட்டிமைப்பார்வையும் கொண்டவர்கள் என்பதே.

*

தொடக்கநிலை எழுத்தாளர்களுக்கு வரும் ஐயங்கள் இரண்டு, அவைதான் உங்களுக்கும். நான் அசலாக எழுதமுடியுமா, இத்தனை எழுதப்பட்டிருக்கும் சூழலில் மேற்கொண்டு என்ன எழுதுவது என்பது முதல் ஐயம். நான் எழுதுவது மெய்யாகவே பொருட்படுத்தும்படி உள்ளதா என்பது இரண்டாவது ஐயம்.

முதல்கேள்விக்கு விடை இதுதான். நீங்கள் உண்மையாக எழுதினால் அது தனித்துவமானதாகவே இருக்கும். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கை, உங்கள் உள்ளம், உங்கள் பார்வை. அதற்கு இலக்கியச் சூழலில் ஓர் இடம் இருக்கும்.

எங்கே அப்படி அல்லாமல் ஆகிறது? சூழலில் உள்ள பொதுவான அரசியல் – சமூகவியல் கருத்துக்களை எதிரொலிப்பதுதான்தான். மிகப்பெரும்பாலானவர்கள் எழுத வரும்போது எழுதுவது சூழலில் உள்ள சிந்தனைகளில் அவர்கள் மேற்கொண்டு சேர்க்கும் ஒரு சிறு திருத்தம், அல்லது இன்னொரு கோணத்தை மட்டும்தான். அதற்கு கலையில் எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் சூழலில் உள்ள சிந்தனை என்பது பொதுச்சராசரிக் கருத்துக்களால் ஆனது. கலை என்பது அடிப்படையிலேயே அத்தகைய பொதுச் சராசரிக் கருத்துக்களுக்கு எதிரானது. unusual என்பதுதான் கலையின் முதல் இலக்கணமே.

பலர் நினைப்பதுண்டு, வேறு எழுத்தாளர்களை வாசித்தால்தான் அந்தச் செல்வாக்கால் தங்கள் ‘அசல்தன்மை’ இல்லாமலாகும் என்று. ஆகவே வாசிக்க மாட்டார்கள். ‘இன்ஃப்ளூயன்ஸ்’ பற்றிய பயம் எல்லா தொடக்கநிலையாளர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் அறியாத ஒன்றுண்டு, உண்மையான எதிர்மறை செல்வாக்கு என்பது சமகாலப் பொதுக் கருத்துக்கள்தான். நாம் சுயசிந்தனை என நினைப்பது பலசமயம் இங்கே பொதுக்களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சராசரி உரையாடலுக்கு நாம் அளிக்கும் எளிமையான எதிர்வினைகளைத்தான்.

நாம் வாசிக்க ஆரம்பித்ததுமே, நம் அறியா இளமையிலேயே சமகாலப் பொதுக் கருத்துக்கள் வந்து நம்மில் நிறைந்துவிடுகின்றன. அவை சமகால அரசியல் மற்றும் வணிகத்தால் உருவாக்கப்படுபவை. ஆகவே மிகுந்த பொருட்செலவில் அவை பரப்பப்படுகின்றன. நம்மால் தப்பவே முடியாது. அதுவும் இன்று ஊடகங்கள் பல்கிப்பெருகிவிட்டன. சமூக வலைத்தளம் நம்மை முடிவேயில்லாத ஒரு பொது உரையாடற்களத்தில் கட்டிப்போட்டிருக்கிறது. ஐந்து நாட்களுக்கு ஒரு புதிய விவாதம் உருவாகிறது. அதில் ஈடுபட்டால் சுயசிந்தனை முளைக்கவே முளைக்காது.

அந்த பொதுஉரையாடலில் ஈடுபட்டு, உள்ளம் அதில் அமைந்துவிட்டால் சொந்த அனுபவங்களையே கூட அதையொட்டியே பார்க்கமுடியும். அரசியலில் திளைப்பவர்களைப் பாருங்கள், அவர்களுக்கு எல்லாமே அரசியல்தான். அதுவும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி அரசியலின் தரப்புகளாக மட்டுமே அவர்கள் எதையும் அணுக முடியும். சுயசிந்தனையின் புதைகுழி என இதையே சொல்வேன்.

அவ்வாறு அன்றி, தன் அனுபவங்களுக்கு முற்றிலும் உண்மையாக அமைந்து, தான் அவற்றில் கண்டவற்றை மட்டுமே ஒருவன் வெளிப்படுத்த ஆரம்பித்தாலே அவனுக்கான இடம் உருவாகிவிடும். அவ்வாறுதான் மிகமிக எளிமையான பலர் இலக்கிய இடம் பெறுகிறார்கள். எதையுமே வாசிக்காதவர்கள், எதையுமே அறியாதவர்கள், சிலர் அசலாக எழுதிவிடுகிறார்கள். சிந்திப்பவர்கள் அவ்வாறு தன் அனுபவத்தில் இருந்து கண்டடைந்தவற்றை மேலும் வளர்த்தெடுத்து தனக்கான பார்வையாக முன்னெடுப்பார்கள்.

தன் அனுபவங்களை ஆத்மார்த்தமாக, சூழலில் உள்ள சராசரிக் கருத்துக்களின் செல்வாக்கின்றி, முன்வைப்பதே முதல் சவால். உத்திகள், கூறுமுறைகள், நடை எல்லாம் அடுத்த பிரச்சினைதான். சொல்வதற்கு என சில இருந்தால் பிறவற்றை தாங்களே கண்டடையவும் உருவாக்கிக்க்கொள்ளவும் முடியும். அவ்வாறு ஒருவர் உண்மையாக எழுதிவிட்டால் அதற்கு எப்போதும் அதற்குரிய இடமுண்டு.

நாம் எழுதுவது உண்மையாகவே நன்றாக உள்ளதா என்பதை ‘நண்பர்களிடம்’ கொடுப்பது போல அசட்டுத்தனம் வேறில்லை. அந்நண்பர்களின் இலக்கிய ரசனை, இலக்கியப்பயிற்சி முக்கியமானது. அவ்வாறல்லாதவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் என்பதனாலேயே அவர்களிடம் படைப்புகளை கொடுத்து கருத்து கேட்பது தற்கொலைத்தனம். அக்கருத்துக்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை. அவர்கள் ஆகா ஓகோ என்றாலும் சரி, இதெல்லாம் சரியில்லை என்றாலும் சரி, இரண்டுமே பயனற்ற சொற்களே.

மூத்த எழுத்தாளர்களிடம் கருத்து கேட்பதும் பெரும்பாலும் பிழை. மூத்த எழுத்தாளர்கள் பலகாலமாக நிறைய வாசித்து ஒரு சலிப்பை அடைந்திருப்பார்கள். ஆகவே அக்கறை இல்லாமல் அவர்கள் வாசிக்கலாம். அல்லது அவர்களுக்கு அவர்களே எழுதியும் வாசித்தும் உருவாக்கிக்கொண்ட ஒரு குறிப்பிட்ட ரசனையும், வாழ்க்கைப்பார்வையும் இருக்கலாம். அவற்றைத்தவிர பிறவற்றை அவர்கள் உணரமுடியாமலாகலாம்.

அத்துடன், மூத்த எழுத்தாளர் என்பதனால் ஒருவர் சொல்லும் கருத்து அழுத்தம் மிக்கதாக ஆகிறது. ஆகவே அது உங்களை கடுமையாகத் தாக்கி மிகையான எதிர்வினையை உருவாக்கிவிடலாம். பல மூத்த எழுத்தாளர்கள் அதை தாங்களே உணர்ந்து எல்லாவற்றையும் பாராட்டுவார்கள். அதுவும் தவறான விளைவை உருவாக்கிவிடலாம்.

சரியான எதிர்வினைகளுக்கு உங்களுக்குத் தேவை ஓர் இலக்கியச் சுற்றம். உங்கள் கதைகளை உங்களைப்போலவே எழுதப்புகும் ஒருவர், நீங்கள் நம்பும் ரசனையும் அறிவாற்றலும் கொண்டவர் மதிப்பிடவேண்டும். அவருடன் நீங்கள் விவாதிக்க வேண்டும். அது ஒருவழிப்பாதை அல்ல. அவர்களின் கதைகளை நீங்களும் மதிப்பிடவேண்டும். அவ்வாறு ஒரு நண்பர்குழு வழியாகவே எப்போதும் இலக்கியவாதிகள் உருவாகிறார்கள். நானும் அவ்வண்ணமே உருவானேன்.

புதுவாசகர்சந்திப்புகளை அமைப்பது அப்படிப்பட்ட சுற்றத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை அளிப்பதற்கே. அப்படி 2016ல் நிகழ்ந்த புதுவாசகர் சந்திப்பின்போது வந்தவர்கள் இன்றும் ஒரு விவாதக்குழுவாக நீடிக்கிறார்கள். பல்வேறு தனிப்பட்ட உளக்குறைபாடுகளால் அத்தகைய குழுக்களை தவிர்ப்பவர்கள் பெரிய இழப்பையே அடைகிறார்கள்.

*

உங்கள் பிரிவு கதை பற்றி மட்டும் என் எதிர்வினையைச் சொல்கிறேன்.   கதையில் நம் சூழலின் பொதுக்கருத்துக்களின்  செல்வாக்கு இல்லை. ஒரு புதிய விஷயத்தை மிகையான உணர்வுகளோ நிகழ்வுகளோ இல்லாமல் நேர்மையாகவும் இல்பாகவும் சொல்ல முடிந்துள்ளது.

ஆனால் சிறுகதைக்கான அமைப்பு இல்லை, கதை சொல்லப்பட்டவற்றில் இருந்து வளரவில்லை. ஒரு அனுபவத்தளமாக மட்டுமே உள்ளது. அந்த அனுபவத்தளம் மிகையில்லாமல் இயல்பான உரையாடல்களாலும் நிகழ்வுகளாலும் அமைந்துள்ளமையால் அது நல்ல அனுபவமாக உள்ளது.

இந்தக்கதையில் ஒரு மெல்லிய கலைக்குறைபாடு என எதைச் சொல்லலாம்? பிரிவுக்கான ‘காரணம்’ அவர்களின் உரையாடல் வழியாக வந்து செல்கிறது. அதுதான் கதையின் மையம் என்றால் கதை அதை வலுவாகச் சொல்லவில்லை. அவளுடைய குணச்சித்திரம் அந்த மையம் நோக்கிச் செல்வதாக இல்லை. அந்தக் காரணம் கைத்தவறுதலாக கதையில் விழுந்து கிடப்பதுபோல் உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைஉடுமலை நாராயண கவி
அடுத்த கட்டுரைThe art of letting-go