பின்னைப்பின்நவீனத்துவம், கடிதம்

ஏன் பின்நவீனத்துவம் கடக்கப்பட்டாகவேண்டும்? – அஜிதன்

பின் நவீனத்துவத்திற்கு அப்பால் : நம்பிக்கையின் அழகியலை நோக்கி-இஹாப் ஹஸ்ஸான்

அன்புள்ள ஜெ

அஜிதன் எழுதிய கட்டுரையையும் மொழியாக்கம் செய்த கட்டுரையையும் வாசித்தேன்.

நான் 1998  முதல் பின்நவீனத்துவம் பற்றிய விவாதங்களைக் கவனித்து வருகிறேன். முதலில் ஒரு தீவிர ஆர்வமெல்லாம் இருந்தது. அந்த வயதும் காரணம். எது ஒன்று நம்மை நோக்கி didactive குரலில் பேசுகிறதோ அதை உடனே எதிர்க்கவேண்டும் என்று தோன்றும். பின்நவீனத்துவத்தை எல்லா அதிகாரத்தையும் எதிர்க்கும் ஒரு புரட்சிகரமான குரல் என்றுதான் நான் புரிந்துகொண்டேன். அன்றைக்கு சோவியத் ரஷ்யா உடைந்து இடதுசாரி நம்பிக்கைகள் ஆட்டம் கண்டுகொண்டிருந்தபோது இதோ ஒரு புதிய ஆயுதம் என்னும் நம்பிக்கையால்தான் அந்த ஓர் ஆர்வம் உருவானது. அது anti-ideological ஆக இருந்ததும் ஒரு காரணம். ஏனென்றால் ideological செயல்பாடுகளில் உள்ள அதிகாரத்தை தொழிற்சங்கம் கட்சி எல்லா இடங்களிலும் கண்டுவந்தோம். சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி நாங்கள் உள்ளே வைத்திருந்த சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்தது.

ஆகவே பின்நவீனத்துவத்தை ஆர்வத்துடன் கற்றோம். ஆனால் சீக்கிரமே ஒரு சலிப்பு வந்துவிட்டது. பின்நவீனத்துவம் ஒரு பக்கம் என்பது எல்லாவற்றையும் கவிழ்த்துவிட்டோம் என்று நமக்குநாமே கற்பனைசெய்துகொண்டு மகிழ்ச்சி அடையும் ஒரு குழந்தைத்தனம்தான். அதிகாரத்தையோ ஆதிக்கத்தையோ அப்படி எல்லாம் கவிழ்க்க முடியாது. ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் அரசாங்க நிதி பெற்று ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர்கள் அதிகார எதிர்ப்பு பேசி தங்களுடைய அடிப்படையான சார்புநிலையை சமாதானம் செய்துகொள்ள அது உதவியது. அதைவிட அதனுடைய ஒட்டுமொத்தமான subversive தன்மை என்பது நடைமுறையில் regressive ஆகத்தான் இருந்தது. எல்லா progressive செயல்பாடுகளையும் அது முடக்கியது. விளைவாக உலகம் முழுக்க டிரம்ப், மோடி, எர்டோகன், போரீஸ் ஜான்ஸன் , புடின் என்று வலதுசாரி அரசுகளை கொண்டுவந்தது. அது ஒரு போலி ஆயுதம்.

ஆகவே புதிசாக Transmodernism என்ற ஒன்றை ஒருவர் பேசும்போது ஒரு சலிப்புதான் வந்தது. மறுபடி ஒன்றா என்ற எண்ணம் வந்தது. ஆனால் அக்கட்டுரை அப்படி இதோ புதிசு என்று ஒன்றை சொல்லவில்லை. இஹாப் ஹாஸன் துல்லியமாக பின்நவீனத்துவத்திலுள்ள சிக்கல் என்ன என்று சொல்கிறார். ethics and aesthetics ஆகியவற்றை மீட்டுக்கொண்டு வருவதைப் பற்றிச் சொல்கிறார். அஜிதன் எழுதியிருக்கும் முன்னுரைக்குறிப்பு மிகத் தெளிவாகவும், முழுமையான சரித்திரப்பார்வையுடனும் உள்ளது.  முந்நூறாண்டுகளாக தத்துவம் பரிணாமம் அடைந்து வந்த விதம் சுருக்கமாகச் சொல்லப்பட்டு அதில் பின் நவீனத்துவம் எப்படி உருவாகி வந்துள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. முக்கியமான கட்டுரை. தெளிவான கட்டுரையும்கூட

ஆனால் பின்நவீனத்துவத்திலுள்ள scepticism அல்லது nihilism மாதிரியான விஷயங்களின் தொடக்கம் தத்துவம் அல்ல, தத்துவ மறுப்புதான் என எனக்கு தோன்றிக்கொண்டிருந்தது. அந்த விஷயம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றியது.

ஜி.ராகவேந்திரன்

ஜெர்மானிய தத்துவ அறிமுகம்

ஜெர்மானிய தத்துவம் கான்ட் முதல் ஹைடெக்கர் வரை. ஓர் அறிமுகம்.

நடத்துபவர் அஜிதன்.

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைநாத்திக பக்தி
அடுத்த கட்டுரைபி.வி.ஆர்