அதிசயமாயம், கடிதங்கள்

அதிசய மாயம்!

ஜெ,  

இன்றைய கட்டுரையில் மழைப்பருவத்தில் தாமரை இலை மீது தளும்பும் நீர்த்துளிகளின் வர்ணனையும் அதனுடன் இணைக்கப்பட்ட படங்களும் தீவிரமான ஒரு மனநிலைக்குக் கொண்டு சென்றன

அந்த வர்ணனையின் மொழி – “அதிசய மாயம்என்ற தலைப்பும், மேற்கோளாக இணைந்திருந்த சங்கரரின் வாசகமும், அந்த காட்சியின் ஆழத்தை உணர்த்தியது. சங்கரரின் கவிதை வரியின் தாளமே அந்த நீர்த்துளி தளும்பும் நாட்டியத்தோடு அமைந்திருக்கிறது.

நளினிதலகத ஜலமதி தரளம் 

தத்வத் ஜீவனம் அதிசய சபலம்

மேலும்அதிசய மாயம்என்ற உங்களுடைய தலைப்பு எப்படியோஅதிசய ராகம்என்ற பாடலின் வரிகளோடும் தாளத்தோடும் என் மனதில் இணைந்துகொண்டது. அந்த பாடலின் மெட்டே இந்த வரிகளுக்கு அமைந்த வியப்பில் ஆழ்ந்திருக்கிறது என் இன்றைய காலை

வசந்த காலத்தின் மழை தரும் மேகம்

அந்த மழைநீர் அருந்த மனதினில் மோகம்

என்ற வரிகளின் மெட்டில் சங்கரரின் வரிகளை பாடிக்கொண்டிருக்கிறேன் :) மிகச்சரியாக பொருந்துவதில் பேராச்சரியமும் பரவசமும் இன்னும் ஓயவில்லைதளும்பும் நீர்த்துளியில் மிளிர்ந்து மிளிர்ந்து ஆடும் ஒளி

கண்ணதாசனின் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் அமைந்த பாடல். மகதி என்ற ராகத்தின் பின்னணியில். அந்த ராகம் பாலமுரளிகிருஷ்ணாவின் உருவாக்கம் என்று கேள்விப்பட்டுள்ளேன். நான்கே சுவரங்கள் கொண்டது. ஒரு சுவரத்துக்கும் மற்றொரு சுவரத்துக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் அந்தரத்தில் தளும்பிக்கொண்டிருப்பதன் உணர்வை ஏற்படுத்துகிறது. அதிசயத்தின் மனஎழுச்சியை செவ்வியலின்  செறிவுடன் வெளிப்படுத்துவதன் அமைப்பு அந்த மெட்டிலேயே உள்ளது. மிகச்சரியாக அந்த காட்சியோடு பொருந்துகிறது

தற்செயல் தான். ஆனால் வெறும் தற்செயல் என்றும் எண்ணமுடியவில்லை. இந்த நாள் இவ்வாறு இனிதானது.

அன்புடன்,

சுசித்ரா

ஆதி சங்கரரின் தத்துவார்த்தமான கவித்துவ வரிகளை தாங்கள் கையாண்ட விதம் அற்புதமாக உள்ளது.ஆதி சங்கரரின் இதுபோன்ற சமஸ்கிருத வரிகளை இரண்டிரண்டு வரிகளாக உங்களது பாணியில் விளக்கினால் நாங்களும் பயனடைவோம்.
மழைக்கால தாமரை இலைகளில்
தத்தளிக்கும் நீர்துளி.
ஜி. ராமச்சந்திரன்
முந்தைய கட்டுரைகலைஞனின் மகிழ்வு  
அடுத்த கட்டுரைபட்டுக்கோட்டை பிரபாகர்