படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். கடந்த ஒரு வருடமாக உங்களின் இணையத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். என் அகம் என்ன தவறுகள் செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உங்களின் எழுத்து மற்றும் உங்களின் பதில்கள் துணையாக இருந்தது. புத்தகங்கள் என்னவெல்லாம் செய்யும் என்பதை உணர்ந்தேன்.
புறத்தில் என்ன தவறுகள் செய்கிறோம் என்னென்ன மாயைகளில் சிக்கி நான் அடுத்த அடி எடுத்து வைக்காமல் இருகிறேன் என்பதை குட்டு வைத்தது போல உங்களின் கருத்துகள் உணர்த்தியது. போட்டிதேர்வுக்கு தயார் ஆகி கொண்டு இருக்கும் நான் முன்னை விட என் குறிக்கோளை நோக்கி அம்பு போல சென்று கொண்டு இருகிறேன். மேலும் குருவின் முகம் பார்த்து கற்கும் நேரடி கல்வியின் தற்கால அவசியத்தையும் உணர முடிகிறது.
படுகளம் கதாநாயகனை விட அவரின் அம்மா கதாபாத்திரம் நிறைய விசயங்களை உணர்த்தியது. நாயகன் முதல் சந்திப்பிலேயே செவத்தபெருமாள் மகளை மணப்பார் என யூகித்தேன். நிர்பந்தத்தால் கடையில் அமர்ந்த்தாலும் வெற்றிக்கான வழிகளை கண்டடைந்த விதம் அருமை. உங்கள் வசனத்தில் நீங்கள் குறிபிட்டது போல துப்பாக்கி மட்டுமல்ல சில செயல்கள் அதற்க்கு தேவையானதை எடுத்து கொள்ளும் போல.
பயிற்சி வகுப்புகளில் சேர ஆர்வமுடன்
ரா.மோகன்குமார்
அன்புள்ள மோகன்குமார்
அது சர்ப்ரைஸ் அல்ல. அதை ஒரு வாசகர் எதிர்பார்க்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஒரு படைப்புக்கு எதிர்பாராத முடிவு ஓர் உச்சம் என்றால் நிறைவூட்டும் முடிவு இன்னொரு உச்சம். அது எதிர்பார்த்தது நிறைவேறும்போது வருவதாகவே இருக்கும்
ஜெ
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
படுகளம் நாவலை ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகப் படித்து வந்தேன். கதாநாயகன் பலரிடம் கெஞ்சி, எந்தப்பயனுமின்றி அலைந்தபோது நானும் மனதில் அதே பதற்றங்களை உணர்ந்தேன். பின்னர் நல்ல மனிதர்களின் துணையால் மீண்டு எழுந்தபோது என்னுள்ளும் நிம்மதி.
ஆனால் தொடர் போட்டிகள், கொலைகள் மற்றும் அடிதடி இவையெல்லாம் ‘இந்த இளைஞன் எந்த இடத்தில் இதிலிருந்து விலகுவான்’ என்னும் ஏக்கத்தை ஏற்படுத்தின.
செவத்தபெருமாள் கொல்லப்படும்போது, அந்தப்பெண் சாந்தி என்ன பாவம் செய்தாள்; இவன் ஏன் அவளை நினைக்கவேயில்லை என்று தோன்றியது. ஆனால் நாவலின் முடிவு ஓரளவு எதிர்பார்த்ததுதான். இறுதியில் ‘என்னை மீட்டுக்கொண்டேன்’ என்ற வரி அருமை.
சிறுவயதில் எப்போதோ பள்ளியில் படித்தது ஞாபகம் வந்தது. “What is civilization? Being good is the real mark of civilization”.
நன்றி.
அன்புடன்,
மீரா R