படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள ஜெ
பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளை தெரிந்துகொண்டு எழுதியுள்ளீர்கள். அந்த துணிக்கடை மீண்டும் எழமுடியாமலேயே ஆகிவிட்டது. அதிலுள்ள சாதி அம்சமும் நாவலில் வந்துவிட்டது.இந்த நாவல் 90 சதவீதம் யதார்த்தம். நீங்கள் மறைத்தது இதிலுள்ள சாதியமைப்பின் பங்கு. பயந்திருப்பீர்கள்.
இரண்டு யதார்த்தங்கள் இந்த நாவலில் முக்கியமானவை. இன்றைக்கு தமிழகத்தில் எந்த ஊரிலானாலும் முக்கியமான கடைவீதிகளிலுள்ள கடைகள் கோயிலுக்கோ, மடத்துக்கோ சொந்தமானதாக இருக்கும். பல கடைகள் பழைய தீர்த்தமண்டபங்கள் அல்லது மண்டகப்படி மண்டபங்கள். ஏனென்றால் தெருக்கள் எல்லாம் மன்னர்காலத்திலேயே உருவனவை. அன்றைக்கு இப்படி தனியார் சொத்துரிமை இல்லை. சொத்து ஒன்றை கைவசம் வைத்திருப்பதுதான் உரிமை. பட்டா இருந்தாலும் அதை கைமாற்ற முடியாது. முப்பதாண்டு வில்லங்கம் எடுத்தால் எல்லாமே மாட்டிக்கொண்டு விடும். நடைமுறையில் அதன்மேல் லோனே கிடைக்காது. அந்த உரிமை நமக்கு கைவச உரிமையும் ஆள்பலமும் இருக்கும் வரைத்தான். வாரிசுகள் சண்டை வந்தாலே சண்டியர்கள் உள்ளே வந்துவிடுவார்கள். ஆகவே வல்லவன் நினைத்தால் அடித்துப் பிடுங்கலாம். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல்தான் இங்கே சொத்துரிமையாக மாறுகிறது. அரசியல் சக்தி இல்லாத சாதியின் சொத்து பறிபோகும். அதுதான் உண்மை. படுகளம் நீங்கள் உத்தேசிக்காவிட்டாலும் சொல்லும் கதை இதுதான். எல்லா ஊரிலும் அந்த ஊரிலுள்ள அரசியல் ஆதிக்கம் உடைய சாதியிடமே அர்பன் நிலம் இருக்கும். படுகளம் அப்படிப்பட்ட ஒரு பறிமுதலின் கதை சரிதானே?
அதோடு இந்த வட்டி என்பது இங்கே தமிழ்நாட்டிலே ஒரு சமாந்தரமான வியாபாரம். அது 200 ஆண்டுகளாக அப்படித்தான். வட்டிக்கான முதலீடு, அதைச்செய்யும் சாதி மாறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு முழுக்கமுழுக்க அரசியல்பணம்தான். அதில் கிரைம் இருப்பதனால் மிச்சபேர் வட்டிக்குவிட்டு திரும்ப எடுக்க முடியாது. இங்கே பல்லாயிரம் கோடி ரூபாய் லிக்விட் கேஷ் சுற்றிக்கொண்டிருக்கிறது. கணக்குக்குள் வந்தும் திரும்பச் சென்றும் இருக்கிறது. வட்டிக்குவிடுபவர்களால் சாவுகள் நடைபெறும்போது செய்தி வருகிறது. ஆனால் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. சினிமாவிலும் சரி மிச்ச தொழில்களிலும் சரி. வட்டிக்குவிடுபவர்கள் அரசியல்வாதிக்கு மிக நெருக்கமானவர்களாகவும் வெளிப்படுகிறார்கள்.
ஆனால் இதை மொத்தமாக நெகட்டிவாகவும் சொல்லமுடியாது. ஜாமீன் இல்லாமல் கடன் கிடைத்தால் மட்டும்தான் பிஸினஸ் செய்ய முடியும். அது சாதிப்பணம் அல்லது அரசியல்பணமாகவே இருக்கமுடியும். இரண்டிலும் கொஞ்சம் கிரைமும் இருக்கும். இதுவரை அதிகம் எவரும் எழுதாத உலகத்தை ஒரு கிரைம் திரில்லர் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். 99 சதவீதம் நான் புழங்கும் ரியாலிட்டி இது. ஆனால் இதிலுள்ள அளவு அபாயம் இல்லை. எல்லாரும் லாபம்தான் சம்பாதிக்கிறார்கள். அழிபவர்கள் உண்டு. அவர்களெல்லாம் வட்டிக்கு எடுத்து சொந்த வாழ்க்கைக்குச் செலவிட்டவர்கள். வட்டிப்பணம் பெரிதாகிக்கொண்டே இருக்கும் பணம். அதை சொந்த வாழ்க்கைக்கு எடுத்தால் அழிவு நிச்சயம். அதேபோல அகலக்கால் வைத்தாலும் அழிவுதான். பேராசையாலோ போட்டிவீம்புக்காகவோ அகலக்கால் வைத்து அழிந்தவர்கள் உண்டு. மற்றபடி இந்த நாவலில் உள்ளதுபோல அவ்வளவு பெரிய நெருக்கடி எல்லாம் இல்லை.
திருமலை மகாதேவன்
அன்புள்ள திருமலை,
எல்லா தொழில்களும் ஒரு புள்ளியில் அரசிலைப்போலவே சினிமாவுடனும் வந்து இணையும். அப்படி அறிந்த சிலவற்றை இடம் மாற்றி எழுதியுள்ளே. இது எந்த உண்மை நிகழ்வையும் ஒட்டிய கதை அல்ல. எவரையும் குறிப்பதும் அல்ல.
ஜெ