படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம்.
மறுபடியும் ஒரு மீச்சிறு வெண்முரசு காலம்! அல்லது புனைவுக் களியாட்டுக் காலம். முதலில் அன்று வந்த அத்தியாயத்தை வாசிப்பது, உணர்வின் அலை சற்று ஓய்ந்த பிறகு கலைத்தருணங்களைத் தொகுத்துக் கொள்ள மறுபடியும் வாசிப்பது , ஒட்டுமொத்தமாக நாவலை வாசிப்பது என உலகியலில் உடன் இருப்பவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயலாத ஒரு வாழ்க்கை 20 நாட்களாக அமைந்தது.
இதற்கு மேல் செல்லக்கூடாது என்று உள்ளிருக்கும் ஒன்றின் குரலை ஒருவர் எப்போது கேட்கத் தொடங்குகிறாரோ அந்த இடத்தில் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போது அதனைக் கடந்து அவர் காலடி எடுத்து வைக்கிறாரோ அந்த நொடியில் அவருடைய வீழ்ச்சி தொடங்குகிறது என்று செந்திலின் அம்மா செந்திலிடம் சொல்வாள். செந்தில் அதனை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறான். அதனால்தான் அவன் சற்றும் யோசிக்காமல் சாந்தியை திருமணம் செய்து கொள்கிறான். அதுவும் அவளை கைவிடப்பட்ட நிலையில் சந்திக்கும் போது! அந்த இடத்தில் அவன் எந்த வியாபாரக் கணக்கும் போடுவதில்லை அங்கு தான் செந்திலின் வெற்றி உறுதிப்படுகிறது.
அல்லா பிச்சை அவர்களுக்கு நினைத்திருந்ததை விட அதிகமாகவே செந்தில் கொடுக்கிறான். மாரி தன் பொறுப்பில் இருந்த கடைக்கு உரிமையாளனாக விரைவில் மாறியிருப்பான் என்பதைச் சொல்லவும் வேண்டாம்.
காசிலிங்கம் முன்பு செந்தில் கைகூப்பி அழிஞ்சிருவேன் நான் அழிஞ்சுருவேன் என்று அழும் போது காசிலிங்கம் உதறி மேலெழுவது உள்ளிருக்கும் ஒன்றின் குரலை, அங்கு தொடங்குகிறது அவரின் வீழ்ச்சி!
சுடலையும் அந்தக் குரலை தவிக்கிறார் என்பது அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்கு போய் வர முடிவதில்லை என்று அவர் செந்தில் இடம் சொல்வதிலிருந்து தெரிகிறது.
கிருஷ்ண சர்மா, சேஷாத்ரி ஐயர், நடராஜன் நாடார், மாரி, செவத்த பெருமாள் என்று உயிர்ப்புள்ள மனிதர்கள். இந்த நாவலில் இருக்கும் யார் மேலும் நமக்கு நிரந்தரமான வெறுப்பு வருவதில்லை. அதற்கு பதிலாக வேட்டைக்களத்தின், படுகளத்தின் நியதி மட்டுமே ஒவ்வொரு அத்தியாயத்தின் மூலமாகவும் தெரியத் தொடங்குகிறது.
எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும் நிலையில் தாங்கள் இல்லை என்றாலும்,
எப்போதும் பணிந்தளிப்பது எங்கள் கடன்!
ஆசிரியருக்கு நன்றி!
கு. பத்மநாபன்
படுகளம் அனுபவ பூர்வமாக உணர ஒன்று வியாபாரியாக இருத்தல் வேண்டும்.அல்லது வியாபாரிகள் கடன் பட்ட நெஞ்சை உருக்கி வெளியில் கொட்டியதை சேமித்து வைத்து எழுத்தில் கொண்டு வந்து இருத்தல் வேண்டும்… நெல்லை மண்ணின் மணம் கோடை மழையில் அறிய முடிந்தது. ஆண் பெண்ணில் தன்னை மீட்டு கொள்ளலாம் தான். கதையின் நாயகன் மீட்டு கொண்டது எல்லாம் தான்.
மீட்சி ஒரு முற்று புள்ளியோ..மீட்சி இல்லாது இருந்தால் தான் தொடர்ச்சி இருக்குமோ என்னவோ…
பொ. முத்துநாராயணன்
வழக்கறிஞர்