படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள ஜெ
படுகளம் வாசித்தேன். என் நெல்லை நண்பர் ஒருவர் நெல்லையில் இப்படியெல்லாமா என்று ஒரு கேள்வி என் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தா. இந்த தமிழ் ஹிந்து இணைப்பை அனுப்பியிருந்தேன்.
நெல்லை மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 240 கொலைகள்: ஆர்டிஐ-யில் காவல் துறை அதிர்ச்சி தகவல்
விஸ்வநாதன்
*
படுகளம் நாவல் தொடர் நிறைவாக முடிந்துவிட்டது. வாழ்வியலோடு இணைந்து ஒரு திரில்லர் நாவலை எழுத முடியும் என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.
அநியாயமான வட்டிக்குப் பணம் தருகிற ஒவ்வொரு லெவல் ஆட்டங்களுக்கும் பின்னால் இருக்கின்ற அரசியல் என்ன என்பதை வாசகனுக்கே விட்டு விடுகிறார் ஜெமோ. எந்தக் கதை எழுதினாலும் அதில் அவரது முத்திரையைப் பதிக்கின்ற தேர்ச்சி அது.
நாவலில் வரும் முக்கியப் பாத்திரங்கள் எல்லாம் கொலைவெறியுடன் ‘என் குடும்பத்தின் மீது கை வைத்தால் உனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் அதே நிலைமை ஏற்படும்படி நிச்சயமாகச் செய்வேன் ‘ என்று கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை வெறியுடன் மிரட்டுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாவலின் இறுதியில் நாயகனுக்கு ஏற்படுகின்ற மாற்றம் எப்படி நிகழ்ந்தது?
ஜெயமோகன் தொடரில் அங்கங்கே டைரக்டரைக் குறித்த செய்திகளைச் சொல்லிக்கொண்டே வருகிறார். கதையின் நாயகனுக்கு அவரிடம் உள்ள ஈர்ப்பையும் சொல்லுகிறார். வாழ்வியல், கலை இலக்கியம் என்றெல்லாம் நாம் வாய் கிழியப் பேசுவதை, திரையில் காட்டுவதை நமது நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்காவிட்டால் அந்த கலை இலக்கியத்தின் பயன்தான் என்ன? என்ற கேள்வியின் விடைதான் இந்த நாவல்.
நாயகனின் அம்மா கதாபாத்திரம் கதையில் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டு இருக்கிறது.
நாவலின் கடைசி அந்த 5 பாராக்கள் அப்படியே நமது மனங்களை உலுக்குகின்றன. எனக்கு ஜெயமோவின் சோற்றுக்கணக்கு சிறுகதை நினைவுக்கு வந்தது. அந்தச் சிறுகதையில் அம்மாவைப் பெண்பார்க்கச் சொன்ன அவன் பிறகு ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு அவனது மாமன் மகளையே மணந்து கொள்வான். ஒருவகையில் அதைப் போலத்தான் இதுவும்.
எப்போதுமே ஜெயமோகன் தொன்மக் கதைகள், யதார்த்தவாதக் கதைகள், பின் நவீனத்துவக் கதைகள் மட்டுமே எழுத வேண்டுமா என்ன?
இறுதியாக, நாவல் எதனைச் சொல்ல வருகிறது? பேசுகிறது? என்பதும் முக்கியம். அந்த வகையில் இந்தத் திரில்லர் கதை மனிதன் எந்தவொரு அளவுக்குக் கீழிறங்கிச் சீரழிவில் ஈடுபட்டாலும், ஏதோ ஒரு கணத்தில் மீண்டு வர முடியும் என்பதை உணர்த்தி நிற்கிறது.
மந்திரமூர்த்தி அழகு
(முகநூலில்)
ஆசிரியருக்கு,
வணக்கம்.
படுகளத்தின் கடைத்தெரு வணிகம் ஜனநாயகம் என்னும் அமைப்புக்குள் வரவே இல்லை. வணிகர் சங்கம், காவல்துறை, முனிசிபாலிட்டி என ஜனநாயகம் தரும் அமைப்புகள் அனைத்தும் உள்ளன. ஆயினும் அவை ஜனநாயக நெறிப்படி நடக்க வைக்கவேண்டும் என்னும் தன்முனைப்போ, திட்டமிடலோ, நிர்வாகத் திறனோ அந்த நகரத்தின் பிரஜைகள் ஒருவருக்கும் இல்லை.
தான் நடத்தும் கடையை ஆக்கிரமிப்பாக ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் ஒரு சிறிய செயல், ஒன்றின் மீது ஒன்றாக வளர்ந்து கடைத்தெருவே கந்து வட்டிக்கு ஆளாகின்றார்கள். ஒரு சிறிய விதி மீறல்.
கடைசியில் அந்த விதிமீறல் பற்றி அறிந்த அனைவரும் கடைத்தெருவினை பிழிந்து காசு எடுக்கின்றார்கள். விதிமீறலை விதிமுறைகளில் ஒன்றாக ஆக்கி அதிலிருந்து வெளியேறக் கடைத்தெருவுக்கு பலமில்லை, மனமில்லை. அதற்குப் பதிலாக அவர்களை ஆக்கிரமிக்கும் கந்துவட்டிக்காரர்கள், காவலர்கள், முனிசிபல்காரர்கள் என எல்லாருக்கும் கப்பம் கட்டுகின்றார்கள்.
ஒரு விதத்தில் இந்தியாவின் பழைய அர்பன் மையங்கள் காலத்துக்கு ஏற்ற வேகம் எடுக்காமல் ஆமை என நகர இது உட் சிக்கல்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. இந்த மாதிரி சூழலில் டவுன் ப்ளானிங் என்னும் நகர் வளர்ச்சி எல்லாம் நினைத்தே பார்க்க இயலாது.
நகர முன்னேற்றம் என்பது விதிமுறைகளின் விளிம்பில் நகரும் போது விளிம்பினை விஸ்தரிக்கும் விசைக்குக் கடன் பட்டிருக்கும். விசையற்று போனால் தேங்கிப் போகும், நகரம் விரியாது. நகரம் விரியாத நாகரிகங்கள் வளராது.
விதிமீறலுக்கும், விதிமுறைகளுக்கும் உரையாடல் நடந்து மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கனும். விரியாத விளிம்பின் விட்டத்தில் சிக்கிக் கொள்வது போலக் கடைத்தெருவே சிக்கிக் கொண்டது என தோன்றுகின்றது.
கதை விறுவிறுப்பான பாணியிலிருந்தது. இந்த பாணி பற்றி நீங்கள் விவரமாக எழுதியிருந்தீர்கள். அதிலிருந்து மேலும் தெரிந்து கொண்டேன்.
அன்புடன்
நிர்மல்.