அன்புள்ள ஜெ
அண்மையில் இந்த விவாதம் இணையவெளியில் நடைபெற்றது. பெரிதாக தொடரவில்லை. ஆனால் இதன் வினாக்கள் முக்கியமானவை என நினைக்கிறேன். எழுத்தாளர்களை கதைநாயகர்களாகக் கொண்டு நீங்கள் பல கதைகளை எழுதியுள்ளீர்கள். ஆகவே இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்
ராம்கோபால்
எழுத்தாளர்களை கதாபாத்திரங்களாக கொண்ட புனைவுகள்!
மன்ஸூர்
‘வாசகசாலை‘ இணைய இதழில் (ஏப்ரல் 2024) கமலதேவி எழுதியிருக்கும் சிறுகதை ‘வெளிச்சம்‘. மறைந்த எழுத்தாளர் ஆர் சூடாமணி (1931 – 2010) கதையின் முக்கிய பாத்திரம். சென்னையில் பிறந்த சூடாமணி பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு சில உடல் இயலாமைகள் காரணமாக வெளியுலக தொடர்புகள் எவையுமின்றி வாழ் முழுவதையும் ஒரே இடத்தில் கழித்தவர். ஆனால், அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆண் – பெண் இரு பாலரதும் நுட்பமான அக உணர்வுகளை சித்தரித்துக் காட்டும் குறிப்பிடத்தக்க படைப்புக்கள்.
கமலதேவியின் கதை சூடாமணியின் குடும்பம் குறித்த (உண்மையான) விவரங்களுடன் ஆரம்பிக்கின்றது:
” கீழே பேச்சு சத்தம் கேட்கிறது. அப்பாவின் அலுவலகத்தில் இருந்து யாராவது வந்திருப்பார்கள். அப்பா மதராஸ் ராஜதானியின் தலைமைச் செயலர். அவரைப் பார்க்க தினமும் பத்து ஆட்களாவது வீட்டுக்கு வருவார்கள்.”
தனக்கு மிக நெருக்கமான தோழியான தங்கை ருக்மிணி கல்யாணமாகி கல்கத்தா செல்வதையடுத்து சூடாமணி கடும் தனிமை உணர்வில் தவிக்கிறார். அதற்கான ஒரு வடிகாலாக இலக்கிய ஆக்கங்களில் கவனம் செலுத்துமாறு அவரது அம்மா வழங்கும் ஆலோசனையை கேட்டு 1950 களில் அவர் கதைகள் எழுதத் தொடங்குகிறார். இதுவே கதையின் மையக் கரு.
இந்தக் கதையின் எந்த ஒரு இடத்திலும் சூடாமணி குறித்த எதிர்மறை சித்திரங்கள் இல்லாதிருந்த போதிலும், ‘அப்படி எழுதியது தவறு‘ என்ற விதத்தில் இக்கதைக்கு எதிர்வினையாக்கியிருக்கிறார் எழுத்தாளர் அம்பை:
“கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால், ‘வெளிச்சம்‘ கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்து போன ஒரு எழுத்தாளரை பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் எம் ஏ படிக்கும் காலத்திலிருந்து மறையும் வரை அறிவேன். அவருடைய சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கி பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால், அவர் வாழ்க்கையையோ, கருத்துக்களையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறமில்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதனை படிக்க மாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்த கதையை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது…… “
அம்பையின் ஆட்சேபனைக்கு கதாசிரியரான கமலதேவியின் பதில்:
“சாகித்திய அகாடமி வெளியிடும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்‘ என்ற நூல் வரிசையில் கே பாரதி அவர்கள் எழுத்தாளர் சூடாமணி பற்றி எழுதிய நூலை அடிப்படையாக வைத்து ‘வெளிச்சம்‘ கதையை எழுதினேன். கதையில் வரும் பெயர்கள் உண்மை. மற்றபடி கதை நிகழ்வுகள் புனைவு……… மேலும், இது முற்றிலும் நேர்மறையான கதை. அறப்பிழை என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று நம்புகிறேன்.”
“எழுத்தாளர் சூடாமணி என் மனதின் ஆழத்தில் விழுந்துவிட்டார். அதனால் தான் எழுதினேன். ஒரு வகையில் அவருக்கு செய்த மரியாதை என்று நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மிகப் பெரிய ஆளுமைகள். அவர்கள் புனைவாவது இயல்பானது.”
ஆனால், அம்பை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
“இல்லை, கமலதேவி, இது கட்டாயம் அறமற்ற செயல். நேர்மையாக இருந்தாலும்……. மனதை பாதிப்பவர்களுக்கு கட்டுரை எழுதலாம். கதை எழுத You have no moral right……”
இந்த விவாதம் முக்கியமான சில கேள்விகளை எழுப்புகிறது. அதாவது, சமகாலத்தில் வாழும் அல்லது மறைந்த எழுத்தாளர்களை மையப் பாத்திரங்களாக கொண்டு கதைகளை எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் எவை? எதனைச் சொல்லலாம், எதனைச் சொல்லாமல் விடலாம் என்பதற்கான அளவுகோல் எது?
‘வெளிச்சம்‘ கதையில் கமலதேவி இரண்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். கதையில் ஒரு பாத்திரமாக குறிப்பிடப்பட்டிருக்கும் சூடாமணியின் தங்கையான ருக்மிணியும் (ருக்மிணி பார்த்தசாரதி என்ற பெயரில்) 1960 களிலும், 1970 களிலும் நிறைய சிறுகதைகள் எழுதியவர்.
சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எழுத்தாளர்கள் பற்றியும், மறைந்த எழுத்தாளர்கள் பற்றியும் தமிழில் நிறைய கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
‘ஜே ஜே : சில குறிப்புகள்‘ மற்றும் ‘தேரோடும் வீதி‘ போன்ற நாவல்கள் தமிழ் / மலையாள இலக்கியச் சூழல் மற்றும் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய புனைவுகள். அவற்றில் பலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜே ஜே சில குறிப்புகளில் வரும் முல்லைக்கல் மாதவன் நாயர் பாத்திரம் ஒரு முன்னணி தமிழ் எழுத்தாளர் குறித்த எதிர்மறைச் சித்திரம் என அக்காலத்தில் பரவலாக பேசப்பட்டது.
தமிழில் அதிக அளவுக்கு புனைவுகளில் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட எழுத்தாளர் ஜி நாகராஜன். சமூகத்தின் பொதுவான ஒழுக்க வரம்புகளை பகிரங்கமாக மீறிய ஒரு மனிதராக அவர் வாழ்ந்ததும், மறைந்ததும் அதற்கான காரணமாக இருக்கலாம்.
எம் கண்ணன் எழுதிய “G Nagarajan: Life and Literature” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட கீழேயுள்ள பந்தி, தமிழ் இலக்கியச் சூழலில் ‘அவர் ஏன் முக்கியமானவர்‘ என்பதனை காட்டுகின்றது:
“ஜி நாகராஜன் (1929 – 1981) சமகால தமிழ் எழுத்தாளர்களில் பெருமளவுக்கு விளிம்பு நிலை சார்ந்தவர்; தனது உரைநடையில் துல்லியத் தன்மையை பிரதிபலித்த பெரும் கலைஞன்; பிராமணர் மற்றும் நாத்திகவாதி; கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தீவிர மார்க்சிஸ்ட்; ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை போதித்த முன்மாதிரியான ஆசிரியர்; திருமண உறவுக்கு வெளியில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர்; கஞ்சா புகைத்தவர், குடிகாரர்; சமூக நெறிமுறைகளை மீறியவர். அலைந்து திரிந்து நாடோடி வாழ்க்கை நடத்தியவர்; அனைத்து தருணங்களிலும் மனோதிடத்துடனும், தைரியத்துடனும் வாழ வேண்டும் என தனது இரு பிள்ளைகளுக்கும் புத்திமதி சொன்ன அன்புத் தந்தை.”
“தனது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்ட, தனது பெரும்பாலான கதைகளின் நிலைக்களனாக இருந்து வந்த கோயில் நகரமான மதுரையின் அரசாங்க ஆஸ்பத்திரி ஒன்றில் கைவிடப்பட்ட ஒரு மனிதராக அவர் மரணித்தார்.”
ஆனால், அத்தகைய பெருந்தொகையான எதிர்மறை ஆளுமைப் பண்புகளையும் மீறி அவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளராக இருந்து வந்தார் என்பது அவருடைய பெயரை கேள்விப்பட்டிராத புதிய தலைமுறை வாசகர்களுக்கு வியப்பாக இருக்கலாம். அவர் எழுதிய ‘நாளை மற்றும் ஒரு நாளே‘ என்ற நாவல் இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தின் ஒரு கிளாஸிக்காக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பெங்குயின் Modern Classics நூல் வரிசையில் 2010 இல் வெளியிடப்பட்டது.
ஜி நாகராஜன் பற்றிய புனைவுகள் குறித்த சி மோகனின் இந்தக் குறிப்பு முக்கியமானது:
“ஜி நாகராஜன் மரணத்திற்குப் பிறகு அவரை மையப் பாத்திரமாகக் கொண்ட ஐந்து சிறுகதைகள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. இது உலக இலக்கியப் பரப்பில் நிகழ்ந்திராத ஒரு அபூர்வம். ஒரு படைப்பாளி தன் மரணத்திற்கு பின்னும் தன் சமகாலத்திய மற்றும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்பாக்கங்களில் ஒரு மையப்பாத்திரமாக அமைவது ஒரு அபூர்வ கலை நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. அசோகமித்திரனின் ‘விரல்‘ (1984); திலீப்குமாரின் ‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்‘ (1985); பிரபஞ்சனின் ‘ஒரு நாள்‘ (1993); சுந்தர ராமசாமியின் ‘நண்பர் ஜி எம்‘ (2004); மற்றும் என்னுடைய ‘விலகிய கால்கள்‘ (2015) ஆகிய கதைகள் ஜி நாகராஜனை மையமாகக் கொண்டவை.”
“இந்தக் கதைகளின் சம்பவங்கள் அவருடைய வாழ்நாளில் நிகழ்ந்தவை என்றாலும், இந்த கதைகள் ஐந்துமே அவருடைய மரணத்துக்கு பின்னர் தான் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும், அவருடன் இருக்க நேரிட்ட ஒரு நாளின் சம்பவங்களையே இக்கதைகள் களமாக கொண்டிருக்கின்றன. அவை அவருடைய சில விசித்திரங்களை பிரதிபலிக்கின்றன…….”
ஆனால், ‘சொல் புதிது‘ இதழில் வெளிவந்த (ஜெயமோகன் எழுதியதாக கூறப்படும்) “நாச்சார் மட விவகாரங்கள்” என்ற கதை சுந்தர ராமசாமியின் இலக்கிய அந்தஸ்தை சீர்குலைக்கும் உள்நோக்குடன் எழுதப்பட்டதாக அது வெளிவந்த சந்தர்ப்பத்திலேயே கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எழுத்தாளர்களை கதாபாத்திரங்களாக கொண்ட புனைவுகளுக்கான இலங்கை உதாரணங்கள் எஸ் பொ எழுதிய ‘அணி‘, குந்தவை எழுதிய ‘யோகம் இருக்கிறது‘ மற்றும் தேவமுகுந்தனின் ‘சின்ன மாமா‘ ஆகிய கதைகள். அவையும் பூடகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தந்த எழுத்தாளர்கள் குறித்த எதிர்மறைச் சித்திரங்கள்.
ஆங்கில எழுத்தாளர் Somerset Maugham 1930 இல் எழுதிய ‘Cakes and Ale’ நாவல் 1920 களின் லண்டன் இலக்கிய வட்டாரங்கள் குறித்த ஓர் அங்கதம். கதை சொல்லியான William Ashenden இன் இலக்கிய நண்பர் Alroy Kear. தனது சமகால எழுத்தாளரான Hugh Walpole ஐ (1884 – 1941) மறைமுகமாக சுட்டும் விதத்தில் Maugham அதில் Kear பாத்திரத்தை உருவாக்கியிருந்ததாக பரவலாக நம்பப்பட்டது.
அது குறித்து ஆட்சேபனை தெரிவித்து Walpole எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த போது “Alroy Kear பாத்திரத்தில் உங்களை சித்தரித்துக் காட்ட வேண்டுமென ஒரு போதும் நான் நினைக்கவில்லை“ என Maugham பதிலளித்திருந்தார். ஆனால், அந்நாவலின் புதிய பதிப்புக்கு 1950 இல் எழுதிய அறிமுகத்தில் “உண்மையில் Kear பாத்திரத்திற்கான தூண்டுதலாக Walpole இருந்து வந்தார்” என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
“இலக்கியத் திறனிலும் பார்க்க, புகழும் பொருளும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையுடன் செயற்பட்ட மேலோட்டமான ஒரு நாவலாசிரியராக” அவரை சித்தரித்த இந்த நாவல், Hugh Walpole இன் வாழ்க்கையின் கடைசி 15 வருடங்களை சீர்குலைத்ததுடன், ஒரு எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கிருந்த நற்பெயரையும் கெடுத்தது என்கிறார் ஒரு விமர்சகர். அதனையடுத்து இலக்கிய வட்டாரங்களில் அவருக்கு இருந்த மதிப்பு பெரும் சரிவை எதிர்கொண்டது.
அதற்குப் பதிலடியாக 1931 இல் புனைப்பெயரில் மறைந்து ஒருவர் எழுதிய “Gin and Bitters” என்ற நாவல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. “ஏனைய நாவலாசிரியர்கள் பற்றி நாவல்களை எழுதும் ஒரு நாவலாசிரியரின் கதை” என அது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாவல் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த பொழுது Maugham பிரயோகித்த அழுத்தங்கள் காரணமாக அதன் பிரதிகள் விற்பனை நிலையங்களிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
‘தனக்கொரு நியாயம், எதிரிக்கு ஒரு நியாயம்‘ என்ற விதத்தில் Maugham நடந்து கொண்டது அறமற்ற செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எழுத்தாளர்களை மையப்பாத்திரங்களாகக் கொண்டு அல்லது நிஜ உலக மனிதர்களை பாத்திரங்களாக கொண்டு புனைவுகளை எழுதுபவர்கள் தமது எழுத்தில் ‘அறம் சார்ந்தது‘ எது மற்றும் ‘அறம் மீறியது‘ எது என்பதை அவர்களே தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
மன்சூர் (Mlm Mansoor)
முகநூலில் இருந்து
வெளிச்சம் -வாசகசாலை
அன்புள்ள ராம்,
இது ஒரு நல்ல குறிப்பு. விவாதமும் நன்று. அரசியல் விவாதங்கள் நடுவே இப்படி ஒன்று நிகழ்வது சிறப்பு.
*
இந்த விவாதத்தில் நான் முதலில் கேட்பது ஒன்றே. வரலாற்று ஆளுமைகளை வைத்து கதை எழுதலாமா? வீரநாயகர்கள், தியாகிகள், சான்றோரை வைத்து எழுதலாமா? கூடாது என்று ஒருவர் சொன்னால் உடனடியாக உலக இலக்கியத்தின் பெரும் பகுதியை நிராகரித்தவர் ஆகிறார். இலக்கியவாசகர் எவரும் அதைச் செய்யமாட்டார்கள்.
சரி, அவர்களைப் பற்றி எழுதலாம். ஆனால் எழுத்தாளர்களைப் பற்றி மட்டும் எழுதக்கூடாது என்று சொல்லலாமா? அல்லது ஒருவர் அண்மைக்காலத்திலோ சமகாலத்திலோ வாழ்ந்தால் அவரைப் பற்றி எழுதக்கூடாது என்று சொல்லலாமா? இப்படி ஒரு மாறுபட்ட அளவுகோல் இருந்தால் அதற்கு இலக்கியத்தில் என்ன இடம்?
தமிழில் வரலாற்றுநாயகர்கள் பற்றி அதிகமாக புனைவுகள் எழுதப்படவில்லை. ஏனென்றால் இங்கே அப்படி வெளியே பார்த்து எழுதுவது மிகக்குறைவு. தமிழ் நவீன இலக்கியம் என்பது சொந்தவாழ்க்கையை, சொந்த வாழ்க்கைச்சூழலை மட்டுமே எழுதுவதாகவே உள்ளது. அது பெரிதாக ஏதும் நிகழாத எளிமையான நடுத்தரவற்க வாழ்க்கை என்பதனால் இன்றைய வாசிப்பில் கணிசமான தமிழிலக்கிய எழுத்துக்கள் வெறும் பதிவுகளாக எஞ்சுகின்றன. நல்லவேளையாக அவை அளவில் அதிகம் இல்லை. மறுபக்கம் தமிழ் வணிக எழுத்து என்பது பகற்கனவின் வெளி.
ஆனால் ஆங்கிலத்தில் வரலாற்று நாயகர்கள் அனைவரைப்பற்றியும் ஏராளமான புனைவுகள் எழுதப்பட்டிருக்கும். பல கோணங்களில். கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியும் ஏராளமாக எழுதப்பட்டிருக்கும். மலையாளத்திலேயே கூட நாராயணகுரு, இ.எம்.எஸ். போன்றவர்களைப் பற்றிய நாவல்கள் உள்ளன. துஞ்சத்துஎழுத்தச்சன், குமாரன் ஆசான் போன்றவர்களைப் பற்றி பல இலக்கியப்புனைவுகள் உள்ளன.
ஆர்வமுள்ள வாசகர்களுக்காக அவற்றில் மிகச்சிறந்த சிலவற்றைப் பரிந்துரைக்கிறேன்.
- குரு (நாராயணகுரு பற்றிய நாவல். கே.சுரேந்திரன்)
- கேசவன்றே விலாபங்கள் ( இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பற்றிய நாவல். எம்.முகுந்தன்)
- தீக்கடல் கடஞ்ஞு திருமதுரம் (எழுத்தச்சன் பற்றிய நாவல், சி.ராதாகிருஷ்ணன்).
- மரணம் துர்பலம் ( குமாரன் ஆசான் பற்றிய நாவல். கே.சுரேந்திரன்)
தமிழில் ஒரு கதை அந்த ஆசிரியனின் வாழ்க்கையாகவே இருந்தாகவேண்டும் என்னும் அசட்டு நம்பிக்கை தீவிர இலக்கியச் சூழலில் நிலவியது. அதைக் கடந்து இன்னொரு வாழ்வுக்குள், வரலாற்றுச் சூழலுக்குள் சென்று எழுதும் ஆற்றல்கொண்ட படைப்பாளிகள் அனேகமாக இருக்கவில்லை. அத்துடன் ஆய்வுசெய்து எழுதுமளவுக்கு வாழ்வும் பொழுதும் கொண்டவர்களும் இலக்கியவாதிகளில் அரிதாகவே இருந்தனர், மொத்த வாழ்க்கையிலும் தன் வாழ்க்கைக் குறிப்பாக ஓரிரு படைப்புகள் என்பதே இங்கே நிலவிய சூழல்.
இங்கே பாரதி பற்றிய பல புனைவுகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எவையுமே இலக்கியத் தகுதி கொண்ட ஆக்கங்களாக அமையவில்லை. (பரவாயில்லை என்னும் வகையிலான இரண்டு உதாரணங்கள் பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியார் –ராஜம் கிருஷ்ணன். புழுதியில் வீணை (நாடகம்) ஆதவன்). ராமானுஜரைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி, மு.கருணாநிதி ஆகியோர் புனைவுகளை எழுதியுள்ளனர்.
தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கைப் புனைவுகளில் முக்கியமானது மணலூர் மணியம்மை பற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘பாதையில் பதிந்த அடிகள்’.
*
வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள் நேரடியாக அந்த ஆளுமையின்பெயரைச் சுட்டுபவை. அவ்வாறன்றி, உண்மையான ஆளுமைகளின் சாயல் கொண்ட படைப்புகளை வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள் என்று சொல்லிவிட முடியாது. அதாவது யானை டாக்டர் வாழ்க்கை வரலாற்றுப் புனைவு. அறம் வாழ்க்கை வரலாற்றுப் புனைவு அல்ல. உலக இலக்கியத்தில் இரு வகை எழுத்துக்களுமே ஏராளமாக உள்ளன.
ஒரு படைப்பில் அதற்கு தூண்டுதலாக அமைந்த ஆளுமையின் பெயரைச் சுட்டவேண்டுமா, பெயரை மாற்றலாமா என்பது ஒரு கேள்வி. அதற்கு கறாராக பதிலைச் சொல்லமுடியாது. அதன் ஆசிரியர் அதை முடிவெடுக்கவேண்டும். இப்படிச் சொல்லலாம், ஓர் ஆளுமையின் அறியப்பட்ட வாழ்க்கைவரைவை ஒட்டியே ஒரு புனைவு அமையும்போது, அதை மேலும் விரிவாக்கம் செய்யவோ அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியை நுணுக்கமாக விளக்கவோ செய்யும்போது அவருடைய பெயரை பயன்படுத்தலாம். ஏனென்றால் அது அவருடைய வாழ்க்கைவரலாற்றின் ஒரு புனைவாக்கம்தான். அவ்வாறன்றி, அவருடைய வாழ்க்கையின் அறியப்படாத பக்கம் சொல்லப்பட்டுள்ளது என்றால், அவர் வாழ்க்கையுடன் தொடர்பற்ற முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றால், அவர் பெயர் சுட்டப்படலாகாது.
நேரடியாக பெயர் சுட்டப்படாத எழுத்திலுள்ள வாழ்க்கைவரலாற்று அம்சத்தை ஒரு கலாச்சார எடுத்தாள்கை (Applied culture) என்று மட்டுமே கொள்ளவேண்டும். அப்படி ஏராளமான தரவுகள் எல்லா படைப்புகளிலும் இருக்கும். உதாரணமாக, இடங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் போன்றவை. அவை வரைபடத்தில் இருப்பதுபோல ‘அப்படியே’ படைப்பில் இருக்காது (இருந்தால் அது நல்ல கலைப்படைப்பு அல்ல. ஆவணத்தன்மை கலைக்கு எதிரான செயல்பாடு) அவை ஆசிரியரால் எடுத்தாளப்பட்டிருக்கும். அவை படிமமாக உருமாறியிருக்கும். அதற்கேற்ற மாறுதல்களை அடைந்துமிருக்கும். அப்படித்தான் ஆளுமைகளும்.
மேலைநாட்டு விமர்சகர்கள் படைப்பிலுள்ள அந்த ’ஆளுமைச் சாயல்களை’ தேடிக் கண்டடைந்து விவரித்து எழுதுவதுண்டு. அது ‘உண்மையைக் கண்டுபிடிக்கும்’ வம்பு மனநிலை அல்ல. ஒரு கலாச்சாரக் கூறு எப்படி புனைவில் உருமாறியுள்ளது என்று கண்டடைவதே நோக்கம். தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலிலுள்ள நடாஷா அவருடைய பாட்டிதான் என ஆராய்ந்தறிந்துள்ளனர். அதைப்போல. ரோமன் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோஃப் நாவலில் கதைநாயகனின் வாழ்க்கைநிகழ்வுகளில் எந்தச் சாயலும் இல்லை என்றாலும் ஆளுமையில் மொஸார்தின் சாயல் உள்ளது என்பது விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டது – நோபல் விருது பெற்ற படைப்பு அது.
வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள் பண்டைய இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் முக்கியமான ஒரு பகுதி. நமக்கு முன்னுதாரணங்கள் குறைவு, அவை சார்ந்த விவாதங்களும் எழவில்லை என்பதனால்தான் இவ்வகையான எதிர்ப்புகள் உருவாகின்றன. பண்டைய இலக்கியம் வாழ்ந்த மனிதர்களை வரலாற்றில் நிலைநிறுத்தும் பொருட்டு புனைவாக்கியது. இன்றைய இலக்கியம் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து சில அடிப்படைகளை ஆராய முயல்கிறது. வரலாற்று மனிதர்கள் என்பதனால்தான் இலக்கியவாதிகள் எழுத்துக்குள் வருகிறார்கள்.
வரலாற்று நாயகர்கள் வரலாற்றை எதிர்கொண்டவர்கள். ஆகவே வரலாற்றின் எல்லா உச்ச அழுத்தங்களும் அவர்கள்மேல் குவிந்தன. அவர்களை வைத்து வரலாற்றை எழுத முடியும். இலக்கியவாதிகள் வரலாற்றில் ஈடுபடுவது அரிது. ஆனால் அவர்கள் மிகமிக நுண்மையான அகம் கொண்டவர்கள் என்பதனால் அவர்களை மையமாக்கி சில அடிப்படை வினாக்களுக்குச் செல்லலாம். அவை நிகழ்ந்த காலகட்டத்தை எழுதலாம். அதற்கு ஆதாரமாக அவர்களே சில படைப்புகளை எழுதியுமிருப்பார்கள். ஆகவே அவர்கள் கதைக்குக் கருப்பொருட்களாகிறார்கள்.
இவ்வாறு எழுதும்போது எந்த அளவில் உண்மைசெய்திகளை அளிப்பது? அதுவும் எழுத்தாளரின் தெரிவுதான். வாழ்க்கைக்கு ஒருமை இல்லை, அது பலவாறாக விரிந்து கிடப்பது. ஆனால் புனைவுக்கு ஒருமை தேவை. கதாபாத்திரம் என்பதே ஒருமையுள்ள ஆளுமைதான் – மெய்யான மனிதர்களுக்கு இல்லாதது அந்த ஒருமை. கதாபாத்திரம் என்பது ஒரு கதைச்சூழலில் ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட வகையில் வரையறுக்கப்பட்ட ஆளுமையுடன் வெளிப்படுவது. மெய்யான மனிதரை அப்படி ஒருமையுள்ள கதாபாத்திரமாக ஆக்க அவரை மாற்றி எழுதியாகவேண்டும். அந்தக்கதைக்கு அவருடைய எந்த அம்சம் முக்கியமோ அதை மட்டுமே மையமாகக் கொண்டு அவருடைய ஆளுமையை கற்பனையால் உருவாக்கவேண்டும்.
இதில் எல்லை என்ன? எழுதுபவரின் நோக்கம் முக்கியமானது. ஓர் அடிப்படை வினாவை முன்வைக்க, சில அடிப்படைகளை விவாதிக்க ஒருவரின் வாழ்க்கையை படைப்பாளி எடுத்துக் கொள்வதே இலக்கியத்திற்கான வழி. அதன் வழியாக அந்த ஆளுமை இழிவுபடுத்தப்படலாகாது என அந்த ஆசிரியன் கவனம்கொள்ள வேண்டும். அதில் எல்லையை எழுத்தாளனே முடிவுசெய்கிறான்.
இந்த ’இழிவுசெய்தல்’ என்பதிலேயே அளவுகோல்கள் மாறுபடும். கதையில் நாயகியாக வரும் ஓர் உண்மையான பெண் ஆளுமை விவாகரத்து ஆனவர் என்பதை கதையில் குறிப்பிட்டால் சென்ற தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் அது அவருடைய ‘தனிப்பட்ட வாழ்க்கை ரகசியம்’ என்றும் அதை எழுதி அந்த ஆளுமையை எழுத்தாளர் இழிவுசெய்துவிட்டார் என்றும் நினைப்பார். இன்றைய வாசகனுக்கு அப்படித் தோன்றாது.ஒருவர் உடற்குறைபாடு உள்ளவர் என்று சொல்வதே அவரை இழிவுசெய்வது என ஒரு பழைய உள்ளத்துக்குத் தோன்றும், ஏனென்றால் அவர் உள்ளூர அப்படி நினைக்கிறார். நவீன இளைஞர்களுக்கு அதிலென்ன என்றுதான் தோன்றும். அவர்களுக்கு அந்த நிலை சம்பந்தப்பட்டவரின் ஒரு உடற்சிக்கல் அவ்வளவுதான். இரக்கம், ஆதுரம், கருணை எல்லாம் இன்று எவருக்கும் தோன்றாது.
பழையகாலத்தில் நோய்களை வெளியே சொல்ல மாட்டார்கள். இன்று புற்றுநோய் வந்தால் முடி கொட்டிவிட்டதை படமெடுத்து பகிர்கிறார்கள். எவரும் ‘அடாடா’ என அனுதாபப்படுவதில்லை. ‘பார்த்துக்கொள்ளுங்கள், கடந்துவாருங்கள்’ என ஊக்கப்படுத்துகிறார்கள். அந்த அளவுகோல் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அண்மையில் கேரளத்தில் ஒரு வாழ்க்கை வரலாற்றில் தங்கள் தந்தை வறுமையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையென்றாலும் தங்களை இழிவுசெய்தலாக உள்ளது என வாரிசுகள் கூறினர். ஒரு குறிப்பு இன்றைய மதிப்பீடுகளின்படி அது இழிவுசெய்தலா என்பதே முக்கியமான கேள்வி.
வேண்டுமென்றே இழிவுசெய்யும் நோக்குடன் எழுதப்படும் புனைவுகள் பல உண்டு. நீல பத்மநாபனின் தேரோடும் வீதி அதற்குச் சரியான உதாரணம். ஆகவே அந்நாவலுக்கு எந்த இலக்கிய இடமும் இல்லை- நீல பத்மநாபனின் தலைமுறைகள், உறவுகள், பள்ளிகொண்ட புரம் ஆகியவை இலக்கியச் சாதனைகள் என்ற போதிலும். நகுலனின் சில படைப்புகளைப் பற்றிக்கூட நல்ல நோக்கம் அற்றவை என எளிதில் சொல்லிவிட முடியும். சமகாலப் படைப்பாளிகளைப் பற்றி எளிதில் அடையாளம் காணத்தக்க பெயர்களைச் சூட்டி, இழிவு செய்யும் நோக்குடன் செவிவழி வம்புகளை எழுதுவதும் நையாண்டி செய்வதும் அவற்றில் காணப்படுகிறது.
இலக்கியவாதிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக கேலியும் கிண்டலும் செய்து எழுதுவது, அதாவது வசைமரபு, பழங்காலம் முதலே உள்ளது. மரபிலிருந்தே ஏராளமான பாடல்கள் கிடைக்கின்றன. ஆங்கில நவீன இலக்கியத்தில் வில்லியம் பிளேக் அதில் ஒரு ’மாஸ்டர்’. தமிழில் பிரமிள் அவருக்கு இணையானவர். என் பார்வையில் அவற்றுக்கு எந்த இலக்கிய இடமும் இல்லை. அவற்றை அதை எழுதிய இலக்கியவாதியின் இருண்ட பக்கங்களாகவே கருதுவேன்.
cakes and Ale நாவல் பற்றி அன்று பிரிட்டனில் எழுந்த விவாதங்கள் அக்காலச்சூழல் சார்ந்தவை. அந்நாவல் நல்ல நோக்கம் கொண்டதா என்பது இன்று சொல்லத்தக்கதல்ல. அதில் அஷெண்டன் என்னும் மாணவக்கதாபாத்திரம் கதைசொல்லியாக வருகிறது. டிரிஃபோல்ட் என்னும் இலக்கிய ஆசிரியன் ஒழுக்கமற்ற தன் மனைவி ரோஸி மேல் பெரும் பற்றுடன் இருக்கிறான். ரோஸில் அஷெண்டனுடன் பாலுறவு கொள்கிறாள், லார்ட் ஜார்ஜ் என்னும் தெருப்பொறுக்கிதான் அவளுக்கு உளரீதியாக ஒத்துவருகிறான். அவள் அவனுடன் அமெரிக்காவுக்கு ஓடிவிடுகிறாள். அழகியும், இலக்கியப் பற்று கொண்டவளுமான ஆமியை டிரிபோல்ட் மணந்தாலும் ரோஸி மேல் கொண்ட காதல் மறையாமலேயே இருக்கிறது. அந்த ஏக்கமே அவரை அழிக்கிறது.
வெறும் வம்பு மட்டுமல்ல இந்நாவல். இதில் மானுட உள்ளங்களின் விளக்கமுடியாத ஈர்ப்பும், சார்பும் வெவ்வேறு கோணங்களில் விளக்கப்பட்டுள்ளன. மனதின் நுண்ணிய அசைவுகளை தொடர்ச்சியாக அவதானித்தபடியே செல்லும் ஒரு படைப்பு இது. (இது எனக்கு கல்லூரியில் துணைப்பாடமாக இருந்தது. இதைப்பற்றி நான் ஒரு கட்டுரை எழுதினேன், ஆங்கிலத்தில். என் ஆங்கில ஆசிரியர் எட்வர்ட் தாஸ் அதை திருத்தி எழுதி ஒய்.எம்.சி.ஏ மலரில் வெளியானது. நான் என்னை ஓர் ஆங்கில இலக்கிய ஆசிரியனாக கற்பனை செய்துகொண்டு ஓராண்டு அலைய அக்கட்டுரை வழிவகுத்தது. தமிழாசிரியர் என்.ஆர்.தாசன் என்னை மீட்டார்.)
இன்னும் இரண்டு கேள்விகள் இதில் எஞ்சியுள்ளன. ஓர் இலக்கிய விமர்சகர் ஓர் இலக்கிய ஆக்கத்தை விவாதிக்கையில் அந்த ஆசிரியரின் தனிவாழ்க்கையை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்? அதிலுள்ள கதைமாந்தருக்கு உதாரணமாக அமைந்த மனிதர்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு விவாதிக்கலாம்? விவாதிக்கவே கூடாது என தமிழில் சிலர் சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கை வரலாற்று விமர்சனம் (biographical criticism) என்பது உலக இலக்கியத்தில் மிக ஆழமாக வேரூன்றிய ஒன்று.
அதன் எல்லைகள் பற்றி நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். இலக்கியவிமர்சகர் படைப்பை எழுதிய இலக்கிய ஆசிரியரின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றில், அறியப்பட்ட பொதுவாழ்க்கையில், அவரே சொன்ன தன்வாழ்க்கைச் செய்திகளில் உள்ள கூறுகளை மட்டும் இலக்கிய விமர்சனத்திற்கு பயன்படுத்தலாம். புதுமைப்பித்தனுக்கு காசநோய் இருந்ததும் சரி, ஜி.நாகராஜன் குடிப்பழக்கத்தால் நோயுற்று மறைந்ததும் சரி, அவர்களாலும் பிறராலும் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள். அவை அவர்களின் படைப்புகளை மேலும் கூர்ந்து நோக்கி உள்வாங்க உதவும் மேலதிகச் செய்திகள். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகளில் ஜே.ஜே என்னும் கதாபாத்திரத்திற்கு மலையாள எழுத்தாளர் சி.ஜே.தாமஸின் சாயல் உண்டு என்பதும், எம்.கே.ஐயப்பன் எம்.கோவிந்தனின் சாயல் கொண்டவர் என்பதும் அந்நாவலை அணுகியறிய உதவுபவை.
ஆனால் இந்தச் செய்திகள் சிலசமயம் அந்த ஆளுமையின் குடும்பத்திற்கு உகக்காமலாகக்கூடும். ஏனென்றால் அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றனர். இங்கே ஒவ்வொருவரும் மறைந்தவர்கல் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்கின்றனர். பெரும்பாலும் ஒரே பொதுவான பிம்பம். அதுதான் அவர்களுக்கு புரிந்ததாகவும் உள்ளது. ஆகவே இலக்கியச் சூழலில் எழுதப்படும் நுட்பமான, தீவிரமான தோற்றத்தை மறுக்கின்றனர்.
உதாரணமாக, ஜி.நாகராஜன் குடிப்பார் என்பதை எழுதியதற்கு அவருடைய குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. அதைவிட ஆச்சரியம் சிதம்பரம் என்னும் மாணவர் புதுமைப்பித்தன் காசநோயால் இறந்தார் என்பதை பதிவுசெய்ததற்கு புதுமைப்பித்தனின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்ச்சூழலில் பெரும்பாலான உறவினர்கள், பற்றாளர்கள் அவர்கள் கொண்டுள்ள அதே பிம்பம் மட்டுமே பிறராலும் முன்வைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. இது பெரும்பாலும் பற்று சார்ந்த எளிய நிலைபாடு. அம்பை ஆர்.சூடாமணி பற்றி கொண்டிருக்கும் முன்முடிவும் அப்படியே. அம்பை ஆர்.சூடாமணிக்கு அணுக்கமானவர். ஆர்.சூடாமணி உடல்குறை கொண்டவர் என எழுதுவது அவரை அவமதிப்பது என நினைக்கிறார். அது ஒரு பழைய மதிப்பீடு.
மேலைநாடுகளில் பொது ஆளுமைகள் பற்றி ‘ஈவிரக்கமற்ற’ வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. ஆய்வாளர் அந்த ஆளுமையின் தனிவாழ்க்கையில் நுழைந்து, ஆவணங்களை தேடிச்சேகரித்து, அவ்வாளுமையை மறுஆக்கம் செய்து காட்டுவார். பல மறைக்கப்பட்ட உண்மைகள் அதன் வழியாக வெளிவரும். உதாரணமாக, எஸ்ரா பவுண்ட் தனக்கு சட்டபூர்வமற்ற தொடர்பில் பிறந்த மகனை வேறொருவருக்கு வளர்க்கும்படிக் கொடுத்துவிட்டார் என்பது போன்ற விஷயங்கள் அவ்வாறு பொதுவெளிக்கு வருகின்றன.
அதை இங்கே செய்யலாமா? தனிவாழ்வு புனிதமானது என நினைக்கும் மேலைநாடுகளில்தான் அந்தவகை வாழ்க்கை வரலாறுகள் வெளிவருகின்றன. ஆனால் இங்கே அது இன்று செய்யப்படலாகாது என்பது என் எண்ணம். ஏனென்றால் இங்கே ஏற்கனவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மேல் பொதுமக்களுக்கு மதிப்பில்லை. எழுத்தும் சிந்தனையும் பொருட்படுத்தப்படுவதில்லை. அந்த நிலையை மேலும் கீழிறக்கவே அது உதவும்.
ஆனால் புகழ்பெற்ற பொது ஆளுமைகள் மேல் அவ்வாறான வரலாறுகள் எழுதப்படலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.ஜார்ஜ் எழுதிய வரலாறு அவ்வகையானது. அதை நான் தமிழில் அறிமுகம் செய்தபோது இதே விவாதம் எழுந்துள்ளது. (ஓர் அக்கினிப்பிரவேசம்) இப்போது சுசித்ரா நீலி இதழில் புகழ்பெற்ற நடனக்கலைஞர்களின் தனிவாழ்க்கைகளைச் சுட்டிச்செல்லும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் (ஒரு தலைமுறையின் விதி – சுசித்ரா)
தமிழகத்தின் புகழ்மிக்க அரசியல் ஆளுமைகள் எவர் பற்றியும் தமிழில் ஒரே ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுகூட எழுதப்பட்டதில்லை. அந்த அரசியலாளுமையின் ஒரே ஒரு சிறு தவறோ குறையோ கூட வாழ்க்கை வரலாறுகளில் சுட்டிக்காட்டப்பட முடியாது. துதிகள் மட்டுமே எழுதப்பட முடியும் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.
வாழ்க்கையை எழுதுவதே இலக்கியம். எவ்வகையில், எந்த அளவில் என்பது அந்த ஆசிரியரின் தெரிவு. எல்லா தருணங்களிலும் ஆசிரியரின் நோக்கமும் அதனூடாக திரண்டு வருவதென்ன என்பதுமே அவற்றின் மதிப்பை தீர்மானிக்கிறது.
ஜெ
ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?
எம் ஓ மத்தாயின் நேரு நினைவுகள்