ராஜாவின் சிம்பனி

அன்புள்ள ஜெ

இளையராஜா சிம்பனி இசை அமைப்பதாக அறிவித்திருப்பதை ஒட்டி மீண்டும் விவாதங்கள் நிகழ்கின்றன. அவர் ஏற்கனவே ஒரு முறை (1988) சிம்பனி அமைத்ததாக அறிவித்து பாராட்டுவிழா எல்லாம் நடைபெற்றது. அதன்பின் அது வெளியாகவே இல்லை. அவர் தன்னை விளம்பரம் செய்துகொள்வதற்காகப் பொய் சொன்னார், அவர்மேல் அத்துடன் மரியாதையே போயிற்று என உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையனின் முகநூல்பக்கத்தில் ஒருவர் எழுதியிருந்தார். இந்தவகையில் பல கருத்துக்கள் கண்ணுக்குப்பட்டன. உங்கள் கருத்து என்ன?

ராஜ்கண்ணன்

அன்புள்ள ராஜ்கண்ணன்,

தன்னை வணிகரீதியாக முன்வைப்பதற்கு முயல்பவர் இளையராஜா என எவரேனும் சொன்னால் அது வெறும் காழ்ப்பு மட்டுமே, அவருடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையே அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான சான்று. இந்த சிறிய மனிதர்கள் வெறுப்பை வளர்க்க காரணம் தேடி அலைபவர். ஒரு பெரும் படைப்பாளியை வெறுக்க என்ன ஏது என புரிந்துகொள்ளாமல் வரும் ஒரு காரணமே போதும் என்றால் அதைச் சொல்பவரின் தரம் என்ன?

எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தது, அந்த சிம்பனியுடன் சம்பந்தப்பட்டவரிடம் இருந்தே தெரிந்துகொண்டது இதுதான். அந்த சிம்பனியில் இளையராஜா சேர்த்திருந்த இந்திய இசையம்சம் அதன் வெளியீட்டாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதை நீக்கவேண்டும், அல்லது கலவையிசை (ஃப்யூஷன்) என்று பெயரிடவேண்டும் என்றார்கள். அவர்களின் பார்வையில் சிம்பனி என்பது கறாரான நெறிகள் கொண்டது, முற்றிலும் ஐரோப்பியச் செவ்வியல் சார்ந்தது. 

சிம்பனியில் மாபெரும் படைப்புகள் ஏற்கனவே உள்ளன, இந்திய இசையுடன் இணைந்திருப்பதுதான் தன் சிம்பனியின் தனிச்சிறப்பு, சிம்பனி அப்படி தூய மேற்கத்திய இசையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது இளையராஜாவின் தரப்பு. 

இது சிம்பனி என்ற வடிவின் அழகியல் சம்பந்தமான விவாதம். மேலைநாட்டில் இலக்கியம், இசை எல்லாவற்றிலும் ‘எடிட்டர்’களின் கருத்து வலுவானது. ஆனால் தன் இசைமேல் இன்னொருவரின் கருத்தை இளையராஜா ஊடுருவலாகவே எடுத்துக்கொண்டார். விவாதிக்கவே மறுத்து விலகிவிட்டார். அவர் எப்போதுமே அவருடைய இசைமேல் இன்னொருவருடைய கருத்தை, திருத்ததை இம்மியளவும் ஏற்பவர் அல்ல.

சிம்பனி என்பது இன்று ஐரோப்பாவில் புகழ்பெற்றிருக்கும் வடிவம் அல்ல. மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் அது கேட்கப்படுகிறது. அதற்கு பெரிய வணிக மதிப்பும் இல்லை. பலவகை நிதியுதவிகளுடன் மட்டுமே உண்மையில் சிம்பனி உருவாக்கப்படுகிறது. அன்று அந்தப்பூசலால் அந்த சிம்பனிக்கான நிதியாதாரம் அமையவில்லை. அது வெளிவரவில்லை. அதன் காப்புரிமைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன, ஆகவே வெளிவரவும் முடியாது. 

தன் வாழ்நாளில் எல்லா கணமும் படைப்பூக்கத்துடன் இருப்பது, எந்த அகவையிலும் புதிய பெருங்கனவுகளை நோக்கிச் செல்வது ஆகிய இரண்டுமே படைப்பாளியின் முதன்மைச் சவால்கள். அதில் இளையராஜா அனைவருக்கும் மாபெரும் முன்னுதாரணம்

ஜெ 

முந்தைய கட்டுரைAm I A Hindu?
அடுத்த கட்டுரைசிருஷ்டிகீதம்