ஒரு புதிய விஷயத்தைச் சொல்லும்போது முதலில் அதிர்ச்சி, அதன் பின் வசை, அதன்பின் மௌனம். அதன் பின்னர்தான் அதை கவனிப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டபின் இதெல்லாம் தெரிந்ததுதானே என்னும் பாவனை. இதுதான் சாமானியர்களின் வழக்கம். அதிலும் அவர்கள் கொண்டாடிய ஒன்றைப்பற்றிய விமர்சனம் என்றால் வசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
மஞ்ஞும்மல் பாய்ஸ் பற்றி இப்போது பேச்சே இல்லை. ஆனால் அடுத்தடுத்த படங்களில் நான் சொன்னவற்றை ‘தாங்களாகவே’ கண்டுபிடிக்கிறார்கள். ஆவேஸம் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டனர். நான் எதற்கு பார்க்கப்போகிறேன்?
ஆனால் சுவாரசியமான ஒரு விஷயத்தை மலையாள இயக்குநராகிய நண்பர் சொன்னார். அவர் ஒரு டிவி தொடரின் இணைப்பை அனுப்பியிருந்தார். அளியன்ஸ் என்னும் இந்தத் தொடர் மேலைநாடுகளில் அச்சில் வந்துகொண்டிருக்கும் காமிக்ஸ் ஸ்டிரிப் போன்றது. Sitcom என இதன் வடிவத்தைச் சொல்கிறார்கள். ஏராளமான தொடர்கள் வந்துள்ளன. இந்த தொடரே ஐந்தாண்டுகளாக தினமும் வந்துகொண்டிருக்கிறது.
அளியன்ஸ் தொடரில் கதைத்தொடர்ச்சி இல்லை. ஒவ்வொரு ‘எபிசோடும்’ ஒரு கதை. கதைகூட இல்லை, நிகழ்வுகள். ஒரு வீட்டுக்குள் நுழைந்ததுபோன்ற சூழல். உணர்ச்சிநாடகத்தனம், திருப்பம் ஏதுமில்லை. மிகச்சாதாரணமான நிகழ்வுகள்தான். அருகருகே இரு குடும்பங்கள். ஒருவரின் தங்கையை இன்னொருவர் மணந்திருக்கிறார். ஒரு பதின்பருவப்பெண். ஒரு குழந்தை. ஒரு கிழவி. ஒருவர் போலீஸ்காரர், இன்னொருவர் அரசியல்வாதி. இரு ‘ஹோம்மேக்கர்ஸ்’சுக்கும் நடுவயதுச் சிக்கல்கள்.
மிகமிக யதார்த்தமான நடிப்பு. சொல்லப்போனால் அவர்கள் நடிக்கவே இல்லை, இயல்பாக நிகழ்கிறார்கள். இந்த சீரியலில் தங்கம் ஆக நடிக்கும் (நகை கிடைக்காமல் பொருமுபவர்) மஞ்சு பத்ரோஸ் சிறந்த டிவி நடிகைக்கான விருதுகள் பெற்றவர். டீனேஜ் பெண் முத்துவாக நடிக்கும் அக்ஷயா கேரளம் முழுக்க இந்த சீரியல் வழியாகப் பெரும்புகழ் பெற்றிருக்கிறார் . முக்கியமான ஒன்று, அக்ஷயா உட்பட இந்த சீரியலில் எவருமே மேக்கப் போடவில்லை.
பொதுவாகச் டிவி சீரியல்களில் நடிப்பில் யதார்த்தம் இல்லாமலாகி நீண்டகாலமாகிறது. காரணம் பட்ஜெட். இருபதாண்டுகள் முன்பு ஒரு எபிசோடுக்கு ஐந்து லட்சம் செலவிட்டனர். இன்று ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம். ஆனாலும் சீரியல்காரர்கள் நஷ்டம் நஷ்டம் என பாடுகிறார்கள். ஆகவே எவர் சீரியல்களைச் ‘சுருட்டுகிறார்களோ’ அவர்கள்தான் கொஞ்சமாவது லாபம் சம்பாதிக்க முடியும்.
இப்போது டிவி சீரியல்கள் எடுப்பது ஒரு மாபெரும் வேடிக்கைக் கலை. ஒருவர் பேச இன்னொருவர் ஊடே புகுந்து பேசுவதுதான் யதார்த்தமானது, ஆனால் ‘டைமிங்’ தவறினால் சொதப்பும். ஆகவேதான் தமிழில் ஒவ்வொரு வசனத்தின் நடுவிலும் ‘லாலாலா’ போடுகிறார்கள். தனித்தனி குளோஸப்களை காட்டிவிட்டு மீண்டும் அடுத்த வசனத்துக்குச் செல்கிறார்கள். அவற்றை எடுப்பதும் பார்க்கத் தமாஷாக இருக்கும். காமிராவை ஒரு கதாபாத்திரம் நோக்கி நிறுத்தி எதிரே வசனங்களை எழுதிக்காட்ட அவர் அதைப்பார்த்து ஒப்பிப்பார். உணர்ச்சிகள் எல்லாம் மிகையானவை, ரெடிமேட் ஆனவை. அத்தனை கதாபாத்திரங்களையும் ஓரிரு ஷாட்களில் ஒன்றாக எடுத்துவிட்டு அதன்பின் ஒவ்வொருவரையும் தனித்தனியே நிற்கவைத்து வசனங்களை ஒப்பிக்கச் செய்வார்கள். முதலில் ஒட்டுமொத்த காட்சி, கடைசியில் இன்னொரு ஒட்டுமொத்த காட்சி, நடு வசனப்பெருக்கு, அவற்றினூடாக குளோஸப்கள் லாலாலாவுடன். வெட்டி ஒட்டினால் எபிசோட் ரெடி. ஒரேநாளில் ஐந்து எபிசோடுகள் வரை எடுத்துவிடுவார்கள்.
அளியன்ஸ் சீரியலில் வசனங்கள் மனப்பாடம் செய்யப்படவில்லை என தெரிகிறது. தோராயமாக காட்சியை விளக்கிவிட்டு நடிகர் நடிகைகளிடமே பேசச்சொல்லிவிட்டிருக்கிறார்கள். ஆகவே ‘சூடான, சுவையான’ வசனங்கள் இல்லை. கருத்து வசனங்கள் இல்லை. வசனமே இல்லை, உரையாடல்கள் மட்டுமே. ஒரு தெற்குக்கேரள குடும்பத்தின் இயல்பான சூழல் அமைந்துவிடுகிறது. அப்படி அமையவேண்டுமென்றால் நடிகர்கள் மிகத்தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஒரே ஒருவர் தடுமாறினால்கூட மொத்த காட்சியும் சொதப்பிவிடும். இந்த சீரியலில் உள்ள யதார்த்தம் முன்பு நல்ல இயக்குநர்களின் கலைப்படங்களிலேயே இருந்தது. இன்றைய மலையாளப்படங்களில் மிகமிகமிக அரிதாக சிலவற்றில் உள்ளது.
நண்பர் சொன்னார். “இந்த டிவி சீரியல் ஒரு எபிசோடை ஒரு நல்ல யதார்த்தவாதச் சிறுகதை எனலாம். இலக்கியத்தன்மை உள்ளது. அழகான யதார்த்தம் உள்ளது. அத்துடன் பெரும்பாலும் பெண்களின் உலகம். அதிலும் நடுவயதுப் பெண்கள். சென்ற காலகட்டத்தில் மலையாள கலைப்படங்களும், கலையம்சம் கொண்ட வணிகப்படங்களும் காட்டிய உலகமும் அதன் அழகியலும் இந்த சீரியல்களில் மேலும் செறிவும் அழகும் கொண்டுள்ளன. ஆகவே பெண்கள் இவற்றையே பார்க்கிறார்கள். அவர்கள் சினிமாவுக்கு கிளம்பி வருவதே இல்லை. மலையாள சினிமாவுக்கு குடும்பங்கள் வருவது ஓணம், விஷூ போன்ற நாட்களில் மட்டுமே. ஆகவே சினிமா மாலை ஆறு மணிக்குமேல் ‘ரண்டெண்ணம் வீசி’ விட்டு உலாத்த கிளம்பும் வெட்டிப்பயல்களுக்கு உரியதாக ஆகிவிட்டது. அவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை சினிமாவில் தெரியவேண்டும். அதில் கலையெல்லாம் தேவையில்லை, அவர்களுக்குப் புரியவும் புரியாது. அவர்களுக்கான சினிமாக்களே மஞ்ஞும்மல் பாய்ஸ் போன்றவை’
உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றியது.