அன்புள்ள ஜெ
சுருக்கமான உரை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். காணொளிகளிலேயே சுருக்கமான உரைகளை நிகழ்த்துகிறீர்கள். உங்கள் உரைகள் செறிவாகவும் உள்ளன. அந்த வகையான உரைகளைத்தான் நான் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். நன்றி
செல்வக்குமார்
அன்புள்ள செல்வா,
என் உரைகள் முன்னுதாரணங்கள் அல்ல. ஏனென்றால் அவற்றில் சில சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நான் பேசும்போது சொற்றொடரின் கடைசி உச்சரிப்பை விழுங்கிவிடுகிறேன். மேடைப்பேச்சு, காணொளி இரண்டுக்குமே இது குறைபாடுதான். நான் அதை சரிசெய்துகொள்ள முடியும். ஆனால் அதைச் செய்யவேண்டுமா என்னும் குழப்பம் இருக்கிறது. அதைச் சரிசெய்தால் என் இயல்புத்தன்மை போய்விடுமா? என் பேச்சில் கொஞ்சம் மலையாளம் (அல்லது கன்யாகுமரி நெடி) உண்டு. அதைச் சரிசெய்தால் நான் இன்னொரு குரலில் பேசுவதுபோல் இருக்கும். அதைப்போலத்தான் இதுவும்.
காணொளிகளில் உள்ள வசதி நாம் நம் கேள்வியாளர்களை நேருக்குநேர் பார்த்துப் பேசுகிறோம் என்பது. நம் உணர்வுகள், முகபாவனைகளே பாதி புரியவைத்துவிடும். அங்கே நம்மிடம் செயற்கையான உச்சரிப்பு வந்தால் பார்வையாளர் நம்மிடமிருந்து அகன்றுவிடுவார்கள். ஆனால் நேரில் பேசுவதுபோலவே பேசிக்கொண்டிருந்தால் தீவிரமான விஷயங்களைச் செறிவாகப் பேசமுடியாது. அதற்கு கொஞ்சம் தரப்படுத்தப்பட்ட நடை (அல்லது அச்சுநடை) தேவை. ஓரளவு கலைச்சொற்களும் தேவை.
ஆகவே இரண்டுக்கும் நடுவே ஒரு பாதையை வகுத்துக்கொண்டிருக்கிறேன்
ஜெயமோகன்