படுகளம், கடிதங்கள்

படுகளம் மின்னூல் வாங்க 

படுகளம் வாங்க

அன்புள்ள ஜெ

படுகளம் அமர்களமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இலக்கியத்துக்கும் திரில்லருக்கும் நடுவே ஒரு கம்பிப் பயணம். அதை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். இந்த நிகழ்வு கொஞ்சம் அரசல் புரசலாக எனக்கும் தெரியும். கொஞ்சம் வேறுபடுத்தி, சாதி விஷயங்களெல்லாம் இல்லாமலாக்கி, ஒற்றைப்படையாக ஆக்கி வேகம் அளித்துள்ளீர்கள். சிறப்பான கதையாக அமைந்துள்ளது. இத்தனைபேர் தீவிரமான ஈடுபாட்டுடன் புனைவுகளை வாசிக்க இந்த வகை எழுத்து அவசியத்தேவை.

கே.

அன்புள்ள கே,

நீங்கள் உத்தேசிக்கும் நிகழ்வு அல்ல. இதில் எல்லாமே புனைவுதான். களம், மனிதர்கள், நிகழ்வுகள் எல்லாமே. வெறும் ஒரு வேகப்புனைவு மட்டும்தான் இது. வேண்டுமென்றே யதார்த்தம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது.  

ஜெ 

ஐயா,

தங்கள் கைவண்ணத்தில் வந்து கொண்டு இருக்கும் ” படுகளம்” தொடர் நாவல் மிக அருமையாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நான் முன்னாள் வியாபாரி.என் வயது இப்ப 77. தண்டல், கந்து வட்டி போன்றவைகளோடு மல்லு கட்டி, ஒரு  வழியாக அதிலிருந்து மீண்டு இப்பொழுது என் மகனோடு என் மனைவி யுடன் பெங்களூரில் வசிக்கிறேன். என் மகன் உங்களின் தீவிர ரசிகன். பெயர் சத்திஷ் ராஜ் மோகன் ஆகும்.

ஐயா உங்களின் இந்த கதையை படித்து நான் வியக்கும் விசயம் என்னவென்றால். உங்கள் கதையில் வட்டிக்கு கடன் கொடுப்பவன் எப்படி பேசுவான், அதை கேட்டு வட்டிக்கு பனம் வாங்குபவன் எப்படி மனம் புழுங்குவான். மற்றும் நன்றாக நடக்கும் கடையை சொற்ப விலைக்கு வாங்க நினைக்கும் ஒருவன் எப்படி எல்லாம் நாக்கில் தேன் தடவுவது போல் பேசுவான், தன்னிடம் இருக்கும் கொழுத்த பனத் திமிரால் கடைக்கு முன் பேனர் கட்டி டார்ச்சர் தரும் காசிலிங்கம் போன்றோரின் தெனாவட்டு பேச்சு எப்படி இருக்கும் என்பதை எல்லாம் அப்படியே அச்சு அசலாக நீங்கள் உங்கள் எழுத்தால் அவர்களை தோலுரித்து காட்டுவது எனக்கு உங்கள் எழுத்தின்பால் அவ்வளவு ஒரு பிரமிப்பை தருகிறது.

ஐயா, நான் உங்கள் கதையில் வரும் ஒரு சில தில்லா லங்கடி கேரக்டர் பற்றி தான் குறிப்பிட்டு உள்ளேன். ஆனால் இந்த கதையில் பல தில்லா லங்கடிகள் உலா வருகிறார்கள். அத்தனை கேரக்டரின் குனாதிசையங்களையும் நீங்கள் அப்படியே வெளிப்படுத்துவது எனக்கு உங்கள் எழுத்தில் உள்ள சத்திய வரிகள் பிரமிப்பை தருகிறது. ஏன் என்றால் நான் கிட்ட 30 வருடம்  உங்கள் கதையில் வரும் வில்லங்க கேரக்டர் களோடு தான் உலன்டு கொன்டு என் வியாபாரம் எனும் கப்பலை கவிழ விடாமல் செலுத்தினேன். கரையும் ஏறி விட்டேன்.

அதனால் நான் நேரடியாக 30 வருடம் பல வில்லங்க ஆசாமிகளோடு அனுபவித்ததை நீங்கள் அனுபவிக்காமலே அத்தனை வில்லங்க ஆசாமி களின் வில்லங்க குனம் எப்படி இருக்கும் என்று  வரிக்கு வரி எழுதி என்னை அசத்தி விட்டீர்கள். அங்கு தான் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக நிற்கிறீர்கள். உங்கள் சாதனைக்கு என் வணக்கம்.
இப்படிக்கு,

S.ராஜ மோகன்.,
பெங்களூர்.75.

அன்புள்ள ராஜமோகன்,

இது இன்றுள்ள பொருளியல்- வணிக அமைப்பின் இன்றியமையாத அம்சம். அரசியல்வாதிகளின் ஊழல்கள், அதிகாரிகளின் ஊழல்கள் வழியாக நம் சூழலில் இருந்து பலகோடி ரூபாய் அள்ளப்படுகிறது. தேர்தல்கள் வரை அந்தப் பணம் இங்கே சுழன்றாகவேண்டும்.

அதை அசையாச்சொத்துக்களாக வைத்திருக்க முடியாது- தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் தேவைப்படும். மேலும் மிகப்பெரிய அசையாச்சொத்துக்களை விற்பவர் போன்றே மிகப்பெரிய ஆட்கள் மட்டுமே வாங்க முடியும். ஆறே மாதங்களில் திரும்ப எடுக்கும் அளவுக்கு சுற்றவிடுவதே வழி.

பெருந்தொழில்களுக்கு இன்று நிதி பெரிய பிரச்சினை இல்லை, வங்கியுதவிகள் உண்டு. அங்கே அரசுக்கண்காணிப்பும் மிகுதி. ஆகவே எஞ்சும் ஒரே வழி ஒருங்கிணைக்கப்படாத வணிகங்களில் பினாமிகள் வழியாக வட்டிக்கு உலவவிடுவது. அது இன்று எல்லா தொழில்களையும் மூடியிருக்கும் ஒரு பெரிய வலை.

சினிமா, அரசியல் அல்லது பெருந்தொழில் ஆகியவற்றில் உச்சியுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே அறியக்கூடிய, எழுதத்தக்க உலகம் இது. மற்றவர்கள் விந்தையான ஓர் அறியாமையில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள்தான் அரசியலும் கொள்கைச்சண்டையும் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

இது எல்லா காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கும். வணிகம், அரசு இரண்டும் ஊழலால் இணைந்துள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைAvoiders
அடுத்த கட்டுரைஅமிர்த கங்கை