மானுடக் கலையின் ஆழம்.

இனிய ஜெயம்,

ஒரு படைப்பாளி ஏன் படைக்கிறான்

இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது அதன் காரணத்தின் உள்ளுறையாக படைப்பதில் உள்ள ஆனந்தம் எனும் நிலையும் உள்ளது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான கலைஞனும் படைக்கும்போது எழும் ஆனந்தத்தின் பொருட்டே படைக்கிறான்.

(என் வார்த்தைகளில் அமைந்தமேற்சொன்ன வரையறையை சொன்னவர் கலை ஆய்வாளர் ஆனந்தகுமார ஸ்வாமி. இதில் முதல் பகுதி சார்ந்து பெட்டிக்கடையில் பீடி விற்பவருக்கு கூட மறுப்புக் கருத்து எழலாம். இரண்டாம் பகுதியை எந்த கலைஞனும் மறுக்க இயலாது.

கலைக்கும் மானுடத்துக்குமான உறவென்ன? கலை எப்போது துவங்கியது? ஏன் கலைஞன்? அவன் ஏன் படைக்கிறான்? கலையின் பெறுமதி என்ன? இந்த அடிப்படை கேள்விகள் எல்லாம், மேலை மரபில்  விஞ்ஞானமும் கலையும் மனிதனால் மட்டுமே இயற்ற முடியும் என்ற மனித மைய நோக்கு வலுப்பெற்ற காலத்தில், கலை சார்ந்து வலுப்பெற்ற கேள்விகள்.

ஒவ்வொரு கேள்விகள் சார்ந்தும் வந்தடைந்த பொது முடிவை, ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் அது வரை வளர்ந்து வந்த அறிவுத் தொகை வந்து மோதி, அந்தப் பொது முடிவை மாற்றி அமைக்கக்கோரும். உயிர் வலைச் சூழலில் உச்சத்தில் இருப்பவன் மனிதன் என்ற வரையறை இன்று கிட்டத்தட்ட காலாவதி ஆகி விட்டது. கடந்த கால் நூற்றாண்டில் கலை இயற்றுதல் மனிதனால் மட்டுமே இயல்வது எனும் வரையறையும் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது

எந்த காரணமும் இன்றி பறவைகள் மகிழ்ந்து பாடுவதை, டால்பின்கள் மகிழ்ந்து இசைப்பதை, எந்த உயிரியல் காரணமும் இன்றி தான் கொண்ட மகிழ்ச்சியின் பொருட்டு சில மீன் வகைகள் சிக்கலான ஜியோமிதி வடிவங்கள் வரைவதை ஆசிரியர் டேவிட் அட்டன்பாரோ உள்ளிட்டு பல ஆய்வாளர்கள் ஆவணம் செய்திருக்கிரார்கள். இவை கலை வெளிப்பாடு சார்ந்த மனித வரையறைக்குள் வர முதல் காரணம், இவை எதுவும் கட்டுப்பாடற்ற வெளிப்பாடு அல்ல என்பதே. இரண்டாம் காரணம் அனைத்திலும் திரும்ப திரும்ப நிகழும் சீர்மையும் ஒழுங்கும் கொண்டிருப்பது

ஆகவே இன்று எழும், மானுடக் கலையின் தோற்றுவாய் எது எனும் கேள்வி, குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்து முன்னிலும் தீவிரமாக எழும் ஒன்றாக அமைகிறது. 2010 கு பிறகான அறிவியல் எழுச்சி, கலை சார்ந்த மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் புதிய வெளிச்சங்களை பாய்ச்சியுள்ளதா எனும் வினாவுடன் பிரட்டனின் புகழ்பெற்ற சிற்பி ஆண்டனி காமெலி ஆதி மனிதர்கள் இயற்றிய கலைகளின் தடங்களை உலகெங்கும் சுற்றி கண்டு, வந்தடைந்த முடிவுகளை, அந்தப் பயணத்தைப் பின்தொடரும் பிபிசி ஆவணமே, மொராக் டின்டோ இயக்கிய how art began எனும் ஆவணப்படம்.

காமெலி இன்றய காலத்தின் புகழ் வாய்ந்த சிற்பி என்றாக அவர் தன்னைப் பயிற்றுவித்து எடுத்த விதம் முக்கியமானது. அவர் முறையாக பண்பாட்டு மானுடவியல் தொல்லியல் கற்றவர். எனவே அவர் இத்தகு அடிப்படை வினாக்களை தொடர்கிறார் என்பது வழியே இந்த ஆவணம் இன்னும் முக்கியத்துவம் கொள்கிறது

பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குறித்து ஓஷோ ஜோக் ஒன்று உண்டு. அவர்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து, ரயில் நிற்கிறது. இது சூழல் எனில், பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இது தான் இறங்க வேண்டிய இடம்தானா என்பதை மும்முறை ஆய்வு செய்வார்கள். ரயில் நின்று விட்டதா என்பதை மும்முறை ஆய்வு செய்வார்கள்.  (மும்முறையும் ஒரே முடிவே வர வேண்டும்) பின்னரே இறங்குவார்கள்

இதன் காரணமாகவே bbc ஆவணங்கள் எனக்கு பிடிக்கும். இனி சந்தேகமே இல்லை. இதுதான். இது மட்டுமே முற்ற முடிவான நிலை. என்ற ஒன்றை மட்டுமே பெரும்பாலான ஆவண படங்கள் முன்வைக்கும். அதையும் அமெரிக்க ஆவண படங்கள் போல, வெளிப்பட்டு விட்ட திடுக்கிடும் உண்மை, அல்லது பரவசமூட்டையும் உண்மை எனும் பாவனையோடு அதிரடியாக முன்வைக்காமல் இப்போது இது இன்னும் ஒரு fact எனும் படிக்கு முன்வைக்கும். அந்த வகையில் bbc இன் how art made the world,  history of art in three colours போன்ற கலை சார் ஆவணப்படங்கள் வரிசையில் அமையும் மற்றும் ஒரு ஆவணப்படம் இது.

மிஷெல், மாக்சிம் போன்ற குகை ஓவிய ஆய்வாளர்களுடன், பிரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நிலங்களில் காமெலி நிகழ்த்தும் பயணத்தை, விண்ணிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், ஒளி தொடா இருட் குகை காட்சிகள் என காட்சி இன்பம் நல்கி பின்தொடரும் இந்த ஆவணத்தை நேற்று இரவு பார்த்து முடித்த நேரம் துவங்கி இந்த ஆவணம் சார்ந்து மேலும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.

குகை ஓவியங்கள் கலையா? எனும் கேள்விக்கு, அவற்றில் அதன் பொது வெளிப்பாடு கடந்து உயரிய கலைப்படைப்புகளும் அவற்றில் உண்டு எனும் பதிலை இவ்வாவணம் காட்சிப்படுத்துகிறது. 15,000 வருடம் முன்னர் ஐரோப்பிய நிலத்தின் குகைகளுக்குள் ஒன்றில் கற்செதுக்கு ஓவியமாக நிற்கும் குதிரை ஒன்றின் முகம். துல்லியமாககுறிப்பிட்ட தருணம்ஒன்றில் குதிரையின் முகம் எவ்விதம் இருக்குமோ அதைக் கைப்பற்றி இருக்கிறது. அதே காலத்தை சேர்ந்த வேறொரு நிலத்தின் வேறொரு குகையில், வேட்டைக்கு தயாராக இருக்கும் உடல் மொழி கொண்ட பெண் சிங்கமும், தாகம் மேலிட ஜாக்கிரதை மேவிய உடல் மொழியோடு நீர் அருந்தும் மானும் கல் கொண்டு செதுக்கப் பட்டிருக்கிறது. சொடுக்கு நேரத்துக்குள் நிகழப்போகும் உயிர்ப்போராட்டத்துக்கு சற்றே முன்பான இறுக்கம் நிறைந்த அமைதியை அவ்விதமே கொண்டு வந்திருந்த ஓவியம். வண்ணம் கொண்ட ஆனால் நன்கு மங்கிய மற்றொரு ஓவியத்தில் தன் ஜோடி மானை ஆதூரத்துடன் நக்கி கொடுக்கிறது ஆண் மான். ஆண் மான் உடல் கொண்ட தெறிக்கும் வலிமையும், மெஜஸ்டிக் ஆன கொம்புகளும், நெருக்கத்தின் அதன் உடல் குழைவும் பெண் மான் கொண்ட ஏற்பும் அவற்றுக்கு இடையேயான அன்யோன்யமும்கண்ணே இல்லாதவன் என்றாலும் கூட, அவன் ரசிகன் என்றால் அந்த ஓவியத்தைத் தடவிப்பார்த்தே சொல்லிவிடுவான். அது கலை

காமெல் கூற்றின் படி மூன்று விஷயங்கள் இங்கே தீர்மானமாக தெரிகிறது.அன்றைய மக்கள் தொகையில் வெறும் அரை லட்சம் கூட தொடாத ஐரோப்பிய கற்கால வேட்டை சேகரிப்பு மானுட சமூகத்தில், இங்கே இந்த குகையில் சூரிய ஒளியோ, நீர் கசிவோ வந்து தொடாத இந்த ஆழத்தில் வரைந்தால் அது பத்திரமாக இருக்கும் என்ற ஜியாலஜிகல் அறிவும், இந்த வண்ணத்தை இவ்விதம் உருவாக்க முடியும், அதை இவ்விதம் ப்ரயோகித்தால் இது நீண்ட நாள் அழியாது எனும் ரசவாத அறிவும் இருந்திருக்கிறது. இதை பயன்படுத்தி, இவர்களிடையே இப்போது நான் இங்கே இருக்கிறேன், நான் வெறும் வேட்டையாடி மட்டுமே அல்ல, என்று தனது கலை வழியே தன்னை வெளிக்காட்டும் கலைஞனும் இருந்திருக்கிறான்.

இன்றிலிருந்து 30 000 வருடங்கள் பின்னால் சென்றால் குகைகளில் கிடைக்கும் ஸ்டென்சில் கட் ஆர்ட் முறையிலான கை பதிவுகளை, அது எவ்விதம் பதியப்பட்டிருக்கும் என்பதை ஒரு ஆய்வாளர் செய்து காண்பிக்கிறார். கையை சுவற்றில் வைத்து அந்த காலத்தில் பயன்படுத்திய அதே குறிப்பிட்ட சாயத்தை வாயில் நிறைத்து, பதித்த கை மேல் (ஸ்பிரேயர் போல) ஊதி ஊதி அந்த கை தடத்தை கொண்டு வருகிறார்

இங்கே மற்றொரு கேள்வி எழும். வெறுமனே கையை சாயத்தில் மூழ்கி சுவற்றில் கை தடத்தை பதிவு செய்யலாமே. அதுதானே எளிது? பதில், இந்த பதிவுகளில் இருப்பது தொழில்நுட்பமாக ஆதி மானுட ஓவியர்கள் அடைந்த அடுத்த கட்ட வளர்ச்சியின் சாட்சியம் இது என்பதே. தனது முன்னகர்வைத்தான் தனது எல்லா குகை ஓவியங்கள் வழியாகவும் மனிதன் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறான்.

இந்த கை பதிவு வரிசையில் காமெலியை பதில் தெரியாது சுற்ற விட்ட வினா ஒன்றுக்கு விடை கிடைக்கிறது. குறிப்பிட்ட நிலத்தில் கிடைத்த கை பதிவு ஒன்று ஆய்வு முடிவின்படி 50,000 வருடங்களுக்கு முந்தியது. பிற மானுடவியல் சான்றுகள் அத்தனையும் அங்கே மானுட குடியேற்றம் 30,000, ஆண்டுகளில் நிகழ்ந்தது என்றே கூறிக்கொண்டிருக்க, அதற்கு இன்றைய தொழில் நுட்பம் துணை வருகிறது. அந்த இரண்டு தரவுகளுமே உண்மைதான். மனித குடியேற்றம் இன்றிலிருந்து 30,000 வருடம் முன்புதான் அங்கே நிகழ்ந்தது. அதே சமயம் அங்குள்ள கை பதிவுகளுக்கு வயது 50,000 அல்ல, நவீன தொழில்நுட்பம் துல்லியம் வழியே அதன் காலத்தை இன்னும் பின்னால் 60,000 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகிறது. புதிருக்கு விடையும் கிடைக்கிறது. அங்கே மனித குடியேற்றத்துக்கு முன்பாக வாழ்த்தோர் நியாண்டர்தால் மனிதர்கள். அவர்களின் கை தடம் அது. ஆம் நியாண்டர்த்தாலும் மனிதர்களே. அவர்களில் கலைஞனும் உண்டு என்ற விடையே அது.

வெண்தோல் சராசரிகளால்  சகித்துக்கொள்ளவே முடியாத மரபியல் உண்மை, நம்மைப் பெற்ற அதித்தாய் ஒரு ஆப்பிரிக்காக்காரி என்பது. இந்த வரிசையில் அவர்களால் சகித்துக் கொள்ள இயலாத அடுத்த உண்மையை மரபியல் அவர்கள் மேல் வீசியது. நமது மரபணுவில் குறிப்பிட்ட சதவீதம் நியாண்டர்த்தால் உடையது என்பதே அது. நியாண்டர்த்தால் இருப்பை அவர்களும் மனிதர்கள் எனும் நிலையை வெள்ளை சராசரிகளால் என்றுமே சகிக்கவே இயலாது. இந்த உண்மை உறுதியான பிறகு, அப்பாவி ஹோமோ சேபிய பெண்ணை தூக்கி சென்று கற்பழிக்கும் அயோக்கிய நியாண்டர்த்தால் குரங்கு குறித்த மௌன படம் ஒன்றை ஐரோப்பா எடுத்து வெளியிட்டது. ( அது you tube இலும் உண்டு. இதே களத்தில் வேறு நல்ல படமும் உண்டு ). இந்த நிலையில் சூழல் இருக்க நியாண்டர்த்தால் கலை செய்தார்கள் குழல் இசைத்தார்கள் என்றால் ஏற்று கொள்வார்களா என்ன

மானுடன் இசைத்த குழல்களில் ஆக பழையது 30000 வருடம் முந்தையது. ஜெர்மனியில் கண்டெடுக்க பட்டது. கழுகின் இறக்கைகளை இயக்கும் மைய்ய எலும்பில் ( என்ன ஒரு கவித்துவம்) மிக சரியான இடைவெளியில் துளைகள் இட்டு செய்யப்பட்டது. அதற்கும் முந்தைய குழலுக்கு வயது 50000 வருடம். அது ஒரு நியாண்டர்த்தால் தொல் எச்சத்துடன் கிடைத்தால், நியாண்டர்த்தால் அந்த குழலை இசைதிருக்க முடியும் என்ற ஊகத்தைவெள்ளை சராசரிகள் வெகுண்டெழுந்து எதிர்த்தார்கள். அந்த எலும்புக் குழலில் உள்ள துளைகள் கரடி கடித்து உருவானவை என்றெல்லாம் உளறிப் பார்த்தார்கள். இதோ இந்த ஆவணம் கண்ட பிறகு திட்டவட்டமாகவே கேட்க முடியும், ஊதி ஊதி கை தடம் பதிக்கத் தெரிந்த நியாண்டர்த்தாலுக்கு ஊதி ஊதி குழலிசைக்க மட்டும் தெரியாமல் இருக்குமா என்ன

எனில் நியாண்டர்த்தால் வசமிருந்து கை பதிக்கும் கலையை ஹோமோ சேபியன் கற்றிருப்பார்களா? நியாண்டர்த்தால் வம்சம் என்றுமே வாழாத, அன்றைய நிலையில் ஐரோப்பாவுடன் தொடர்பு கொள்ள வழி இல்லாத, இந்தோனேசியா தீவில்  30000 வருடம் முன்பு வாழ்ந்த ஹோமோ செபியன்கள் இவ்விதமாகவே கை தடம் விட்டு சென்றிருப்பதை இவ்வாவணம் ஒரு புதிர் போல முன்வைக்கிறது.

இசையமைப்பாளர் இளையராஜா நேர்காணல் ஒன்றில் கிடார் இசை கருவி கொண்ட தனித்தன்மை குறித்து, இரண்டு கிட்டாரை குறிப்பிட்ட முறையில் டியூன் செய்து, அவற்றில் ஒன்றை அரை மூலையில் வைத்து விட்டு, மற்றொன்றில் குறிப்பிட்ட வகையில் இசை எழுப்பினால், அரை மூலையில் இருக்கும் அந்த மற்றொரு கிட்டார் அதே இசையை (இசைப்பவர் இன்றி) உடன் எழுப்பும் என்று கூறினார். வெறும் பொருள் கிடார் அதுவே இத்தனை ஏற்பு நிலை கொண்டு விளங்கும்போது. ஆழத்தில் ஒரே மானுட குலம் என்ற நிலையில் வாழ்ந்த அந்தக் கால மானிடன், உயிர் பொருள், அதுவும் கலைஞன் எத்தனை ஏற்பு நிலையில் இருந்திருப்பான்? ஐரோப்பாவில் ஒருவர் கலை செய்ய, இந்தோனேசியாவில் மற்றொருவர் அதை பிரதிபலிப்பது நிச்சயம் சாத்தியமே.

குகை ஓவியக் கலை அறுபடாமல் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய நிலத்தில், பூக்கள், கங்காருக்கள், மனிதர்கள், ஏலியன் உருவங்கள் என்றெல்லாம் நிறைந்த ஒரு குகை ஓவியக் கொந்தளிப்பைக் கண்டு திகைத்து இது எல்லாம் என்ன என்று வழிகாட்டி பழங்குடியை வினவுகிறார் காமெலி. (அவர்களின் பூர்வ கதையில் இருந்து இனி என்றோ வரும் காலத்தில் வரப் போகும் கதை வரை அங்கே வரைந்து வைத்து அதை சடங்கு கலையாக நிகழ்த்தும் அபராஜித்தோ பழங்குடிகளின் அந்தக் களனை ஆசிரியர் டேவிட் அட்டன்பரோதான் முதன் முதலாக இது இவ்விதம் என்று அங்கே பல ஆண்டுகள் தங்கி ஆய்வு செய்து அதன் முடிவை  1960 இல் வெளிப்படுத்தினார்) பழங்குடி மனிதர் இதுவெல்லாம் வருங்காலத்தில் நடக்க போகிறவை என்று சொல்லி சில ஏலியன் சித்திரத்தை சுட்டுகிறார். எனக்கு விஷ்ணுபுரம் நாவலில் குகை ஓவியமாக பிரளய கால ஞான அதிபர் சித்திரத்தை காணும் காட்சி நினைவில் எழுந்தது. இவை வேற்று கிரக ஏலியன்கள் என்பதை விட, எதிர்காலத்தில் இவ்விதம் இருக்கும் நாம்தான் இது என்றே எண்ணத் தோன்றுகிறது. சூழலியல் சீர்கேடு குறித்து நான் நிறம்ப அக்கறை கொண்டிருந்தாலும், அதே அளவு மனிதர்கள் ஆகிய நாம் அமரர்கள் என்பதிலும் நம்பிக்கை உடையவன் நான். நாளைய நாம், கால இயந்திரத்தில் ஏறி நம்முடைய இறந்த காலத்தை காண இந்த ஆஸ்திரேலியாவின் இதே குகை ஓவியத்தின் முன் நிச்சயம் இவ்விதமாகவே வந்து நிற்போம்.

கற்கால கலை சார்ந்த தேடலின் பாதையில் காமெலி இறுதியாக வந்தடையும் இடத்தை இப்படி சொல்லலாம்

நீர், நிலம், காற்று, தீ உள்ளிட்டு உயிர்க்குலம் அனைத்துடனும் கூடி, ‘நாங்கள்‘  ‘இங்கே‘ ‘இவ்விதம்‘ ‘மகிழ்ந்து கொண்டாடி‘  ‘இருக்குறோம்‘. கால காலத்துக்கும் நாங்கள் இவ்விதமாகவே இருப்போம் எனும் நிலையைகலையில்பொதிந்து அதை காலத்தின் முன் விட்டுச் செல்கிறோம்.

பின்னிணைப்புகள்:

1. How art began ஆவணப்படத்தின் சுட்டி.

https://youtu.be/WzauciaS24k?feature=shared

2. ஆண்டனி காமெலி அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள அவரது கலை அருங்காட்சியக சுட்டி.

https://www.antonygormley.com/works/sculpture/overview

முந்தைய கட்டுரையானைடாக்டரின் அறம்- கடிதம்
அடுத்த கட்டுரைவைகானஸம்