வேரறிதல்

உயிர்மை இதழ் தொடங்கியபோது மனுஷ்யபுத்திரன் என்னிடம் அதில் ஒரு தொடர் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் என்னுடைய எண்ணத்தை ஆட்கொண்டிருந்தது இலக்கியத்தின் சாரமாக ஓடும் மெய்யியலைப் பற்றிய எண்ணங்கள். தொடர்ந்து பலமுனைகளில் அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். இந்திய இலக்கியத்தில் உள்ள வேதாந்தத்தின் சாரமென்ன திருக்குறளில் இருக்கும் சமண மெய்யியல் என்ன, இந்திய நவீன இலக்கியத்தில் உள்ள வேந்தாந்த கூறுகள் என்ன, இவை எல்லாவற்றையும் பற்றி ஒட்டுமொத்தமாக படித்துக்கொண்டிருந்த ஒரு காலம். அப்போதிருந்த எண்ணமென்பது மெய்யியலின் அடிப்படையாக இருக்கும் தரிசனங்கள் காலத்திற்கு அப்பால் இருக்கும் ஏதோ ஒரு பழங்குடி வாழ்க்கையிலிருந்து ஊறி வந்தவையாக இருக்குமென்பது. அவை தொல்மனிதனுக்கு படிமங்களாக தங்களைக் காட்டுகின்றன அவன் உள்ளத்தில் பதிந்து ஆழ்படிமங்களாகின்றன. பின்னர் மதங்களுக்குள்  தொன்மங்களாக முளைக்கின்றன.  இலக்கியங்கள் அவற்றை மீண்டும் படிமங்களாக மாற்றி பயன்படுத்துகின்றன. இன்று நாம் வணங்கும் எல்லா தெய்வங்களும் அந்த தொன்மையான நிலத்தில் தோன்றியவையே. இன்று நாம் கொண்டிருக்கும் எல்லா விழுமியங்களும் அன்று உருவானவையே. அந்த தொல் சதுப்பு நிலத்தைப்பற்றிய ஒரு கனவு எனக்கு இருந்தது. அதை இலக்கியங்களினூடாகக் கண்டடைய முடியுமா என்ற தேடல் கொண்டிருந்தேன்.  அதையே ஒரு தொடராக எழுதுவதாக மனுஷ்யபுத்திரனிடம் சொன்னேன். அவ்வாறு உயிர்மை இதழில்  ஆழ்நதியைத் தேடி என்னும் இந்த தொடர் தொடங்கியது.

இது ஒரு தொடக்கச் சிந்தனைதான். ஒருவேளை எவரும் இவ்வாறு முன்பு சிந்திக்காமல் இருந்திருக்கக்கூடும். பல கோணங்களில் சிந்தித்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமான ஒரு தத்துவ மெய்யியல் உண்டா? அதற்கு சங்க இலக்கியத்திலோ அதற்கு முன்போ வேர்கள் உண்டா என்னும் தேடல் நடந்திருக்கிறது. அது தமிழர்களுடைய பண்பாட்டை வரையறுத்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியே.  அதற்குப் பின்னால்  தமிழ் சார்ந்த ஓர் அரசியல் நோக்கமுண்டு. அரசியலே அதை மெய்யியல் என்று தனியாகப் பிரித்துவிடுகிறது. அரசியல் எந்நிலையிலும் மெய்யியலுடன் இணைய முடியாது. ஏனெனில் அரசியல் அதிகாரம் சார்ந்தது, மெய்யியல் அதிகாரத்திற்கு முற்றிலும் அப்பால் நிற்கும் பிறிதொன்று. அரசியல்  வெல்ல நினைப்பது, மெய்யியல் கடந்து செல்ல முயல்வது. ஆகவே மெய்யியல் என்ற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் அரசியல் நோக்கம் கொண்டவர்கள் ஆயினும்; அவர்களின் ஒட்டுமொத்த  சிந்தனையும் மெய்யியலுக்கு எதிரானதென்றும்,  வெறும் அரசியல் என்றும் முழுமையாக நிராகரிக்கும் உளநிலையே  அன்று எனக்கு இருந்தது.இன்று அது உறுதிப்பட்டிருக்கிறது.

இன்னொரு வகையான தேடல் என்பது சைவம் அல்லது வைணவத்தின் வேர்கள் சங்க இலக்கியத்திலோ முன்போ எங்குள்ளன என்று தேடும் முயற்சி. அது மெய்யியல்த் தேடல் என்று தோற்றமளித்தாலும் மதத்தின் வேர்களைத் தேடும் முயற்சிதான். நாம் மெய்யியல் என்று தனித்துப் பிரிப்பது மதம் கடந்த வேறொன்றை. மானுடம் தழுவிய ஒன்றை. மதமாக அது வெளிப்படக்கூடும், மதத்தினுள் அமர்ந்திருக்கவும் கூடும், எனினும் மெய்யியல் மதம் கடந்த ஒன்றே. மெய்யியலின் காலடியில் தான் மதம் அமர்ந்திருக்கிறது என்பது என் எண்ணம். மதங்களுக்குள் சிக்காது தன்னை தூய தரிசனமாகவும் சமசரமற்ற அறிவுத்தர்க்கமாகவும் முன்வைக்கும் வேதாந்தம் மதம் கடந்த மெய்யியலுக்கு மிக அணுக்கமான ஒரு கொள்கை. எனக்கு ஏதேனும் ஒரு கொள்கையுடன் சார்போ பற்றோ இருக்குமென்றால் வேதாந்தத்துடன் மட்டுமே.

இந்த ஆய்வைத் தொடங்கும்போது எனக்கு முன்பிருந்த அரசியல் சார்ந்த மெய்யியல் தேடல், மதம் சார்ந்த மெய்யியல் தேடல் ஆகிய இரண்டையுமே தவிர்த்து பிறிதொரு தேடலை நிகழ்த்த முயன்றேன். அதற்கு தொல் இலக்கியங்களிலுள்ள படிமங்கள், படிமங்களுக்கு அடிப்படையாக அமைந்த ஆழ்படிமங்கள் மற்றும் தொன்மங்களை கருத்தில் கொண்டேன். அவற்றை இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியுமா என்று பார்த்தேன். உறுதியான கொள்கையாக அல்ல, பெருமிதங்களாகவோ அல்லது தன்மிதப்பாகவோ அல்ல, ஒரு தேடல் கொண்ட தனிவாசகனின் பயணமாக இக்கட்டுரைகள் அமைய வேண்டும் என்று எண்ணினேன். இதன் அடிப்படையாக இருக்க வேண்டியது ரசனையின்  மெய்த்தேடலே அன்றி, அறிவார்ந்த தர்க்கமாக அமையக்கூடாது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது ஆகவே நான் தேடியதையும் கண்டடைந்ததையும் தர்க்கபூர்வமாக முன்வைப்பதற்கு பதிலாக, கூடுமானவரை இலக்கியத்தின் வழியில், கவிதையினூடாகவும் படிமங்களினூடாகவும் முன்வைக்க முயன்றிருக்கிறேன். இலக்கியத்தைப்பற்றி எந்த ஆய்வும் எந்த உரையாடலும் இலக்கியமாகவே அமையவேண்டும் என்பது என்  எண்ணம். அது ஒருபோதும் பகுப்பாய்வின் மொழியில் பேசலாகாது. பகுப்பாய்வுக்கு சிக்குவது ஒருபோதும் இலக்கியமாக இருக்க முடியாது.

ஆகவே, இவை ஒருவகையான கவித்துவ உரையாடலாக அமைந்தன. ஆய்வுத் தோரணை இவற்றுக்கு இல்லை. இலக்கியம் இவற்றிற்கு பின்னணியாக அமைந்த ஒன்றாக அமைகிறதே ஒழிய , இலக்கியம் இவற்றின் பேசுபொருளாக இல்லை. இவை அகத்தேடலாகவும், தன்னைக் கண்டடைதலாகவும், ஒருவகையில் சமகால தன்மை கொண்ட ஒரு தன்னிலையிலிருந்து என்றுமுள்ள ஒரு தன்னிலை நோக்கி நகரும் முயற்சியாகவும் அமைந்துள்ளன.

ஒரு சிறு நூல். ஒருவகையில் இது தொடக்கம். அதன்பிறகு பல கட்டுரைகளில் இந்நூலில் நான் கண்டடைந்தவற்றை விரித்து எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு பெருநூலாக இதை எழுதவேண்டுமென்ற எண்ணம் பின்னர் நிறைவேறவில்லை. அக்கனவு இன்றும் உள்ளது. இனி ஒருவேளை நான் எழுதலாம். அவ்வாறு எழுதுவேன் என்றால் அதற்கான தொடக்க நூல் என்றால் இது மிக முக்கியமானது.

இந்நூலின் மேல் வெவ்வேறு கோணங்களிலாக விவாதங்கள் உருவாகும் என்றும் அதனூடாக எனக்கு ஒரு புதிய திறப்புகள் அமையும் என்றும் எண்ணினேன். உயிர்மை போன்ற ஒரு இடைநிலை  இலக்கிய இதழில் இதை எழுதுவதற்கான காரணம் அதுதான். ஆனால் நான் எண்ணியது போல அவ்வாறு எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. தமிழ்ச்சூழலில் இருந்து  அதை எதிர்பார்ப்பதும் அவ்வளவு சரியில்லை என்று இன்று எனக்குத் தெரியும். தமிழர்களிடமிருந்து வந்த எதிர்வினைகள் மிகச்சாதாரணமான அரசியல் சார்ந்த எதிர்வினைகள். ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்த கட்சி அரசியலுக்குள் இந்த விவாதத்தைக் கொண்டு நிறுத்தி அங்கிருந்து கொண்டு ஏதோ தோன்றியதைச் சொல்லும் முயற்சிகள். அல்லது மிக எளிமையான பண்பாட்டு ஆய்வு நிலைகளிலிருந்து சொல்லப்படும்  பழகிப்போன கருத்துகள்.

என்னை சீண்டி மேலும் என்னைக் கண்டடையும் வாய்ப்பை அளிக்கும் எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. ஆனால் பத்தாண்டுகளுக்குப்பிறகு பல வாசகர்கள் இந்நூலின் வழியாக மரபையும் இலக்கியத்தையும் புதிதாக கண்டடைய முடிந்தது என்றும் ,தங்களுக்கு புதிய வழிகள் திறந்தன என்றும், பழகிப்போன பாதைகளில் செல்லாமல் இலக்கியத்தை முற்றிலும் புதிய வழிகளினூடாகச் சென்றடைவதற்கு இந்நூல் தங்களுக்கு வழிகாட்டியது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவ்வப்போது எவரோ ஒரு வாசகர் பரவசத்துடனும் நிறைவுடனும் இந்த நூலைப்பற்றி கூறுவதைக் கேட்கிறேன். நீண்ட இடைவேளைக்குப்பிறகு இந்த நூலின் மறுபதிப்பு வருகிறது. எல்லா வகையிலும் நிறைவூட்டும் நிகழ்வு இது. எதிர்காலத்தில் இந்நூலை இன்னும் விரிவாக எழுதுவேன் என்று நம்புகிறேன்.

இதை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் இதை எழுதக் காரணமாக அமைந்த, இதன் தொடக்க கால பதிப்புகளை வெளியிட்ட உயிர்மை இதழ் ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஜெ

02.05.2024

விஷ்ணுபுரம் வெளியீடாக வரவிருக்கும் ஆழ்நதியை தேடி நூலின் முன்னுரை

முந்தைய கட்டுரைதிருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை
அடுத்த கட்டுரைதொழிலெனும் தியானம்