அன்புள்ள ஜெ அவர்களுக்கு
தங்களுடைய குமரித்துரைவி படித்தேன். பெண் வீட்டாராக இருந்து கல்யாணம் செய்யும் பொழுது அதில் இருக்கும் உடல் உளைச்சலையும் மன உளைச்சலையும் சந்தோஷங்களையும் சமீபத்தில் தான் கண்ணூர பார்த்து தெரிந்து கொண்டேன். சிறு வயதில் இருந்து எத்துணை கல்யாணங்களுக்கு ஊரில் சென்றிருப்போம், எல்லாம் குதூகலமான ஒரு அனுபவமாகவே எனக்கு மனதில் பதிந்திருந்தது. ஆனால் அப்படி ஒரு அனுபவத்தை வருவோர்க்கு அளிக்க கல்யாணம் நடத்தும் பெற்றோரும் அவர்களின் நெருங்கிய சுற்றோரும் எவ்வளவு தீவிர வேலை செய்கிறார்கள் என கண்பட கண்டு உணர்ந்தேன். குமரித்துரைவி, என் கல்யாணத்தில் நான் கண்ட சில நொடிகளை கண்முன் நிறுத்தியது. என் பெற்றோர் இவ்வாறுதானே நினைத்து எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தீவிரமாக செய்திருப்பார்கள் என்று தோன்றிய தருணங்களும் உண்டு. பெற்றோரின் பாசத்தை அவர்களின் செயல் தீவிரத்தின் வாயிலாக உணர வைத்தது. முடிக்கும் பொழுது கண் கலங்க வைத்தது. பெற்றோருக்கும் மகளுக்குமே உண்டான பாசத்தின் ஆனந்த கண்ணீர் என எண்ணுகிறேன்.
கொற்றவை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தமிழும் தமிழின் தொடக்கமும், வார்த்தைக்கு வார்த்தை, சிற்பி சிறிது சிறிதாக கல்லில் இருந்து செதுக்கி எடுக்கப்படும் நுட்பமான சிலை போல படிமங்கள் என் கண் முன் எழுந்து கொண்டிருக்கிறது. படித்து முடித்தவுடன் தங்களுக்கு மறுமுறை கடிதம் எழுதுகிறேன்.
சில நாட்களுக்கு முன் தங்களுடைய தமிழ் விக்கி–யில், என் மூதாதையர் தாத்தா அ.சிதம்பரநாதன் செட்டியார் பற்றிய பக்கத்தை என் கணவர் காட்டினார். அவரை பற்றி என் குடும்பத்தில் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், இந்த பக்கத்தில் இருந்த அளவில் தகல்வல்கள் இதுவரை கேட்டதில்லை. தங்களுக்கும் இந்த பணி மேற்கொண்ட அனைவருக்கும் என் குடும்பத்தார் சார்பாக மிகுந்த நன்றிகள்.
படுகளம் படித்து கொண்டிருக்கிறேன். எளிமையான வரிகளில், எளிமையான வாழ்க்கையில் தான் எத்தனை அழகு எத்தனை தவிப்பு என்று தோன்றியது. கதையை படிக்கும் பொழுது என் ஊர், கும்பகோணத்தில் உள்ள கடை வீதி என் கண் முன் வந்தது. படுகளம் – 1 இல் சித்தரிப்பது போல எங்கள் ஊர் கடை வீதியை நான் காலை, மதியம், சாயங்காலம், இரவு என எல்லா நேரங்களிலும் கண்டிருக்கிறேன். சின்ன குறுக்குச் சந்தில் கூட ஒரு பெரும் கற்கோவிலின் ஒரு திசை வாசல் அதை சுற்றி ஒரு சின்ன பூ கடை, பழக்கடை, அர்ச்சனைக்கடை, டி–காபி–பஜ்ஜி கடை, வெங்காயம் பூண்டு கொடௌன்கள், பிளாஸ்டிக் பொருள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க பட்ட கடைகள், என்று இறுக்கமான நெருக்கடியில் பத்து கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையிலும் அவ்வளவு சாமான்கள் அவ்வளவு மக்கள் பார்த்திருக்கிறேன். திருவிழா வந்தால் கேக்கவே வேண்டாம். தெரு முழுக்க கடைகள். ஆனால் ஒருபோதும் கடையில் உள்ளவர்களின் திண்டாட்டத்தை நினைத்துப் பார்க்கவில்லை படுகளம் படிக்கும் வரை. ஆவலுடன் மேலும் படிக்க தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
ஒரு வருடத்திற்கு முன்பு தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன் ‘சலிப்பு, மீள்வு‘ வெளியீட்டைப் பற்றி. ‘கற்றலை அளிப்பது‘ என்று தாங்கள் மறு கடிதம் எழுதி இருந்தீர்கள். அது மிகவும் சிந்திப்பூட்டியது. இப்பொழுது நாங்கள் சிறு குழுவாக, கற்க வேண்டும் ஆனால் வழி தெரியாது இருப்பவர்களை கண்டெடுத்து அவர்களோடு இணைந்து கல்வி பயணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். அவ்வாறு இருப்பவர்கள் இப்பொழுது எங்களை அடையாளம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். எங்களால் முடிந்த அளவு முயற்சி தொடர்ந்து செய்யவிருக்கிறோம். தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
தமிழில் படிப்பதும் எழுதுவதும் நெடும் காலத்திற்கு பின் இப்போது தான் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறேன். எனவே என் வார்த்தைகளில் பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,
ப.சிந்து