அமெரிக்க இளையதலைமுறையில் இருந்து…

அன்புள்ள ஜெ,

நலமே நாடுகிறேன்.

சகோதரிகள் மேகனா, சஹானா இருவரும் முக்கியமான இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து தங்கள் யுட்யூப் சானலில் விவாதித்தும், மதிப்புரைகள் அளித்தும் வருகின்றனர். அவர்களைக் குறித்து உங்கள் தளத்தில் கூட எழுதியிருந்தீர்கள். இலக்கிய ஆக்கங்களை அவர்கள் அணுகும் விதத்தின் மீதும், அவற்றைக் குறித்த தங்கள் பார்வையை அவர்கள் உறுதியாக எடுத்துரைப்பதின் மீதும் எனக்கும் எப்போதும் மிகுந்த மதிப்புண்டு. அவர்கள் இப்போது A Fine Thread and Other Stories குறித்த ஒரு விரிவான மதிப்புரையை இந்தக் காணொலியில் வழங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக நிழல் காகத்தையும், இறுதி யந்திரத்தையும் குறித்த தங்கள் பார்வையை அளித்துள்ளார்கள். எந்தப் பெரிய சிரமமுமின்றி கதையின் மையத்தை அவர்களால் எளிதில் தொட்டு விட முடிகிறது. நிழல் காகத்தின் அசிதருக்கு உண்மையில் நிகழ்வது பிராயசித்தம் செய்து நிவர்த்தித்துக் கொள்ள வேண்டிய பாவமல்ல, அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய தத்துவச் சிக்கலே என்று ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி சொல்வதைக் கேட்கையில் சற்று திகைப்பாகத்தான் இருந்தது. இரு பெண்களும் அத்வைத வேதாந்த மாணவர்கள் என்று அறிந்த பின், தத்துவப் பின்புலம் இலக்கியத்தை ஆழமாக அணுகும் வல்லமையை இயல்பாகவே அளித்து விடும் என்று புரிந்து கொண்டேன்.
பின் தொடரும் நிழலின் குரல் என்ற கொந்தளிப்பான நாவலுக்குள் வரும் இறுதி யந்திரம் என்ற சிறுகதை தரும் அலைக்கழிப்பை, அந்த நாவலை வாசிக்காமலேயே வெறும் நாலு பக்க சிறுகதையை வாசித்தே அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்தக் கதையில் வரலாற்றைத் தன் எண்ணப்படி உருவாக்க ஆவல் கொள்ளும் அதிபர், “வரலாறு ஓர் அதிகார வெளி. அதிகாரம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.” என்பார். அப்படிச் சொல்லும் போது அவர் ஒரு கணம் மனிதனானார் என்றிருக்கும். (For a moment, he appeared to be human.). இதை வாசித்த போது தன்னால் அந்த அதிபரைப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்கிறார்கள். அதிகாரம் கைவிட்டுச் சென்று விடலாம் என்னும் அச்சம் அவரை மனிதனாக ஆக்குகிறது.
மிகக் கூர்மையான, நுண்மையான, ஆழமான அவதானிப்புகள். இந்தப் பெண்கள் நாளை எழுதப் போகும் இலக்கிய ஆக்கங்களுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
முந்தைய கட்டுரைஇரண்டு இணையப்பக்கங்கள்
அடுத்த கட்டுரைநவவேதாந்தம்