அனல் காற்று கடிதங்கள்

அன்புள்ள ஜெ

 

ஒரு சிறிய குழப்பம். அனல் காற்று குறுநாவலை எழுதியது யார்? நீங்கள்தானே? உங்கள் நடை, உங்கள் சித்தரிப்பு முறை…ஆனால் என் நண்பன் அது பாலுமகேந்திரா எழுதியது என்கிறான். அந்தக்குழப்பம் நீங்கள் கொடுத்த முதல் குறிப்பிலும் இருக்கிறது, ஆணின் காம உணர்ச்சியை இந்த அளவுக்கு நுட்பமாக சொன்ன படைப்புகள் தமிழில் குறைவு. மிக வெளிப்படையாக அதேசமயம் மிக சூட்சுமமாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் மனங்கள் ரகசியமாக முட்டிக்கொள்வதைச் சொல்ல உங்களுக்கென்றே ஒரு வழி இருக்கிறது

 

சிவசங்கர்

 

அன்புள்ள சிவசங்கர்,

 

அனல்காற்று நான் எழுதிய குறுநாவல். இப்போது இங்கே பிரசுரமாகிறது. பாலு மகேந்திராவுக்காக அதை அளித்தேன். அந்த திட்டம் கைவிடப்பட்டது.

 

என் இணையதளத்தில் எல்லா படைப்புகளும் நான் எழுதியவை மட்டுமே

 

ஜெ

 

&&&

 

 

கீழ்நடுத்தரவற்கத்துச் சிறிய அறை. சென்னையில் அப்படிப்பட்ட அறைகளுக்கு என்றே ஒரு தோற்றம் உண்டு. பலவகையான பொருட்கள் கிடைத்த இடத்தில் எல்லாம் அடைந்திருக்கும். அங்கு வாழ்பவர்கள் அவற்றினூடாக உள்ள இடத்தை மட்டுமே காண பழகியிருப்பார்கள். வருபவர்களின் மனம் அங்கே உள்ள பொருட்களில் முட்டிக்கொண்டு தடுமாறும்

எப்படி எழுதினீர்கள் ஜெ.. இது போன்ற அறைகள் சில சமயம் எனக்கு மிகக் குழப்பத்தை விளைவிக்கும். வானமே எனது வெளி என்று கிராமத்திலிருட்ந்து வருபவனுக்கு மூச்சு முட்டும். I hate these places. அதில் எப்படி வாழ்வது?? இதை பாலு மகேந்திரா எப்படிப் படமாக்கி இருப்பார் என்று யோசிக்கிறேன்.

அனல் காற்று தலைப்பு எனக்கு சுதா ரகுநாதனின் அனல் மேலே பனித்துளி பாடலை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பாடல் கேட்டீர்களா?? ரொம்ப அழகுப் பாட்டு (வாரணம் ஆயிரம் படத்தில்)

பாலா

 

&&&

 

அன்புள்ள பாலா,

 

வாழுமிடங்கள் மனிதர்களை வடிவமைக்கின்றன. ஒரு சூழலைச் சொல்லிவிட்டால்போது அங்குள்ல மனிதர்கள் தானாகவே உருவாகிவருவார்கள்.அதேபோல மனிதர்களைச் சொல்லிவிட்டால் இடமும் உருவாகிவரும். அவற்றைப் பிரிக்க முடியாது என்று படுகிறது

 

அந்தப்பாடல் எனக்கும் பிடித்ததே

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 6
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 7