அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள்? அதை நீங்கள் பாராட்டவில்லையா?
சாமிநாதன்
அன்புள்ள சாமிநாதன்
இன்றைய செய்தி, சற்றுமுன் பார்த்தது. அண்ணா ஹசாரே போராட்டத்தை எதிர்க்க மதச்சிறுபான்மையினரை ஒருங்கிணைத்துள்ளது காங்கிரஸ் அரசு
http://expressbuzz.com/nation/foxed-upa-government-tries-to-play-minority-card/306758.html
இவர்கள் எல்லாருமே முன்னர் அண்ணாவை ஆதரித்துப்பேசியவர்கள். சட்டென்று நேரெதிராக திரும்புகிறார்கள். திருப்பப்படுகிறார்கள்.
அண்ணா ஹசாரே போராட்டம் உயர்சாதிப்போராட்டமாம், சில தலித் தலைவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. அவர்கள் அண்ணா ஹசாரேவுக்கு எதிராகப் போட்டிப் போராட்டம் நடத்துவார்களாம்.
அண்ணா ஹசாரே போராட்டத்தில் எங்கே மத / சாதிய விஷயங்கள் வந்தன? லோக்பால் வந்தால் அது எல்லாருக்கும்தானே?
இது அல்ல ஜனநாயகம். இது பிளவுபடுத்தும் வேலை. இதைத்தான் அச்சு அசலாக அப்படியே பிரிட்டிஷ் அரசு செய்தது. அதன் விளைவுகளையே நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.
காந்திய இயக்கம் அனைத்து மக்களையும் தழுவிய மாபெரும் மக்களியக்கமாகவே எப்போதுமிருந்தது. பிரிட்டிஷ் அரசு அதைப் பல வகைகளில் எதிர்கொண்டது
ஒன்று, அதற்குச் சாதகமான அறிவுஜீவிகளைக்கொண்டு அவ்வியக்கம் ‘அராஜகத்தை பரப்புவது’ என்றும் ‘நடைமுறையில் பயனற்றது’ என்றும் விடாமல் உச்சகட்ட பிரச்சாரத்தை நடத்தியது.
இரண்டு, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து தொடர்ச்சியாக ஆட்களை விலைக்கு வாங்கியது. அவர்கள் வாயால் காந்தியை வசைபாடச்செய்தது – சுரேந்திரநாத் பானர்ஜி போல.
கடைசியாக இவையெல்லாம் பலிக்கவில்லை என்று தெரிந்ததும் திரும்பத்திரும்ப காந்தியை இந்திய உயர்சாதியினரின் பிரதிநிதி என்று சொல்லியது. ‘அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தேவை’ என்ற ‘ஜனநாயக நோக்குடன்’ முஸ்லீம் சீக்கியர் போன்றவர்களில் வேறு தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்களை காந்திக்கு எதிராக வளர்த்துவிட்டார்கள். தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோரில் தலைவர்களைக் கண்டுபிடித்தார்கள்.
இவர்களில் பலர் முதல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது பிரிட்டிஷாரால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள். வட்டமேஜைமாநாட்டில் பிரிட்டிஷாரால் இடம் கொடுக்கப்பட்டது வழியாகவே அவர்களின் சொந்த சாதி மதங்களைச் சேர்ந்தவர்களுக்கே அறிமுகமானவர்கள். இன்றும் அந்தப் பிளவுவாத அரசியலின் ரத்தம் நம் நாட்டில் உலரவில்லை.
காங்கிரஸ் எப்போதும் இதையே செய்திருக்கிறது. பஞ்சாப் பிரச்சினைக்காக ஜனநாயகப்போர் நடந்தபோது பிந்திரன்வாலேவை உருவாக்கினார்கள். அஸ்ஸாமில் மாணவர் கிளர்ச்சி நடந்தபோது மணிப்பூரில் அஸ்ஸாமியர்களுக்கு எதிராகத் தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.
ஜனநாயகம் என்பதை காங்கிரஸ் இந்திராவுக்குப்பின் அறிந்ததே இல்லை
ஜெ
அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்
அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்
அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…