- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
இந்திய மரபில் பன்னிரண்டு ராசிகள் அடங்கிய களத்திற்கு மிகப்பெரிய இடமுண்டு. நம்முடைய மொத்த ஞானமும் அந்த பன்னிரு களத்தை அடிப்படையாகக் கொண்டுதான் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். நீண்டநாட்களுக்கு முன் என் நண்பர் வெள்ளுவன் இதைப்பற்றிய விரிவான ஆய்வுகள் செய்துள்ளார். வானியல், இயற்கை, இசை என அனைத்துக்குமே பன்னிருகளமே அடிப்படை. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதை அடிப்படையாகக் கொண்டே ராகபுடம் என அவர் கூறிய இசைப்பண்களின் கணக்கை வகுத்துரைத்தார். அது இன்று சோதிடத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
அதே பன்னிரண்டு களம் சூதுக்கும் உள்ளது. அது இயல்பே. ஏனென்றால் வாழ்வும், அதை ஆளும் மண்ணும், மண்ணையாளும் விண்ணும் ஒருவகை சூதுதான். இந்நாவலை எழுதுகையில் என்னிடமிருந்தது பன்னிரு களம் என்னும் உருவகம். அதன் மையத்தில் திரௌபதி நின்றிருக்கிறாள். பகடைக்காயாக. காலந்தோறும் வரலாற்றின் சூதுக்களத்தில் வைக்கப்பட்ட கரு அவள். இந்நாவலில் ஒரே உச்சத்தருணம் வழியாக அவள் ஆடுபவள் ஆகிறாள். பாண்டவர்களும் கௌரவர்களும் மட்டுமல்ல ஆட்டிவைக்கும் தெய்வவடிவமான கண்ணனும் அவளுடைய களத்தில் காய்களாக உருமாறிவிடுகின்றனர்.
இந்நாவலின் கட்டமைப்பு சூதுக்களத்திற்குரிய ஓர் அகவடிவம் கொண்டது. சூதுக்களத்தின் இருபுறமும் அமர்ந்திருப்பவர்கள் எதிரிகள். ஒருவரை ஒருவர் வெல்ல முயல்பவர்கள். ஒருவரை ஒருவர் உண்பவர்களும்கூட. அவர்கள் அந்தச் சூதுக்களத்தால் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வைத்து அக்களம் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அக்களத்தின் இரு கால்கள் அல்லது கைகள் அல்லது சிறகுகள் அவர்கள் இருதரப்பினரும். கௌரவர்களும் பாண்டவர்களும் அமையவிருக்கும் குருக்ஷேத்திரம் என்னும் பெருங்களத்தின் கொலைக்கருவிகளும் கொல்லப்படும் இரைகளும் மட்டும்தானே?
இந்நாவலில் ஒன்றையொன்று எதிர்க்கும் இருநிலைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த இருநிலைகள் எல்லாமே நடுவே இருக்கும் பன்னிருகளம் ஒன்றில் விளையாடும் இரு தரப்புகளே. சிசுபாலனும் கிருஷ்ணனும், கிருஷ்ணனும் ஜராசந்தனும், கிருஷ்ணனும் அர்ஜுனனும், கிருஷ்ணனும் திரௌபதியும் என அந்தக் களத்தின் எல்லா தருணங்களிலும் யாதவன் இருந்துகொண்டிருக்கிறான். சூதுக்களத்தில் சகுனியும் யுதிஷ்டிரரும் இரு பக்கங்களில் அமர அங்கே அறமும், விழைவும் முட்டி மோதி தங்கள் உச்சத்து உடைவுப்புள்ளியைக் கண்டடைகின்றன. இணையாகவே வேதங்கள் இருபக்கமும் அமர்ந்து ஆடும் ஒரு களமாகவும் இது உள்ளது.
மகாபாரதத்தில் ரிஷிகளைப் பற்றிய குறிப்புகளில் அவர் வேதங்களை இயற்றியவர் என்று மட்டுமல்ல, இயற்றிக்கொண்டிருப்பவர் என்றும் வருகிறது. எனில், வேதங்கள் மகாபாரதத்தின் காலகட்டத்தில் தொன்மையான படைப்புகளாக இருக்கவில்லை, அவை புதிதாகவும் நிகழ்ந்துகொண்டிருந்தன. வேதங்களை ஆக்கியோரில் எல்லா வருணத்தவரும் உள்ளனர். அந்தணர் முதல் அசுரர் வரை. சுதாசன் (நல்ல அடிமை) என்றுகூட ஒரு வேதமியற்றிய முனிவர் உள்ளார். அது உபநிஷதங்களிலும் மகாபாரதத்திலும் உள்ள யதார்த்தம், முனிவர்கள் வர்ணாசிரமத்தைக் கடந்தவர்கள், எல்லா வர்ணங்களிலிருந்தும் வருபவர்கள். வேடரான சத்யகாம ஜாபாலன் வரை.
வேதமென்பது பிராமணர்களின் நூலாக இருக்கவில்லை. வேதமோதி வேள்விசெய்வது மட்டுமே பிராமணர்களின் பணியாக இருந்தது. அதற்கென அமைந்த சாதி அது. மெல்லமெல்ல வேதம் அவர்கள் மட்டும் ஓதியறிவதாக ஆகியது.வேதம் உருவாகி, தொகுக்கப்பட்ட காலக ட்டத்தில் பலவேதங்கள் இருந்திருக்கலாம். பல வேதங்கள் நிராகரிக்கப்பட்டு தேவையானவை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வேதங்களின் புறனடை (Apocrypha) ஆன கிருஷ்ண சாகைகள் சான்று.
நால்வேதங்களில் அதர்வம் தனித்து நிற்கிறது. சாந்தோக்யம் போன்ற உபநிடதங்கள் மூன்றுவேதங்கள் என்றே சொல்கின்றன. இன்றும் அதர்வம் இந்திய அளவில் பொதுவாக பயிலப்பட்டு, ஓதப்படுவதில்லை. அதன் அந்தணர் மரபுகூட தனியானது. அதர்வவேதத்தை ஆய்வுசெய்த மோனியர் வில்யம்ஸ், ப்ளூம்ஃபீல்ட் முதலிய பேரறிஞர்கள் அது தொன்மையான பழங்குடிகளின் வேதமாக நீண்டகாலம் இருந்து, மூவேதங்களும் தொகுக்கப்பட்ட பின்னர் நால்வேதங்களில் ஒன்றாக காலப்போக்கில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அது பிற்காலத்தையது என்று ஒரு தரப்பும், அதன் தொல்குடிச் சடங்குத்தன்மையை கண்ணுறுகையில் அது ரிக்வேதத்திற்கும் முன்பே பழங்குடிச் சமூகங்களில் உருவாகி நிலைகொண்டதாக இருக்கலாம் என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது. இரண்டாம் தரப்பே காலப்போக்கில் வலுவடைகிறது. ஏனென்றால் எகிப்து, பாபிலோன், மெசபடோமியப் பண்பாட்டின் மிகத்தொன்மையான தொன்மங்களுடன் அதர்வமே அதிகமாக பொதுக்கூறுகள் கொண்டுள்ளது. அனைத்துப் பழங்குடிகளுக்கும் பொதுவான கற்காலத்து மூலப்பண்பாடு (Protoculture) அதர்வத்திலேயே விரிவாக வெளிப்படுகிறது
ஒதுக்கப்பட்டுள்ள அதர்வத்திலேயே மேலும் ஒதுக்கிவைக்கப்பட்ட கிருஷ்ண சாகை என்னும் புறனடை உள்ளது. அதர்வம் ஒரு மாபெரும் உரையாடலின் வெளிப்பாடு என்பது என் புரிதல் – அது இந்தியவியல் முன்னோடிகள் பலருடைய கருத்தும்கூட. ரிக், சாமம், யஜுர் ஆகியவை ஒரு தனிமரபு. அதர்வம் இங்கிருந்த இன்னொரு மரபு. முந்தையது சற்று செவ்வியல் நோக்கி நகர்ந்துவிட்ட ஒன்று, பெருந்தரிசனங்களை அது அடைந்து தத்துவத்தின் தொடக்கமும் நிகழ்ந்துவிட்டது. அதர்வம் பழங்குடிப்பண்பாட்டின் குறியீட்டுப் பெருந்தொகையாகவே நீடித்தது. முதல்மூன்று வேதங்களும் நான்காவது வேதத்தைச் சந்தித்து உரையாடி விரிவதன் சித்திரத்தை பன்னிரு படைக்களம் தொடங்கி வைக்கிறது.
அசுரர்களும், நாகர்களும் வேதங்கள் கொண்டிருந்தனர் என இந்நாவல் கூறுகிறது. அவ்வாறு இல்லாமலிருக்க வழியே இல்லை. மகாபாரதமே அனைவருக்கும் வேதங்கள் உண்டு என மீளமீளச் சொல்கிறது. ராமாயணத்தில் ராவணன் வேதப்பேரறிஞன். அந்த வேதம் அவனுடைய அசுரகுடிக்குரிய வேதமாகவே இருந்திருக்கும். அசுர, நாக வேதங்கள் மூன்று வேதமென்னும் பெரும்பரப்பால் மறுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, உள்வாங்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அதர்வவேதம் ரிக்வேதத்தின் ஒரு துளியுடன் இந்த புறவேதங்களை இணைத்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். இந்நாவல் அந்த வேதப்போர் தொடங்கும் புள்ளியை காட்டுகிறது. இந்நாவலைத் தொடர்ந்து வரும் நாவல்களில் அச்சித்திரம் பெருகிக்கொண்டே செல்வதை வாசகர் அறியலாம்.
வெண்முரசு நாவல்களில் உச்சவேகம் கொண்ட கதைச்சந்தர்ப்பங்கள் நிறைந்த இந்நாவல் இணையாகவே தத்துவமோதல்களின் உச்சகட்டங்களையும் பகைப்புலமாகக் கொண்டுள்ளது. பல்லாயிரம் வாசகர்கள் ஏற்கனவே அந்த மெய்யியல்வெளியையும் சென்றடைந்திருக்கிறார்கள். என் சகப்பயணிகளாகிய அவர்களுக்கு என் வணக்கம். இதை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும், இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் நன்றி
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
வெய்யோன்,பன்னிரு படைக்களம்-பலராம கிருஷ்ணன்
பன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்