அழைப்பு, கடிதம்

அழைப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ

அழைப்பு கதையின் மையம் அந்த முடிவின்மையின் அழைப்புதான். அது ஒரு பெரிய விசை. அதிலிருந்து தப்பவே முடியாது. இந்த உலகை கவ்விப்பிடித்துக்கொண்டு தாக்குப்பிடிக்கலாம். வேலை, குடும்பம், உறவுகள், காமம், வெற்றி, பணம் புகழ் எல்லாமே அந்த ஈர்ப்பில் இருந்து தப்புவதற்காகத்தான். கதவைத்திறது முடிவிலா வெளியில் சிதறிப்பரந்து போல ஒருவன் கதையில் வருகிறான். அவன் உணர்ந்த அந்த ஈர்ப்புதான் பயங்கரமானது

அதியமான் கிருஷ்ணா

 

அன்புள்ள ஜெ,

அழைப்பு கதை படித்தேன் கதை முடிந்தும் என் மனதின் உரையாடல் தொடர்ந்தது. அந்த உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

உரையாடல் :

அதற்கு முடிவில்லை என்றால் தொடக்கமும் இல்லை. அது அனைத்தும் நிரந்தரமாக அங்கே உள்ளது.

இல்லை, சிறு திருத்தம். அனைத்தும் அல்ல.

அது அனைத்தும் ஒன்றுதான்.

எப்படி?

அது தொடங்கவுமில்லை, வளரவுமில்லை, முடிவதுமில்லை..

வளர்வதில்லையா ?

ஆம் அது வளர தேவையுமில்லை.

இதற்கு மகிழ்ச்சி உண்டா ?

அது எப்படி மகிழ முடியும் ?

அது திகழ மட்டும் தான் முடியும்.

அது பெரும் அச்சம் தரும் வெறுமை.

அந்த வெறுமையா நம் அனைவரின் வாழ்வின் தேடல்?

இனி எப்படி…எதை நாம் அறிய விளைவது ?

அறிவை நாடாதிருப்பது தான் உண்மையான இறப்பு.

ஆனால் இந்த வேற்றுலகம் இறந்த சடலம்மல்ல. இது முழுமையாக விழித்துள்ளது.

பிறந்திருந்தால் தானே இறப்பதற்கு.

அப்படியானால் இது தன்னை அனைத்தும் உணர்ந்திருக்கும்.

முழு அறிவு ! முழு பிரக்ஞை!

அதற்கு எல்லை இல்லை.

அப்படியானால் நாம் அதை சார்ந்தவரா?

இருக்கலாம். அது நம்மை அறியலாம்.

நாம்?

அதை உணரும் போது அதில் கலக்கலாம்.

அதில் மகிழ்ச்சி இருக்குமா? அல்லது பேர் வறுமையை?

இருமை இல்லாமல் உணர்வது அறிவது  எப்படி?

இருமையை அறியலாம். ஒருமையை உணரலாம்.

இரண்டும் அறிவே.

மேதைகள் கலை மூலம் இதையே நிகழ்த்துகிறார்கள்.

என்னால் ஒரு படத்தை முழுமையாகவே காண இயலும். அதில் உள்ள மேதாவி தன்மையை கூர்ந்து கவனிக்க சுலபத்தில் இயலாது.

அப்படி நான் பார்க்க வேண்டுமென்றால் அந்த படத்தை பல முறை பார்க்க வேண்டும். அப்பொழுது கலை நுட்பங்கள் தெரியும். ஆனால் பிறகு அதே படத்தை மீண்டும் எப்பொழுதும் முழுமையாக பார்க்க இயலாதது.

மேதைகளால் நெருங்கி நுட்பமாக பார்க்கவும் முடியும், விலகி முழுமையாக பார்க்கவும் முடியும்.

இந்தத்தன்மையே பல அரிய கலைகளை சாத்தியமாக்கி இருக்கும்.

இது சாமான்ய வாழ்க்கைக்கு பெரும் வரம். நெருங்கவும் இயலும் விலகவும் இயலும்.

அறிவைத்தேடி நெருங்கவும் விலகவும் இருக்கும் இந்த இயக்கம் தான் மழிச்சி.

கலை நம்மை இங்கு இந்த பாதை வழியில் கொண்டு செல்லுமா ?

தக்க குருவின் வழிகாட்டல் அங்கு கொண்டு செல்லுமா ?

நன்றி,

அருண் குமார் மோகன்தாஸ்.

முந்தைய கட்டுரைபித்தன் வருகை
அடுத்த கட்டுரையுவன் சந்திரசேகர் சந்திப்பு – வான்கூவர்