அழைப்பு (சிறுகதை)
நேற்று காலை 3 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு உட்கார்ந்திருந்தேன்.உங்கள் தளத்தில் முதல் பதிவில் இருந்தது அழைப்பு !. முதலில் ஏற்ப்பட்ட அதிர்ச்சி அந்த படம். என்ன தான் விண்வெளி படங்கள் அவ்வளவு பார்த்திருந்தாலும் அதில் ஏதோ தனித்தன்மை இருந்தது. நேற்றிலிருந்து அந்த படம் என் சிந்தனையில் வந்து வந்து போகிறது. மார்வெல் படங்களிலும் இன்னும் பல ஃபேன்டசி படங்களில் வரும் விண்வெளியின் சித்திரங்கள் காட்சிகள் வெறுமனே கலர் அடித்த காமிக் புக் போல தான் தென்படும். அதில் இருப்பது காட்சி பிரம்மாண்டம் இல்லை க்ராபிக்ஸ் ப்ரம்மாண்டம். ஆனால் இன்டர்ஸ்டெல்லரில் வரும் விண்வெளி மாபெரும் காட்சி பிரம்மாண்டத்துடனும் கலைச் செரிவுடனும் இருக்கும் கனவு.
உண்மையில் இந்த கதையை படித்து முடிக்கும்போது சொல் பிரம்மாண்டம் தான் நம்மை ஆட்கொள்கிறது. சுஜாதா நிறைய ஸைன்ஸ் ஃபிக்ஷன் எழுதியிருக்கிறார். ஆனால் அதெல்லாம் ஒருவித விருவிருப்புக்காக ஆழமற்ற கதையோட்டத்துடன் எழுதப்பட்டது.ஜில்லு போன்ற சில கதைகள் விதிவிளக்கு. இந்த கதையில் வரும் தத்துவம் தான் இந்த கதையை ஒரு நார்மல் தமிழ் அறிவியல் புனைவு ஆக இல்லாமல் க்ளாசிக்காக ஆக்குகிறது. தங்களின் விசும்பு தொகுதியை முடித்துவிட்டேன். ஆனால் இது தான் உச்சம். இதை படிக்கும்போது ஏனோ ஜெயகாந்தனின் இல்லாதது எது நினைவில் வந்தது.
தங்கள் வாசகன்
கிரி.
அன்புள்ள ஜெ
அழைப்பு உலுக்கிவிடும் கதை. கதைநிகழ்வுகள் இல்லை. ஓர் உரையாடல். ஆனால் ஆழமாக பலவற்றைக் கூர்மையாக பிளந்துசெல்கிறது. முடிவின்மை என்ற கருத்து அல்லது அழிவின்மை என்ற கருத்துதான் கிரேக்கச் சிந்தனையின் தொடக்கம் என்று வில் டுரண்ட் சொல்கிறார். அந்த கருத்துதான் முதல் தத்துவ உருவகம். வேறு எல்லாமே நடைமுறையில் உணர்ந்தவை. அது மட்டும்தான் தூய்மையான ஊகம். நடைமுறைப் பயனே இல்லாதது. ஆனால் அதன்பின் சிந்தனை மதம் எல்லாமே அதைச்சார்ந்துதான் இருந்தன. மனிதன் கனவுகாண்பது அதை.அஞ்சுவதும் அதை. அதன் வாசலில் நின்றுகொண்டே வாழ்ந்து மறைகிறான்
ராஜ்குமார் அமுதவன்