விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
வே.நி. சூர்யாவின் “அந்தியில் திகழ்வது” தொகுதியை வாசித்தேன். தொகுப்பைப் பற்றி ஒருவாறாக எனக்குள் திரட்டிக்கொள்ள முடிந்தது.
அஸ்தமனங்களுக்கும் கடற்கரைகளுக்குமே தொகுதி சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பலதரப்பட்ட மனோநிலைகளைக் கிளர்த்தக்கூடியதாக அந்திகளும் கடற்கரைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.
எல்லாவற்றையும் மங்கலாக மாற்றி இன்னொன்றாக்கும் மாயமாக (கண்களும் வெற்றிடமும்), இல்லாமலாவதன் அழகாக (மறுபடியும் ஒரு மாலைப்பொழுது), தூரமும் அருகாமையும் குழம்பிப்போகும் பொழுதாக (ஒரு டிசம்பர் மாலைப்பொழுது), இயற்கையின் ஒருமையைக் கண்டடையும் தருணமாக (தியான மண்டபம்), வெடிவைத்துத் தகர்க்கப்படும் கட்டடமாக (உயரத்திலுள்ள வீடு), சுயம் கரையும் வெளியாக (மாபெரும் அஸ்தமனம்) என வேறுவேறு சாயங்காலங்களுக்குள் நம்மை இக்கவிதைகள் அழைத்துச்செல்கின்றன.
இன்னொருபுறம் கடற்கரைகளைக் குறித்த சித்திரங்கள். மிகத்தனிமையான அலைகளின் கடற்கரை (அலைகளை எண்ணுபவன்), இன்னொரு உலகத்து அலைகளின் கடற்கரை (யாராவது இருக்கிறீர்களா?) கல்சிங்கங்கள் மனிதனை வெறித்துப்பார்க்கின்ற கடற்கரை(சந்திப்பு), மெத்தை போலவும் தேநீர் மேசை போலவும் மாறுகிற கடற்கரை (ஒளி மனிதன்), பலவீன ரோஜாவின் கடற்கரை (பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா?), தீர்ந்துகொண்டிருக்கும் கடற்கரை (வெளியேற்றம்), மலரினினுள் இருக்கும் கடற்கரை (கப்பற்சேதங்கள், பவளப்பாறைகள்,வெண்சங்குகள்), காலடிச்சுவடுகளின் கடற்கரை (ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை) எனப் பல்வேறு மனோநிலைகளின் கடற்கரைகளைக் காண்கிறோம்.
மேலும் சீன செவ்வியல் கவிதைகளில் உள்ளதைப் போல இக்கவிதைகளில் பெரும்பாலும் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை. ஒரேயொரு மனிதனும் இயற்கையின் பிரம்மாண்ட இருப்பும் மாத்திரமே. கற்பனாவாத காலகட்டக் கவிதைகளின் பேசுபொருட்கள் ஆனால் அவை மிகுந்த சமநிலையுடன் மொழியில் முன்வைக்கப்படுகின்றன. அதனால் ஒரு அமைதி தோன்றிவிடுகிறது. வேறொருவிதத்தில் தேவதேவனின் கவியுலகத்திற்கு அணுக்கமான கவிதைகள் எனலாம். தேவதேவனின் கவிதைகளில் உள்ள கனிந்த நோக்கை இக்கவிதைகளில் நம்மால் பார்க்கமுடிவதில்லை. மாறாக ஒரு மெளனமான அலைகழிதல் உள்ளது. ஒரு நபர் தொடர்ந்து அநேக கவிதைகளில் நடந்துகொண்டேயிருக்கிறார். பெரும்பாலும் இக்கவிதைகளின் அடிநாதமாக தனிமையும் விடுதலையுணர்ச்சியும் கூடவே ஒருவிதமான மெலன்கலியும் (Melancholy) இருக்கிறது.
**
பச்சிளங்குழந்தையைப் பார்த்து “நீ பிறந்துவிட்டாய் , இனி நிறைய வருத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே” என தனக்குள் பேசிக்கொள்ளும் “ஊற்று” எனும் உணர்ச்சிகரமான கவிதையும் இருக்கிறது.
ஊற்று
பிறந்து சில நாட்களேயான குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்
சாவகாசமாகத் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது
உனக்கோ பெயரில்லை கரடுமுரடான நேற்றில்லை
நானும்தான் இருக்கிறேன்.. பார்த்தாயா?
இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும்
அந்த சிறிய பஞ்சுக்கன்னத்தை
உலகத் துக்கம் அழுந்தத் தொடாத அந்த மிருதினை
தொட்டுப்பார்த்தேன்
பறக்கப் பழகாத கழுகுக் குஞ்சே
ஒரு பெரிய கதையின் முதல் எழுத்தே
எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே
எனக்குத் துக்கமாக இருக்கிறது.
இன்னொருபக்கம், பரவசத்தில் துள்ளும் “கன்னியாகுமரியில்” கவிதையும் இருக்கிறது.
கன்னியாகுமரியில்
சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன்
ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல
யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில்
அந்தத் திருகாணிதான்
கோர்த்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக.
நாளைக்குத் தெரியவில்லை
இப்போது எனக்குத் தோன்றுகிறது
இங்கு எதுவுமே பொய்யில்லை
அழகின் வறுமை எதனிடமுமில்லை
கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே
ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன
அறுதியிட்டுச் சொல்லமுடியும்:
இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி
ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும்
என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன்
பாருங்களேன்
எவ்வளவு கொண்டாட்டம்
நான் இருக்கிறேன் என்று உணர்கையில்
ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன்
மூழ்கும் படகில் இருப்பவன் என.
குழந்தைகளாகக் கண்விழித்து
மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்து நிற்கிறார்கள் நண்பர்கள்
மூன்று.. இரண்டு.. ஒன்று…
எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி
ஆ! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம்
நாங்கள் சத்தியம் செய்கிறோம்
ஒருபோதும் இதை மறக்க மாட்டோம் என.
ஒரு கவிதையின் தலைப்பே “ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை”.
ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை
மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்
யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள்
எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு
ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது
காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி
ஆழப் பதித்துப் பதித்து
நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை. .
இனி திரும்பிச்செல்வேன்
என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம்
உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.
இந்த மனநிலைதான் இக்கவிதைகளின் சாராம்சம் என்று நினைக்கிறேன். தொகுப்பின் ஆரம்பத்தில் ஜென் கவிஞர் கோபாயாஷி இசாவின் சிறுகவிதையொன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ்வுலகில்
நாம் நடக்கிறோம் நரகத்தின் கூரைகளில்
மலர்களை வெறித்தபடியே
மிகவும்பொருத்தம். கொழுந்துவிட்டு எரியும்போது மலர்களைப் பார்ப்பது தப்பித்தல் அல்ல; அலட்சியமும் அல்ல. அது ஓர் ஆழமான நம்பிக்கை. எதுவும் நிரந்தரமாக முற்றுபெற்றுவிடாது என்பதில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை. ஒருவிதத்தில் நுட்பமான எதிர்வினையும் கூட.
செல்வராஜ்