நீலி!

அன்பு ஆசிரியருக்கு,

நீலி மின்னிதழின் இரண்டாவது வருடத்திற்கான இறுதி காலாண்டிதழ் மே 1, 2024 வெளிவந்துள்ளது. இதில் காந்தியவாதியும், சமூக செயற்பாட்டளருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நேர்காணல் வெளிவந்துள்ளது. ஒளவையாரைப் பற்றி கவிஞர் இசை எழுதிக் கொண்டிருந்த கட்டுரைத் தொடரும், எழுத்தாளர் கமலதேவி எழுதிக் கொண்டிருந்த அம்பையின் ஒட்டுமொத்த படைப்புலகம் சார்ந்த கட்டுரைத்தொடரும் இவ்விதழில் நிறைவு பெற்றுள்ளது.

பக்தி காலகட்ட கவிஞரான ஆண்டாளின் கவிதைகள் பற்றி ஜா. ராஜகோபாலன் எழுதியுள்ளார். சந்திரா தங்கராஜின் சோளம் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து சக்திவேல் விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். சிவகாமி ஜெயக்குமார் என்ற தமிழினியின் ”ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற தன்வரலாற்று நூலைக் குறித்து V.S. செந்தில்குமார் எழுதியுள்ளார். கவிஞர் தேவதேவன் நீலியின் தேடலை ஒட்டி எழுதிய கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகப் பெண் எழுத்தாளர்களைப் பொறுத்து சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மற்றும் புனைவுலகம் குறித்து மொழிபெயர்ப்பாளர் அனுராதா ஆனந்த் எழுதியுள்ளார். க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் குறித்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தை மதுமிதா எழுதியுள்ளார்.

சமகால பெண் படைப்புகளின் மொழியாக்கங்களைப் பொறுத்து மலையாள எழுத்தாளரான மினி P.C-ன் ”மஞ்சள் குதிரை” சிறுகதையை எழுத்தாளர் யூமாவாசுகி மொழிபெயர்த்துள்ளார்; இஸ்தான்புல்லைச் சேர்ந்த முகே இப்லிக்சேவின் “இல்டிஸ்” சிறுகதையை நரேன் மொழிபெயர்த்துள்ளார்.

பெண்கள் இதழ்கள் குறித்த ஒட்டுமொத்த சித்திரத்தை அளிக்கும் கட்டுரையை ரம்யா எழுதியுள்ளார். சதிர்-பரத நாட்டியம், இசைவேளாளர் சமூகம், பந்தளூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கல்யாணி, ஜீவரத்தினம் என வரலாற்றின் சுவடுகளைத் தொட்டு விவரிக்கும் ”ஒரு காலகட்டத்தின் விதி” என்ற கட்டுரையின் முதல் பாகமான “தூரங்கள்” கட்டுரையை சுசித்ரா எழுதியுள்ளார்.

 நீலி: மே 2024 இதழ் 

நீலி குழு

([email protected])

முந்தைய கட்டுரைமுழுமைக் கல்வியின் இடம்
அடுத்த கட்டுரைநானன்றி யார் வருவார்?