கடம்பூர் முதல் காரஹான் டெப்பே வரை ; கந்து , ரேதஸ், மின், லிங்க வழிபாடு

கடம்பூரில் கம்பட்ட ராயன் கிரி மலைக்கு செல்லும் வழியில் அங்காளம்மன் ஆலயத்திற்கு பின்புறம் ஒரு மரக்கந்தின் மேல் விரைத்த, நீட்டித்த ஆண்குறியோடு கூடிய சுடுமண் சிற்பம் நிறுவப்பட்டிருக்கிறது. வழிபாடுகள் முற்றும் ஒழிந்த நிலையில் அந்த தொல் பழங்கால வழிபாட்டு தொடர்ச்சி கொண்ட சுடுமண் (டெரக்கோட்டா) சிற்பம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. நவீன விக்டோரிய ஒழுக்கவியல் தாக்கம் கொண்ட கருத்து குருடர்கள் யாரோ அந்த குறியை அங்குலி சேதனம் செய்துள்ளார்கள்.

இந்த கடம்பூர் டெரக்கோட்டாவின் முன் மாதிரி எனக்கொண்டால் அது ரேதஸ் உடன் இருக்கும் லகுலீசர் சிற்பம், அதற்கு முன்பான பிட்சாடனர், குடிமல்லம் லிங்கம், இந்திரனுக்கான வளச்சடங்கு, அதற்கு முன்பான கந்து வழிபாடு, ஹெலனிக் பாகனிய ஹெர்மிஸ், எகிப்திய நாகரீகத்தின் நூபிய மின் வழிபாடு, சுமேரிய தம்மூஸ் (இந்திரன் போல) என தொடர்ந்தால் கலாச்சார அடிநாதமான proto civilization காலத்திய காரஹான் டெப்பேவில் விரைத்த லிங்கத்தை ஏந்திய கந்து மேல் நிறுவப்பட்ட சிற்பம் வரை நாம் செல்லலாம்.

காரஹான் டெப்பே, துருக்கி (மெசபடோமியா)யில் கந்தின் மீது நிறுவப்பட்டுள்ள லிங்கம் ஏந்திய குடித்தலைவன் அல்லது வேந்தன், உடன் லிங்கம். காலம் (கிமு 11,500). கடம்பூரின் சிற்பமும், காரஹான் டெப்பேவின் சிற்பத்திற்கும் இடையில் 13,500 வருட இடைவெளி இருக்கிறது.

Ontologist ஆன pre socratarien Parmenides of Elea சொல்வது போல “truth, describes how all reality is one, change is impossible, and existence is timeless and uniform.“ உண்மை கால நேர வர்த்தமானங்கள் தாண்டியும் நிலை பெறக்கூடியதும் மாறாததும் ஆகும். மானுட பண்பாட்டின் மேன்மை கூறுகள், கருத்துருவங்கள் proto civilization காலத்திலேயே தோன்றி விட்டன. அதன் சிறிய அளவிலான அளவு மாற்றம், பண்பு மாற்றங்களை மட்டுமே நாம் காண்கிறோம்.

மரபின் தொடர்ச்சி அறுபடவே இல்லை. புவி எல்லைகள், வேறுபட்ட தட்ப வெப்பம், வேறு வேறு நாகரீகங்கள், பண்பாடுகள் என்றாலும் அந்த தொடர்ச்சி, சில தத்துவார்த்த மாற்றங்கள் உதாரணமாக தொன்மங்களில் இருக்கும் வளக்கடவுள்கள் முதலில் ஏந்திய லிங்கத்தோடு இருக்கிறார்கள். பின்பு உப நிஷத காலத்திய தத்துவார்த்த விவாதங்களுக்கு பிறகு விரைத்த லிங்கம், ரேதஸ் ஆக மேல் நோக்கிய குறியாக யோக ஆன்மீக குறியீடாக மாறுகிறது. தாருகாவனத்து ரிஷிகளுக்கு மெய்மையை உணர்த்த செல்லும் பிட்சாடனர் விரைத்த குறியோடும், இசையோடும் செல்பவர். பின்னர் யோக நிலையில் ரேதஸோடு கூடிய லகுலீசராக மாறுகிறார். கிராத சிவன், யோக லகுலீசராக பரிணாமம் கொள்கிறார்.

குடிமல்லம் லிங்கம் வளச்சடங்கின் ஒரு பகுதி எனக்கொண்டால் ஊர்த்துவ ரேதஸோடு கூடிய காயரோகணேஸ்வர லகுலீசர் யோக நிலையின் உச்சமாக இருக்கிறார். கிழக்கத்திய நாகரீகம் வளச்சடங்கு, போகத்தை யோகமாக மாற்றி விட்டது. காமத்திலிருந்து கடவுளுக்கு, போகத்திலிருந்து யோகத்திற்கு…


ஆண் பெண் இணைவை வளத்திற்கான அடித்தளம் என்பதிலிருந்து யோக சாதனைகளுக்கான இணைவாக பிரபஞ்ச உற்பத்தி என்பதிலிருந்து முற்றறிந்த ஆன்ம சாதக நிலையாக மாற்றி இருக்கிறது. அதோடு தொன்மையான fertility custom உடைய அதே சிற்பத்தையும் டெரக்கோட்டோ வடிவில் நம் சமயத்தில் உள் நிலை நிறுத்தி இருக்கிறது.

கந்தின் மீதான குறி ஏந்திய தலைவனின் சிற்பம், எகிப்திய மின் கடவுள் முதல் ஹெலனிக் பாகனிய ஹெர்மிஸ், மெசபடோமிய தம்மூஸ் க்கெல்லாமும் இருக்கிறது. இதன் பழங்குடி கதையாடலில் இரண்டு பெரும் பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று போருக்கு சென்று வீரர்கள் முழுமையாக திரும்ப வேண்டும். குடிப்பெண்கள் குழுவின் தகுதியுள்ள ஆண்மகனோடு கூடி திறனுள்ள மகவுகளை ஈண வேண்டிய பிரார்த்தனை.

அது வேந்தனான இந்திரனை நோக்கி என ஒரு கதையாடல். வளச்சடங்கின் ஒரு பகுதியாக விரைத்த குறியோடு கூடிய வேந்தனுக்கான நிவந்தம்.

இப்போதும் நாம் வேள்வி சாலையில் கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்படும் இறை ரூபங்கள் கும்பத்தில் எழுந்தருளி அவியை ஏற்பது போல வேந்தனுக்கான இந்த சுடுமண் சிற்பங்களில் இந்திரன் திகழ்கிறான்.

மலை, மழை, ஆறு, விளைச்சலின் தெய்வமாக முதலில் இந்திரனே இருக்கிறான். கிருஷ்ணனின் எழுச்சியே இந்திர வழிபாடு வேண்டாம் என சொல்லி மந்திர மலையை குடையாக்கி ஆநிரைகளையும் மக்களையும் மடை மாற்றும் நிகழ்வின் பின் தொடர்ச்சி, தான் இச்சிற்பம் என கொள்ளலாம். வைஷ்ணவ எழுச்சிக்கு பிறகும் இந்திர வழிபாடு அங்காங்கே இருந்திருப்பதை ஊகிக்க சாத்தியம் இருக்கிறது.

ஸ்லாஷ் அண்ட் பர்ன் முறை விவசாயத்தில் மாபெரும் பூதி மேடுகள், அருகில் இருக்கும் கந்து வழிபாடு, சிவனின் காளை விவசாய அடிப்படை அலகு, புலி, பாம்பை அடக்கி வேளாண்மைக்கு உதவும் ஆரம்ப ருத்ரன் பின்னர் தத்துவார்த்த சிவனாக ஆகும் போது வளம், விருத்தி, விளைச்சல் எல்லாம் பின்னால் போய் யோக படி நிலை, தந்திரா ஆன்மீகம், வீடு பேறுக்கான குறியீடாக பின்னர் லிங்கம் மாறி விட்டது. (https://www.wisdomlib.org/definition/urdhvaretas)

வேதத்தில் முதன்மை பாடு பொருளாக இருக்கும் இந்திரன், அக்னி, சூரியன், வர்ணன், ருத்ரன் ஆகியோர், சைவ, வைணவ தத்துவார்த்தங்களின் ஒரு பகுதியாக மாறினர். ஸ்டெல்லா க்ராம்ரீச் முதலான ஜெர்மானிய இந்தியவியலாளர்களும், பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களும். சூரியன், முருகன், சிவன் எல்லாம் வெவ்வேறு ரூபங்களில் இருந்து ஒன்றாக கலந்து விட்டன என சொல்கிறார்கள். கந்து வழிபாடு வெறும் வளச்சடங்கு மட்டுமல்ல அது ஒரு இறை வழிபாடு. எகிப்திய, கெல்டிக், அக்கேடிய வழிபாடுகளை ஆய்வு செய்யும் பண்பாட்டு மானுடவியலாளர்கள் சொல்கிறார்கள்.

கிழக்கத்திய சமயங்கள், வளக்குறியீடாக இருந்த லிங்க ரூபத்தை ஆன்மீகவயமாக, தத்துவார்த்தமாக வளர்த்து குண்டலினி முதல் ஊர்த்துவ ரேதஸ் வரையிலான யோக சிந்தனையாக மறு புனைவு செய்திருக்கிறது. மேற்கத்திய சமயங்களில் இந்த கந்து வழிபாடு, லிங்க வழிபாடு பாகனிய குறியீடாகவும், proto civilzational symbol ஆக மட்டும் கருத்துருவம் பெற்றிருக்கிறது. வளக்குறியீடுகள், அதன் தொன்மப்புனைவுகள் masculinity, feminity கருத்து சிறைகளில் இருந்தே முன்னேறி வந்ததாக தெரியவில்லை. அல் உஸையும், அல்மனஸிம், இனைனாவும், ஆதித்யர்களாகவும், தம்முஸ்களாகவும், ஹெர்மிஸாகவும், ஜீயஸாகவும் மாறுகிறார்கள்.

11,000 ஆண்டுகளுக்கு முன் தொல் மானிடர்கள் வழிபட்டு வந்த லிங்க வடிவங்கள், துருக்கியில் இருக்கும் தொன்மையான கோபெக்லி டெப்பே மற்றும் அதன் இணை இரட்டையான காரஹான் டெப்பேயில் ரேதஸோடு கூடிய குடித்தலைவன், அல்லது பூசகரின் சிற்பம், அதன் பின்னர் சிந்து சரஸ்வதி நாகரீக பகுதிகளில் கண்டறியப்பட்ட கந்து வழிபாடு, இன்றும் வழிபாட்டில் உள்ள ஊர் மன்றில் உள்ள கந்துகள், லிங்கங்கள், தத்துவார்த்தமான ரேதஸோடு இருக்கும் லகுலீசரின் சிற்பங்கள் என்ற பாய்ச்சல் இருந்தாலும் அதன் துவக்கப்புள்ளியையும் தன்னகத்தே இருத்தி இருக்கும் குறி ஏந்திய வேந்தன் பற்றிய மற்றொரு கதையாடல்…

பழங்குடி வாய்மொழி கதையில் ஒரு குடிச்சமூகம் போருக்கெழுகிறது. இந்திரனுக்கான வழிபாட்டை புறக்கணித்து போர் புரிய சென்றதில் அந்த குடியின் அனைத்து ஆண் மகன்களும் களம்பட்டு விடுகிறார்கள். எதிர்க்குடிகளின் கொடூர தண்டனைக்கு பயந்து தங்கள் குடியை மாற்றிக்கொண்டு செல்லும் பெண்கள் நிரை வேறு வழியின்றி இந்த இரண்டு குறிகளையும் தங்களோடு கூட்டி செல்கிறார்கள். குடியில் போருக்கு செல்ல வாய்ப்பில்லாத ஒரு பார்வை சவால் மிக்க நடுவயதினனும், பிறவியிலேயே கால், கை ஊனமான நுடவாண்டி ஒருவனுமே மீதம் இருக்கிறார்கள்.

அந்த குடியில் இருக்கும்  ஆயிரம் பருவம் எய்திய பெதும்பை முதல் மங்கை மடந்தை, பேரிளம் பெண் வரையில் காமம் துய்க்க இரு திறன் சவால் கொண்ட ஆண்கள் மட்டுமே இருக்கிறார்கள். முதலில் இந்த இருவரையும் உதாசீனம் செய்த பெண்கள் புது நிலம், பருவம் மற்றும் இயற்கையின் உந்துதலால் இரண்டு ஆண்களையும் மாறி மாறி துய்க்கிறார்கள். அவர்கள் மூலம் கருவுற்ற பெண்கள் குழந்தைகளை ஈனுகிறார்கள். ஊர் ஊராக உயிரை கையில் பிடித்து கொண்டு குடி பெயர்ந்து வாழும் சமூகத்திற்கு ஊனமுற்ற குடிகள் ஒரு பெரிய டெட் ஸ்டாக்.

பார்வை குறைவுள்ளவன் ஒரு வகையான காம விற்பன்னனாகவும், உடல் ஊனமுற்றவன் வேறு வகை காம விற்பன்னனாகவும் இருந்தாலுமே முழுமையான ஆரோக்கியமான ஆணுக்காக சமூகமே காத்திருக்கிறது. அதன் பின்னர் இந்திரனுக்கான விழவில், கொடையில் எந்த சுணக்கமும் இல்லை. அப்படியான ஒரு சடங்கின் பகுதியாக கூட இந்த சிலை இருக்க வாய்ப்பிருக்கிறது.

நம் தொல் தெய்வமான இந்திரனை யோனி பூஜையில் வழிபடும் நடைமுறை இருந்திருக்கலாம். ஆயிரம் யோனியாய் மாறிய இந்திரனின் சாபத்தை நினைவில் கொள்க. விரைத்த குறியோடு பிரார்த்தனையை கேட்கும் இந்த சிற்பம் நாம் அறியாத தொல் பழங்குடிகளின் வாழ்க்கையை நமக்கு வெளிச்சமிடும் ஒரு துப்பாக இருக்கலாம்.

மூக்கறுப்பு மற்றும் புடுக்கறுப்பு தண்டனைகள், போரில் தோல்வியுறுற்ற எதிர் குடி வீரர்களின் மூக்கறுத்தல், அவர் குடி பெண்டிரின் முலை அரிதல், ஆண்குறி அரிதல், மண்டை ஓடை மாலையாக அணிதல் எல்லாம் பழங்குடி போரில் சாதாரணமான செயலாக இருந்திருக்கிறது.

உறுப்புகளை குல தெய்வங்கள் குடி தெய்வங்களுக்கு காணிக்கையாக ஆக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. மணச்ச நல்லூர் சாஸ்தா, சமயபுரம் மாரியம்மன், முத்தாரம்மன், மாயாண்டி சாமி ஆகிய தெய்வங்களுக்கு மண்ணால் ஆன கண், மூக்கு, முலை, நாக்கு ஆகியவைகளை உண்டியலில் போடும் வழக்கம் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இவை எல்லாவற்றின் மூலம் பழங்குடி போர் மன நிலையில் இருந்து துவங்குகிறது.

இந்த போரில் நானோ என் குடியோ எந்த உடல் உறுப்பு சேதாரமும் இல்லாமல் வந்தால் அன்னையே, அப்பனே கண் உருவமோ, மண் உருவமோ உனக்கு படைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு போருக்கெழுவதை ஒரு பிரார்த்தனையாக செய்திருப்பார்கள். அதன் பின் தொடர்ச்சியை தான் நாம் இப்போது பார்க்கிறோம்.

இது போன்ற காணிக்கைகள் contagious magic எனும் தொற்று மந்திரங்கள் எனும் தத்துவம் வழியாக விளக்கப்படுகிறது. ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் உறவு கொள்ளும் போது அப்பொருளின் தன்மை கடத்தப்பட்டு மூலப்பொருளின் தன்மையை அடைகிறது.

இப்போதும் கூட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தலையை சுற்றி திருஷ்டி கழிப்பது இந்த மந்திரச்சடங்கின் பின் தொடர்ச்சி தான். குழந்தைகள் மீதான தீய கண்பார்வை, பொறாமைகள், ஏக்கங்கள் சூட்சும வடிவில் பின் தொடர்வதை திருஷ்டி பரிகாரம் நீக்குவதாக நம்பப்படுகிறது. கண் வலி வந்தால் குணமாக கண் மலர் செய்து மந்திரம் ஜெபித்து இறைவனுக்கு காணிக்கையாக்கினால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை.

ஆரம்பகாலங்களில் மாடு கன்றுக்குட்டி போட்டால் அதன் நச்சுக்கொடியை ஆலமரம், அரசமரம் போன்ற பால் சுரக்கும் மரங்களில் கட்டுவது வழக்கமாக இருந்தது. பால் உள்ள மரங்களில் நச்சுக்கொடியைக் கட்டினால் பசு நன்றாக பால் சுரக்கும் என்று நம்பினார்கள்.

குழந்தை இல்லாதவர்கள், குழந்தை பிறந்தால் அதைக் கோயிலுக்குத் தத்துக் கொடுப்பதாக வேண்டிக்கொள்ளும் பழக்கம் இன்றைக்கும் சில கிராமங்களில் உண்டு. குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்குப் பதிலாக சுடு மண்ணால் ஆன பொம்மைகளை கோயிலுக்குத் தத்துக் கொடுப்பார்கள். இதற்கு ‘உருவம் நேர்ந்துவிடுதல்’ என்று பெயர்.

இது காலம் காலமாகப்  பின்பற்றப்பட்டுவரும் ஒரு நம்பிக்கை சார்ந்த பழக்கம். அதைப் போன்றதுதான் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கமும். உறுப்புகளில் ஏதாவது பாதிப்பிருந்தால், அந்த பாதிப்பை இந்த உருவங்களின் மூலமாகக் கடத்தி இறைவனின் காலடியில் சமர்ப்பித்தால் குணமாகும் என்பது நம்பிக்கை.

விரைத்த ஆண்குறியோடு இருக்கும் சிற்பம் தொல் வரலாற்று காலம் முதல் நவீன காலம் வரையிலான தொடர்ச்சியை நாம் சில நடைமுறை உதாரணங்களோடு அணுகி அறிவோம். கடம்பூர் கம்பட்ட ராயன்கிரி அடிவாரத்தில் அங்காளம்மை ஆலயத்திற்கு பின்னால் சீர் செய்து செதுக்கப்பட்ட தாடியோடு விரிந்த கண்களோடும், அலர்ந்த சிரிப்போடும், வளமான தொந்தியோடும், விரைத்த ஆண்குறியை கையில் ஏந்திக்கொண்டிருக்கும் 2’6” அடி சுடுமண் சிற்பம் (டெரக்கோட்டா) காணக்கிடைக்கிறது. சுடுமண் சிற்பத்தின் காலம் அறிய முடியவில்லை. ஆனால் இதன் கலாச்சார வேர் நிலை கொண்டிருப்பது தொல் குடி சமூகங்களின் துவக்க காலம் முதல் இன்று வரை அறுபடாமல் வந்து கொண்டிருக்கிறது. இந்த தொடர்ச்சி எப்படி தத்துவமயமாக்கப்பட்டு நம் சமயங்களில், அன்றாடங்களில், பிரார்த்தனைகளில் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

சுடுமண் சிற்பம் ஒரு கந்து மீது நாட்டப்பட்டிருக்கிறது. கந்து வழிபாடு கல்லாக பரிணமிப்பது பெருங்கற்கால துவக்கத்தில் தான். பெருங்கற்காலத்திற்கு முந்தைய தொல் பழங்காலத்தில் கந்து வழிபாடு மரத்தூர், அல்லது மரத்தின் அடித்தூரையே கந்தாக வழிபட்டு வந்த மரபு நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கும் தொன்மையான நாகரீகங்கள் அனைத்திலும் உள்ள வழமை தான்.

கந்து என்றாலே மரத்தின் விரிந்த அடித்தூண் தான். இன்றும் பல மாரியம்மன் ஆலயங்களில் வேம்பு, ஆலை சுற்றி மஞ்சள் பூசி அடிமரத்திற்கு பூசனைகள் செய்வதை பார்க்கலாம். இதன் பண்பாட்டு வேர் தொன்மையான கந்து வழிபாட்டில் இருக்கிறது. சங்கப்பாடல்களில் பல இடங்களில் கந்து வழிபாடு தொடர்பான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்.. அகநானூறு/309 (தெய்வம் வாழும் பருத்த அடிமரத்தை உடைய வேப்பமரம்)

“கடவுள் மரத்த முள்மிடைக் குடம்பை…” அகநானூறு/270 (கடவுள் உறையும் மரத்தின்கண் முள்ளால் கட்டப்பெற்ற கூடு)

“கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய..” நற்றிணை/83 (பெருங்கடவுள் தங்கியுறையும் பழைய மரம்)

“மரைஏறு சொறிந்த மாத்தாட் கந்தின்…” அகநானூறு/287 (ஆண்மான் தனது தினவு தீர்வதற்கு உராய்ந்தமையால் அசையும் தன்மையுடைய கரியநிற அடியினைக் கொண்ட கந்தினையுடைய மரம்)

கந்து வழிபாடு பற்றி நம் தளத்திலேயே விரிவாக ஜெ விளக்கி இருக்கிறார். இதற்கு முன்பான வள சடங்குகள் அது தொடர்பான பல்வேறு பண்பாடுகளில் இருக்கும் நடைமுறைகளை பார்ப்போம்.

விரைத்த லிங்கம் பற்றிய புகழ் பெற்ற வரலாற்று நிகழ்வு பண்டைய கிரேக்கத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தெருமுனையிலும் வளக்கடவுளான ஹெர்மீஸின் அருள் கிட்டுவதற்கும் பெருகும் வளத்திற்காகவும் விரைத்த லிங்கத்தை வீடுகள் முன்பும், சதுக்கங்களிலும் நிறுவும் வழக்கம் இருந்தது. கிமு 415 ல்  சிசிலிக்கு எதிராக ஏதெனியர்கள் படை நடத்தி செல்லும் முன் ஹெர்மிஸ்க்கு உரிய படையலை செய்யாமல் நகர்கிறார்கள். இரவில் நகர் முழுக்க இருக்கும் லிங்கங்கள் சிதைக்கப்படுகின்றன.  படை நகர்வில் உள்ள வீரர்களுக்கு விரைப்பு நீங்கிய குறி கனவில் வருகிறது. இது ஹெர்மிஸின் சாபம் என்ற நம்பிக்கை, அந்த போரில் எதென்ஸ் முற்றிலும் வீழ்ந்து ஸ்பார்ட்டான்களிடம் தோல்வியை தழுவியது.

ஹெலனிக் கிரேக்கத்தில் நீத்தாரின் அருள் வேண்டி நீத்தாருக்கான ஹெர்ம் நிறுவப்பட்டு வழிபடப்படும். முகமும் குறியும் மட்டும் கொண்ட பலகை ஒரு கந்தின் மீது நிறுவப்படுவது ஹெர்ம். அக்கேடிய நாகரீகத்திலும் இதே போல ஹெர்ம் நிறுவப்படும்.

எகிப்தின் கிழக்கில் நூபிய தொன்மங்களின் முக்கியமான தெய்வம் மின். மின் வழிபாடு இந்திர வழிபாடு போன்றது. மின் கடவுள் வளம், பயிர் செழிப்பு, வேட்டையில் வெற்றி, ஆண்மை, புலனின்பம் ஆகியவற்றின் கடவுள். பேரரசுகளுக்கு முந்தைய கால கடவுளான மின் வழிபாடு நீண்ட காலம் இருந்தது.  ஐசிஸின் மகனான மின் பாதுகாவலனாகவும், வீர்யம், உடல் உறுதி ஆகியவற்றின் கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. காளையை வாகனமாகவும், பிறை நிலவை துணை தெய்வமாகவும் கொண்ட, பாதாள நாகங்களின் தலைவனாக இருக்கும் மின் விரைத்த குறியோடு காட்சி அளிக்கும்.

மின் கடவுளுக்கு நன்றி செலுத்த விளைந்த நிலத்தின் முன் திசைகளை மட்டுமே ஆடையாக உடுத்தி களி திருவிழாவை நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள். இது பற்றிய ஒவியங்கள் மெடினத் அபு ஆலயத்திலும் ராம்சேவின் மார்ச்சுவாரி ஆலயத்திலும் இருக்கிறது. தமிழகத்தில் போகி பண்டிகை எப்படி இந்திரனுக்கு நன்றி சொல்ல பூக்கொத்துகள், வைத்து வழிபடப்படுகிறதோ அதே போல நன்றி சொல்ல மின் பண்டிகை எகிப்திலும், நூபிய பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்திரன் ஸோமன் ஆகியோரின் கலவையாக மின் கடவுளும் அதன் வழிபாடும் 3000 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.

மின் கடவுளின் விரைத்த லிங்கத்தை தொட்டு வழிபடும் பெண்கள் சீக்கிரம் பேறு பெறுவார்கள் என்பது இன்று வரை தொடரும் நம்பிக்கை.

இந்த வளச்சடங்குகள், வழிபாடுகள், கந்து, லிங்க வழிபாடு எல்லாம் அநாதி காலம் தொட்டு நாம் அறிந்தும் அறியாமலும் வழிபட்டுக்கொண்டே இருக்கிறோம். நவீன காலத்தில் தென்படும் கொடிமரம், உயர்ந்த கட்டிடங்கள், எகிப்திய ஓப்ளிஷ்கள், ஹெர்ம், லிங்க வழிபாடு இவை எல்லாவற்றின் கலாச்சார மூலம் மானுட பண்பாடு வரலாற்று ரீதியான தன்னுணர்வு பெறுவதற்கு பலகாலம் முன்பிருந்தே தொடர்ந்து வரும் ஒரு கருத்தாக்கம் .  மானுட நாகரீகத்தின் தொல் வழிபாட்டிடமாக இருக்கும் கோபெக்லி டெப்பேவின் இணை இரட்டை ஆலயமாக இருக்கும் காரஹான் டெப்பே வில் வழிபாட்டில் இருந்த குறி ஏந்திய வேந்தன் சிற்பமும் அதிலிருந்து பல்லாயிரம் மைல் தள்ளி இருக்கும் கடம்பூர் கம்பட்ட ராயன் கிரியில் இருக்கும் குறி ஏந்திய வேந்தன் சிற்பமும் ஒரே சிந்தனையின் தொடர்ச்சி.

வழிபாடு, பண்பாடு, நாகரீகம், மந்திரம், சடங்குகள் இவைகளின் பண்பாட்டு மூலம் புவியியல், ஸ்தூல எல்லைகளுக்கு அப்பால் ஒற்றை பரப்பிலிருந்து வந்தது என்ற சிந்தனை எப்படி ஒரு அதிர்வையும் பரவசத்தையும் அளிக்கிறது. கடம்பூருக்கும் காரஹான் டெப்பேவிற்கும் இடையே புவி தொலைவு, கால இடைவெளி ஆகியவைகள் விலகி பேருண்மையின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.   நாயின்  பாதங்களும், விஷ்ணுவின் பாத கமலங்களும் ஒன்று தான் என்ற  வேதாந்த உண்மையின் ஸ்தூல சாட்சிகளை ஒருங்கே காணும் பேரதிர்வு.

ராஜமாணிக்கம்

முந்தைய கட்டுரைTiger’s Claw
அடுத்த கட்டுரைபடுகளம், கடிதங்கள்