அன்புள்ள ஜெ.,
மனதில் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கும் ‘பனிவிழும் மலர்வனம்’ பாடல் குறித்து உங்கள் ‘ஏழாம் உலகம்’ நாவலில் சொல்வீர்கள் ‘என்ன ஏவல் மாதிரி வந்துக்கிட்டே இருக்கு’ என்று. அதுபோல ஒரு பாடல்தான் ‘நானன்றி யார் வருவார்’. படம்: மாலையிட்ட மங்கை (1958), பாடியவர்கள்: டி ஆர். மகாலிங்கம், ஏ.பி.கோமளா அதேபடத்தில் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ (உச்சஸ்தாயியில் பாடும்போது மூச்சு,குரல், ஸ்வரத்தின் மீதான ஒரு பாடகரின் கட்டுப்பாட்டை நிரூபிக்க இன்றும் ‘ரியாலிட்டி ஷோ’ க்களில் பாடப்படும் பாடல்) போல மூச்சை நிறுத்தும் ஒரு பாடலைப்பாடிய மகாலிங்கமா இது என்று இப்போது கேட்டாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஷாஜி எழுதிய இசைக்கட்டுரை ஒன்றில் ‘அகத்தியர்’ படத்தில் டி ஆர்.மகாலிங்கம் பாடிய ஒரு பாடலைப் பற்றிச் சொல்லும்போது ‘பாடலினூடே மிதந்து செல்வார் மகாலிங்கம்’ என்று எழுதியிருப்பார். இந்தப்பாடலினூடே வழிந்து செல்கிறார்.
‘நானன்றி யார் வருவார்’. படம்: மாலையிட்ட மங்கை, பாடியவர்கள்: டி ஆர். மகாலிங்கம், ஏ.பி.கோமளா
ஒருநாள் தூங்குவதற்கு முன்பு இந்தப்பாடலைக் கேட்டபின்பு மெதுவாகப் பாடிப்பார்த்தேன். ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ போல இல்லாமல் (நன்றாக வாய்விட்டு சிரிக்கவேண்டுமென்று நினைப்பவர்கள் மட்டும் ‘மணம்பெறுமோ வாழ்வே’க்கு பிறகு இவர் பாடுகிற சங்கதியை கண்ணாடி முன்னால் நின்று பாடிப்பார்க்கவும்) எளிதாகப் பாடமுடிந்தது. மறுபடியும் பாடினேன். மறுபடியும்..மறுபடியும்… பின் தொண்டை களைப்படைய, மகரக் கம்மலில் தொண்டைக்குள் எனக்குமட்டும் கேட்பது போல. படுத்தபிறகும் தூக்கம் வராமல் புரண்டுகொண்டே இருந்தேன், மனதுக்குள் பாடிக்கொண்டே. நடுஇரவில் ஒருமுறை ‘இதழ் கோஓ …வை என நினைத்துக் கொண்ட….தோஓஓ …’ என்று வாய்விட்டே பாடிவிட்டேன். நல்லவேளையாக யாரும் எழுந்திருக்கவில்லை. ஒருவேளை வாய்விட்டு முழுப்பாட்டையும் பாடினால் போய்விடுமோ? மெதுவாக எழுந்து அடுத்த அறைக்குச் சென்று முதலிலிருந்து மற்றவர்களை எழுப்பாத சத்தத்தில் வாய்விட்டு முழுப்பாடலையும் ஒருமுறை பாடினேன். மீண்டும் ஒருமுறை. பிரயோசனமில்லை. தொடர் ஒலிபரப்பு ஓய்வதாகத் தெரியவில்லை. மகரக் குறுக்கத்தில் பாடிக்கொண்டே எப்படியோ சிறிதுநேரம் தூங்கி எழுந்தேன். இந்த ஏவல் பாடல்களின் இயல்பு என்னவென்றால் ஒலிபரப்பு அன்றோடு முடிந்துவிடும். மறுநாள் தொடராது. ஆனால் மறுநாள் காலை எழுந்தவுடன் திரும்பவும் ‘வண்ணப்பாஆ…வை உந்தன் இதழ் கோஓ…வை தன்னி..ல்’. அலுவலகத்தில் குறைந்தது ஒரு நூறுமுறை. ஒரு வழியாக மூன்றாம் நாளோடு ஒலிபரப்பு நிறைவடைந்தது. ஆச்சரியம்.. அதன்பின் இந்தப் பாடல் மறுஒலிபரப்பு செய்யப்படவே இல்லை.
(‘நானன்றி யார் வருவார்’ குறித்து எம்.எஸ்.வி. மற்றும் இசைக்கலைஞர் மதுரை ஜி.எஸ்.மணி)
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் ஆரம்பத்தில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்காக வந்த டி ஆர்.மகாலிங்கத்தை தாசில்தார் ‘சேம்பரி’ல் அலுவலக ஊழியர்கள் சந்தித்தபோது என் அம்மா தனக்குப் பிடித்த இந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்க ‘இங்க வேண்டாமே’ என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டாராம் மகாலிங்கம். ஆச்சரியமாக ஷாஜியின் கட்டுரையில் கூட இந்தப் பாடலைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விரிவான ஸ்வரப்ரஸ்தாரங்களோ, கடினமான சங்கதிகளோ இல்லாத எளிமையான பாடல்தான். ஆனால் பாடலை அழகாக்குபவை அந்த பிருகாக்கள். பாஆ…வை, கோஓ..வை, காஆ..யம், மாஆ..யம் என்று அசைத்துப்பாடி இனிமையையும் குழைவையும் வார்த்தைகள்தோறும் அள்ளிப் பூசியிருப்பார்கள் டி.ஆர்.மகாலிங்கமும் ஏ.பி.கோமளாவும்.
தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம். மதுரை மாவட்டம் சோழவந்தான் (சோழன் உவந்தான் – சோழ நாட்டையே போலிருந்த நெல் வயல்களைக்கண்டு) அருகில் ஓடும் வைகையாற்றின் தென்கரையில் உள்ள கிராமம் தென்கரை. படிப்பு வராவிட்டாலும் இசையில் மழலை மேதையாக இருந்தார் மகாலிங்கம். சேஷய்யங்காரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டு அவர் பஜனைகளிலே பாடிக்கொண்டிருந்தபோது மகாலிங்கத்திற்கு ஐந்து வயது. பன்னிரண்டு வயதிலேயே ‘பாய்ஸ்’ கம்பெனியின் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கும் அந்தஸ்தை அடைந்துவிட்டிருந்தார். ஒலிபெருக்கி இல்லாத அந்தக் காலத்தில் நாள்தோறும் மேடை மேடையாக உச்சஸ்தாயியில் கத்திப் பாடுவது எத்தகைய உழைப்பைக் கோருவது என்பதை இன்றைய உலகத்தில் இருக்கும் நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது. உச்ச ஸ்தாயியில் பாடுவதில் நாடகமேதை எஸ்.ஜி.கிட்டப்பாவின் நீட்சியாகத் தன்னை அறிவித்துக்கொண்டார் டி.ஆர். மகாலிங்கம். எஸ்.ஜி. கிட்டப்பா இறந்து பல ஆண்டுகளுக்குப்பின்னும் பட்டிதொட்டியெங்கும் அவர் குரலை ஒலிக்கச்செய்தார்.
மகாலிங்கத்தின் பாட்டில் மயங்கிப்போன ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஏ.வி.எம்மின் தாய் நிறுவனமான பிரகதி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘நந்தகுமா’ரில் (1937) இவரை அறிமுகப்படுத்தினார். மகாலிங்கத்திற்கு பாதாம் அல்வா என்றால் உயிர். ‘அம்பி இந்த ஷாட்ட ‘கரெக்ட்’ ஆ முடிச்சுட்டேன்னா சுடச்சுட பாதாம் அல்வா, என்ன சொல்ற?’ என்றே ‘ஷூட்டிங்’கில் வேலை வாங்கி விடுவாராம் மெய்யப்பச்செட்டியார். அதே ஏ.வி.எம். தயாரித்த ‘ஸ்ரீவள்ளி’ (1945) யில் எஸ்.ஜி. கிட்டப்பாவின் ‘காயாத கானகத்தே’, ‘எல்லோரையும் போலவே என்னை..’ போன்ற பாடல்களைப் பாடி நடித்து பெரும் புகழ் பெற்றார். அமுதவல்லியில் ‘ஆடை கட்டி வந்த நிலவோ..’ திருவிளையாடலில் ‘இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை..’, அகத்தியரில் ‘ஆண்டவன் தரிசனமே..’, ராஜராஜ சோழனில் ‘தென்றலோடு உடன்பிறந்தாள்…’ (சிவாஜி பாட்டுப்படிக்க, இவர் பாடியிருப்பார்) என்று இவரைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச்சென்ற எத்தனையோ பாடல்கள்.
‘அந்தக்கால சென்னைப் பிரமுகர்கள்’ என்று எண்பதுகளின் ஆரம்பத்தில் தினமணிக் கதிரில் ரகமி எழுதிய ஒரு தொடர் வந்துகொண்டிருந்தது. அதில் டி.ஆர்.மகாலிங்கத்தைப் பற்றி எழுதும்போது கூறுகிறார் ‘டி.ஆர்.மகாலிங்கத்திடம் இல்லாத வெளிநாட்டுக் கார்களே இல்லை’ என்று. ஆனால், 1950-55க்கிடையே தன்மகனின் பெயரில் திரைப்படக்கம்பெனி ஆரம்பித்து ஐந்து படங்களைத் தயாரித்து (ஒருபடத்தின்பெயர் தெருப்பாடகன்) தன் அனைத்து சொத்துக்களையும் இழந்து சொந்தஊர் வந்துசேர்ந்தார். தொடர்தோல்விகளால் துவண்டு போயிருந்த கண்ணதாசன் இவரை வைத்துத் தயாரித்து இருவருக்குமே வாழ்வளித்த படம்தான் ‘மாலையிட்ட மங்கை'(1958). இத்தனைக்கும் பாடல்களுக்கான முக்கியத்துவம் ஒழிந்து வசனத்திற்கு முக்கியத்துவம் தரும் பராசக்தி(1952), மனோகரா(1954) போன்ற படங்களுக்குப் பிறகுவந்து பாடல்களாலேயே வெற்றிபெற்றது ‘மாலையிட்ட மங்கை’. படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் டி ஆர்.மகாலிங்கத்திற்கு கார் பரிசளித்தார் கண்ணதாசன். தொடர்ந்து படங்களில் நடித்தார். ஆனால் பெரியவெற்றிகளைப் பெறவில்லை. எதனாலோ இவர் மற்றவர்களுக்குப் பின்னணி பாடுவதை விரும்பவில்லை. தன் வயதுக்குப் பொருத்தமான, பாடலுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்தார். ஆனால் கடைசிவரை நாடகத்தை இவரும், இவரை நாடகமும் கைவிடவில்லை. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கிராமம்தோறும் வேடனாகவும் விருத்தனாகவும் மாறி மாறி வள்ளியைப் பார்த்து கடைசிவரை பாடிக்கொண்டே இருந்தார். விருத்தனாகும் முன்பே ஐம்பத்திநாலு வயதிலேயே உயிர் நீத்தார். இது டி ஆர். மகாலிங்கம் பிறந்த நூறாவது ஆண்டு.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்