காலையில் நான் கண்விழித்தபோதே சந்திராவின் குரலைக் கேட்டேன். அரைத்தூக்கத்தின் மயக்கத்தில் அது கனவா என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்பு அவள்தான் என்று தெரிந்ததும் எழுந்து அமர்ந்துகொண்டு அப்படியே இருந்தேன். கதவை மெல்லத்திறந்து சந்திரா ”குட்மார்னிங்’ என்றாள்.
சந்திராவின் முகத்தைக் கண்டு அஞ்சினேன். ஏனென்றால் அவள் புத்தம்புதிதாக, கள்ளமே இல்லாத சிரிப்புடன் இருந்தாள். இளம் அம்மா தன் வால்பையனிடம் பேசுவது போன்ற பாவனை.
நான் மெல்லிய புன்னகையுடன் ”குட்மார்னிங்” என்றேன், போர்வைக்குள் கையை விட்டு லுங்கியை இடுப்புக்கு ஏற்றிக் கொண்டேன்
”மணி எட்டு… இப்பதான் எந்திரிக்கிறதா? உனக்கு வேலை வெட்டி ஒண்ணுமே கெடையாதுன்னு நெனைக்கிறேன்…”
”போகணும்” என்றேன், கண்களைச் சரித்து.
சிரித்தபடி என் போர்வையை இழுத்து, ”சீ எந்திரிடா… முழிக்கிறான் பாரு”என்றாள்
நான் போர்வையைப் பற்றிக்கொண்டேன்.
சந்திரா முகம் மாறி மெல்லிய கனத்த குரலில் ”நான் உன்னை ராத்திரி முழுக்க கூப்பிட்டுட்டே இருந்தேன்…” என்றாள்
”நான்…”
”வேண்டாம்…” என்றபின் உரக்க ”சீக்கிரம் வாடா… ஒருவேலை இருக்கு” என்றபின் வெளியே சென்றாள். அவளாக வேடமிட்டு வந்த இன்னொருத்தி என்னிடம் வந்து பேசிவிட்டுச் சென்றது போலிருந்தது.
நான் வெளியே வந்தேன். வாஷ் பேசினில் முகம் கழுவும்போது கண்ணாடிக்குள் சமையலறையில் இருந்து வந்த அம்மா என்னிடம் ”என்னமோ லாயரைப் பாக்கணும், நீ கூடவந்தா நல்லாருக்கும்னு சொல்றாடா..போய்ட்டு வா” என்றாள்.
”லாயரா எதுக்கு?” என்றேன் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி.
”குமாரோட சில பிராப்பர்டீஸ் மேல ஏதோ கிளெய்ம் இருக்காம்.. என்ன சொல்றார்னே புரியல்லை… நீ கூடவந்தா தெளிவா பேசிடலாம்” என்றாள்.
அம்மா காபியை மேஜைமேல் வைத்தாள். நான் ஹிண்டுவை எடுத்தேன். சந்திரா என் முன் அமர்ந்து அதைப்பிடுங்கி வீசினாள். ”நான் உங்கிட்டதான் பேசணும்,வாடா ”என்றாள்
”பேசு… கேக்கிறேன்ல…”
”இது ரொம்ப சீரியஸ்…அந்த ஸ்கௌண்டிரல்ஸ் போலி டாகுமெண்ட்ஸ் காட்டுறாங்கன்னு லாயர் சொல்றார்”
அம்மா உள்ளே ”பாவிப்பசங்க புருஷன் இல்லாத சொத்துன்னா அள்ளிக்கிடலாம்னு நெனைக்கிறாங்க”என்றாள்
சந்திரா என்னை கூர்ந்து நோக்கி ”என்ன பயப்படுறியா?” என்றாள்.
சுசி முதன்முறையாக நான் சந்திராவின் கண்களில் மனநலச்சிக்கலின் மெல்லிய தடம் ஒன்றைக் கண்டேன். அச்சத்தில் என் இதயம் கல்லாக ஆகிவிட்டது.
”உன்னை ஒண்ணும் வெஷம் வச்சு கொன்னுட மாட்டேன்…” அவள் கண்களின் அலைதல் மனத்தின் நிலையில்லாமையேதான். சுசி மனச்சிக்கல் முளைவிட்டு இரண்டு இலை விரித்து நிற்கும் கண்கள் மிக மிக பயங்கரமானவை. முற்றிலும் பைத்தியமாகிவிட்ட ஒருவரால் நமக்கு ஒன்றுமில்லை. அவர் வேறு கரைக்குச் சென்று விட்டவர். இது அப்படியல்ல. நம்மைபோன்ற ஒருவர்– ஆனால் நம்மிலிருந்து வேறுபட்டவர்.
நான் மெல்ல ”வர்ரேன்” என்றேன்.
”என் வீட்டுக்குப் போறோம்….” உதடுகள் அழுந்த மூக்கு விடைத்து அசைய காய்ச்சல் அலையும் முகத்துடன் ”ஆண்ட் வி வில் ஃபக்” என்றாள்.
சுசி, அக்கணம் நான் காம எழுச்சி கொண்டேன். விசித்திரமும் விபரீதமும் அளிக்கும் காம எழுச்சி முற்றிலும் வேறானது. அதற்காகத்தான் பிணத்துடன் கூடுகிறார்கள் போல. என்னென்ன எண்ணங்கள்….
குளித்துவிட்டு டவலை தலையில் சுற்றிக்கொண்டு நீ வெளியே வந்தாய். ”ஹாய் சந்திரா” என்றாய்
”ஹாய்.. யூ லுக்ஸ் க்யூட் ”என்ற சந்திரா ”இன்னிக்கு காலைல உனக்கு ஒரு புரோக்ராமும் இல்லியே” என்றாள். ஒரு கணத்தின் ஆயிரத்தில் ஒருபகுதிக்குள் படமாடிய பாம்பு திரும்பி வளைக்குள் மறைந்து அங்கே ஒரு பூத்த மலர்ச்செடி நின்றிருப்பது போல….
”இல்லை. ஏன்?” என்றாய்
”அருண் என் கூட லாயர் வீடுவரைக்கும் வரான்…”
”அதுக்கென்ன?”என்று புன்னகை செய்துவிட்டு நீ உள்ளே சென்றாய். சுசி அப்போது ஒரு மணி எனக்குள் அடித்தது. அத்தனை பெரிய மனுஷித்தனமாகச் சொல்லிவிடு மிகையான சாதாரணத்தன்மையுடன் நீ உள்ளே போனாய். பெண்ணுக்குள் இதற்கென்றே ஒரு நுண்புலன் உள்ளதா என்ன?
நான் அப்போது அதுவரை இருந்த பதற்றத்தை மெல்ல இழந்து இலகுவானேன். உனக்குள் எனக்கான பொறாமை எழுந்தது என்று புரிந்துகொண்டதுதான் காரணம் என நான் அப்போது உணர்ந்தேன் என்று சொல்லமுடியாது. ஆனால் நான் ஆண்மகனாக, உன்னை என்னை நினைத்து ஏங்குபவளாக உணர்ந்தேன்.
நான் குளித்து உடைமாற்றிவிட்டு வரும்வரை நீயும் அம்மாவும் சந்திராவிடம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள். நீ அந்த தமிழ்ப்படத்தின் கதையைச் சொன்னாய். உன் மிகையான சிரிப்பொலியும் உற்சாகக் கிரீச்சிடலும் கேட்டது. சட்டை போட்டுக் கொண்டிருக்கும்போது உன் உற்சாகம் எனக்கு சட்டென்று கிரீச்சிட்டது. மனம் எப்போது எதில் உரசிக்கொள்ளும் என்பதே புதிர்தான்.
உன்னை சீண்ட வேண்டுமென எண்ணினேன். நான் போனபின் நீ அழவேண்டுமென. ஆகவே என் மிகச்சிறந்த சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன். சிறந்த ஷுக்களை போட்டேன். வெளியே வந்த போது உன் கண்கள் என்னை ஒருகணம் ஒரே ஒரு கணம் மிகச்சாதாரணமாக –சுசி எந்தப்பெண்ணும் ஏதேனும் சில கணங்களில் மகாநடிகை — வந்து தொட்டுச்சென்றன.
”என்ன டிரெஸ் அமர்களப்படுது?” சந்திராதான். நான் அவள் கண்களைப் பார்த்தேன். எனக்கு அவள் மனம்புரிந்துவிட்டது. அந்த அபாயத்தின் சுவாரசியம் அவளுக்கு தேவைப்படுகிறது. விளிம்புவரை நகர்த்திச் செல்கிறாள்.
நான் ”லாயரைப் பாத்துட்டு ஒரு கிளையண்டையும் பாக்கணும்…” என்றேன்.
”கிளையண்டா…உனக்கா? மை குட்னெஸ்.. நீ ஒண்ணும் என்னை அட்ராக்ட் பண்ண டிரை பண்ணல்லியே…” சந்திரா மேலும் எல்லையைக் கடந்தாள்.
அம்மா சிரித்தபடி ”சரிதான்… உன் கூட வர்ரப்ப ஒரு இது இருக்கணும்ல… கேட்டியா சுசி, இவதான் எங்க காலேஜ்லயே குயின்.. பசங்கள்லாம் இவளைப் பாக்க வரிசையா நிப்பாங்க…”
நீ வாயைப் பொத்திச் சிரித்தாய். சந்திரா ”ஜிஎஸ்… இதெல்லாம் டூ மச்…” என்று சிரித்தபின் ”போலாமா” என்று என்னிடம் கேட்டாள். அதற்குள் என் உணர்வுகள் குளிர்ந்து மண்ணோடு படிந்துவிட்டன. வெடிகுண்டை வைத்து கால்பந்து விளையாடுவது போல… பெண்கள் அதை ரசிப்பது போல ஒருபோதும் ஆண்களால் முடியாது. ஆண்களின் நரம்புகள் முறுகி உடைந்துவிடும்.
போகும்போது சந்திரா என் தோளைப்பிடித்து ஒற்றைக்காலில் நின்று செருப்பைப் போட்டுக்கொண்டாள். ”என்ன செண்ட் போட்டே… யூ ஆர் ஸ்பைஸி…” அவள் உன் மீதான கொடியை பறக்கவிடுகிறாள் என்று புரிந்து நான் பேசாமல் நின்றேன்.
சந்திரா என்காரில் முன்னிருக்கையில் ஏறிக்கொண்டு சாய்ந்து அமர்ந்து ”ஸீ யூ ஜிஎஸ்… வரேன் சுசி’ டார்லிங் ” என்றாள். நான் காரை கிளப்பினேன். அவள் ”நேரா வீட்டுக்குப்போ” என்றாள். மீண்டும் நாபறக்கும் பாம்பு!
”நவீன்?”
”அவன் ஸ்கூலுக்குப் போயாச்சு”
கார் நகரை ஊடுருவிச் செல்லும் போது நாங்கள் ஒரு சொல் கூட பேசவில்லை. சந்திரா சிலைபோல அமர்ந்திருந்தாள். அவளை ஓரக்கண்ணால் பார்த்தபோது கழுத்து இறுக்கமாக இருப்பது தெரிந்தது.
காரை நிறுத்திவிட்டு லிப்டில் மேலேறும் போதும் அவள் ஆழமான அமைதியுடன் இருந்தாள். கதவைத்திறந்து இருவரும் உள்ளே நுழைந்ததும் நான் என் ஷுக்களை கழற்றிக் கொண்டிருந்தேன். அவள் சட்டென்று கதவை மூடிவிட்டு தன் சப்பலை எடுத்து என் மீது எறிந்தாள்.
”யூ…ராஸ்கல்..யூ…” என்று மூச்சிரைக்க கூவினாள். இன்னொரு சப்பலை எடுத்தவள் அதை சுவர் மீது வீசினாள். அவள் மார்பகங்கள் விம்மி விம்மி தணிய கழுத்துக்குழி ஏறியேறி அமிழ விழிகளில் நீர்ப்படலம்.
”இதோ பார் சந்திரா…” என்றேன். அந்தக்குரல் அவளைத் தொட்டதும் அவள் மீண்டும் வெறிகொண்டு என் மீது பாய்ந்தாள். நான் அவளைத் தடுக்க முயன்றேன். அவள் என்னை அடித்தாள். என் சட்டையைப் டித்துக் கசக்கினாள். என் மீது ஓரு பேரருவி கொட்டியது போல் இருந்தது. இல்லை, நெருப்புதழல்கள்.
நான் நிலைதடுமாறி சோபாவில் பின்னால் விழுந்தேன். அவள் என் மேல் விழுந்து என்மீது ஏறி அமர்ந்து கொண்டாள். மார்பிலிருந்து புடவை உதிர்ந்து இரு முலைகளும் மேலே பிதுங்கி வெண்ணிறமான பளபளப்புடன் தெரிந்தன. சேலை கசங்கி வெண்ணிறமான தொடை ஒன்று கீழே நீட்டியிருந்தது.
”கொன்னிருவேன்… வெட்டிக்கொன்னிருவேன்… ராஸ்கல்.. உன்னைக் கொன்னுட்டு நானும் செத்திருவேன்..” என்று கூவினாள். என் கன்னத்தில் அறைந்தாள். ஆனால் நான் அப்போது மிக வன்மையான காமத்தை உணர்ந்தபடி செயலிழந்து கிடந்தேன்.
பின்னர் மெல்ல அழுதபடி என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர் என் கழுத்திலும் மார்பிலும் கொட்டியது. அவளுடைய அழுகையின் குலுங்கல்களில் என் உடலுக்கும் பரவின.
நான் பிணம் போல அப்படியே கிடந்தேன். அவள் எழுந்து என் மேலேயே அமர்ந்து கலைந்த கூந்தலை அள்ளி பின்னுக்குக் கொண்டுசென்று முடிந்தாள். அப்போது அவள் மார்புகள் அசைவதை மட்டும் நான் கண்டேன்.
அவள் பெருமூச்சுடன் ”கமான்.. நீ என்ன நெனைச்சிருக்கே?” என்றாள்.
”ம்ம்?”
”நீ என்ன பிளான் வச்சிருக்கிறே?”
”ம்”
”கமான்…டோண்ட் பிளே ·பூல்…”
”தெரியலை…” என்றேன் ”சத்தியமா தெரியலை.”
”டேய், டீன்ஏஜ் பாய் மாதிரி பேசாதே… நான் உன் அம்மாகிட்ட பேசிட்டேன். நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே… உண்மையா இல்லியா?”
நான் பார்வையை திருப்பினேன்
”கமான் லுக் அட் மி”
”அவ கேட்டா” என்றேன் பலவீனமாக.
”கேட்டா? கேட்டா பண்ணிக்குவியா? இப்ப நான் கேக்கிறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ”
நான் அவளையே பார்த்தேன். என் மனம் உறைந்து கிடந்தது.
”கல்யாணம் பண்ணிக்குவியா? சொல்லு” என்று அவள் என் சட்டையை பிடித்தாள். அதன் பித்தான்கள் எல்லாம் தெறித்திருந்தன. ”சொல்லு… நாளைக்கே நாம ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்குவோம்…”
”நவீன்?”
”யாரு எக்கேடா கெட்டா எனக்கென்ன? என்னால நீ இல்லாம வாழமுடியாது… ஐ லவ் யூ..ஐ நீட் யூ…” அவள் சட்டென்று உடைந்து விசித்திரமான கேவல் ஒலியுடன் அழ ஆரம்பித்தாள் ”ப்ளீஸ் அருண்.. என்னை விட்டிராதே… நீ இல்லாம என்னால இருக்க முடியாது அருண்… நான் உன்னை அப்டி நெனைச்சிட்டேன்… ப்ளீஸ்”
நான் ஆவள் அழுகையை கண்ணெடுக்காமல் பார்த்துக் கிடந்தேன். கெஞ்சுவது அவள் இயல்பே அல்ல. என்னைக் கவர்ந்ததே அவளிடம் இருந்த கம்பீரம்தான். அவளிடமே கல்லூரியில் படித்தவன் நான். நிமிர்ந்த முகத்தில் அறிவின் செருக்குடன் , மூக்குக்கண்ணாடி ஒளிர அவள் வகுப்பெடுக்கும் காட்சியை என் நினைவில் கண்டேன். ”Shakespeare is basically a cynic and his cynicism reached its zenith on his last play Tempest in which he depicts himself as the main character Prospero. Prospero is a magician and he can change everything in this world in to gold, but he throw away all of his magical devices in to the sea…” கஞ்சியிட்ட மென் மஞ்சள் நிறப் புடவையுடுத்த அவள் நிமிர்ந்த உடலையே நோக்கி அவள் உதடுகளின் அசைவை மட்டும் பார்த்துக் கொண்டிருதவன் மேல் ஒரு சாக்பீஸை விட்டெறிந்து ”You, what is your problem?”
அவள்தான் இவள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அவள் எழுந்து அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து முழங்கால் மேல் முகம் வைத்து சின்னக்குழந்தை போல அழுதுகொண்டிருந்தாள். நான் மெல்ல எழுந்தேன். மெல்ல என் ஷு அருகே சென்றேன்.
”எங்க போறே?” என்றாள்.
”தெரியலை…நீ கேட்ட எதுக்குமே எங்கிட்ட பதில் இல்லை சந்திரா… ஏன் இப்டியெல்லாம் ஆச்சு… இனிமே என்ன செய்றது ஒண்ணும் புரியல்லை… இந்த முடிச்சை எப்டி அவிழ்க்கிறதுன்னே எனக்குப் புரியல்லை” நான் திரும்ப அமர்ந்துகொண்டேன் ”உண்மையச் சொலல்ணும்னா நானும் நேத்து ராத்திரி முழுக்க தூங்கலை. எதில மாட்டியிருக்கோம்னே எனக்குப் புரியல்லை”
”நீதான அந்தப் பொண்ணுகிட்டே மாட்டியிருக்கே… உனக்கு நான் கசந்திட்டேன்.. இப்ப புதிய பொண்ணு கேக்குது உனக்கு… பச்சையாச் சொன்னா உனக்கு புதிசு வேணும்… நாலு பேர் முன்னாடி கௌரவம் வேணும் அதான்…”
நான் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அழகிய பெரிய கண்கள். வெண்ணிறமான வட்ட முகம். தடித்த பெரிய உதடுகள். மென்மை மென்மை என்று சொல்லும் கழுத்து.
நான் மீண்டும் சோபாவில் அமர்ந்து என் தலையைப் பற்றிக் கொண்டேன். இனம்புரியாத சிந்தனைகள் முட்டி மோதிக் கடந்துசென்றன. சிந்தனைகள் அல்ல, வெறும் சொற்கள். பின் நான் சட்டென்று அறுத்து விலகிக்கொண்டு தலைதூக்கி கூர்மையாகச் சொன்னேன். ” சந்திரா நான் என் மனசைத்திறந்து சொல்றேனே…. நான் சொல்றதை நீ நம்ப மாட்டே… அவளும் நம்ப மாட்டா.. யார்கிட்ட சொன்னாலும் என்னை ஒரு கிராதகன்னுதான் சொல்லுவாங்க… ஆனா நான் சொல்றதுதான் உண்மை…” என்றேன்
அவள் என்னை கூர்ந்து பார்த்தாள். நான் ஒருபோதும் அந்த திடத்துடன் பேசியதில்லை. அதை அவள் அஞ்சினாள்.
”எனக்கு நீயும் வேணும் அவளும் வேணும்… இதுதான் உண்மை. என்னால ரெண்டு பேரையுமே விடமுடியலை. உங்கிட்ட இருக்கிற அருண் வேற அவகிட்ட இருக்கிற அருண் வேற… ரெண்டுபேரில யாரை விட்டாலும் ஒரு அருண் செத்திருவான்… நான் பாதியா ஆயிடுவேன்.. என்னால அதை தாங்க முடியல்லை. நான் ஒரு ராஸ்கல்னு சொல்லு. சுயநலவாதி, அயோக்கியன், பெண்பித்தன் என்னவேணுமானாலும் சொல்லு… நான் யோக்கியன்னு என்னைப்பத்தி சொல்லிக்கவே மாட்டேன்… ஆனா இது உண்மை… எனக்கு நீ இல்லாம இருக்கமுடியாது… உன்கிட்ட இருக்கிறப்ப நீ மட்டும்தான் வேணும்ணு தோணுது… ஆனா அவகிட்ட இருக்கிறப்ப அவளே முக்கியம்னு தோணுது… ஐ யம் எ ஸ்கௌண்டிரல்.. எஸ் ஐ யம்…”
சந்திரா அயர்ந்து போய்விட்டாள்.
”என் கிட்ட இல்லாத எதை நீ அவகிட்ட பாத்தே?” என்றாள் ”அவ என்னைவிட சின்னப்பொண்ணு.. அதுதானே?”
”அதில்லை…. அப்டீன்னா நான் உன்னை விட்டுட்டு அவகிட்ட போயிருக்கணுமே” என்றேன். ”உன்கிட்ட இருக்கிறப்ப நான் சின்னப்பையனா இருக்கேன் சந்திரா… நீ நான் பிரமிச்சு பாக்கக்கூடியவளா இருக்கே… உன் உடம்பு என் கைக்கு அடங்காததா இருக்கு.. உன் மனசு என்னால புரிஞ்சுக்க முடியாததா இருக்கு… மறுகரை காணமுடியாத ஏரிமாதிரி இருக்கே நீ.. எல்லாவகையிலயும் நீ என்னைவிட பெரியவள்… என்னை உனக்குள்ள ஒரு துளியா அடக்கிக்கிறவள்…… அது உருவாக்குற பிரமிப்புதான் என்னை உங்கிட்ட இழுக்குது. அது இப்பவும் எனக்கு வேண்டியிருக்கு… அதில இருந்து என்னால விலகமுடியல்லை…. ஆனா சுசி கிட்ட நான் பெரியவனா அதாவது ஒரு ஆண்மகனா என்னை ·பீல் பண்றேன்.. அவ என் உள்ளங்கையிலே இருக்கிறா… இந்த செல்போன் மாதிரி… நான் அவளை ஹேண்டில் பண்ணலாம்…” என்றேன்.
அவள் பிரமித்துப்போய் என்னைப் பார்க்க நான் ”எனக்கு ரெண்டுமே வேண்டியிருக்கே சந்திரா” என்றேன்.
”யூ ஆர் எ மதர் ·பக்கர்” என்றாள்.
நான் ஒருகணம் அதிர்ந்து அவளைப் பார்த்தபின் தொய்ந்து சோபாவில் சாய்ந்தேன். என் உடல் வியர்த்திருந்தது. அக்கணத்தில் முழுமையாக தோற்கடிக்கப்பட்டவனாக மரணம் மட்டுமே மிச்சமிருப்பவனாக உணர்ந்தேன்.
என் தளர்ச்சி அவளுக்கு குரூரத்தை அளித்தது. சுசி, பெண்கள் மட்டுமே அந்த உச்சகட்ட குரூரத்தின் தருணங்களை அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் அப்போது எதிரில்லாமல் வென்றபடியே செல்கிறார்கள்.
”எஸ்…நீ பெத்த தாயைக்கூட விடமாட்டே…”என்றாள்
நான் அவளையே பார்த்தேன். அவள் வியர்வையில் முகமெங்கும் கூந்தல் ஒட்டியிருக்க ”நீ ஒரு செக்ஸ் மேனியாக்…. பொண்ணோட ஒடம்பு உனக்கு வேணும். வேற ஒண்ணுமே வேண்டாம். அதுக்காகத்தான் இந்த நியாயமெல்லாம் பேசறே… அந்தப் பொண்ணுக்கும் நீ துரோகம் செய்வே… அவளையும் நீ கைவிடுவே… நீ ஒரு ஸ்கௌண்டிரல்…” என்றாள்
”சந்திரா பிளீஸ்”
”ஏன்னா உன் உடம்புல ஓடுறது உங்கப்பனோட ரத்தம். சும்மா கெடைச்சா சாக்கடையையும் குடிச்சுப்பாக்கிற நாய்ப்புத்தி”
”ஷட் அப்!” என் உடல் நடுங்கியது. நான் எழுந்து அவளை அடிக்க கையை ஓங்கி ஒரடி எடுத்து வைத்து அப்படியே நின்று மின்னதிர்ச்சி ஓடும் உடல்போல விதிர்த்தேன்.
”அடிடா… கொல்லு… கொன்னுபோட்டுட்டு போய் அவகூட படு… அதானே உனக்கு வேணும்? நீ பெண் ஒடம்புக்காக கொலையும் செய்வே… கொன்னு அந்த உடம்பை கடிச்சு தின்னாலும் திம்பே… சதைவெறி பிடிச்ச மிருகம் நீ… கொல்லுடா…”
நான் அந்த அரைக்கணத்தில் அவளை அறைந்து அறைந்து மிதித்து மிதித்து மிதித்து…….. மனம் உக்கிரமாகச் செயல்படும்போது உடல் முற்றிலும் இல்லாமலாகிவிடுகிறது.
சந்திராவும் எங்கோ ஓர் இடத்தில் என்னை ரத்தச்சகதியாக கூழாக்கிக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலும் உதடுகளிலும் அவளுடைய மொத்த மூளைத்திறனும் வெளிப்படும் நேரம் அது என்று தெரிந்தது. சிங்கத்தின் வேட்டை மிருகத்தை நோக்கிப் பாய்வதற்கு முந்தைய கணம்…
”எஸ்….யூ ஆர் எ மதர் ·பக்கர்… ஆக்சுவலி யூ ஆர் ·பக்கிங் யுர் மதர் த்ரூ மீ”
நான் ஓடிப்போய் கதவைத் திறந்து வெளியே பாய்ந்து லிப்டை நோக்கிச் சென்றேன். கலைந்த உடையும் தலையுமாக சந்திரா என் பின்னால் ஓடி வந்தாள்.
”அருண் பிளீஸ்.. பிளீஸ் அருண்..” என்று கூவியபடி லிப்ட் முன்னால் என்னைப் பிடித்தாள். லிப்ட் மேலே வந்து திறந்தது ”சொல்றதைக்கேள் அருண்… உன் மேல உள்ள ஆசையில சொல்லிட்டேன். நீ என்னை விட்டுட்டுப் போகக்கூடாதுன்னு நெனைச்சு சொல்லிட்டேன்….. பிளீஸ்” அந்த சந்திராவை உள்ளே விட்டுவிட்டு இன்னொருத்தி பாய்ந்து வந்ததுபோல…
நான் லிப்டுக்குள் நுழைந்தேன். அவள் அதன் கதவை கையால் பிடித்துக் கொண்டாள் ”அருண்… என்னை நம்பு… நான் சொன்னதுக்கெல்லாம் ஸாரி.. ஆயிரம் வாட்டி சாரி… நான் நீ சொல்றதையெல்லாம் புரிஞ்சுக்கிடறேன்.. என்னை மட்டும் நீ புரிஞ்சுக்க… நான் உன் மேலே வச்சிருக்கிற பிரியத்தை மட்டும் புரிஞ்சுக்க.பிளீஸ்..”
”போ… யாராவது பாத்திருவாங்க..போ”
”மாட்டேன் நீ வா”
”தயவுசெஞ்சு போ”
”யாரு பாத்தாலும் எனக்கு ஒண்ணுமில்லை… இனி எனக்கு எதைப்பத்தியும் கவலை கெடையாது.. எனக்கு நீ வேணும். உன்னை நான் விடமாட்டேன்… செத்திருவேன் அருண்… கண்டிப்பா செத்திருவேன்..”
நான் அவளைப் பிடித்து தள்ளினேன். அவள் சரிந்து தரையில் விழுந்தாள். லிப்டுக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டஒரு கணத்தில் ராஜம்மா கிழவியின் திகைத்த முகத்தை தூரத்தில் பார்த்தேன்.
லிப்ட் இறங்கும் போது என் தலையில் நானே மடேர் மடேரென்று அடித்துக்கொண்டு அழுதேன். இறங்கி ஓடி காரை எடுத்து மிதித்தேன். ஏதாவது ஒரு விபத்தில் செத்து விடமாட்டேனா என்று நினைத்தேன். ஒரு சுவரை நோக்கி சீறிச்சென்ற என் கார் கடைசிக் கணத்தில் முத்தமிட்டு நின்றது. என் உயிர் காலை இயக்கியிருக்கிறது சுசி. அந்த மதியத்தில் நகரமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் என் காருக்குள் ஸ்டீரிங்கில் முகம் சாய்த்து கைவிடப்பட்ட குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதேன்.
பின்பு மனம்தேறி நேராக காரை ஜோவின் குடிலுக்குச் செலுத்தினேன். அவன் இருப்பானா என்று தெரியவில்லை. ஆனால் இருந்தான். குப்பை குப்பையாக தூசடைந்த புத்தகங்கள் சிடி அடுக்குகள் கித்தார் சுவரில் பாப் மார்லி நெல்சன் மண்டேலா படங்கள் சுவரில் டிஷர்ட்டுகள் லுங்கிகள் சாத்திய துடைப்பம் நடுவே அமர்ந்து கம்ப்யூட்டரில் ஏதோ தட்டிக்கொண்டிருந்தான்.
”வாடா… தனியா வரே?” என்றான்
”உன்னைப் பாக்கலாம்னு தோணிச்சு”
”கமான். கொஞ்சம் பழைய பாட்டுகளை டவுன்லோட் பண்ணிட்டிருந்தேன். சும்மா பொழுது போகலை. உக்காருடா”
நான் அமர்ந்து கொண்டேன். ”இன்னைக்கு போகலியா?”
”எங்க?”
”வேலைக்கு?”
”அந்தவேலையை நான் அப்பவே விட்டுட்டேன்…”
”ஆம அதான் தெரியுமே… நான் சொல்றது இப்ப கடைசியாக் கெடைச்ச வேலையைப்பத்தி”
”அதைத்தாண்டா சொல்றேன்…அதையும் விட்டாச்சு”
”ஏன்?”
”·பூலிஷ் ஜாப்” என்றான் ”அதைவிடு இப்ப என்ன பிரச்சினை உனக்கு?”
”ஒண்ணுமில்லியே. சும்மாதான் வந்தேன்…”
”ஒண்ணு, உன் முகமே சரியில்லை. ரெண்டு, நீ பிரச்சினை இல்லாம என் கூடு தேடி வந்தது கெடையாது…’
”நாம சந்திச்சுகிட்டேதானே இருக்கோம்”
”ஆமா. ஆனா நீ என்னை எங்காவது வரச்சொல்லுவே.. இல்லாட்டி நானே வருவேன்… நீ இங்க வர விரும்பறதில்லை, இந்த குப்பை அழுக்கு எல்லாம் உனக்கு அவெர்ஷன்…”
”இப்ப என்னை ஹர்ட் பண்ண நெனைக்கிறியா?”
”கண்டிப்பா இல்லை. உண்மையச் சொன்னேன். அதில தப்பே கெடையாது. நீ சீரா ஒழுங்கா ஒரு லைப்ல போய்ட்டிருக்கே. நான் கோணல் மாணலா கன்னாபின்னான்னு போய்ட்டிருக்கேன்… புறநாநூறிலே ஒரு உவமை வருது வில்லிலேருந்து அம்பு போறப்ப அதன் நெழலும் கூடவே போகும்னு. ஆனா அம்பு நேரா போகும், நிழல் காடுமேடு குப்பை கூளம்லாம் விழுந்து பொரண்டு போகும். ரெண்டுமே போய் தைக்கிற எடம் ஒண்ணுதான்..”
”நான்சென்ஸ்…” என்றேன்
”உன்னைமாதிரி ஆட்களுக்கு நாங்க பேசறதெல்லாம் நான்சென்ஸ்தான். ஆனா அப்பப்ப உங்களுக்கு இந்த நான்சென்ஸ் தேவைப்படுது…”
”கடிக்காதே” என்றேன். அவனுடைய சிறிய கட்டிலில் கால்நீட்டிப் படுத்துக்கொண்டேன்.
”என்னடா?” என்றான்
”ஜோ …எனக்கு ஏதாவது குடிக்கணும்போல இருக்கு…”
”நீர்மோர் இருக்கு…குடிக்கிறியா?”
”வெளையாடாதே”
”அப்ப தேவ்டியா வீடுபோறதுமாதிரி குடிக்கணும்னா எங்களைத்தேடி வருவீங்க நீங்க?”
”ஜோ ஐ யம் ஹர்ட்”
ஜோ புன்னகை புரிந்தபின் எழுந்து பாத்ரூமுக்குச் சென்றான்
”ஜோ”
”இருடா அதான் எடுக்கப்போறேன்…”
”பாத்ரூமிலேயா?”
”யா… பக்கெட்டிலே தண்ணிக்குள்ள போட்டு வச்சிருக்கேன். இங்க என்ன ·ப்ரிட்ஜா இருக்கு… இதோ”
அவன் ரம் புட்டியை எடுத்து வந்தான். ”தண்ணி மட்டும்தான் இருக்கு. நான் குடிக்கிறப்ப ஒண்ணும் தொட்டுகிடறதில்லை… எனக்கு சிகரெட்டே போதும்..”
அவன் கண்ணாடிக் குவளைகளை எடுத்து வைத்து அளந்து ரம்மை ஊற்றி நீர் கலந்தான். தேநீர் நிற திரவம் சுழித்து அசைந்தது. ”ச்சீயர்ஸ்!” என்றான். நான் எடுத்து ஒரே மடக்காக விழுங்கினேன். குபுக் என்று ஏப்பம் விட்டேன்.
”சும்மா குடி. வாந்தி எடுத்தாக்கூட பரவால்ல. இங்க ஏகப்பட்டபேர் வாந்தி எடுத்திருக்காங்க. மூளைய வாந்தி எடுக்கிறவங்க உண்டு. ஆத்மாவையே வாந்தியா எடுத்தவங்களும் ஒண்ணு ரெண்டுபேரு உண்டு… அப்றம் கற்பை வாந்தியா எடுத்தவங்க…”
”ஸ்டாப் இட் ஐ ஸே”
”சரி” என்று மௌனமாக சிகரெட்டை பற்ற வைத்தான்.
நான் மௌனமாக குடித்துக் கொண்டிருந்தேன். என் தலை கனத்தது. உடல் தலையின் எடையை தாள முடியாததுபோல ஆடியது.
”ஜோ, நான் உங்கிட்ட இதுவரைக்கும் ஒரு விஷயம் சொன்னதில்லை. உங்கிட்ட மட்டுமில்லை யார்ட்டயுமே சொன்னதில்லை. இப்ப அதைச் சொல்லத்தான் வந்திருக்கேன்”
”ம்ம்”
”எனக்கும் சந்திராவுக்கும் உறவு இருக்கு”
”சந்திரான்னா?” என்றவன் ”ஓ அவங்களா? உன்னோட காலேஜ் டீச்சர்…?” என்றான்
”ஆமா”
”அவங்க உன் அம்மாவோட ·ப்ரண்ட் இல்ல?”
”ஆமா”
ஜோ இன்னொரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான் ”உறவுன்னா?”
”செக்ஸ்…”
”ஒண்ணுரெண்டு வாட்டி…அவ்ளவுதானே? இப்ப அதைப்பத்தி என்ன? விடு… இதெல்லாம் லைப்ல இல்லாத எடம் இல்ல… எல்லா வாயும் நாறும்னு ஒரு பழமொழி இருக்கு சீனாவிலே…”
”அதில்லடா… நான் வந்து…”
”குற்ற உணர்வு? சுசிகிட்டே சொல்லணுமா வேண்டாமாங்கிற பதற்றம்…”
”அதில்லை. இது இன்னும் தீவிரமான உறவு…. உறவுன்னா இதோபார் இதுவரைக்கும் அந்தமாதிரி ஒரு ரிலேஷன் எனக்கு யார்கிட்டயும் உண்டானதில்லை… தீ மாதிரி”
”ஐ ஸீ” என்று அவன் நன்றாகச் சாய்ந்துகொண்டான். ”அவ இப்ப ரொம்ப தீவிரமா இருக்கா… நீ சுசிகூட நெருங்கறது அவளுக்குப் பிடிக்கலை… அவ்ளவுதானே?”
நான் கண்களை மூடிக்கொண்டேன். என் நரம்புகள் நெற்றிக்கு இருபக்கமும் இரு மண்புழுக்கள் போல நெளிந்தன. சட்டென்று எழுந்து அமர்ந்து ”ஜோ என்னை அவ காமவெறிபிடிச்ச மிருகம்னு சொன்னா. அம்மாவைக்கூட விட்டுவைக்காத அசிங்கமானவன்னு சொன்னா…. அதோட—” என் குரல் உயர்ந்தது ”ஜோ நான் அங்கேருந்து தப்பிச்சு ஓடிவந்தேன். ஏன்னா அப்ப எனக்குத் தோணிச்சு அவ சொல்றது உண்மைதான்னு. நான் ஒரு மிருகம்தான். சதைவெறிபிடிச்சு அலையற மிருகம்… அந்த உண்மைய என்னால தாங்க முடியல்லை…” என்னால் என் பேச்சை நிறுத்த முடியவில்லை ”அப்டிப்பாத்தா இந்த பூமியிலே எல்லா ஆணும் காமவெறி பிடிச்ச மிருகம்தானே? எல்லா ஆணும் சதைக்காக அலையவன்தானே? என்ன சொல்றே? சொல்லுடா..”
”ஒரு வகையிலே சரிதான்”
நான் குபுக் என்று ஓங்கரித்தேன். ஆனால் வாந்தி வரவில்லை. கையை கண்கள் மேல் வைத்துக்கொண்டு கட்டிலிலேயே படுத்துக்கொண்டேன். ”அவள் மேலே தப்பே கெடையாது ஜோ. எல்லா தப்பும் என் மேலேதான். குமார் மாமா இறந்தபிறகு தனியா பிடிவாதமா இருந்தா. அவ மனசைக் கலைச்சவன் நான் தான். நான் தான் அவளைக் கெடுத்தேன்…”
”ம்ம்”
”என்ன உம்?” என்றேன் ”நான் என்ன கதையா சொல்றேன்?”
”டேய் நீ நெனைக்கிறத சொல்ரா… நான் நெனைக்கிறத அப்றமாச் சொல்றேன்…”
”சின்னவயசிலே இருந்து நான் அம்மாகிட்டே வளர்ந்தவன் ஜோ…ஒருவேளை அப்பாவும் கூடவே இருந்திருந்தா நான் வேறமாதிரி இருந்திருப்பேனான்னு தெரியலை.. சின்ன வயசிலே இருந்து எனக்கு அம்மாதான். அம்மா என்னை பொத்திப் பொத்தி வளர்த்தா. அவ சொல்றது மாதிரி தலை சீவணும். சொல்றது மாதிரி சட்டை போட்டுக்கணும். சொல்ற நேரத்திலே படிக்கணும். பத்துமணிக்கு வெளக்கணைச்சுகிட்டு படுத்திரணும்… அம்மாவுக்கு நானும் அப்பாமாதிரி ஆயிடுவேனான்னு ரொம்ப பயம்… எனக்கும் அம்மாவைவிட்டா வேற ஆளில்லை. அப்றம் சந்திரா… சின்னவயசிலே எங்க வீட்டுக்கு வார ஒரே வெளியாள் அவதான்… அப்டியே அவமேலே ஒரு நெருக்கம் உணாச்சு… அது இப்டியெல்லாம் ஆகும்னு நான் கனவிலயும் நெனைக்கல்லை… இப்ப சின்னவயசை நெனைச்சா உடம்பே கூசுறதுமாதிரி இருக்கு… நான்லாம் ஒரு மனுஷனான்னு தோணுது”
”தன்னிரக்கத்தையெல்லாம் அப்றமா வச்சுக்கலாம்… இப்ப சொல்ல வேண்டியதைச் சொல்லு”
”எல்லாத்துக்கும் எனக்கு அம்மாதான். இல்லேன்னா சந்திரா. கொஞ்சம் வளந்ததுக்குப் பிறகு அம்மாவுக்கும் எனக்கும் ஒரு தூரம் வர ஆரம்பிச்சுது… காலேஜ்ல பி.ஏ ·பைனல் படிக்கிற டைம் அது. நான் உடம்பால இளைஞனா ஆயிட்டேங்கிறத அம்மாவால புரிஞ்சுக்க முடியலை. மீசைய ஷேவ் பண்ணிக்கோன்னு சொல்லி கத்துவா. போம்மான்னு சொல்லிடுவேன். வாரப்பத்திரிகையில ஒரு நடிகையோட படத்தை உக்காந்து பாத்திட்டிருந்தேன். அதைப்புடுங்கி வீசிட்டு அந்த பத்திரிகையையே நிப்பாட்டிட்டா. டிவி பாக்கணுமானா அவகூட உக்காந்துதான் பாக்கணும். பாட்டெல்லாம் பாக்கவே கூடாது. அவன்கிட்ட சேராதே இவன்கிட்ட சேராதேன்னு ஒரே கெடுபிடி. என்னை பசங்கள்லாம் கங்காருன்னுதான் கூப்பிடுவாங்க. அம்மா மடிக்குள்ளேயே இருக்கிறேனாம்… அம்மா என்னை பிடிவாதமா சின்னப்புள்ளையா பாத்திட்டிருந்தா. நான் வளராம இருக்கிறதுக்கு ஏதாவது மருந்து இருந்தா வாங்கி குடித்திருப்பா. ஒருவாட்டி துணிமாத்திட்டிருக்கிறப்ப சாதாரணமா உள்ளவந்து எதையோ பீரோவிலேருந்து எடுத்துட்டு போனா. நான் அப்ப ஜட்டிகூட போடல்லை. அப்டியே வெலவெலத்துப்போச்சு… அப்றம் ஒருநாள் இதேமாதிரி ஒரு சம்பவம். ஞாயித்துக்கிழமை காலையிலே தூங்கிட்டிருந்தேன். எந்திரிடா எந்திரிடான்னு கூப்பிட்டுடே இருந்தா. நான் கேட்கலை. சட்டுனு வந்து என் போர்வையை புடிச்சு இழுத்திட்டா”
”புரியுது…”
”நான் எந்திரிச்சு போர்வையை சுருட்டி இடுப்போட புடிச்சுகிட்டு போடி வெளியேன்னு கையை தூக்கி அடிக்கப் போயிட்டேன். அப்டியே வெளிறிப்போய் நின்னுட்டு வெளியே ஓடிட்டா… நான் நேரா சாய்பாபா கோயில் போய் அங்க உக்காந்துட்டேன். எங்கியாவது ஓடிப்போகணும்னு எண்ணம். கையிலே ஒரு வாட்ச் இருந்தது. அதைக் கொண்டுட்டு போய் முந்நூத்தைம்பது ரூபாய்க்கு வித்தேன். நேரா பஸ் புடிச்சு திருச்சிக்குப் போயிட்டேன். ஒரேநாளிலே பணம் காலி. என்ன செய்றதுன்னு தெரியல்லை. திரும்பி வரவும் மனசில்லை. சந்திராவுக்கு ·போன் பண்ணினேன். அவதான் அப்ப எனக்கும் அம்மாவுக்கும் இருக்கிற சின்ன பிரச்சினைகளையெல்லாம் தீத்து வைப்பா. அம்மாவை ஆஸ்பத்திரியிலே சேத்திருக்குன்னு சொன்னா. நான்·போனிலேயே ஓன்னு அழுதிட்டேன். உடனே வான்னு சொன்னா. நான் வழியெல்லாம் அழுதிட்டே திரும்பி வந்தேன். நேரா சந்திரா வீட்டுக்குதான் போனேன். என்ன நடந்ததுன்னு அவ கேக்கலை. என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனா. அம்மாவைபாத்ததுமே அழுதிட்டே காலிலே விழுந்து அழுதேன். அவளும் அழுதா…”
”அம்மா கிட்டேருந்து படிப்படியா வெலகிட்டேன். அம்மாவும் என் கிட்டேருந்து மரியாதையான தூரம் வச்சுகிட்டா. ஆனா அதுக்குப் பின்னால அவ பழைய கலகலப்போட இருக்கல்லை. கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு வயசாகி கிழவியா ஆனதுமாதிரி இருந்தது. வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டா. அவளே தனக்குத்தானே பேசிக்கிட்டு கோயில் குளம்னு போய்ட்டு இருந்தா… அப்றம்தான் சந்திராகூட நெருங்க ஆரம்பிச்சேன். அவகூடவே காலேஜ் போவேன். அவளை என் ஸ்கூட்டரிலே பின்னால உக்காரவச்சு கூட்டிட்டுப் போவேன். பாதிநாள் அவ வீட்டிலேதான் இருப்பேன். அம்மாகூட என்னைப் பத்தி அவகிட்டதான் கேட்டு தெரிஞ்சுகிடுவா”
”பி.ஏ முடிச்சப்ப மேற்கொண்டு என்ன பண்றதுன்னு தெரியாம திண்டாடிட்டிருந்தேன். என்னென்னமோ கொழப்பம். அம்மா சந்திராவைக் கூப்பிட்டு என்னடி என்ன செய்யபோறான் அவன்னு கேட்டிருக்கா. சந்திரா என்கிட்டே கேட்டா. நான் தெரியல்லைன்னு சொன்னேன். சரி நான் சொல்றேன் நீ விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படி, அட்வர்டைஸிங்லே உனக்கு இண்ட்ரெஸ்ட் இருக்குன்னு சொன்னா. நான் அப்டியே பிரகாசமாயிட்டேன். எப்டி தெரியும்னு கேட்டேன். சிரிச்சுகிட்டே, எனக்கு உன் மனசு தெரியும்… உன் மனசு முழுக்க பெண்கள்தான். பெண்கள் கூடவேதான் நீ இருக்க விரும்புவே… உன்னாலே நீ வேற பிஸினஸோ வேலையோ செய்யமுடியாதுன்னு சொன்னா”
”நான் அப்டியே அதிர்ச்சி ஆயிட்டேன். மூஞ்சியிலே செருப்பால அடிச்ச மாதிரி ஆயிட்டுது. அப்டியே கெளம்பி வெளியே போய்ட்டேன். எங்கெங்கோ சுத்திட்டு வீட்டுக்கு வந்தேன். அம்மா இல்லை. ரூம்ல வெளைக்கைக்கூட போடாம உக்காந்திருந்தேன். அப்ப ஸ்கூட்டர் சத்தம். சந்திரா வந்தா. நான் கதவைத் தெறந்தேன். எங்க போயிருந்தே? செல்லிலே கூப்பிட்டுட்டே இருந்தேனேன்னா. நான் பாக்கலைன்னு சொன்னேன். உள்ளவந்து உக்காந்தா. உக்கார்டான்னு சொன்னா நான் சோபாவிலே உக்காந்தேன். என் எதிரிலே உக்காந்து என்னையே பாத்திட்டிருந்தா. ஸாரி யதார்த்தமா சொன்னேன்னு சொன்னா. நான் தலைய தூக்கவே இல்லை. இதபார், நீ ஒரு ஆம்பிளை. நீ பொம்பிளைங்களை நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லை. உன் மனசு அங்க போகுதுன்னா அது உன்னோட நேச்சர். அந்த நேச்சருக்கு ஏத்த வேலையிலதான் நீ மகிழ்ச்சியா இருக்க முடியும்… அதான் சொன்னேன்னு சொன்னா.”
”நான் முரட்டுத்தனமா நான் ஒண்ணும் அப்டி இல்லைன்னு சொன்னேன். பொய், நீ எந்தப்பொண் படத்தையும் அஞ்சு நிமிஷமாவது பாப்பே. பெண் உடல்மேலே உனக்கு அப்டி ஒரு மோகம் இருக்குங்கிறத நான் எத்தனையோ வாட்டி கவனிச்சிருக்கேன்ன்னு சொன்னா. எனக்கு ஆத்திரமோ வெறியோ… ஏன் அப்டி சொன்னேன்னு தெரியலை. கண்ணைத் தூக்கி ஆமா நான் உன் உடம்பைக்கூடத்தான் ரசிச்சு பாப்பேன். இப்ப என்னன்னு கேட்டேன்
அப்டியே ஸ்தம்பிச்சு போய்ட்டா. சட்டுனு எந்திரிச்சு கதவைத் தெறந்து வெளியே ஓடினா. என்னால நான் என்ன சொன்னேன்னு நம்பவே முடியல்லை. அவளுக்குப் பின்னாலே ஓடினோனா கதவைத் திறந்து வெளியே ஓடிட்டா”
பெருமூச்சுடன் கண்களை மூடி படுத்திருந்தேன். ”ஸோ அங்கதான் ஆரம்பிச்சுது இல்ல?” என்றான் ஜோ.
ஜெயமோகனின் குறுநாவல் – அனல்காற்று – 6 அனல் காற்று – 5, அனல்காற்று – 4, அனல்காற்று – 3, அனல் காற்று – 2, அனல்காற்று – 1