வெண்முகில் நகரம் – சூதும் சூழ்ச்சியும்

சகோதரர்களுக்கு இதில் ஒப்புதல் இல்லை. வில் குலைத்து இளவரசியை கேட்டவன் விஜயன். அவன் அள்ளி வந்த புதையல். அவனுக்குரியவள் அவள் என்பதே முறை என்று தலைக்குனிகிறான் தருமன். வென்று வந்தவனான அர்ஜுனனின் அகமோ யானைகள் மேய்ந்து சென்ற புல்வெளி என்று பராசரர் புராணசமஹிதையில் கூறும் உவமை போல எந்த சொல்லோடும் ஒட்டுவதில்லை. அருகமர்த்தி கேட்கையில் மூத்தவர் தோளும், என் வில்லும், இளமைந்தர் வாழ்வும் முழுமையாகவே எங்கள் தமையனுக்குரியவை என்கிறான். சுயம்வரத்துக்கு முன்பே அவளை கண்டேன். காதல் கொண்டு விட்டேன் என்று பீமன் கூற, நகுல சகதேவனுக்கும் தமையன்களை போல அவள் மீது காமமிருந்தது. ஆனால் பேச்சுகள் நெளிந்து வளைந்தன. கலைந்து மறைந்தன. சொல்லென்று ஒன்றும் நிற்கவில்லை. முகம் நோக்காது சொற்களால் நோக்கிக் கொண்டாலும் அவை நிற்காமல் வழுவிக் கொண்டேயிருந்தன. பாஞ்சாலத்தின் நெறிகளையும் முறைமைகளையும் அறிந்த பாணரின் சொற்றுணையும் பெண்ணென விறிலியின் மொழியும் அவர்களுக்கு தேவையென்றாயின. இறுதியில் இருண்ட அந்தியும் மெலிதான குளிர்காற்றாலும் நிறையும் ஹேமந்த பருவம் தருமனுக்கும் காற்று காலமான சரத் பீமனிடமும் மழை பொழியும் வர்ஷத்தில் அர்ஜுனனுடனும் வறண்ட கிரிஷ்டத்தில் நகுலனுக்கும் வசந்தம் சகதேவனுக்கும் மீதமுள்ள சிசிரம் அவளுக்குமாக திரௌபதியின் காலத்தை பகுத்துச் சொல்கிறாள் விறலி. அது மௌனமாக ஏற்கப்படுகிறது என்பதில் தொடங்குகிறது வெண்முகில் நகரம்.

இந்த திருமணத்தில் குந்தி கணிக்கத் தவறிய பிழை ஒன்றுண்டு. அது துருபதனின் வஞ்சத்தோடு  அதற்கு நிகரான பாஞ்சால பெருங்குடிகளின் வஞ்சம். அவள் அதனை அதிக எடை கொண்டு நோக்கியிருக்கவில்லை. பாஞ்சாலன் அதர்வ யாகத்தின் மூலம் மகளை பெற்றதே பாண்டவர்களை அடிமைக் கொள்வதற்காக என்பதை தனது ஆசிரியரான துர்வாசரின் மூலம் அறிந்துக் கொள்கிறார். நேரம் கடந்து விடவில்லை. அவர் மகன்களை கொண்டு வைக்கவிருக்கும் பேருயரத்திற்கு தடையென வருபவர்களை துணையென ஆக்கிக் கொள்வது ஒரு முரணியக்கம். ஐவரையும் மணந்துக் கொள்வதன் வழியே அஸ்தினபுரி அவளது காலடியில் கிடக்கும். துருபதனின் வஞ்சமும் தணிந்து விடும். குந்தியின் ஆசையும் நிறைவேறும். திரௌபதியை ஐவருக்கும் ஒருவளாக்குவதே சரியானது. அது பிழையை நேர் செய்தல்.

திரௌபதி பெண்ணென்ற அகராதிக்குள் அமைபவள் அல்ல. படபடக்கும் கண்கள், துடிக்கும் உதடுகள், நாணத்தால் சிவக்கும் கன்னங்கள், அதனை அடக்க எண்ணும் பாவனை உடல் மொழிகள் கொண்டவளல்ல. கண்களை இயல்பாக விரித்து ஆண்களை நோக்குபவள். சொற்கள் தடுமாறுவதில்லை. கைகள் செய்வறியாது கொழுகொம்பென எதையும் பற்றிக் கொள்வதில்லை. மொழி பிசகுவதில்லை. எண்ணுவதொன்றும் செயலொன்றுமாக சித்தம் தடுமாறுவதில்லை. நோக்கும் எவரையும் அடிபணிய வைக்கும் நிமிர்வும் தெய்வங்களுக்கு மட்டுமேயிருக்கும் ஈர்ப்பும் அவளிடமிருந்தன. மலைநிலத்தின் உருளைக்கற்களை போல தன்னளவில் முழுமைக் கொண்டுள்ள அவளே பாரதவர்ஷமெங்கிலும் இருக்கும் இளவரசர்களின் கனவு.  அவளின் ஆணவத்தை அவளின் மிடுக்கை, அவளின் குறுநகையை, அவளின் அறிவை அவளின் நாணமற்ற நடத்தையை குறித்து அரண்மனை பெண்களெல்லாம் பொறமை கொண்டனர். அவர்கள் தன் மனதுக்குவந்தனிடம் கேட்கும் கேள்விகளுள் முக்கியமானது அவன் திரௌபதியை விரும்புகிறானா என்பதைதான். அவள் பேரரசி. சக்ரவர்த்தினி. அதுவே அவள் விழைவு. பாண்டவர்கள் எனும் வில்லெடுத்து அதில் தன் தந்தையின் தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை வைத்து தன் எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க காத்திருக்குமவளுக்கு அனைவருமே, அதற்குதவும் அனைத்துமே கருவிகள்தான். பாரதவர்ஷம் முழுவதிலும் இலக்கொன்றே இலக்கென்னும் கூர்மையான சித்தம் கொண்டவர்கள் கிருஷ்ணனும் பாஞ்சாலியும் மட்டுமே. அவளுக்கு ஐவர் சம்மதமே.

காம்பில்யத்தில் நடக்கும் பாஞ்சாலியின் திருமணத்திற்கு விதுரர் குண்டாசியோடு வருகிறார். எரிநிகழ்வு சதியை குண்டாசியின் அகச்சிதறலை வைத்து ஓரளவு ஊகித்துக் கொண்டவர் விதுரர். ஆகவேதான் தனது சந்தேகத்தை சங்கேதமாக்கி அன்றே பாண்டவர்களை எச்சரித்திருந்தார். அந்நிகழ்வுக்கு பிறகு அவர் பாண்டவர்களை சந்திப்பது இதுவே முதன்முறை. உண்மை அறிந்திருந்த போதிலும் தருமன் எரிநிகழ்வு குறித்து பேரரசர் திருதராஷ்டிரருக்கு அனுப்பிய முறையான திருமுகத்தில் காந்தாரர்களையோ அவரது மைந்தர்களையோ காட்டி கொடுக்கவில்லை என்பதை பாஞ்சாலத்தில் வைத்து தருமனிடம் நினைவுக் கூறுகிறார் விதுரர்.

நாடே கை விட்டு போகுமென்றாலும் தாயின் சொல்லே வேதம் என்றாலும் தருமனுக்கு தகப்பனின் அகமும் அவர் கற்பித்த அறமும் முக்கியமானவை. கற்ற நுால்களும் அவையளிக்கும் நெறிகளும் மீறவியலாதவை. ஷத்திரியன் ஒருவனுக்கு இருக்கவியலாத இயல்பெனினும் போர்க்களத்திலும் அவனுக்கு அறமே முன்னிற்கிறது. கோழை என்றும் தெளிவற்றவன் என்றும் தன் மீது விழும் விமர்சனங்களை அவன் அறிந்திருப்பதோடு அவற்றில் அவனுக்கே சற்று உடன்பாடும் உண்டு. பீமனும் அர்ஜுனனும் அவ்வப்போது தன்னை நோக்கி உதிர்க்கும் பகடியும் எரிச்சலும் கலந்த சொற்களின் பொருளை அவன் உணராதவன் அல்ல.

எரிநிகழ்வின் உண்மையான குற்றவாளிகளை தான் வெளியிட்டிருப்பின், பேரரசர் தனது மகன்கள் நுாற்றுவரையும் மைத்துனரையும் கழுவிலேற்றியிருப்பார். அதோடு எங்கோ ஆழத்தில் தன் மைந்தனின் முடிசூடலுக்காக ஏங்கிய தன் மனதின் ஓலத்தையும் ஒதுக்கி விட முடியாது. இருளில் தனிமையில் தன் ஆன்மாவுக்குக் கூட கேட்காத குரலில் என் குலம் அழியட்டும் என தீச்சொல்லிடுவார். எரிநிகழ்வில் எங்களின் அழிவை கேட்டதும் ஒருவகையில் அவருக்கு அது நிறைவே. அதை உணர்ந்ததில் கொள்ளும்  நிறைவடைந்திருப்பார். அதை அவர் உணர்ந்துமிருப்பார். அக்குற்றவுணர்வின் குரலை அமிழ்த்தவே பெருந்துயர் என்ற பாவனைக்குள் தன்னை பொத்தி வைத்துக் கொண்டார் என்கிறான்.

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

விதுரரால் எதையும் பேசவியலாது. தர்மன் தெளிவான சிந்தனையோடு தொடர்கிறான். தான் ஒருபோதும் மணிமுடியை துறக்கப் போவதில்லை என்றும் அதை கவர துரியோதனனோ ஏன் பீமனோ முயன்றாலும் கூட அவர்களை கொல்வதற்கும் தயங்க மாட்டேன் என்கிறான். பாண்டவர்கள் ஐவரில் தானே ஆற்றல் மிக்கவன். தோள் வல்லமை உள்ளவன் போரிடலாம், படை நடத்தலாம். ஆனால் மனிதனை இணைப்பவனே சக்ரவர்த்தியாகிறான். அதை இன்று பாரவர்ஷத்தில் எனக்கிணையாக செய்யக் கூடுபவன் இளைய யாதவன் மட்டுமே. முடிசூடிய பிறகு காந்தாரரை எரிநிகழ்வுக்கான நட்டஈடு பெற்றுக் கொண்டு வெளியேற்றுவதோடு கணிகரை கழுவிலேற்றுவேன். கர்ணன் இதில் சம்மந்தப்பட்டிருப்பின் அவனையும் கொல்வேன். அஸ்தினபுரியை வென்ற பிறகு அதன் பாதியை துரியோதனனுக்கு அளிப்பேன் என்கிறான். ஆனால் முடிசூட அவசரம் கொள்ளப் போவதில்லை என்றும் பெரியதந்தையின் மறைவுக்கு பிறகு முடிவெடுப்போம், அஸ்தினபுரி எவருக்கென்று என்றும் அழுத்தமாக விழுகின்றன அவனது சொற்கள்.

அவை உண்மையை தோய்த்தெடுத்த நாணமற்ற சொற்கள். வெளியில் இழுத்து போடப்பட்ட சுயம். பெண்ணால் உணர்த்தப்பட்ட ஆணின் அகம். ஆணுருவாக்கம். கோழையென்றும் அகநெறிகளுக்கு மட்டுமேயானவன் என்றும் போர்களத்துக்குரியவன் அல்ல என்றும் தன் மீது விழுந்த கணிப்புகளை நம்பியும் நம்பாமலுமிருந்த அவனிடம் அவனை அறிமுகப்படுத்தும் தருணம். தாய் ஊட்டாததை தாரம் உணர்த்துகிறாள். பாஞ்சாலியின் விழைவு எதுவாகவிருப்பினும் அதில் விளைந்தவன் அவனுமாகிறான். பீமனை செயல் நோக்கி ஒருக்குபவளும், அர்ஜுனரை உந்துபவளும் நகுல சகதேவனை எழும்பி நிற்க வைப்பவளும் அவளே.

ஆனால் குந்தியின் உத்திகள் வேறானவை. காம்பில்யத்தின் மருமகன்களாக வெற்றுத் திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பதை விட அஸ்வத்தாமன் மீது படை கொண்டு பாஞ்சாலத்திலிருந்து துரோணரால் கவர்ந்தெடுக்கப்பட்ட சத்ராவதியை மீட்டு அதில் திரௌபதியை மணிமுடி சூட்டி அமர வைக்க வேண்டுமென்று மகனை துாண்டுகிறார். அது பார்த்தனுக்கு வலுவான எதிரியாக உருவாகிக் கொண்டிருக்கும் அஸ்வத்தாமனை வளர விடாததோடு மகன்களுக்கு ஆள்வதற்கான நிலமும், மருமகளுக்கு தேவைப்படும் வஞ்சம் கொண்ட கொலைத் தெய்வம் என்ற உளச்சித்திரமும்,  அர்ஜுனன் மீதான பாஞ்சாலனின் கோபமும் தணியும் என்பதான மும்முனை நகர்வு. சாணக்கியருக்கும் பேரன்னை அவர்.

நிலமற்ற இளவரசர்கள், சொந்த நிலத்திற்கு செல்ல விழையவில்லை. அர்ஜுனன் அன்று துரோணருக்காக தான் துருபதனுக்கு இழைத்த பெரும்பிழைக்கு பரிகாரமாக இழந்த மணிமுடியை ஈட்டி தர எண்ணுகிறான். ஆனால் தருமனுக்கு இதில் உடன்பாடிருக்கவில்லை. சத்ராவதி அஸ்தினபுரியின் நட்புநாடு, துணைநாடு. அதை வெல்வதோ அதில் ராணியென துரௌபதியை அமர வைப்பதோ அஸ்தினபுரிக்கு எதிரானது. மூதாதையருக்கெதிராக பாண்டவரின் வில்லோ சொல்லோ எழக் கூடாது என்கிறான். அஸ்தினபுரியின் அரசப்போரில் தனக்கு யாதொரு கருத்தும் இல்லையென்றாலும் தர்மனையன்றி யாரொருவரையும் காம்பில்யம் அஸ்தினபுரியின் அரசானாக ஏற்காது என்று சுற்றி வளைக்கிறது துருபதனின் சொல்.

மகாபாரதக் காவியத்தை மறுஉருவாக்கம் செய்வதென்பது சமான்யமான செயலன்று. வரலாற்றுக்கு முந்தையக் காலத்தை பற்றிய அறிதல், அக்காலகட்டத்தில் வாழ்ந்த ரிஷிகள் தங்கள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பான வேதங்கள், ஒன்றை அல்லது ஒருமையை நோக்கி செல்லும் உபநிடதங்களின் பயணங்கள், ஆறு மதங்கள், ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவங்கள் என அக்காலத்தில் உருக்கொண்டிருந்த சிந்தனை மரபின் மீதான புரிதல், மகாபாரத காலகட்டத்திற்கு முன்பே சிந்து கங்கை என்ற இரு பராம்பரிய நதிகளின் சமவெளிகளை தன்னகத்தே கொண்ட ஆரியவர்த்தம் என்ற பெருநிலம், அதனுள் அடங்கிய பதினாறு ஜனபதங்கள், பதினாறு தேசங்கள், அவற்றையாண்ட அரசுகள், அவற்றின் குல வரலாறு, புவியியல் அமைப்பு, வாழ்க்கையாடல் என அனைத்துமறிந்த ஒரு பெரிய பரப்பிற்குள்தான் இந்த காவியத்தை வைத்தாக வேண்டும். பதினாறு நாடுகள் ஐம்பத்தாறாகின்றன. வடக்கே உசிநாரநாடு, குலிந்த நாடு, கிம்புருட நாடு, ஸ்வேதகிரி, தெற்கே சேதிநாடு, புலிந்தநாடு, விந்தியமலை, விதர்ப்பம், வாகடகம், அஸ்மாரகம், குந்தலம், வேசரம் திருவிடம், காஞ்சி பெருநகர், மாமதுரை, மணிபல்லவம், நாகநகரி என ஜம்புத்வீபத்தின் அனைத்து பகுதிகளும் இதில் பேசப்படுகின்றன. கொடிவழிகள் சொல்லப்படுகின்றன. அவற்றோடு அன்றைய துவாரகை மன்னனான யாதவ கிருஷ்ணன் இன்று வைணவ பெருந்தெய்வம். மகாபாரதத்தின் கிளைக்கதைகள், பின்னிணைப்புகள் (கீதையை கூட பின்னைணப்பு என்று கருதவே அதிக வாய்ப்புண்டு) ஆகியவற்றையும் நாவல் திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும், இத்தனை சவால்களையும் வென்றெடுக்க மிகப்பெரிய புலமை தேவைப்படும். அந்த பலமான அடித்தளத்தில்தான் வெண்முரசு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அக்காலகட்டத்தில் யாதவனின் பெருவளர்ச்சி ஒரு முக்கியமான மைல்கல். நாடாள்வது ஷத்திரியரின் உரிமை என்றிருந்த நிலை மாறிக் கொண்டிருந்தது. மகதம் வலுவான எதிரி. அஸ்தினபுரியில் அரியணை போர் நிகழலாம். பாரதவர்ஷம் அணிகளாக பிரியலாம். குலங்கள் தங்களுக்குள் ஒன்றிணையாவிடில், பேரரசு என்னும் பெருநிலை நோக்கி ஷத்திரியக்குலம் உட்பட அனைத்துக் குலங்களையும் திரட்டிக் கொண்டு வரும் பாரதவர்ஷ பெருவெள்ளம் ஸ்திரமற்றவற்றை ஒழித்து விடும் அபாயமிருந்தது அப்படியான இக்கட்டு பால்ஹிகர்களுக்கும் இருந்தது. கூர்ஜரத்தையும் சப்தசிந்துவையும் கைப்பற்றிய பின் இளைய யாதவனின் படைகள் பால்ஹிகர்களை நோக்கி திரும்பும். சந்தர்ப்பத்தை நழுவவிடின், சிந்துவின் முழுப்பெருக்கோடு இமயம் முதல் தென்கடல் வரை யாதவனின் கருடக்கொடி பறக்கும் நிலை வந்து விடலாம்.

மலைக்குடிகளான பால்ஹிகர்கள் சுதந்திரமானவர்கள். போர்கள், படைகள், எதிரிகள் என்பதை அறியாதவர்கள். அரச முறைமைகள், நவீன பாவனைகள், தளுக்குகள் நறுக்குகளை உணராதவர்கள். அவர்கள் மக்கள் திரளென வாழ்ந்தனரேயன்றி அவர்கள் வாழ்விடத்தை நகரென்று கூற முடியாது. அவை நகரென்றாக வேண்டுமெனில் பௌதீக அரண் அவற்றை ஒருங்கு குவிக்க வேண்டும். அது ஏற்கனவே இருக்கும் மலைகளான இயற்கை அரண்களோடு செயற்கையாக உருவாக்கிக் கொள்ளும் கோட்டை. அதுவே பருவடிவிலும் மனதளவிலும் உருவாகும் எல்லைக்கோடு. அக்கோடு திறப்பானற்ற வீடுகள், அவர்களின் வகைதொகையில்லாத குடிப்பழக்கம், வரன்முறையற்ற சுதந்திரம் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும். கண்காணிப்பும் காவலும் அச்சமூட்டும். கடமைகளும் பொறுப்புகளும் தலைமையை மையமெனக் கொண்டு உருவாகும். அரண்மனை அறியவியலாத மர்மமென்றும் அதிகாரமையமென்றும் பாதுகாப்புக் கவசமென்றும் மாறும். அரசர் கடவுளுக்கு நிகர் வைக்கப்படுவார். ஒன்றையளித்து பலவொன்றை பெற்றுக் கொள்ளும் நுணுக்கம் அது. பால்ஹிகம் உருவாக்கும் அக்கோட்டை சிந்து கங்கை சமவெளி அரசுகளுக்கு அறைகூவல் விடுத்து அந்த தொன்மையான ஜனபதத்தை அரசென்றாக்கும்.

பால்ஹிகர்களுக்கு அஸ்தினபுரியோடு இரு உறவும் பாண்டவர்களோடு ஒரு பகையும் இருந்தது. சில வருடங்களுக்கு முன் பாண்டவர்கள் சௌனகத்தின் மீது படையெடுத்து விபுலரைக் கொன்று மணிமுடியை கவர்ந்து அதனை குந்தியின் சிரசில் சூட்டியிருந்தனர். உறவென்பது இளைய பாண்டவர்களான நகுலனும் சகதேவனும் மாத்ரநாட்டு இளவரசியான மாத்ரியின் மைந்தர்கள். மற்றொன்று அஸ்தினபுரியின் அரசரும் சந்தனுவின் தகப்பனாருமான பிரதீபரின் மூன்று மைந்தர்களில் நடுவிலுள்ளவர் பால்ஹிகர் என்பது. மூத்தவரான தேவாபி சூரியக்கதிர்களால் புண்ணாகும் தோல் நோய் கொண்டவராதலால் அவரால் நாடாள முடியாது. மூத்தவர் இருக்க தன்னால் முடிசூடவியலாது என்று மறுத்துரைத்த பால்ஹிகர்  அதனை இளையவன் சந்தனுக்கு அளித்து விட்டு தன் தாய் சுனந்தையின் நாடான சிபிநாடு சென்று அங்கு ஆட்சி செய்துக்கொண்டிருந்த மாதுலர் சைலபாகுவிடம் படைத்தலைவராக சேர்கிறார். பின் அங்கிருந்து வடக்கு நோக்கி செல்கிறார். மலைமடிப்புகளில் வாழும் தொன்மையான குடிகளை சேர்ந்த ஏழு மனைவியரை மணந்து அதன் வழியே பத்து மைந்தர்களை பெறுகிறார். அம்மைந்தர்களின் மூலம் மத்ரநாடு, சௌவீரநாடு பூர்வபால்ஹிக நாடு, சகநாடு, யவனநாடு, துஷாரநாடு போன்ற முதன்மை நாடுகளோடு கரபஞ்சகம், கலாதம், குக்குடன், துவாரபாலம் போன்ற மலைக்குடி அரசுகளும் உருவாகியிருந்தன.

அவர்களில் மத்ர நாட்டரசர் சல்லியனும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதன், ருக்மரதனும் சௌவீர மன்னர் சுமித்ரர் மற்றும் பால்ஹிக மன்னர் சோமதத்தரும் அவரது மைந்தர்களான ஃபூரி, சலன், பூரிசிரவஸ் ஆகியோரும் ஒன்று கூடுகின்றனர். திரௌபதியின் சுயம்வரத்துக்கு பிறகான கூடல் அது. பாரதவர்ஷத்தின் சூழலும்  ஒன்றிணைய வேண்டியதன் அவசியமும் குறித்து உரையாடுகின்றனர். அதற்கென ஒற்றுமையின்மையாலும் தொடர்பின்மையாலும் பிரிந்திருக்கும் பூர்வக்குடிகளான தங்களை ஒன்றிணைக்கும் மையமென சிபி நாட்டின் நிலவறையில் வாழ்ந்து வரும் நுாற்றாண்டுகள் கடந்த பிரதீபரின் மைந்தனான பால்ஹிகரை முன்னிறுத்த விழைகின்றனர். பூரிசிரவஸ் அவரை அழைத்து வரும் பணியை ஏற்றுக் கொள்கிறான்.

பூரிசிரவஸ் என்ற கதாபாத்திரத்திற்கு மகாபாரதத்தில் எத்தனை இடம் அளிக்கப்பட்டுள்ளதோ? ஆனால் வெண்முரசில் அவன் மத்துாறும் வெண்ணெயென திரண்டு வருகிறான். வேதகால இந்திரன், நடப்பு கால கிருஷ்ணன் ஆகியோரின் சிறு பதிப்பு போல காணும் கன்னியர் மீதெல்லாம் லயிப்புக் கொள்கிறான். ஆனால் அது அவர்கள் மீதானதல்ல. அது திரௌபதியிடம் கொண்ட பிரேமை. சிபியில் அந்நாட்டரசர் கோவாசனரின் மகள் தேவிகையை பிடித்துப் போகிறது. அவனுடைய பால்ஹிக நாட்டுக்கு தந்தையுடன் வந்த விஜயையும் அவனுக்கு பிடித்தமானவள்தான். இவர்களோடு பூர்வபால்ஹிக குடியான துர்கேசகுலத்தை சேர்ந்த பிரேமை என்ற பெண்ணை மணக்க நேரிடுகிறது. பிரேமையின் தமக்கை ஹஸ்திகையை நுாறை கடந்த பால்ஹிக பிதாமகர் மணந்துக் கொள்கிறார். சிபி நாட்டின் மண்ணறைக்குள் தன்னை அடைத்துக் கொண்ட அந்த முதுகிழவர், அழைத்து வரப்பட்டதிலிருந்து ஓரிடம் நிற்காது அலைகிறார். ஒருங்கிணைப்பதெல்லாம் அவரது வேலையல்ல. அவர் நிகழுலகம் சார்ந்தவரும் அல்ல. பழைய எண்ணங்களின்பால் வசப்படும் அவரின் நோக்கும் எண்ணமும் செயல்களும் வேறானவை.

திரௌபதியின் சுயம்வரத்துக்கு கலந்துக் கொள்ள வந்த துரியன், கர்ணன், காந்தாரர், கணிகர் அடங்கிய குழு இன்னும் அஸ்தினபுரி திரும்பியிருக்கவில்லை. பாஞ்சாலத்தின் எல்லையில் தசசக்கரம் என்ற இடத்தில் அவர்கள் முகாமிட்டிருந்தனர். அஸ்தினபுரி என்ற அரசு திருதராட்டினரால் எங்கோ ஆளப்பட்டுக் கொண்டிருக்க, அதன் அதிகாரங்கள் காம்பில்யத்திலும் தசசக்கரத்திலும் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். பத்து பால்ஹிக குலங்களின் குரலாக பூரிசிரவஸ் அவர்களை காண அங்கு வருகிறான். அஸ்தினபுரி என்ற பெருங்களிற்றின் இளவரசன் பண்படாத அந்த மலைமகனை திறந்த மனதோடு அணைத்துக் கொள்ள, அதில் நெக்குருகி அவர்களுடன் இணைந்துக் கொள்கிறான்

அப்போது அவர்கள் படையெடுப்புத் திட்டத்திலிருந்தனர். காம்பில்யத்தில் படையற்றிருக்கும் பாண்டவர்கள் மீது படையெடுத்து தருமனை போரில் கொன்று விடும் திட்டம் அது. எரிநிகழ்வின்போது கொண்ட குற்றவுணர்வு ஏதும் துரியனுக்கு இப்போதில்லை. இத்தகைய வஞ்சமே சகுனியும் கணிகரும் வேண்டுவது. இனி அவர்கள் அதிக சொற்கள் உகுக்க வேண்டியதில்லை. கர்ணன் படபடப்பு கொண்டவனாக இருக்கிறான். இதற்கு திரௌபதி என்ற கரியநிமிர்வு காரணமாக இருக்கலாம். இளவரசர்களெல்லாம் காதல் கொள்ள இளவரசிகளெல்லாம் பொறுமி தள்ள அந்த சூட்சும அரியாசனத்தில் திரௌபதி பேரரசியென அமர்ந்திருந்தாள். அது துருவன் நிலைக்கொண்டிருக்குமிடம். அவளும் துருவனை போல சலனமற்றிருந்தாள். ஆனால் அது விழைவுகளை விளைச்சலாக்கும் உழவு வசப்பட்டதன் நிர்சலனம். பதிலாக அவளுடைய மினுக்கல்கள் ஒவ்வொன்றும் அர்த்தமாகின. அவள் கணவர்கள் அவள் பீடத்தை தாங்கிக் கொண்டிருந்தனர். அவள் அங்கிருந்துதான் கர்ணனையும் நோக்கினாள்.

அப்போது அவன் அவள் கணவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். திட்டமிடாமல் எழுந்த திடீர் போர். வஞ்சத்தால் நிகழும் போர். பூரிசிரவஸும் இணைந்துக் கொள்கிறான். தமையன்கள் எவரையும் இழக்க விரும்பாமல் போரை தவிர்க்கும் நோக்கோடு அங்கு வரும் கௌரவர்களின் ஒரே பெண் வாரிசான துச்சளை அதற்கு பூரிசிரவஸின் உதவியை நாடுகிறாள். வழக்கம்போல அவன் மனம் அப்பெண்ணின் மீதும் நாட்டம் கொள்கிறது. அதோடு அவன் துச்சளையின் கூரிய சிந்தனையைப் புரிந்துக் கொள்கிறான். கர்ணன் இப்போரை நண்பனுக்காக முன்னெடுக்கவில்லை. அவன் கொள்ளும் ஆணவமே போரின் கருபொருள். நண்பர்களின் தனிப்பட்ட வஞ்சத்துக்கு அஸ்தினபுரியும் குருகுலமும் அழிந்து விடக் கூடாது என்ற துச்சளையின் கூற்றை பூரிசிரவஸ் கர்ணனுக்கு உணர்த்த, அதை புரிந்துக் கொண்ட கர்ணன் போரிலிருந்து பின்னடைய, துரியோதனன் அகத்தில் நிகழ்த்தி விட்ட போரை களத்தில் நிகழ்த்தியே தீருவேன் என பிடிவாதம் கொள்ள, போர் மூள்கிறது. போர் என்பது உடல்களின் கொந்தளிப்பு. அங்கே இலக்குகள் இல்லை. எதிரிகள் இல்லை. மானுடர்கூட இல்லை. அது குருதிவெறி கொண்ட தெய்வங்களின் நடனம். நாட்டியங்கள் முடிந்தபோது துரியோதனனின் தரப்பு தோல்வியை சந்தித்திருந்தது,  சாதகங்கள் நிறையவே இருந்த போதிலும். போருக்கான முன்னெடுப்பு கர்ணனின் பிழையெனில், சூழல் கனிவதற்குள் காய்களை (படைகளை) நகர்த்தியது துரியனின் தவறு. தவறுகள் தோல்வியை அழைத்து வந்து விடும். வெற்றியெனினும், தருமன் சமாதானத்தையே விரும்புகிறான். பார்த்தன் உட்பட அனைவரும் அதற்கு உடன்படுகின்றனர். தோல்வியுற்ற துரியனும் கர்ணனும் பரியேறிய பிணம் போல களத்திலிருந்து நகர்கின்றனர். காவல்மாடமொன்றில் அமர்ந்திருந்த திரௌபதி அக்காட்சியை தான் கண்டு விட்டதை தனது செந்நிற பட்டு மேலாடையை பறக்க விடுவதன் வழியே அவர்களுக்கு உணர்த்த, பிறப்பிலிருந்தே அவமானம் என்னும் இறப்புகளை பலமுறை அனுபவிக்க நேர்ந்த கர்ணனுக்கு மீண்டுமொரு இறப்பு நிகழ்கிறது. துதிக்கையில் புண்பட்ட யானை. இனி மீளல் என்பதே அதிசயம்தான்.

நுணுக்கங்களும் அபூர்வ தகவல்களும் படைப்பு கூர்மையாக்க வல்லவை. துரியனின் பீடத்தை வெகு இயல்பாக கர்ணன் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்வது, எதிரியெனினும் தருமனின் அறநிலையையும் பார்த்தனின் பற்றின்மையையும் கர்ணன் புகழ்வது, தனது பயணமொன்றின்போது குறுக்கிடும் ஆற்றின் இரைச்சலுக்கு எரிச்சல் கொண்டு, இத்தனை இரைச்சலிடும் ஒரு ஆற்றுக்கு யார் சிந்தாவதி என்று பெயரிட்டிருக்கக் கூடும் என பூரிசிரவஸ் எண்ணிக் கொள்வது கூட அழகுதான். அதிகாரம் கொண்டவர்களும் மெல்லுணர்வு கொள்பவர்களே. துர்வாசர், பலராமர் போன்ற பெருங்குருநாதர்கள் அழிவதில்லை, அப்பெயரில் தோன்றுபவர்கள் அல்லது கருதப்படுபவர்கள் அக்குருநாதரை ஆத்மபுடம் செய்து உள்ளத்தையும் அறிவையும் முழுதாக பெற்றுக் கொண்டவர்களென சிரஞ்சிவிகள் காலம் கடந்து வாழ்வதன் மாயம் அவிழ்க்கப்படுகிறது. பூர்ஜமரத்தின் பட்டைகளை வெட்டி சிறிய துண்டுகளாக்கி ஏடாக்கி அதில் நுால் எழுதுவது, பீதர்களின் ஒருவகையான அகலப்புற்களை கல்லுருளிகளால் சீராக்கி நறுக்கி பசையிட்டு ஒட்டி நிழலில் உலர்த்தி அதில் மரச்சாறுடன் மயில்துத்தம் கலந்த மையால் செங்கழுகின் இறகின் முனைக் கொண்டு எழுதப்படும் நீரிலும்  அழியாத எழுத்துகள், மான்தோலிலும் செம்புச்சுருளிலும் எழுதப்படும் ஆவணங்கள், பால்வண்ண ஆழியுடன் வெண்சங்கை இணைக்கும் யாதவனின் அடையாள குறிக்குள் சதுரக்குறிகளையொத்த யவனம், உகிர்கீறல்கள் போன்ற சோனகம், புள்ளிகளாலான காப்பிரி மொழி, சித்திர எழுத்துக்களான பீதம், தென்னகத்தின் சுழல் வடிவ எழுத்துகள், பாரதவர்ஷத்தின் செம்மொழி, பைசாசிக மொழி என ஏழு மொழிகளில் பொறிக்கப்பட்ட அரசனின் சொற்கள் போன்ற பல தகவல்கள் இதிலுண்டு. ஒவ்வொன்றுமே புதிது. ஆச்சர்யமூட்டுவது.

மிக பெரிய கனவு நகரென உருவாகியிருந்தது துவாரகை. துவாரகையின் அரசதிகாரம் ஸ்ரீதமன், சுதாமன், தாமன், வசுதாமன், விகதர், பத்ரசேனர், சுபலர், கோகிலர், சனாதனர், வசந்தர், புஷ்பாங்கர், சுபத்ரர், தண்டி, குண்டலர், மண்டலர், பத்ரவர்த்தனர், வீரபத்ரர், மகாகுணர், மதுமங்கலர் என தோழர்களாலும் யாதவர்களாலும் நிரம்பியிருந்தது. வசுதேவரின் தமையனான காவுகர் யமுனைக்கரையில் மதுவனத்தை ஆள, மதுராவை வசுதேவரும் உத்தரமதுராபுரியை தேவகரின் மூத்த மைந்தரும் ஆண்டனர். கோகுலமும் பதினெட்டு ஊர்களும் நந்தகோபரின் தலைமையிலிருந்தன. அஸ்தினபுரியின் முக்கிய அமைச்சரான விதுரரின் மகனான சுசரிதன் நந்தகோபரின் முக்கிய மந்திரியும் ஆலோசகருமாக அங்கு அமர, துவாரகையின் பெருநிற்றலில் யாதவநிலங்களும் அரசுகளும் வலிமைக் கொண்டன.

கிருஷ்ணனின் வளர்ச்சியில் யாதவக்குலம் பெருமைக் கொண்டாலும் அதன் குல மூத்தவரும் மதுராவை ஆண்டவருமான ஹேகயகுலத்து மாமன்னர் கார்த்தவீரியனின் வரலாற்றை அவர்கள் மறந்து விடவில்லை. கங்கையையும் யமுனையையும் வென்ற கார்த்தனின் வீரியக்கரங்கள் பாரதவர்ஷத்தை வெல்லும் பொருட்டு எழுந்தபோது அவை பரசுராமரால் அழித்தொழிக்கப்பட்ட வரலாறு அச்சுறுத்தலாக அவர்களை தொடர்ந்துக் கொண்டுதானிருந்தது. அதேசமயம் பாரதவர்ஷமெங்கும் பரவிக் கிடந்த யாதவர்கள் தங்கள் கிரீடமென துவாரகையை உணர தொடங்கினர். தண்டகாரண்யத்திலிருந்தும் தெற்கே வேசர நாட்டிலிருந்தும் கூட யாதவர்கள் அங்கு வர தொடங்கினர்.

அதன் தலைவனான கிருஷ்ணன் தன் செயல்களின் வழியே வீரத்தின் வழியே சூழ்ச்சியின் வழியே நகரின் வழியே துறைமுகத்தின் வழியே பாரதவர்ஷத்தின் அரசுகளுக்கு அறைகூவல் விடுப்பதை போல நலிந்தோருக்கும் மற்றோருக்கும் அன்பழைப்யையும் அனுப்பிக் கொண்டுதானிருந்தான். அவன் செயலாற்றி சோர்பவனல்ல., களியாடி செல்ல வந்தவன். நுால்களும் இசையும் கலைகளுமாக நிறைவுற்று அமர எண்ணுபவன். பகல்களில் ஒளியையும் இரவுகளில் இருளையும் சுவைப்பவன். மானுடரின் அறியாமையை வென்று விலங்குகளின் அறிவை மெச்சுபவன், மகளிரின் மழலையரின் முதியவர்களின் அழகில் மயங்குபவன். ஒவ்வொரு கணமும் விழித்திருப்பவன். விழிப்பையே உவகையாக மாற்றிக் கொள்பவன். எனினும் நிகழ்வன அனைத்திலும் தொடர்பற்று எங்கோ நிலைப்பவன். கம்சரைக் கொன்று மதுராவை வென்றது ஒரு பெரிய தொடக்கம். அதன் பின் அவனுக்கும் ராதைக்குமான கதைகள் பெருக்கெடுத்தன. இளவேனிலும் இளங்குளிருமான நறுமண மலர்ச்சோலை. பொழியும் நிலவு. குழலிசை. காதலிகள் ஓடி வருகின்றனர். அவன் மண்ணில் வாழும் கந்தவர்வன். இனி அவனுக்கு வயதாகவே முடியாது. அவன் மீது பிரேமைக் கொண்டவர்கள், அவனே அனைத்துமென அடிமைக் கொண்டவர்கள், தங்களால் இனி போராடவியலாது என்ற நிலையிலிருப்பவர்கள், அங்ஙனம் கருதிக் கொண்டவர்களென பன்குலத்தோரும் அடர்கானகம் கடந்து தென்மேற்கு கூர்ஜரத்தின் வறண்ட பெரும்பாலையை கடந்து துவாரகையை நோக்கி வந்துக் கொண்டேயிருந்தனர்.  பல இனங்களும் பன்மொழிகளும் அங்கு புழங்கின. ரிஷபவனத்தை சேர்ந்த பன்னிரு யாதவக்குலக் குழுத்தலைவர்களில் ஒருவரான சத்யகரின் மைந்தனும் கிருஷ்ணனின் மருகனுமான சாத்யகியும் அவ்வகையில் பயணித்து துவாரகையை அடைகிறான். அங்கு மாமனையும் அடைகிறான்.

பெண் கொண்ட நிலத்தில் நெடுநாட்கள் இருக்கவியலாதென்றபோதிலும் வேறு வழியின்றி பாண்டவர்களும் குந்தியும் காம்பில்யத்தில் தங்கியிருக்கின்றனர். தருமனின் அறம் தந்தை உயிருடனிருக்கையில் அஸ்தினபுரியின் மணிமுடி குறித்து பேச்செழுப்பாது. உத்தரபாஞ்சாலத்தை போரிட்டு வெல்லலாம் என்ற அவனது முடிவு பார்த்தனால் மறுக்கப்படுகிறது. ஜராசந்தரின் தலைமையின் கீழிருக்கும் மகதத்தை வெல்லுமளவுக்கு அவர்களிடம் படைபலமும் கிடையாது. இந்நிலையில் கிருஷ்ணன் சாத்யகியுடன் அங்கு வருகிறான். பாண்டவர்களை சந்திக்கும் அவன் தருமனின் அறச்சிக்கலுக்கு விடையாக, திருதராஷ்டிரரின் மனதுக்கு பங்கம் ஏற்படாமல் பாதி நாட்டை கோருவதற்கான துாதனாக அஸ்தினபுரி செல்வதற்கு தருமனின் ஒப்புதலை வேண்டுகிறான். பலவாறான மறுப்புகளுக்கு பிறகு தருமன், துரியனே தன் தம்பியருடன் வந்து பாதி நாட்டை உவந்தளிந்து தனது கையால் மணிமுடியை தொட்டு சூட்டினால் அம்மண்ணை ஏற்கிறேன் என்கிறான்.

இத்துாதுநாடகத்துக்கு பின்னிருப்பவர் குந்தியே. அவரால் எதன் பொருட்டும் அஸ்தினபுரியையும் பாண்டுவின் மணிமுடியையும் இழக்க முடியாது. அஸ்தினபுரியின் மணிமுடி என்பது ஒரு அடையாளம். ஒரு பெருமரபு. யமுனைக்கு அருகிலிருக்கும் ஊர்கள் சிலவற்றை கௌரவர்களுக்கு அளிக்கலாம். அதை கொண்டு அவர்கள் தட்சிணகுருநாட்டை உருவாக்கிக் கொள்ளட்டும். திருதன் உயிருடன் இருக்கும்வரையிலும் அந்நாட்டை நட்பு நாடாகவும் பிறகு அதனை கப்பம் செலுத்தும் நாடாகவும் ஆக்கி கொள்ளலாம் என்பது குந்தியின் திட்டம். அத்திட்டத்தை வரைபடமாக கிருஷ்ணனுக்கு அளிக்கிறாள். யமுனையின் துணையாறுகளால் வெட்டப்பட்ட அந்நிலம் யாதவகுடிகளால் சூழப்பட்டவை. அங்கு வணிகம் வளர வேண்டுமெனில் யாதவர்களின் துணை வேண்டும் என்பது அதனுள்ளிருக்கும் சூழ்ச்சி.

குந்தியை விட, ஏன், தன் கணவர்களை விடவும் ஒரு தலைமுறை பிந்தி பிறந்த திரௌபதிக்கு வேறு திட்டமிருந்தது. அவளுக்கு அஸ்தினபுரி தேவையில்லை. யமுனைக்கரையில் யாதவர் சூழ்ந்த நிலமே அவள் வேண்டுவது. அஸ்தினபுரியின் மணிமுடியை சூடிக் கொண்டு இரண்டாம் தேவயானி என்று நினைவுக்கூறப்படுவதல்ல அவள் வேண்டுவது. தான் வேண்டிய நிலத்தில்   தனக்கென ஒரு நகரத்தை நிர்மாணித்து சக்ரவர்த்தியென அமர வேண்டும் என்பதே அவள் விருப்பம். அவள் கொண்டது முழுமை. விழைவது முதன்மை.  அதோடு அஸ்தினபுரியின் ஹஸ்தியால் அமைக்கப்படும் காலத்தில் அங்கு ஓடிய கங்கை இப்போதில்லை. இனி வருங்காலங்களில் வணிகங்களே அரசியலை முன்னிறுத்துமாகையால் யமுனைக்கரையில் நிர்மாணிக்கவிருக்கும் தலைநகரை பெருந்துறைமுகமாக அமைக்கும் திட்டமும் அவளுக்கிருந்தது. துவாரகையை போல அந்நகரும் அவள் பெருமையை பாரதவர்ஷமெங்கும் கொண்டு சேர்த்து விடும். அவளிடமும் ஒரு வரைபடம் இருந்தது. அது அவளுக்கு சேர வேண்டியதென அவள் எண்ணும் தட்சிணகுருநிலத்தின் பெருநகர் அமைப்பும் வணிக வளர்ச்சியும் கருத்தில் கொண்ட நுணுக்கமான பிரம்மாண்டம். அவ்வெண்முகில் நகருக்கு அவள் பெயரும் இட்டிருந்தாள். இந்திரபிரஸ்தம்.

கிருஷ்ணனின் தேர் அஸ்தினபுரி நோக்கி செல்கிறது. காவியமும் முக்கிய கட்டங்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது. மகாபாரதம் நடந்த கதையா? அல்லது கற்பனையா… என்றால் இரண்டு கேள்விகளுக்கும் மையமாக ஆம் என்று கருத்துரைக்கலாம். அக்கால நிகழ்வுகளை, வாழ்வை, புவியியலை, மக்களை, மனநிலைகளை, மன்னர்களை, வேள்விகளை, உணவுகளை, கட்டடங்களை, விலங்குகளை என அனைத்தையும் கண் முன் நிறுத்துகிறது. அதனாலேயே அது உண்மையாகி விடுமா என்றால் உண்மையும் கலந்திருக்கலாம், அல்லது கற்பனையும் நிறைந்திருக்கலாம்.

கிருஷ்ணன் தன்னுடன் எந்த முறைமைக்குள்ளும் அடங்காத சிட்டுக்குருவிகளைப் போல அந்தந்த கணத்தில் வாழும் பலராமனையும் கூர்நோக்கும் மாமனுக்கு ஈடு கொடுப்பதற்கேற்ற சிந்தையும் கொண்ட சாத்யகியையும் அழைத்து சென்றிருந்தான். அவையின் கவனம் எங்கிருக்க வேண்டும், அவை முன்னவர் எவரை கவனிக்க வேண்டும். சகுனியின் கவனத்தை எங்ஙனம் திசை திருப்ப வேண்டும்? கணிகரை எங்ஙனம் அப்புறப்படுத்த வேண்டும்? அத்தையின் கவனம், கௌரவர்களின் எண்ணம், கர்ணனின் நகர்வு, திருதரின் முடிவான உத்தரவு என சூழ்நிலைகளை தனக்கேற்ப ஒருக்குகிறான். எந்நெறிகளிலும் அமையாதவர் என்ற அடைமொழிக்குள் வசதியாக அமர்ந்துக் கொண்டு எதனை வேண்டுமானாலும் பேச முடியும் என்ற கதாபாத்திரம் பலராமருக்கு. திருதராட்டிரர் உள்ளத்தை மறைக்கவியலாமலும் உள்ளதை சொல்லவியலாமலும் தவிக்கிறார். கௌவரர்களுக்கு சாதகமென நடைமுறை ஒருங்க தொடங்குகையில் அதை கலைத்து விடுவது விதுரரின் வேலை. தந்தை என்றும் ஆசிரியர் என்றுமான இரு நிலைகளின் இடையில் அகப்பட்டு வாளை கழுத்தில் வைப்பதும் எடுப்பதுமாக துரியன் தவிக்க, துச்சாதனனின் வேலை அதனை தடுப்பதும் கவனிப்பதும் என்றாக, நிகழ்வுகள் கிருஷ்ணனுக்கு சாதகமாக கனிய தொடங்குகிறது. பிறர் விருப்புகளை வகுப்பவன் அவனே.

இறுதி முடிவென அஸ்தினபுரியின் முடியுரிமையை பேரரசர் தருமனுக்கு அளிக்க, அதை அவரது மைந்தர்களே பாண்டவர்களிடம் அறிவித்து அரியணை அமர்த்துவார்கள். தருமனும் திரௌபதியும் தாங்கள் சூடிக் கொண்ட குரு மற்றும் தேவயானியின் முடியை துரியோதனுக்கு உவந்தளிப்பர். அதை பெற்றுக் கொள்ளும் துரியோதனன், தட்சிணகுரு நிலத்தை தமையனுக்கு அர்ப்பணிப்பார். அங்கு நகர் அமைக்கப்படும்வரை அவர்கள் அஸ்தினபுரியில் தங்குவார்கள் என்றும் தனிமுடி சூடிய பின்னரும் திருதராஷ்டிரரின் மைந்தர்களாக அவரது ஆணைக்கு கீழ் அமைவார்கள் என்றும் இரு நாடுகளும் எந்நிலையிலும் தங்களுக்கு போர் புரியாது என்பதோடு எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகினால் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்வர் என்றும் ஆணை வெளியாகிறது.

மணிமுடியை தமையனின் அறக்கொடையாக பெறுவது அதிலும் பாஞ்சாலியிடமிருந்து என்பது துரியன் நெஞ்சில் ஏறிய நஞ்சு. கனிந்தோ பணிந்தோ திரௌபதியால் எப்படி கொடுக்கப்பட்டாலும் அவனால் அந்த புண்ணை ஆற்றிக் கொள்ள முடியாது. ஆணவத்தாலும் ஆண்மையாலும் நிறைந்த ஆண்மகனுக்கு அது உடலிருக்க குருதியை வழித்தெடுப்பது போன்றது என்பதை காந்தாரியால் உணர முடிகிறது. பீஷ்மர் இவற்றுகெல்லாம் அப்பால் எங்கோ சென்று விட்ட முதியவர். திருதராஷ்டிரரின் தராசு முனை தன் சொந்த மகன்களை நோக்கி தாழ்ந்திருந்தது.

தகவல்களும் நுணுக்கங்களும் நாவலை காவியம் என்றாக்குவதற்கும் வாசிப்போரை கதை நிகழ்வில் கொண்டு வைப்பதற்கும் ஏற்றவை. மாத்ரநாட்டின் சகலபுரி என்ற கானகநகர் பற்றிய குறிப்புகள், போரில் தோல்வியடைந்தால் தன் கழுத்தை தானே வெட்டிக் கொள்ள வேண்டுமென்ற பால்ஹிககுடிகளின் நெறியான சுகண்டம் பற்றிய குறிப்புகள் போன்று எண்ணற்ற தகவல்கள் இதிலுண்டு. உணவின் வகைகள், செய்முறைகள், உண்ணுவதற்கான முறைமைகள், அமர்வதற்கான வரிசைமுறைகள், பரிமாறுவதற்கான நிரல்கள், முன்னும் பின்னுமான நடைமுறைகள் என அவற்றை விளக்குவதற்கென்றே ஒரு அத்தியாயம் உள்ளது.

பாண்டவர்தரப்பும் கௌரவர்தரப்பும் ஒருவிதமான புரிதலுக்குள் இரு அணிகளாக பிரிந்து தனக்கென நாடுகளை சேர்த்துக் கொண்டிருந்தன. உயிரற்ற விலையுயர்ந்த பொன்னாபரணங்களென பெண்கள் அங்குமிங்கும் கவரப்பட்டனர்.  பாஞ்சாலமும் துவாரகையும் பாண்டவர்களை வலிமைக் கொள்ள வைக்கும் என்பதால் அவற்றை சூழ்ந்திருக்கும் நாடுகளை தன் நேசநாடுகளாக்கிக் கொள்ள விழைந்தது கௌரவர்தரப்பு. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தை ஆள்வது கௌரவர்களுக்கு பலம். பாஞ்சாலத்தின் மறுபக்கமிருக்கும் உசிநாரர்களையும் கோசலத்தையும் அவர்கள் தங்களுக்குரியவர்களாக சேர்த்துக் கொண்டனர். மேற்கே துவாரகைக்கு எதிரிநாடான கூர்ஜரம், கிருஷ்ணனின் பலத்துக்கு அஞ்சி அதன் நட்பல்லாத நாடான காந்தாரத்தை அணுகியது. கூர்ஜரத்தை வெல்ல தருணம் பார்த்து கொண்டிருக்கும் சிந்து மன்னன் ஜயத்ரதனும் துவாரகைக்கு அஞ்சி கௌரவர்தரப்புக்கு வந்திருந்தான். இங்ஙனம் திருஷ்டாவதியின் கரை முதல் மேற்கே சோனகப்பாலைவனம் வரையிலான பெரும்பரப்பு கௌரவர் தரப்பாக ஆக, அதிலுள்ள சிறு இடைவெளியில் அமைந்திருந்தது சிபி நாடு. அந்த வகையில் அதன் இளவரசி தேவிகை முக்கியமானவள். தேவிகை பூரிசிரவஸின் காதலி. ஆனால் அதை முக்கியமற்றது. ஜயத்ரதனும் கௌரவர்களும் திட்டமிட, கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் தேவிகையை பாண்டியர் தரப்பு வென்று தருமனுக்கு மணம் முடிக்கின்றனர்.

மாத்ரநாட்டு இளவரசி விஜயையை கவர்ந்து வர செய்து அவளை சகதேவனுக்கு மணமுடித்ததன் மூலம் பால்ஹிக கூட்டமைப்பை உடைக்கிறான். கிருஷ்ணன். பால்ஹிக கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் இப்போது பால்ஹிகர்களை அஸ்தினபுரியின் துணையோடு அடக்கி விடலாம் என்றெண்ணுகிறார். பால்ஹீக கூட்டமைப்பின் பிரதிநிதியாக சென்ற பூரிசிரவஸ் மீள்வதற்குள் ஆட்டம் கலைக்கப்படுகிறது. இரு பெருங்கடல்கள் உடைப்பெடுக்க காத்திருக்கையில் ஆற்றில் நீர் எவ்வளவு ஆழம் ஓடினால்தான் என்ன? தன்னை சந்திக்க வரும் பூரிசிரவஸிடம் சல்லியர்,  மாத்ரநாட்டுக்கு சௌவீரம், சகர், துஷாரர், கரபஞ்சகம், கலாதம், குக்குடம் என ஒவ்வொன்றாக பணிந்து வருவதாகவும் யவனநாட்டுக்கும் பால்ஹிகத்திற்கும் தன்னுடன் இணைவதை தவிர வேறு வழியில்லை என்கிறார் ஆணவமாக.

மகதத்தின் ஒரு பக்கம் அங்கம் இருப்பது போல மறுபக்கம் காசியும் தம் கைக்கு வந்தாக வேண்டும் என்று பறக்கிறது கௌரவர் தரப்பு. இம்முறை பெண்களின் விழைவும் இதிலுண்டு. மூத்தவள் பானுமதி கௌரவர்களிடம் வந்து சேர இளையவள் பலந்தரையை பீமனும் நகுலனும் கவர்ந்து விடுகின்றனர். கை பொருளை பீமன் தட்டி பறித்ததுபோல துரியோதனன் தாளாத துயர் கொள்கிறான்.

மகதத்துக்கு அருகிலுள்ள சேதி நாடு இருதரப்புக்குமே இலக்குதான். பாண்டவர்கள் யமுனைக் கரையில் அமைக்கவிருக்கும் தட்சிணகுருநாடும் அவர்களின் துணைநாடான பாஞ்சாலமும் மதுராவும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பாண்டவர்களின் ஒரு பெருநிலத்தொகுதியாக அமைந்து விடும் நிலையில் அதற்கு மிக அண்மையிலிருக்கும் பெரிய நாடான சேதி நாட்டின் நட்பு  தேவை என்று கௌரவர்கள் எண்ணுகின்றனர். அதோடு தமகோஷருக்கும் அவர் மைந்தரான சிசுபாலருக்கும் மகதமன்னன் ஜராசந்தனுடன் நல்லுறவு உண்டு. சேதி நாட்டை வெல்லாவிடில் மகதம் என்ற பெரு எதிரி முளைத்து விடும். மூத்தவளான பிந்துமதியும் இளையவள் கரேணுமதியும் கௌரவர்களுக்கு அளித்து துச்சளையை மணந்துக் கொள்ளும் மறுசொல் கோருகிறான் சிசுபாலன்.

ஆனால் தென்றல்காற்று இம்முறை பாண்டவர்பக்கம் வீசுகிறது. சேதிநாட்டு இளவரசிகளை நகுலனும் பீமனும் கவர்ந்துச் சென்று மணக்கின்றனர். காசி இளவரசி பலந்தரை கை நழுவி போனபோது அடிப்பட்டு நிறைவின்மையால் தவித்த துரியனின் அகம் பானுமதியின் அண்மைக்கு பிறகு இந்நழுவலை தோல்வியென்றோ நிறையின்மையென்றோ உணரவில்லை. இதுவும் என் மீதான தன் வெற்றி என்று பீமன் எண்ணுவான். இதை நான் தோல்வியென்று நினைக்கவில்லை என்பதால் அவன் வெல்லவில்லை என அவனிடம் சொல்வது யார் என்கிறது அவனுள்ளம்.

ஷத்திரிய குல ஆண்கள் களத்தில் மடிவதற்காக உயிர் கொண்டு களத்தில் அதனை துறப்பதுபோல அரண்மனை பெண்கள் அரசியல் காரணங்களுக்காக பிறப்பெடுத்து உள்ளில் அகம் மடிகிறார்கள். பெண்களின் விருப்பங்கள் எதுவும் விருப்பங்கள் அல்ல. சில விதிவிலக்குகளைத் தவிர எவையும் உள்ளங்கள் அல்ல. சேதிநாடு கை விட்டு போன நிலையில் அஸ்தினபுரியின் முடி கௌரவர்வசம் வந்து நாடு இரண்டாகும்போது பெரிதான படைபலமற்றிருக்கும் அஸ்தினபுரியின் மீது மகதம் படையெடுத்து வரலாம். இந்நிலையில் சிந்து நாட்டரசனின் சேவை தேவையென்றாகிறது. அவ்வகையில் துச்சளை ஜயத்ரதனிடம் போய் சேருகிறாள். பானுமதி தன் பங்குக்கு கர்ணனுக்கு புளிந்தநாட்டு இளவரசி சுப்ரியையும் தனது தங்கை அசலையை துச்சாதனனுக்கும் மணம் செய்ய விழைகிறாள்.  நல்வாய்ப்பாக குந்தி மகள்களைப் பெற்றுக் கொள்ளவில்லை.

திருதர் தன் மைந்தர்களின் வெளிப்படையான நடத்தையை அறிவதைப் போல தன்னுள்ளம் மைந்தர்கள்வசம் சரியும் பக்கச்சார்பை நிலையெடுப்பதையும் உணருகிறார். தன்னையே அறைந்துக் கொள்வதுபோல துரியோதனனையும் துச்சாதனனையும் கர்ணனையும் கொல்லுமளவுக்கு அடித்து வீழ்த்துகிறார். எதிலும் அவருள்ளம் அமைதி கொள்ளவில்லை. அமைதியை நாடி விப்ரருடன் கானகம் செல்கிறார்.

பேராபத்து நேரவிருப்பதையும் அதில் தனது பங்கின் முக்கியத்துவத்தையும் ஏதோ ஒரு மங்கல நிமிடத்தில் உணரும் திரௌபதி, பானுமதிக்கு சாத்யகி மூலம் சேதி அனுப்புகிறாள். பெருஞ்சுழல் பெருக்கில் எதற்கும் பொருளில்லை. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுட வாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண் மீள்பவளே மூதன்மையாகி குனிந்து இங்கு பிறந்து விழும் மைந்தரை வாழ்த்த முடியும் என்றிருந்தது சேதி. அது ஒருவகையில் மன்னிப்பும் கூட.

நடந்தவையனைத்தும் திருமணங்கள் அல்ல, போர் சூழ்ச்சிகளே. இதில் கிருஷ்ணனே பெரும்பாலும் சூட்சுமமாக களமாடுகிறான். வங்க மன்னனின் மூத்த மகள் சுவர்ணையை பாஞ்சாலியின் தமையன் திருஷ்டத்யும்னனுக்கும் இளையவள் கனகையை தனது மருகன் சாத்யகிக்கும் முடிவு செய்கிறது அவன் உள்ளம்.  அங்குமிங்குமாக பகிரப்பட்ட அரண்மனை பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு விதை மட்டும் செடியாகி இயல்பாக மலர் உண்டாகிறது. அது துரியோதனனுக்கும் பானுமதிக்குமானது. அதுவரை துரியோதனன் உள்ளத்தில் தனக்கிருந்த இருந்த இடம் கூட பானுமதிக்கே சென்று விட்டதோ என கர்ணன் சல்லையுறுமளவுக்கு அவர்களிடையே அன்பு உருவாகிறது. ஆனால் அவனுடைய நண்பனால் இதை மிக சரியாக புரிந்துக் கொள்ள முடியும். அதனை நன்முறையில் களையவும் முடியும்.

போலவே, ஒரு விதையொன்று கருகியும் போகிறது. அது பூரிசிரவஸின் உள்ளம். தேவிகை, விஜயை, துச்சளை என்று அவன் விரும்பும், அவனை விரும்பும் பெண்கள் ஒவ்வொருவராக அவன் கண்ணெதிரே கைநழுவுகின்றனர். மாத்ர நாட்டில் அவன் சிறிது களமாடி பார்க்கிறான். இளவரசி விஜயை, அங்கு வருகை தந்திருந்த பூரிசிரவஸை நள்ளிரவில் அரவமின்றி அணுகி, தன்னை அழைத்துச் செல்ல ஆவன செய்யுமாறு கோருகிறாள். மறுநாள் கூடிய அவையில் பூரிசிரவஸ் தான் விஜயையிடம் சொல் கொடுத்து விட்டதாக கூற அரசவை முன்னிலையில் விஜயையும் அதனை ஆமோதிக்க, அவளை முதன்மை அரசியாக்குவதென்றால் அழைத்துச் செல் என சல்லியர் கூற துச்சளையையும் அவளை மணந்துக் கொள்வதால் விளையும் அரசியல் பலன்களையும் கருத்திற்கொண்டு சொல் கொடுக்க மறுத்து வெளியேறுகிறான் சிரவஸ். திருமணத்திற்கு பிறகு அவனெதிரே தட்டுப்படும் அப்பெண்கள் அவனை எங்கிலும் காணாதது போலவும், கண்டும் கருதாதது போலவும் நடந்துக் கொண்டு அவனை வஞ்சிக்கின்றனர்.

திருதர் நாடு திரும்புகிறார். குந்தியும் மைந்தர்களும் திரௌபதியும் அஸ்தினபுரி புகும் நிகழ்வு கொண்டாட்டமாகிறது. திரௌபதியை எதிர்க்கொண்டழைக்க வேண்டுமென்ற திருதரின் கட்டளையினால் கர்ணனின் இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. துரியோதனனும் துச்சாதனனும் இருபுறமும் நின்று பாஞ்சால இளவரசியையும் மூத்த பாண்டவரையும் அழைத்துச் சென்று அஸ்தினபுரியின் அரியணையில் அமர்த்துகின்றனர். அவர்களுக்கு முடிசூடப்படுகிறது. தருமன் அம்முடியை துரியோதனனுக்களிக்க அஸ்தினபுரியின் மணிமுடியை ஏற்ற துரியோதனன் தட்சிணகுருநாட்டை தருமனுக்கு அளிக்க, நாடு இரண்டாகிறது. பங்கீட்டில் அறப்பிழைகள் நேரிடின் அதைத் தடுக்கும் நோக்கோடு உடன் வந்த இளைய யாதவனும் அங்கிருக்கிறான்.

வந்தது போல தனியனாகவே நாடு திரும்பும் பூரிசிரவஸுடன் சாத்யகி நண்பனாவதோடு வெண்முகில் நகரம் முடிகிறது.

***

பிரயாகை, நிலைபேறும் பறந்தலைதலும் – கலைச்செல்வி

முந்தைய கட்டுரைரசனை ஏன் இன்றியமையாதது?
அடுத்த கட்டுரைஎம்.பக்தவத்சலம், மனித உரிமை – கடிதம்