- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
- அன்னைவிழிநீர்
- அறிகணம்
- ஊழ்நிகழ் நிலம்
- எங்குமுளப் பெருங்களம்
- மைவெளி
- ஊழின் விழிமணி
வெண்முரசு நாவல்களில் சில நாவல்கள் எந்த விதமான முன் எண்ணங்களுமில்லாமல் வெறுமே ஒரு படிமமாகவே வந்து வாய்ப்பதுண்டு. அதிலொன்று தீயின் எடை. இந்தச் சொல்லாட்சியை திரும்பத் திரும்ப சொல்லி அது அளிக்கும் வெவ்வேறு கற்பனைகளையும் எண்ணங்களையும் கொண்டு இந்த நாவலின் வடிவம் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் புனைவுகள் உருவாகும் விதத்தை அறிந்தவர்கள் மட்டுமே நம்பமுடியும்.
எடையற்றது தீ. ஆனால் பெருங்காடுகளை உண்டு அழிக்க அதனால் முடியும். பாறைகளை உடைத்துச் சிதறடிக்க முடியும். அதன் ஆற்றல் எல்லையற்றது. பேரெடை கொண்ட ஒவ்வொன்றுக்குள்ளும் தீ உறைகிறது. அவை உரசிக்கொள்ளும்போது உள்ளிருந்து சீறி வெளிவருகிறது. இங்கிருக்கும் பருப்பொருட்கள் அனைத்திலும் குடிகொள்வது அது என்று வேதங்கள் வகுத்தன. நெருப்புக்கான வேத காலப்பெயர்களே அற்புதமான கற்பனைகளாக அமைபவை. அதிலொன்று ஜாதவேதன், வேதங்களுடன் பிறந்தவன். வேதங்கள் அனாதியானவை. மனிதன் அவற்றை அறிவதற்கு முன்னரே கருவடிவில் காற்றில் இருந்தவை, வானில் உறைந்தவை. உடனுறைந்தது அனல், ஆகவே வேதம் அனலையும் அனல் வேதத்தையும் கண்டுகொள்கிறது என்று தொல்நம்பிக்கை சொல்கிறது.
இங்கே மாண்டவர்களை எரிதின்னக் கொடுப்பது நம் மரபு. மண்ணுக்கு அளிப்பது உலகெங்கும் உள்ள வழக்கம். உடல் மண்ணிலிருந்து வந்தது, மண்ணுக்கு மீள்கிறது என்பது பெரும்பாலான தொல்குடிகளின் நம்பிக்கை. இங்கு மட்டும் ஐந்து பருப்பொருட்களும் இணைந்து உருவானது அது என நம்பப்படுகிறது. ’பஞ்சபூத மம காத்ர’ என தொல்நூல் பாடல் ஒன்று சொல்கிறது. ஐந்து பூதங்களையும் ஒன்றுடன் ஒன்று பிரித்து அவ்வடிவை அழித்து எங்கிருந்து வந்தனவோ அங்கு ஒவ்வொன்றையும் மீளச்செய்வது அனல். அவ்வடிவை அவை கொண்டிருக்கும்வரை அவ்வனைத்தையும் ஒருங்கு சேர்த்து வைத்திருப்பதும் அதுவே. காமமென, பசியென, மூச்சென, சொல்லென, எண்ணங்களென, கனவென திகழ்வது அனலே.
எண்ணி எண்ணி இந்நாவல் என் உள்ளத்தில் விரிந்துகொண்டே சென்றது. குருக்ஷேத்திர பெரும்போர்க்களம் மெல்ல என் உள்ளத்திலிருந்து பின்னகர்ந்து இத்தனை பேர் இறந்தார்கள் எனில் அவர்கள் எவ்வண்ணம் எரியூட்டப்பட்டார்கள் என்பதை நோக்கிச் சென்றது. இந்நாவலில் வெவ்வேறு எரிசித்திரங்கள் உள்ளன. குருக்ஷேத்ரமே ஒரு பெரும் சிதையென ஆகும் தருணமிது. ஒவ்வொன்றாக எரிந்தமைகின்றன. உயர்வுணர்வுகள், தொல் நெறிகள், அறுதியில் அறம்.
இந்தப்பகுதியை எழுதும்போது தான் என் அகம் எத்தனை பிரம்மாண்டமானது சிக்கலானது என்பதை நான் அறிந்தேன். ஏனெனில் முற்றிலும் புதிதாக கண்டடைந்து கண்டடைந்து ஒவ்வொரு வாயிலாக திறந்து திறந்து நான் சென்றடைந்த உச்சப் புள்ளிக்கு அடுத்த புள்ளியை முதற்கனல் நாவலிலேயே எழுதிவிட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் ஒட்டு மொத்த வெண்முரசும், இதன் இருபத்தாறு தொகுதிகளும், என்னுடைய துரியத்தில் உருவானபிறகுதான் நான் எழுதத்தொடங்கியிருக்கிறேன். அங்கிருந்து சுஷுப்திக்கும் பின்னர் ஸ்வப்னத்திற்கும் கொண்டு வந்திருக்கிறேன். ஜாக்ரத்தில் அதை சொல்லென ஆக்கி நிறுவும் வேலையை மட்டுமே புனைவு உருவாக்கமென செய்து கொண்டிருக்கிறேன்.
குருக்ஷேத்ரமே ஒரு மாபெரும் வேள்வி. அந்நிலம் ஒரு வேள்விக்களம். அவியென மானுடர்கள், விலங்குகள், தேர்கள் அங்கே பொழியப்பட்டன. வஞ்சினங்கள், வெறியுரைகள், துயர்கள், அலறல்கள், விழிநீர், செந்நீர், கனவுகள், தனிமைகள், வெறுமைகள் அனைத்தும் அங்கு அவியூட்டப்பட்டன. உண்டு பெருகி பல்லாயிரம் பலகோடி நாவென்றாகி நடனமிட்டு ஓய்ந்தமைந்தது தீ. முற்றிலும் எடையற்றது. ஏனெனில் அது அளிக்கப்படுவது எதையும் மறுப்பதில்லை. பெற்றுக்கொள்வன எதையும் தான் கொண்டிருப்பதில்லை. தன்னை ஒரு வாஹகனாக, வஹ்னியாக மட்டுமே நிறுத்திக்கொள்கிறது.
இங்குள்ள அனைத்தும் முற்றிலும் எடையற்ற ஒன்றினூடாக வேறெங்கோ சென்றுகொண்டிருக்கின்றன. இங்குள்ள அனைத்தும் ஒளிமட்டுமேயான ஒன்றினூடாக எங்கோ சென்று கொண்டிருக்கின்றன. சென்ற இடத்திலிருந்து அவை வேறொரு எடையின்மையினூடான ஒளியினூடாக இங்கு மீண்டு வரும் போலும். அவ்வண்ணமே எண்ணத்தோன்றுகிறது. ஒரு குருட்டுக்கற்பனையில் ஆழிப் பெருஞ்சுழியான கருந்துளை என்பது எடையின்மையிலிருந்து எடையை உருவாக்கும் ஒரு குயவனின் திகிரி என்று தோன்றுகிறது. அனைத்தையும் அனலென்றாக்கி ஆற்றலென்றாக்கி அலகிலி என்றாக்கி சிதறடிக்கும் அது. அனைத்தையும் மீண்டும் தொகுத்து அனலை பொருள் என்றாக்குகிறது போலும்.
எழுதி எழுதி சொற்களனைத்தையும் ஆகுதியாக்கி முடிந்தபிறகு வெறும் அனல் மட்டுமே எஞ்ச இன்னொரு வார்த்தை வருமோ என்று இந்நாவலின் இறுதியில் நான் காத்திருந்ததை நினைவுறுகிறேன். தீயின் ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. என்னுடைய தனித்த சிறு அறையில் அன்றிரவு மெல்லிய பட்டுத்துணி உதறிக்கொள்ளும் ஓசையென அது நடமிடும் கசங்கல் ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இன்மையின் ஒலி இருத்தலின் ஒலியும் கூட. எல்லாச்சொற்களையும் எரியூட்டி இந்நாவலை முடித்தேன். முடித்த கணமே நாவலிலிருந்து வெளிவந்தேன். பிறிதொரு தருணத்திலும் திரும்பச்சென்று இதை படித்ததில்லை. ஒருவேளை இனி ஒருபோதும் படிக்கப்போவதும் இல்லை. இந்நாவலை எழுதிக் கடக்க வேண்டுமென்பதற்காகவே தொடங்கினேன். கடந்துவிட்டேன் என்றே எண்ணுகிறேன்.
இந்நாவலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி. முதற்பதிப்பை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் உளமார்ந்த நன்றி
ஜெ
24.04.2024
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
‘தீயின் எடை’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்,