காலன், அகாலன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
விஷ்ணுபுரம் நாவலை 2012-13 வாக்கில் வாசித்தேன் அல்லது சுவாசித்தேன், கிட்டத்தட்ட பித்து பிடித்த மாதிரி.
தங்களின் மற்ற நாவல்களை வாசித்த சில நாட்களில், அதன் அனுபவத்தை நம் தளத்தில் பகிர்ந்து கொள்ள முடிந்ததைப் போல் விஷ்ணுபுரம் வாசிப்பு அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள இயலவல்லை, அவ்வளவு தீவிரமானது. வெளியில் வர பல நாட்கள் ஆகியது.
திருப்பூர் புத்தகத் திருவிழா கடைசி ஞாயிறு, இன்று இந்த விஷ்ணுபுரம் நாவலை வாங்கியே தீர வேண்டும் என்று நானும், கணவரும் எங்கள் 5 வயது பெண்ணுடன் வந்தாகிவிட்டது. வழக்கமாக எங்கள் மூவருக்கும் வாசிப்பு பழக்கம் இருப்பதால் புத்தகம் வாங்குவது அதிகம். ஆங்கில நாவல்கள் மற்றும்
மட்டும் இரண்டாவது விலையில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கி, திருப்ப கொடுப்பது மட்டும் உண்டு. மற்றபடி கிளாசிக்கள் அனைத்தும் புதியதாக வாங்கி வைத்துக் கொள்ளும் வழக்கம்.
அன்று எங்கள் கையில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. எங்கள் சுய தொழில் சுணக்கத்தால் கையிருப்பு மிக சுறுங்கியிருந்த காலகட்டம். வீட்டிலிருந்து கிளம்பும் போதே விஷ்ணுபுரம் மட்டும் வாங்கினால் போதுமென்று விவாதித்து முடிவு செய்துவிட்டு வந்தாகி விட்டது. வேறு எந்த புத்தக ஸ்டாலுக்குள்ளும் செல்லாமல் விஷ்ணுபுரம் மட்டும் வாங்கியாகிவிட்டது (மற்ற ஸ்டாலுக்கு சென்று tempt ஆகிவிட்டால்). அன்று விஷ்ணுபுரம் 750/- , 200 பெண்ணிருக்கு 2 குழந்தைகள் கதை புத்தகம் வாங்கி, 50/- பஜ்ஜி போண்டா வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால்.. நீங்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் வந்திருப்பதை முன்னரே அறியவில்லை, ஏனென்றால் கடைசி நாள் வேறு, நாவல் வாங்கி விடும் மும்முரம் வேறு. நீங்கள் உரையை கிட்டத்தட்ட முடித்து விட்டிருந்தீர்கள். முதன் முறையாக நாங்கள் உங்களை தரிசித்தது அன்றுதான், கூச்சத்தின் காரணமாக விலகி நின்று கவனித்துக் கொண்டிருந்தோம்.
பெருமையாக புத்தகத்துடனும், உங்களைப் பார்த்த பரவசத்துடன் சிலாகித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து டீப்பாயில் புத்தகத்தை வைத்தேன். மாமியார் அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்து அதன் விலையை கண்ட மாத்திரத்தில் விட்டெறிந்தார் பார்க்க வேண்டுமே. கையில் காசில்லாத நேரத்தில் உங்கள் இருவருக்கும் புத்தி இல்லையா என்று செம திட்டு. நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்குப் பின் மாமியாரே அந்த புத்தகத்தைக் கையில் எடுத்து சில பக்கங்களை புரட்டிப் பார்த்து விட்டு, எங்கள் இருவரையும் எப்போதும் புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று அலுத்துக் கொண்டே அவரின் அறைக்குள் சென்று விட்டார்கள். எங்கள் காதல் திருமணத்திற்கு முன்பு என் கணவருக்கு நான் அளித்த சத்குரு ஜக்கி வாசுதேவின் ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்தையும் அவ்வாறே விசிறி எறிந்திருந்தார். அல்ல பக்கம் பக்கமாக கிழித்து எறிந்தார். எப்போதும் நீங்கள் இருவரும் என்னவாக இருக்கிறீர்கள் என்று புரியவில்லையே என்ற புலம்பல் கேட்டு கேட்டு பழகி விட்டிருந்தது.
ஒரு சில நாட்களுக்குப் பின்பு முதலில் நான்மட்டும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். முதல் அத்தியாயத்திலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். என்னுள் எதுவோ நடக்கிறது, ஆழமாகவும் இருக்கிறது அயர்ச்சியாகவும் இருக்கிறது. வைத்துவிட்டு அடுத்தநாள் தொடர்ந்தால் தலை பாரமாகிறது, மூச்சு முட்டுகிறது வியக்க வைக்கிறது, சொல்லொண்ணா தொந்தரவு செய்கிறது. அடுத்த நாள் பதட்ட மடைகிறது, விரக்தி வருகிறது, எரிச்சல் வருகிறது.. தாங்க மாட்டாமல் நானே விட்டெறிந்து விட்டேன். உங்களின்படைப்பான அறம் என்னுடைய முதல் வாசிப்பனுபவத்திற்குப் பின் விஷ்ணுபுரம் வாசிக்க ஆரம்பித்தால் அப்படித்தான் போல. என் கணவர் கேளியாக, ஜெ மோ ன்னா சும்மாவா, அதும் அவரோட செம்படைப்பு வேற , அதான் நானே இன்னும் ஆரம்பிக்காம உன்ன வச்சு டெஸ்ட் பண்ணேன் என்றார். ஒரு சில நாட்களுக்குப் பின் ஆரம்பத்தலிருந்து வாசிக்கும் போதும் அதே போன்ற விதமான அனுபவம், கொஞ்சம் முன்ன பின்ன. பின்னர்தான் அதன் எடை தாளவில்ல என்பது புரிந்தது, எடுத்து வைத் தாகிவிட்டது. படுக்கையறை மேசையில் இருந்து கொண்டு எப்பொதும் என்னை ஏளனதுடன் நோக்கிக் கொண்டிருந்தது. ஒரு சில வாரத்திற்குப் பின் தைரியமாக எடுத்து நானா , அதுவா வென்று பார்த்துவிடலா மென்ற முடிவுடன் திரும்பவும் முதலிலிருந்து ஒரு வார்த்தையும் விடாமல் வாசிக்க ஆரம்பிக்க அத்தனை தடைகளும் விடுத்து கண்ணீர்ப் பெருக்குடன் வாசிப்பு தொடந்தது, நான் வாசித்தேனா, கனவு காண்கிறேனா.. என் உடல், புத்தி அங்கிருப்பதாக தோன்றவில்லை, அந்த மணலில் இருக்கிறேன், சுடுகிறது , தீவிரம் தாளவில்லை, ஓடவும் விருப்பமில்லை, அங்கு இறந்து விடவே முடிவு செய்தேன்.
எப்போதும் இரவு பத்து மணிக்குப் பின்பே விஷ்ணுபுரம் வாசிப்பு நடந்தது, தனிமையில். குழந்தை உறங்கி விட்டிருக்கும். வாசிப்பு தீவிரமாக சென்றது ஆனால் வேகமாக அல்ல. மற்றவை போல் அல்ல விஷ்ணுபுரம் , எடை அதிகம், அடர்த்தி அதிகம், சுற்றி சுற்றி வந்த பின்பே தயக்கமாக உள் நுழைய முடியும், தினமும். சில பக்கங்களே வாசிக்க முடிந்தது. வெகு நேரம் பக்கங்களை வெறித்து பார்த்தே இருந்திருக்கிறேன். சில நேரம் கண்ணீருடன் விட்டத்தைப் பார்த்து, தாங்காத நேரத்தில் பால்கனி திறந்து வீட்டெதிரில் இருக்கும் கிருஷ்ணன் கோவில் கோபுரம் பார்த்து கை கூப்பி நடு இரவில் நிற்பது.
கொஞ்சம் விட்டு விட்டு கோர்வை இல்லாமல் சென்றதே விஷ்ணுபுரத்தின் வாசிப்பை தடை செய்யாமலிருந்தது, இடையில் ஆசுவாசம் கிடைத்து போல. நாவலில் வரும் மேகத்தை தாண்டிய கோவில் கோபுர அடுக்குகள் மற்றும் விண்ணகர உச்சி, நீருக்குள் மூழ்குவது, யாருமற்ற ஊரின் இரவு நேரத்தில் நடப்பது, சிற்பங்கள், பாதை மாறி சுற்றி சுற்றி ஒரே இடத்தில் பேதலித்து நிற்பது , வெள்ளத்தில் மூழ்குவது, நீரின் அடி ஆழத்தில் மிக மிகப் பெரிய பள்ளி கொண்டானைக் கண்டு மிரண்டு நிற்பது போன்ற கனவுகள் விஷ்ணுபுரம் வாசிக்கும் சில மாதங்களுக்கு முன் கண்டது அத்துணயும் நாவலில் வரும் ஒத்த வர்ணனை யில் இருந்தது கண்டு பிரமித்துப் போனேன். நாவல் முடிந்து வேறு வாசிக்க அதிக நாள் எடுத்துக் கொண்டேன். பத்து வருடங்களுக்குப் பின்பே அதன் வாசிப்பனுபவத்தை ஒருவாறு பகிர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.
நன்றி .
ராஜி மோகன்ராம்.