பத்மநாபபுரத்தில் ஒருமுறை ஐந்து வயது அஜிதனுடனும் ஒரு வயது சைதன்யாவுடனும் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தோம். கேரள வானொலியில் பணியாற்றும் அவர் வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. அன்றே பல்லாயிரம் ரூபாய் பெறுமதியுள்ள பொம்மைகளை அக்குழந்தை வைத்திருந்தது. அது தன் பொம்மைகளை எடுத்துக்காட்டியதும் அஜிதனும் சைதன்யாவும் சேர்ந்து விளையாடினர்.
ஆனால் ஐந்து நிமிடங்களுக்குமேல் அஜிதனால் அதில் சுவாரசியம் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அப்பொம்மைகள் கடையில் வாங்கப்பட்டவை, ஆகவே முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டவை, அவன் மேற்கொண்டு செய்ய ஒன்றுமில்லை. அக்குழந்தைக்கும் அவற்றைக்கொண்டு ஒன்றும் செய்யத்தெரியவில்லை. அது அந்தப் பொம்மைகளின் உரிமையாளர் என்னும் நிலையைத்தான் பெருமையாக நினைத்தது. பொம்மைகளை எடுத்துக் காட்டி திரும்ப உள்ளே வைத்துக் கொண்டிருந்தது.
அப்பெண்குழந்தையின் அம்மா சொன்னார். “எல்லாம் அவளோட மாமாவும் மாமியும் வாங்கிக்கொடுத்தது. தொட்டுப்பாக்க மாட்டா. இப்ப என்னமோ வெளையாடுறா”
உண்மையில் அக்குழந்தை விளையாடவில்லை, இன்னொருவர் வந்து பார்த்தால்தான் அந்த பொம்மைகளின் உரிமையாளர் என்னும் நிலையில் மகிழ முடியும், ஆகவே அதைச் செய்துகொண்டிருந்தது.
அஜிதன் அந்தப்பொம்மைகளை எடுத்து “இதுக்குள்ள என்ன இருக்கு?” என்றான்.
பாம்புக்குஞ்சின் காலை பாம்பு அறியும். நான் அப்படியே அவனை தூக்கி இப்பால் நகர்த்தினேன். “பாத்தியா இந்த மாமா நெறைய கேசட்டு வைச்சிருக்கார்”
“அந்த பொம்மைக்குள்ள ஸ்கிரிங்கு இருக்கு அப்பா”
அதுதான் விஷயம், பொம்மையை உடைத்து அதை மேற்கொண்டு எதையாவது செய்யவைக்கவேண்டும். முன்னால் தத்தித்தத்தி நகரும் பொம்மை ஏன் துள்ளக்கூடாது, ஏன் பின்னால் நகரக்கூடாது?
அந்த ‘ஸ்கிரிங்கை’ நோண்டி எடுத்து சுழற்றிப் பார்த்து அந்த பொம்மையை எட்டு தனித்தனி பகுதிகளாக ஆக்கி அள்ளி என்னிடம் கொண்டுவந்து தந்து “அப்பா ஒண்ணாப் போட்டுக்குடு” என்று கேட்பான். எங்கள் வீட்டில் அலாரம் கடிகாரத்தின் ‘ஸ்கிரிங்கு’ அது துண்டுகளாக மாறி ஒரு மாதம் கழித்து சைதன்யாவின் சேமிப்பில் பலவகையான வண்ணக்குண்டுகள், வளையல்கள், ஊக்குகள், புட்டிகள், கூழாங்கற்கள் நடுவே கிடைத்தது.
நண்பர் அஜிதனிடம் “உன் வீட்டிலே என்ன பொம்மை இருக்கு?” என்று கேட்டார்.
“எல்லா பொம்மையும் நானே செஞ்சது” என்று அஜிதன் பெருமையுடன் சொன்னான்.
“பெரீய பொம்மை… அஜி அஜி அஜி… பெரீய பொம்மை செய்ஞ்சு…” என்று சைதன்யா கையை காட்டி எம்பிக் குதித்து உயரத்தை புரியவைக்க முயன்றாள். அவள் உத்தேசித்த பொம்மை தென்னைமர உயரம் இருந்தது. பெரும் பரவசத்துடன் “அஜி அஜி அஜி… அவ்ளோ பெரிய பொம்மைய செஞ்சு!” என்று மூச்சுத்திணறினாள்.
“நான் பொம்மையெல்லாம் வாங்கிக்குடுக்கிறதில்லை… அவனே செய்ஞ்சு வெளையாடுவான்” என்றேன்.
நண்பர் என் வறுமை பற்றி பரிதாபம் கொண்டார். ”பிள்ளைங்களுக்கு அறிவு வளர பொம்மை முக்கியம் சார்… செலவப் பாத்தா முடியுமா?”
“ஆமா” என்று பொதுவாகச் சொன்னேன்.
“எந்த பொம்மையையும் ஒரு நாளுக்கு மேலே வெளையாட மாட்டா. எல்லாம் என்ன வெலை! ஆனா என்ன செய்யுறது? பிள்ளைகளை அப்டி வளக்கவேண்டியிருக்கு இப்பல்லாம்…”
“அதை வைச்சு எப்டி வெளையாடுறதுன்னு நாமதான் சொல்லிக்குடுக்கணும்” என்றேன் பொதுவாக.
“எங்க நேரம்? எனக்கு ஆயிரம் வேலை…இங்க தோட்டத்திலே எப்பவும் வேலைக்கு ஆளுண்டு. இவளுக்கும் சமையக்கட்டிலே நேரம் ஒழியுறதே இல்லை… பொம்மையை அப்டியே போட்டுட்டு இது வேற சமையக்கட்டிலே போயி நைநைன்னு நிக்கும்… டிவியப்போட்டா கொஞ்ச நேரம் உக்காந்து பாப்பா”
நான் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகைத்தேன்.
திரும்பும்போது அஜிதன் என்னிடம் பரிதாபமாக “பாவம்பா, அந்தப் பொண்ணுக்கு பொம்மை செய்யவே தெரியலை” என்றான்.
“அந்தப் பொண்ணோட பொண்ணோட பொண்ணோட…” என்று சைதன்யா சுட்டுவிரலை தூக்கிக் காட்டி கண்களை உருட்டி சிந்தனைச் செய்தாள். என்ன சொல்ல வருகிறாள் என்று உருத்திரளவில்லை.
“போடி” என்று அஜிதன் சொன்னான். “நம்ம பொம்மையெல்லாம் அவளுக்கு குடுத்தா நாம வேற பொம்மை செய்யலாம்…” என்றேன்.
நான் “நாமள்லாம் சூப்பர் ஆளுங்க” என்றேன். “பொம்மைய நாமளே செய்வோம்…நாமளே நமக்கு வீடு கட்டுவோம்!”
“அந்தப் பொண்ணோட , அவளோட , அவளோட, பொம்மை…” என்றாள் சைதன்யா. சொற்கள் வந்து சேரவில்லை.
“நாம இனிமே அனுமார் செய்யவேண்டாம்… அனுமாரை விட புரூஸுலீ தான் ஸ்டிராங்கு” என்று அஜிதன் சொன்னான். “இல்லேன்னா நாம…” யோசித்து “நாம வேணுமானா ஜாக்கிச்சான் செய்யலாம்… ஜாக்கிச்சான்லாம் மங்கி மாதிரி… டிஷும் டிஷூம்!” அவன் கைகளை சுழற்றி குங்ஃபு செய்து காட்டினான். பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்த பின் பயல் மெலிந்து கையெல்லாம் குச்சி குச்சியாக இருந்தான்.
நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். சாயங்காலம் ஏழு மணி. விளக்கு வைத்தாயிற்று. அஜிதன் தாள்களை கொண்டுவந்து வைத்து கப்பல் செய்ய ஆரம்பித்தான்.
சைதன்யா அஜிதனிடம் “அந்தப்பொண்ணோட… அந்தப்பொண்ணோட…” என்றாள்.
அருண்மொழி “வந்து சாப்பிடுடா… என்ன அங்க கப்பல் செய்ஞ்சுட்டு?” என்று அதட்டினாள்.
“அன்னன்னிக்குள்ள கப்பல்களை அன்னன்னிக்கே செஞ்சிடணும்” என்று நான் சொன்னேன்.
“நான் நெறைய கப்பல் செஞ்சு ஸ்கூல்ல எல்லாருக்கும் குடுப்பேன்” என்றான் அஜிதன்.
நான் அன்றெல்லாம் அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் பொம்மைகள் செய்துகொடுத்து விளையாடுவேன். களிமண், துணி. இலைகள், கொட்டாங்கச்சி என வெவ்வேறு ஊடகங்களில் செய்வோம். நான் செய்வதை அவர்களும் செய்யவேண்டும். அவரவர் பொம்மையை அவரவர் செய்யவேண்டும் என்பது நிபந்தனை.
முழு ஞாயிற்றுக்கிழமையும் ஆகும், ஒரு பொம்மையைச் சரிவரச் செய்து முடிக்க. முழுத்தீவிரத்துடன் குழந்தைகள் அந்த படைப்புலகில் இருக்கும். கண்கள் கனவால் விரிந்திருக்கும். குரல்கள் க்ரீச்சிட்டுக்கொண்டே இருக்கும். சாப்பிடக்கூப்பிட்டால் போக மாட்டார்கள். தூங்க மாட்டார்கள்.
எனக்கு நித்ய சைதன்ய யதி சொன்ன ஆணை அது. அவர் குழந்தைகளை நேரடியாக அவர் செய்துகொண்டிருக்கும் வேலைக்குள் இழுத்துவிடுவார். தீவிரமான தத்துவ வகுப்பின் நடுவே ஐந்து வயது பையன் அவருடைய புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருப்பான். “நம் உலகுக்குள் அவர்களை விடுவது அவர்களுக்குப் பிடிக்கும். அவர்களின் உலகில் நாம் நுழைவது நமக்கு ஆன்மிகமான விடுதலை” என்றார் நித்யா.
விந்தையான ஒன்றுண்டு, பெரும்பாலும் பொம்மைகள் செய்வதில் குழந்தைகள் நம்மை தோற்கடிக்கின்றன. நாம் கைத்திறன் கொண்டிருப்போம், குழந்தைகள் கற்பனை மிகுந்தவையாக இருக்கும். அந்தக் கற்பனைக்குள் செல்வது நமக்கு கொஞ்சம் கடினமாகக்கூட இருக்கும்.
ஒருமுறை பிள்ளையாருக்கு வயிற்றில் ஒரு ஈர்க்குச்சியை வைத்து “வால்” என்று சைதன்யா சொன்னாள் “பாத்தியா, வாலு! வாலு பாத்தியா?”
நான் குழம்புவதை கவனித்து “இந்த வாலு… இந்த வாலு… இது முன்னாடி வாலு” என்றள். அதன் பிறகு “அப்பதானே பிள்ளையாரு வாலாட்டினா நம்மளுக்கு தெரியும்?” என்று விளக்கினாள்.
அஜிதன் கப்பல்களை தேர்ந்த நிபுணனின் கூர்மையுடன் செய்துகொண்டிருந்தான். சைதன்யா “அந்தப்பொண்ணோட… அந்தப்பொண்ணோட… அவ வந்து, அவ…” என்று அவனிடம் சொன்னாள்.
கப்பல்களை செய்து அடுக்கி ஓர் அட்டைமடிப்பில் சேமித்துவிட்டு அஜிதனும் சைதன்யாவும் சாப்பிடச் சென்றனர். நான் அவர்களுக்குக் கதை சொல்லியபடி ஊட்டுவது வழக்கம். அன்று டார்ஜான் கதையைச் சொன்னேன். எட்கர் ரைஸ் பரோஸ் எழுதிய கதை அல்ல, அக்கணம் உருவான சொந்தப்புனைவு. டார்ஜானுடன் ஓர் குரங்கும் ஒரு நாயும் இருந்தன.
அவர்களை படுக்கவைக்கும்போதும் கதை முடியவில்லை. அஜிதன் பகல்முழுக்க வெயிலில் ஆடியதனால் சட்டென்று தூங்கிவிட்டான். சைதன்யா சாப்பிடும்போதே தலை குழைந்து அரைத்தூக்கத்தில் இருந்தாள். படுக்கவைத்தபோது விழித்துக்கொண்டு சட்டென்று “அப்ப்பா, அந்தப் பொண்ணோட பொம்மைல்லாம் பேசாது…” என்றாள்.
“ஆமா”
“பிள்ளையார்லாம் பேசும்” என்றாள்.
“ஆமா”
“நாக்குட்டிகூட பேசும்”
“ஆமா”
“கப்பல்!” சுட்டுவிரலை காட்டி அரைத்தூக்கத்தில் சிந்தனை செய்து “கப்பல்லாம்கூட பேசும்!” வாய் கோணலாகி எச்சில்வழிய மூச்சு ஒலிக்கத் தொடங்கியது.
ஏன் பேசின என்றால், அவர்கள் அவற்றுடன் பேசினர். ஏன் பேசமுடிந்ததென்றால் அவை அவர்களுடைய சிருஷ்டிகள். அவர்கள் தெய்வமாகும் தருணம் அது. ஒன்றைப் படைக்கும் நிலையைப்போல மனிதன் தன்னை வல்லமை மிக்கவனாக, கடவுளுக்கு நிகரானவனாக உணரும் தருணம் ஏது?
நானும் குழந்தைகளும் சேர்ந்து அப்படி பகல் முழுக்க வெறிகொண்டு விளையாடிய நாட்கள் கால் நூற்றாண்டை கடந்துவிட்டன. அஜிதன் இன்று ஓர் முக்கியமான எழுத்தாளன், திரையுலகில் இருக்கிறான். அண்மையில் அஜிதன் ஒரு தீவிரமான இலக்கிய உரையில் நேர்த்தியின்மையே எப்படி உயர்கலையாக ஆகமுடியும் என்று விளக்குவதற்காக ஒரு நிகழ்வைச் சொன்னான். நானும் அவனும் சைதன்யாவும் சேர்ந்து களிமண்ணில் பிள்ளையார் செய்து விளையாடிய நிகழ்வை. அவன் உள்ளத்தில் அது எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதைக் கேட்டபோது ‘ஆம், நித்யா சொன்னது அதைத்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.