இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குக்கூ நிலத்தின் அன்பும் பிரார்த்தனைகளும்.
நவீன மருத்துவ வகுப்பிற்கு உங்கள் அன்பு கட்டளையை ஸ்டாலின் அண்ணா கூறியதும் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று மிக மிக ஆர்வமுடன் சென்று சேர்ந்தோம். ஆனால் வகுப்பில் எதை கற்க போகிறோம், நமக்கு எவ்வாறு பயன்படும் என்ற வினா இருந்து கொண்டே இருந்தது. வகுப்பு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அந்த கேள்வி எழாமல் பார்த்துக் கொண்டார் மாரி சார்.
மருத்துவ வரலாறு தொடங்கி அது எப்படி வளர்ச்சி பெற்றது என்று படிப்படியாக சுவாரஸ்யமாக கற்கத் தொடங்கினோம். Aesculapius, Hygiea, Panacea, Hippocrates, Galen, Robert Koch போன்ற மாபெரும் பங்களிப்பாளர்களை அவர்களின் பங்களிப்போடு அறிந்து கொண்டோம். நவீன மருத்துவத்தின் இன்றைய வளர்ச்சி, அதனால் மனித குலம் அடைந்துள்ள நன்மைகள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு மருந்திற்கும் பக்க விளைவு உண்டு ஆனால் மிகப்பெரிய அளவில் உயிர் காப்பது நவீன மருத்துவம் என்பது புரிந்தது.
உடலின் செல்கள் தொடங்கி உடலின் அனைத்து உறுப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் மிக மிக தெளிவாக புரியும் வகையில் சாக்லேட் கலந்த நகைச்சுவையுடன் அள்ளி அள்ளி கொடுத்தார் எங்கள் ஆசிரியர்.
இதில் வேதியியல், உயிரியல் இவ்வளவு சுவாரஸ்யமாகவும், ஆர்வமாகவும், எளிதாகவும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை(பள்ளியில் எனக்கு அறிவியல் பாடமே பிடிக்காது(புரியாது). அதனால் தான் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் கணினி பாட துறையை தேர்ந்தெடுத்தேன். அப்பொழுதும் இயற்பியல் வேதியியலில் தான் மிக மிக குறைந்த மதிப்பெண். என்னால் மனப்பாடம் செய்யவே இயலாது. இன்று வரை பிடிக்காது/புரியாது என்றிருந்தேன்) ஒரு ஆசிரியரின் கற்பித்தல் முறை எவ்வளவு முக்கியம் அப்பா.
நான் ஐந்து மாதங்களாக குழந்தை பிறப்பு பயிற்றுனர் படிப்பு பயின்று வருகிறேன் அப்பா. அதற்கு இந்த வகுப்பு மிக மிக முக்கியமான நம் உடலைப் பற்றிய அடிப்படை அறிவை கொடுத்துள்ளது. ஆசிரியரும் குழந்தை பிறப்பு பற்றி நிறைய விவரங்களை கூறினார். என் படிப்பு சார்ந்து நிறைய கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றேன்.
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு வகுப்பு ஒவ்வொரு நொடியும் தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் உற்சாகமாக சென்றது. வகுப்பைத் தாண்டி நிறைய உரையாடல்கள் நிகழ்ந்தது. என் மூளையின் சிந்திக்கும் எல்லைத் தாண்டிய கேள்விகள் எழத் தொடங்கியது. அதையும் ஆசிரியரிடம் தயக்கமில்லாமல் உரையாட முடிந்தது. கற்றல் சார்ந்த அறிவியக்க உரையாடலும் வெகு நாட்களுக்குப் பிறகு நடந்தது மிகவும் உற்சாகத்தை கொடுத்தது.
வகுப்பில் எந்தத் தகவலை சொல்ல வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக வகுப்பை கொண்டு சென்றார் எங்கள் மாரி சார். குறைவான உணவும், உடற்பயிற்சியும் தான் நம் ஆரோக்கிய வாழ்விற்கு இன்றியமையாதது, It’s the trust that you have in your doctor that cures என்று கூறி வகுப்பை நிறைவு செய்தார். மனமில்லாமல் விடைபெற்றோம்.
இதை ஒருங்கிணைத்து, எங்களுடன் வகுப்பிலும் கலந்து கொண்ட அந்தியூர் மணி அண்ணாவிற்கு அன்பும் நன்றிகளும். நிச்சயம் இது போன்ற வகுப்பில் அனைவரும் பங்கேற்று நம் உடலை பற்றி நாம் கட்டாயம்
அருண்மொழி அம்மாவை சந்தித்ததும், அவர் அனைத்துக் கொண்டதும் அத்துணை பேரின்பம் அப்பா. இந்த வாய்ப்பு கொடுத்த தங்களுக்கும், ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.
நன்றியுடன்,
மைவிழி செல்வி