தும்பி, கடிதம்

வணக்கம் ஜெ

‘தும்பி சிறார் மாத இதழ்’ பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்படுவது வேதனையளிக்கிறது. போதுமான உதவி கிடைத்தால் மீண்டும் தும்பி தொடரலாம். தும்பியுடனான என் அனுபவங்களை என்னால் இயன்றவரை பகிர்வது தும்பிக்கான ஆதரவு கிடைக்கும் வாய்ப்பாகவும் தும்பிக்கு நான் செலுத்தும் நன்றிக்கடனாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

சமீப காலமாக என்னுள் வளர்ந்து வரும் நல்விதைகள் திருவண்ணாமலை செயல் எழல் முகாமில் விதைக்கப்பட்டவை. அவற்றுள் முத்தான ஒன்று தும்பி – சிறார் மாத இதழ். நிகழ்ச்சி நிறைவில் குக்கூ, நூல்களை கொடையளித்த போது நான் சற்று தாமதித்துவிட்டேன். அங்கே குழந்தைகளுக்கான நூல்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தும்பி புத்தகங்கள் இருந்து காலியானது கூட எனக்கு தெரியாது. என் நல்ல நேரம் இரவு உணவருந்தும்போது மதுரையிலிருந்து வந்திருந்த கார்த்தி (தற்போது மனுசபுராணம் கவிதை நூல் ஆசிரியர்) அருகே அமர்ந்து அறிமுகம் செய்துகொண்டேன். அவர் கையில் வைத்திருந்த இரண்டு தும்பி நூல்களை எனக்கு அன்பளித்தார். அந்த அன்பு பெருகி பெருங்காதலாகி இன்று வரை என் குழந்தைகளும்  நானும் தும்பியை வாசித்து வருகிறோம்.

அன்பளிப்பாய் கிடைத்த முதல் இரண்டு புத்தகங்களுக்கு என் பிள்ளைகள் அளித்த வரவேற்பினால் தும்பியின் தளத்தில் (https://thumbigal.com/product/thumbi-book-collections/) சென்று முந்தைய இதழ்கள் அத்தனையையும் வாங்கியதோடு புதிய இதழ்களுக்காக ஆண்டு சந்தாவும் செலுத்தினேன். ஒரு சில நாட்களில் மிட்டாய் பெட்டகம் வீடு வந்தது – 55 தும்பி இதழ்கள்! பல விதமான மிட்டாய்கள் கிடைத்தது போல என் குழந்தைகள் இருவரும் (நானும் தான்) அடைந்த மகிழ்ச்சியை மறக்க முடியாது.

தினமும் இரவு 7:30 தும்பி நேரம். இது பொருட்டு இரவு உணவு உண்பது, தூங்குவதற்கு பாய்களை விரிப்பது போன்ற வேலைகளை சமத்தாக இருவரும் செய்து முடித்து தயாராகிவிடுவார்கள். முதலில் இதழ் தேர்வு. தும்பி இதழ்கள் நிறைந்த அட்டைப்பெட்டியில் இருந்து ஜோசிய கிளி உருவுவது போல ஒரு இதழை உருவ வேண்டும். யார் கிளியாவது என்ற போட்டி, ‘ஒரு வாட்டி நீ, அடுத்த வாட்டி நான்’ என்று சமரசமானது. கதை நிகழுமிடம் எங்கள் வீட்டு பால்கனி. பல உலகங்களைக்கண்ட பால்கனி அது. இதற்காகவே சிதறிய விளையாட்டு சாமான்கள் ஒதுங்க வைக்கப்பட்டு பால்கனி தயாராகி இருக்கும். தும்பி வாசிப்புக்கென்றே பிரத்யேகமான ஒரு கிழிந்த பாய். அதற்கு மட்டுமே பலவித உலகங்களுக்கு பறக்கும் சக்தி இருப்பது எங்களின் கண்டுபிடிப்பு. வாசிப்புக்கு ஏற்றவாறு மஞ்சள் மின்விளக்கு. அது என்னமோ.. கதைகளில் கலப்பதற்கு பளீர் வெள்ளையை விட மயக்கும் மஞ்சள் வெளிச்சம் ஏதுவாகிறது.

அட்டைப்படத்திலேயே குட்டி இதயங்களை வென்று விடுவர் தும்பியினர். வண்ணமயமான ஓளிப்படமொன்று இயற்கையை காட்சிப்படுத்தியிருக்கும் – விலங்கோ, தாவரமோ, குழந்தைகளோ. சில வினாடிகள் அதை ரசித்தபிறகு உள்ளெ சென்றால் முதல் பக்கத்திலேயே ஒரு மாமனிதரின் புகைப்படம் அவரது பொன்மொழியோடு இருக்கும். அடுத்த பக்கத்தில் இன்னொரு ஒளிப்படத்தோடு சிலருக்கு நன்றியும் பிரார்த்தனைகளும் இருக்கும்.  நடுக்கடல் வரை செல்லும் மீனவர்கள் முதல் தண்டவாளங்களைக் கடக்கும் யானைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பிரார்த்தனைகள் இருக்கலாம். இதை நான் வாசிக்கும்போதே என் பிள்ளைகள் அவர்களாகவே கைகளைக்கூப்பி கண்களை மூடி ஒரு கணம் வேண்டிக்கொள்வர். ஒரு மகத்தான பண்பை தும்பி போகிறபோக்கில் விதைத்து செல்கிறது.

அடுத்து குக்கூ சிவராஜின் ஆசிரியர் உரை. அதில் நாம் முதல் பக்கத்தில் கண்ட மாமனிதரைப்பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டிருக்கும். மகாத்மா காந்தி, ரபீந்திரநாத் தாகூர், தலாய் லாமா என பல தலைவர்களை என் பிள்ளைகள் அறிந்து கொண்டது இங்கே தான். நான் வாண்டு மாமாவையும், தியோடர் பாஸ்கரன் அவர்களையும் தெரிந்து கொண்டது இங்கே தான். இந்த ஆசிரிய உரையின் வார்ப்புரு என் பிள்ளைகளுக்கு பரிட்சயமான, பிடித்தமான ஒன்று. எனவே நான் இந்த பக்கத்தை வாசிக்கும்போது என் பிள்ளைகள் இருவரும் ‘வணக்கம் செல்லங்களா’ என தொடங்கி ‘முத்தங்களுடன் தும்பி’ என்று என்னுடன் சேர்ந்து முடித்து என் இரு கன்னங்களிலும் முத்தகங்களைப் பதிப்பர். உண்மையில் அவை சிவராஜுக்கு சேரவேண்டியவை.

இனி கதைக்குள் நுழைவோம். தும்பியின் கதைகள் உலகத்தின் கதைகள். அவை எங்கு வேண்டுமானாலும் அமையலாம். ஆப்ரிக்கா, ஈராக் போன்ற பலவித நாடுகள்; பனிமலைகள், அடர்காடுகள், நிகழ்காலம், பழங்காலம், உண்மைச் சம்பவம், உச்ச கற்பனை என எங்கு வேண்டுமானாலும். உலகத்தின் கதைகளை நம் பிள்ளைகளிடம் தும்பி தேடிச்சேர்க்கிறது. இந்த கதைகள் எந்த நீதியையும் போதிப்பதில்லை. மகிழ்ச்சியான கதையனுபவமே பிரதானம். ஆனாலும் குழந்தைகள் கதைகளிடமிருந்து கற்கிறார்கள் என்பதை பல நேரங்களில் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின்போது என் பிள்ளைகள் தும்பியின் கதையையோ கதாப்பாத்திரத்தையோ நினைவுகூரும்போது நான் உணர்ந்திருக்கிறேன்.

தும்பியின் கதைகளைச் சொல்ல மொழியை முந்திக்கொண்டு வருவது வண்ணப்படங்களே. ஒவ்வொரு பக்கத்தைத்  திருப்பியதும் நான் வார்த்தைகளை வாசிப்பதில்லை. படங்களையே பார்க்கிறோம். பிள்ளைகள் படங்களை அவதானித்தே காட்சியையும் கதை நகர்வையும் ஊகிக்கிறார்கள் – பல நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் கதையைக்காட்டிலும் வேடிக்கையாகவும். இராக் மக்களின் உடைகளையும், ஆப்ரிக்க கிராமங்களின் வாழ்க்கைமுறையையும், பனிப்பொழிவையும், ஆழ்கடலையும் குழந்தைகள் காட்சிப்படுத்திக்கொள்வது படங்களின் வழியாகத்தான். தும்பியின் ஓவியர்கள் குழந்தைகளோடு உரையாட தங்களுக்கென்று தனிவழியொன்று வைத்திருக்கிறார்கள். அவை ஓவியங்களுக்குள் இருக்கும் சிற்றோவியங்கள். உதாரணமாக ஒரு வீட்டை வரைகையில் கதை மாந்தருக்கு சம்பந்தமில்லாத ஒரு பல்லியை சுவற்றில் வரைய தவறுவதில்லை. பிள்ளைகளும் அதை கவனிக்க தவறுவதில்லை. கதாசிரியரின் பின்னாலிருந்து ஓவியர் நைசாக எட்டிப்பார்த்து குழந்தைகளிடம் ஹாய் சொல்லும் இடங்கள் அவை.

என் மகனுக்கு 6 வயது; மகளுக்கு 4 வயது. ஆகவே நானே கதைகளை வாசிக்க வேண்டும். கதை தலைப்பு, ஒரு சில வார்த்தைகள், சிறு வாக்கியங்கள் ஆகியவற்றை மட்டும் என் மகன் எழுத்துக்கூட்டி வாசிப்பான். அவன் எழுத்து பழகி முதலில் வாசித்த வார்த்தைகளில் ஒன்று – ‘தும்பி’. எழுத்து பயின்றதற்கு ஒரு முக்கிய காரணமே கதைகளை அவனே வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் தான். தும்பி கதைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகின்றன. தமிழும் ஆங்கிலமும் ஒன்றாக வழங்கப்படுவதால் இரு மொழிகளிலும் இணைச்சொற்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதே போன்று தெலுங்கு-ஆங்கிலம் சேர்க்கையிலும் தும்பி வெளியாகிறது. அது மட்டுமல்ல பார்வையற்ற குழந்தைகளுக்காக Braile முறைப்படியும் சில தும்பி இதழ்கள் வெளியாகி உள்ளன. ஒரு பிஞ்சு மனம் எங்கிருந்தாலும் அதைத் தொட்டுவிடும் எண்ணத்தின் வெளிப்பாடாகவே இந்த முயற்சிகளைப் பார்க்கிறேன்.

ஒரு இதழை எடுத்துக்கொண்டால் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவதில்லை. ஒரு நாளைக்கு அரைமணி நேரமென குறைந்தது மூன்று நாட்கள் வாசிப்போம். முதல் நாள் அட்டைப்படம், மாமனிதர் அறிமுகம், பிரார்த்தனை, ஆசிரியர் உரை என வாசித்து முடித்து கதையை தொடங்கி கதையின் களத்தை அறிவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். அடுத்த நாள் கதையின் மையம் வரை. மூன்றாம் நாள் கதையின் முடிவு. இப்படி நீட்டிக்கொள்வதால் அதிக நேரம் கதையில் வாழ முடிகிறது; அடுத்த நாள் வரை கதையைப்பற்றிய கற்பனை வளர்கிறது; மேலும் கதை நிகழ்வுகள் அல்லது புது வார்த்தைகள் பற்றிய துணை விவாதங்களுக்கு நேரம் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கதை மனதில் தங்குகிறது. சில கதைகள் வாசித்து முடித்தபின் என்னிடமிருந்து புத்தகம் பிடுங்கப்பட்டு குழந்தைகளே அந்த கதையை மீண்டும் படங்களைப்பார்த்து சொல்லிக்கொள்வார்கள். அவர்களின் ஐந்து நட்சத்திர மதிப்பீடு அதுவே.

குழந்தைகளுக்கான கதை முடிந்ததும், மூத்த குழந்தைகளுக்கான பகுதி. இங்கே கொஞ்சம் கனமான கதைகள் இடம்பெறுகின்றன. தற்போது இது எனக்கு மட்டுமான பகுதி. புத்தகம் பாதுகாக்கப்பட்டு என் குழந்தைகள் வளர்ந்த பின் இவற்றை வாசிப்பார்கள் என நம்புகிறேன். நான் ஒரு ஆரம்ப வாசகன். சுந்தர ராமசாமி, வண்ணதாசன், அ. முத்துலிங்கம் முதலிய எழுத்தாளர்களின் கதைகளை நான் முதல் முறை வாசித்ததே தும்பியின் மூத்த குழந்தைகளுக்கான பகுதியில் தான். வண்ணதாசனின் ‘நிலை’, சுந்தர ராமசாமியின் ‘ஸ்டாம்ப் ஆல்பம்’, தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘உயிர்’ஆகியவை என்றும் நினைவில் நிற்கும் கதைகள். சில இதழ்களில் இந்த பகுதியில், கலைக்காகவோ சமூகத்திற்காகவோ பெரும்பணியாற்றிய சாதகர்களின் வாழ்க்கை கதையோ நேர்காணலோ இடம்பெற்றிருக்கும். சூழலியல் கல்வி பற்றி தியோடர் பாஸ்கரன் அவர்களின் கட்டுரையும், குழந்தை மனம் பற்றி அலிசன் கோப்னிக் நேர்காணலும் குறிப்பிடத்தக்கவை. என் வளரிளம் பருவத்தில் நான் தவற விட்டதை மீட்க ஒரு வாய்ப்பு இந்த மூத்த குழந்தைகள் பகுதி.

ஒரு விருந்து சாப்பாடு போல இத்தனையும் உண்டுகளித்து இதழை மூடினால் விருந்து முடிவில் இனிப்பு வழங்குவது போல பின்னட்டையில் ஒரு குழந்தைப்பாடல், ஓவியத்தோடு. சில நேரங்களில் கதையைக்காட்டிலும் பாடல் ‘ஹிட்’ ஆகிவிடும் – திரைப்படங்கள் போல. இதுவரையில் ஒரு ஐந்தாறு பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம். காலையில் என் மகளையும் மகனையும் பைக்கில் எனக்கு முன்னும் பின்னுமாக அமரவைத்து பள்ளிக்கு ஓட்டிச்செல்வேன். சற்று தூரம் சென்றதுமே என் மகள், ‘அப்பா, பாட்டு பாடலாமா..’ என்பாள். பள்ளியில் கற்ற பாடல் ஒன்று, தும்பியில் சுவைத்த பாடல் ஒன்று என மாறிமாறி பாடிக்கொண்டே மூவரும் செல்வோம். பல நாட்களில் அந்த பதினைந்து நிமிடமே என் மொத்த நாளையும் அர்த்தப்படுத்தியிருக்கிறது. என் மகளின் LKG டீச்சர் பல நல்ல பாடல்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்பவர். அவரது வகுப்பில் ஒன்றிரண்டு தும்பி பாடல்களையும் சேர்த்தது என் மகளின் உபயம். அதில் ஒரு பாடல் (சின்னஞ்சிறு குருவியே ..) வகுப்பை வெகுவாய் கவரவே வரும் வெள்ளிக்கிழமை, பள்ளிஆண்டுவிழாவில் LKG குழுவினரால் அரங்கேறுகிறது.

ஒரு தும்பி இதழ் எளிதில் கிழியாத தரமான அழுத்தமான தாள்களாலானது. வெறுமனே ஒரு ‘real estate’ மதிப்பீடு செய்தால் கூட, முன் அட்டையின் பின்னாலிருக்கும் காலி பக்கம் தவிர, அத்தனை பக்கங்களும் அங்குலமங்குலமாக நிறைந்திருப்பவை. இத்தனையும் தரும் ஒரு தும்பி இதழின் விலை வெறும் 100 ரூபாய் என்பது, ஒரு கல்யாண வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று வயிராற விருந்துண்டு 100 ரூபாய் மொய் எழுதி வருவது போன்று. இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாபெரும் சலுகை போதிய வரவேற்பை அடையாததே. புரிந்து கொள்ளவே முடியவில்லை. 1 லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் என்றால் விடுவோமா? தும்பி போன்ற ஒரு சிறார் இதழ் அடுத்த தலைமுறையின் அத்யாவசிய தேவை. எங்கள் வீட்டில் டிவி கிடையாது. செல்போன்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை.  இவ்விரண்டையும் குழந்தைகள் உலகிலிருந்து நீக்கி, தும்பியை தருவது சங்கிலியை உடைத்து சிறகுகள் வழங்குவது போல. தும்பி போன்ற ஒரு தூய முயற்சியை ஒருவர் முன்னெடுக்கும்போது நம்மால் இயன்ற உதவியை செய்யாவிட்டாலும் அதை பயன்படுத்த கூட செய்யாமல் தவறுவது முட்டாள்தனம் தானே?

நவீன மருத்துவ அறிமுக வகுப்புக்காக வெள்ளிமலை வந்திருந்தபோது, குக்கூ குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தும்பி வாசிப்பு அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. ஒவ்வொரு இதழ் வாசித்த பின்பும் கதையின் பிடித்தமான காட்சி படத்துடன் நானும் என் குழந்தைகளும் படம் பிடித்துக்கொள்வோம். அந்த ஒளிப்படங்களை அவர்களிடம் காட்டினேன். ‘சிவராஜ் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அடைவார். தும்பியின் ஒவ்வொரு இதழையும் தன் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து, பார்த்து பார்த்து வெளியிடுகிறார்’ என்றனர். என் பெற்றோர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள். என் அப்பா ஒரு மெக்கானிக். அவரது உச்சம் அவர் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரி படிப்புகள் கிடைக்கச்செய்ததே. என் அப்பா எனக்கு வாண்டு மாமாவை அறிமுகம் செய்யாதது தவறில்லை. ஆனால் நான் என் பிள்ளைகளுக்கு சிவராஜை அறிமுகம் செய்வது கடமை.

இன்று காலை தும்பி நிறுத்தப்படவிருக்கும் செய்தியறிந்து குக்கூ நண்பர் சந்திரசேகரை தொடர்பு கொண்டேன். விபத்தில் அடிபட்டு கட்டுபோட்ட கையுடன் திருவண்ணாமலை செயல் எழல் முகாமை அவர் ஒருங்கிணைத்தது ஞாபகம் வந்தது. நான் அழைத்தபோது தும்பியின் மதுரை அலுவலகத்தில் இருந்தார். தும்பியின் பொருளாதார நெருக்கடியை விளக்கினார். பல லட்சம் ரூபாய் கடனிருப்பதை கேட்டு மலைத்துவிட்டேன். இத்தனை நாள் கடனை பொறுத்து அச்சிட்டு கொடுத்த அச்சகத்தாருக்கு நன்றி. மேலும் அவர்களிடம் கேட்பது முறையல்ல என்றே தும்பியை நிறுத்த எண்ணியிருப்பதாக தெரிகிறது. இதுவரை அச்சிடப்பட்டுள்ள இதழ்களை விற்று கடனை கொஞ்சம் அடைத்தால் மீண்டும் தும்பியை தொடர வாய்ப்பிருக்கிறது என்று சந்திரசேகர் கூறியதே கொஞ்சம் நம்பிக்கையை அளித்தது. தும்பி இதழ்கள் காலாவதியாவதில்லை. நாம் தும்பியின் பழைய இதழ்களை வாங்கினால் அது தும்பிக்கும் நமக்கும் நன்மை.

எனக்கும் என் பிள்ளைகளுக்கும் தும்பி கடந்த 4 மாதங்களாகத்தான் பழக்கம். ஆனால் தும்பி எங்கள் வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாகிவிட்டது. தும்பியின் இதழ்கள் கொண்ட மிட்டாய்ப்பெட்டியிலிருந்து பல இதழ்கள் என் பிள்ளைகளால் உருவப்பட்டுவிட்டன. அட்சய பாத்திரம் போல் அந்த பெட்டியிலிருந்து தும்பிகள் வந்துகொண்டே இருக்கும் என்றே என் பிள்ளைகள் நம்பியிருக்கின்றனர்.

இன்று சித்ரா பௌர்ணமி. கடற்கரை சென்றிருந்தோம். நிலவைக்கண்டதும் ‘வெட்ட வெளி வானிலே, வட்ட வடிவ வெண்ணிலா’ என தும்பியில் வெளியான பாடலை பாடினோம். அந்த பாடல் இப்படி முடியும்..

‘தேய்ந்து வளர்ந்து பெரிதாகி

பஞ்சு போல மிளிரும்

கொஞ்ச நேரம் பார்த்தாலும்

நெஞ்சுக்குள்ளே குளிரும்’

பாபநாச கார்த்திக்
பாண்டிச்சேரி

முந்தைய கட்டுரைமருத்துவப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைகுமரித்தோழன்