சிலநூறு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தன. அனைவருக்கும் ஒருவரி நன்றி சொல்லி செய்திகள் அனுப்பினேன். பிறந்தநாள் அன்று தொலைபேசியை திறக்கவில்லை, இன்றுதான் எல்லாவற்றையும் பார்த்தேன்.
தொலைபேசியை அணைத்து வைத்தது ‘எனக்கு வேறு வேலை இருக்கிறது’ என்ற பாவனையில் அல்ல, எனக்கு நண்பர்கள், வாசகர்கள் மற்றும் பெரியவர்களின் சொற்கள் என்றுமே உவப்பானவை என அனைவருக்கும் தெரியும். ஒரு சந்தர்ப்பத்தில்கூட எவர் அழைப்பையும் செய்தியையும் தவிர்த்ததில்லை. ஆனால் இந்தப் பிறந்த நாளை முடிந்தவரை சாதாரணமாக ஆக்க முயன்றேன்.
21 இரவே செல்பேசியை அணைத்து அப்பால் வைத்துவிட்டேன். வேதாந்தத்தின் பாமதி – விவரணா பள்ளிகள் நடுவே என்னதான் பிரச்சினை என வாசித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தேன். ஆச்சரியம், 1992ல் நித்யாவின் வகுப்பில் நான் எடுத்த குறிப்புகள் கிடைத்தன. அவற்றை படிக்கவும் முடிந்தது. அந்த இரண்டு பள்ளிகள் நடுவே முந்நூறாண்டுகள் நடந்த விவாதம் அரைசெண்டிமீட்டர் அளவுக்கு வேறுபாட்டுக்காக என தெரிந்தது. அப்பைய தீட்சிதர் அதையே சொல்லியிருக்கிறார். ஆனால் தத்துவம் எப்போதும், எங்கும் அப்படித்தான்.
பின்னிரவு 2 மணிக்கு தூங்கி காலை ஏழு மணிக்கு எழுந்தேன். காபித்தூள் இல்லை. ஆகவே வழக்கமான கறுப்புக் காப்பி இல்லை. பதிலுக்கு டீ. காபி சாப்பிட்டுப் பழகியமையால் டீ குமட்டியது. நாற்பதாண்டுகள் டீ மட்டுமே குடித்தவன் நான். வீட்டில் எவருமில்லை. நான் மட்டுமே. தினத்தந்தி வந்திருந்தது. ஐந்து நிமிடம் படித்தேன். மேலே வந்து மீண்டும் வேதாந்தம்.
ஒரு விந்தையான புத்தகம் The Geography of Thought (How Asians and Westerners Think Differently…and Why) உளவியலாளர் Richard Nisbett எழுதியது. சுவாரசியமான ஊகங்கள், பொதுமைப்படுத்தல்கள். தத்துவ மாணவனுக்கு அதில் ஒன்றுமில்லை. உளவியலென்பதே ஒருவகையான ஊகத்தொகுப்புதான். மனிதனை மனம் என சுருக்குவது. வேதாந்தம் மனிதனை ஆத்மா என்று விரிப்பது.
காலை ஒன்பது மணிக்கு வழக்கம்போல் நான்கு முட்டைகள் சிற்றுண்டி. டீயை தவிர்த்தேன். மீண்டும் வேதாந்தம். அத்வைதத்தில் உருவான விவர்த்தவாதம் – அவிவர்த்தவாதம் – பரிணாமவாதம் பற்றிய விவாதங்கள். கீழிறங்கி டைனிங் டேபிளில் அமர்ந்து திருச்செந்தாழையின் இரண்டு கதைகள் வாசித்தேன். ஞானசந்திரஜாண்சன் எழுதிய கிறிஸ்தவக் காப்பியங்கள் என்ற நூல் வந்திருந்தது. அதை கொஞ்சம் வாசித்தேன்.
என் பென்ஷனுக்கான லைஃப் சர்டிஃபிகெட் கொடுக்கவேண்டும். வழக்கமாக வங்கியில் நேரடியாக அளிப்பேன். அதை தவிர்த்துக்கொண்டே வந்து ஓராண்டாகியது. துணிந்து சென்று பார்த்தால் கணிப்பொறி நிலையங்களிலேயே அளிக்கலாம் என்றார்கள். கணிப்பொறி நிலையம் எங்கே என்று கேட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு என்றார்கள். நான் நாகர்கோயிலில் இருப்பது நாலைந்து நாட்கள். அதில் ஆயிரம் வேலைகள். அப்படியே மேலும் ஓராண்டு. இரண்டு ஆண்டுகளாக பென்ஷன் வரவில்லை.
நேற்று முன்தினம் டீக்கடையில் தெரிந்தவரான ஆட்டோ ஓட்டுநர் ராஜன் அருகிலேயே கணிப்பொறி நிலையம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அங்கே செய்யலாமே என்றார். ஆகவே 12 மணிக்குக் கிளம்பிச் சென்றேன். அங்கே மதியம் 12 மணிமுதல்தான் கூட்டம் குறைவாக இருக்கும். நல்ல வெயில். இங்கே குமரியில் வெயில் எரியாது. ஆனால் வியர்வை கொட்டும். சென்ற சில நாட்களாக ஒவ்வொரு நாளும் அந்தியில் ஓரிரு சன்னமான தூறல்கள் விழுந்து வெக்கையை உச்சகட்டத்தில் வைத்திருக்கின்றன
கணிப்பொறி நிலையம் சென்றதனால், வழியில் ஒளியுடன் தென்பட்டு கவர்ந்ததனால், இரண்டு பழம்பொரி சாப்பிட்டு சீனி இல்லா டீ ஒன்று குடித்தேன். ஒரு மெல்லிய குற்றவுணர்வு, எடை கூடுமோ? சரிதான், பிறந்தநாள்தானே என ஒரு சமாதானம்.
கணிப்பொறிநிலையம் சென்று லைஃப் சர்ட்டிஃபிகெட்டுக்காகச் சொன்னால் பாய் என் சர்வீஸ் புத்தகம், வங்கிப்புத்தகம் ஆகியவற்றை கேட்டார். அவருக்கு பல கைகள். அப்போதுகூட இருவர் சிம்கார்டு வாங்க, ரீசார்ஜ் செய்ய நின்றுகொண்டிருந்தார்கள்.
திரும்ப வந்து அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்றேன். வெயிலில் உடல் காந்தத் தொடங்கியது. நல்லவேளையாக வேலை உடனடியாக முடிந்தது. நீண்டநாள் சுமை ஒன்று அகன்றது. இரண்டு ஆண்டு பென்ஷன் நிலுவை விரைவில் கிடைக்கலாம். ஆனால் அதற்கு இனி என்னென்ன கேட்பார்கள் என்று தெரியாது. அரசை நம்பமுடியாது. பாகுலேயன்பிள்ளை மேலிருந்து சான்று அளிக்க வேண்டும் என்றாலும் ஆச்சரியமில்லை
வெளியே வந்தால் ஓர் இளைஞர் என்னை கண்டு “சார், நீங்க ஜெயமோகனா?” என்றார். “ஆமாம்” என்றேன். “இன்னிக்கு உங்க பர்த்டே சார்… டிவியிலே சொன்னான்” “ஆமா” என்றேன். “ஒரு செல்பி எடுக்கலாமா?” நான் வெயிலில் வதங்கிய முகத்துடன் புன்னகைத்து அவருடன் நின்று செல்ஃபிக்கு போஸ் கொடுத்தேன்.
திரும்ப வந்து ஒரே ஒரு தோசை ஊற்றி சாப்பிட்டேன். மிளகாய்ப்பொடி இல்லை. ஆகவே சாதாரண வற்றல் மிளகுப் பொடியுடன் உப்பு, எண்ணை சேர்த்து குழைத்து ஒரு கலவை செய்துகொண்டேன். இது அந்தக்கால குமரிமாவட்ட வழக்கம். தோசை சாப்பிடும்போது இரண்டு மலையாளப் பாட்டுகள். ‘கதகளி கேளி துடங்ங்கி’ ‘உத்ஸவக் கொடியேற்றக் கேளி” இரண்டுமே கதகளியின் தாளம் ஒலிப்பவை. நான் தேர்வுசெய்யவில்லை, யூடியூபே தேர்வுசெய்து தந்தது. அதன் ரசனை மேம்பட்டு வருகிறது.
மதியத் தூக்கத்தை அண்மைக்காலமாகத் தவிர்க்கிறேன். இருந்தாலும் வெயிலின் சோர்வு. இருபத்தைந்து நிமிடத்தூக்கம். மீண்டும் வேதாந்தம். சங்கரருக்கு முந்தைய கௌடபாதரின் காரிகையை வாசித்தேன். வேதாந்தம் என்றல்ல தத்துவக்கல்வியே ஒருவகை துடலி முள்போல, ஒன்றை விலக்கினால் அம்முயற்சியாலேயே நூறு முட்கள் மேலும் குத்தும். சங்கரரின் விவாதமுறையிலுள்ள மூர்க்கம் ஒரு மதநிறுவுநருக்குரியது. அவருக்குப்பின் அந்த வேகம் மத்வரிடம் மட்டுமே.
சங்கரர் மதத்தை நிறுவவில்லை, ஆனால் அந்த வேகம் மதமாக ஆகாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஒரு மல்லு இளைஞன் இந்தியப்பெருநிலத்தை இப்படி ஊடுருவிப் பரந்திருப்பது ஒரு பெரும் வரலாற்று விந்தைதான். அவருக்குப்பின் அடுத்த சிறுவன் வங்காளத்திலிருந்து கிளம்பிய நரேந்திரன். வங்கத்திலும் கேரளத்திலும் இப்படி ஏதோ அடிப்படைச் சிக்கல் இருக்கிறது.
மாலை ஒரு நீண்ட நடை சென்றேன். கடைவீதிக்குச் சென்று ரொட்டி, முட்டை, கொய்யா வாங்கிக்கொண்டு திரும்ப வந்தேன். வரும் வழியில் ஒருவர் “பர்த்டேல்லா? கோயில் போகலியா?” என்றார். முகநூலில் வாசித்தாராம். “போகணும்” என்றேன்.
வந்ததும் குளித்தேன். வியர்வையில் ஊறிய உடல் முழுக்க உப்பு. ஒரு குட்டிச்சாரல் அடித்து ஊரே நீராவிக்குடுவைக்குள் இருந்தது. ஆனாலும் வெந்நீர் போட்டே குளித்தேன். அதை தவிர்க்கமுடியாது. அது பாகுலேயன்பிள்ளைக்கும் இருந்த உளவியல் சிக்கல்.
மாலையுணவு கொய்யாக்காய்கள். சுக்குவெந்நீர் போட்டுக்கொண்டு மேலே சென்று வாசஸ்பதி மிஸ்ரரின் பாமதி டீகாவை மேலோட்டமாக பார்க்கையிலேயே கண்சுழற்றி வந்தது. வெயிலில் அலைந்தால் அப்படித்தான். எட்டரை மணிக்கே சென்று படுத்துவிட்டேன். விழித்துக்கொண்டபோது நள்ளிரவு 1 மணி. முதன்முதலாக செல்பேசியை திறந்து சில செய்திகளைப் பார்த்தேன்.
இப்படி விழித்துக்கொண்டால் கடும் பசி இருக்கும். பசியுடன் தூங்காமலிருந்தால் கொந்தளிப்பான எண்ணங்கள் வரும், அர்த்தமற்றவை. ஆனால் சாப்பிடக்கூடாது, அது எடையை கூட்டுவது. கீழே வந்தேன். குளிர்ப்பெட்டியில் இருந்தது தக்காளி மட்டும்தான். சரிதான் என்று இரண்டு தக்காளியை சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன். வயிறு குளிர்ந்ததும் உலகம் இனிதாகியது. மீண்டும் தூக்கம்.
ஒருநாள் கடந்து சென்றது. இன்னொரு நாள். சில ஆண்டுகள் கழித்து இந்நாட்குறிப்பை வாசிக்கவேண்டும், புன்னகைக்க முடியும்.