வாசுகி?

Fossils of ancient snake, possibly largest, found in Gujarat’s Kutch: Study

இனிய ஜெயம்

விதிவிலக்கே இன்றி வெகு மக்கள் வாசிக்கும் இந்தியப் பத்திரிக்கை அனைத்தும் ‘வாசுகி பாம்பு’ கிடைத்தது என்றே குறிப்பிட்டு இருக்கிறது. இந்தியா டு டே தவிர.

இந்தியாவில் முன்னர் கிடைக்காத புதிய தொல்லுயிர் எச்சம் கிடைக்கையில் அதற்கு இந்திய தொன்மம் சார்ந்து பெயரிடுவது ( தொல் மானுட எச்சம் ஒன்றுக்கு ராம பிதாகஸ் என்று பெயரிட்டது போல) வழக்கங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. அந்த வகையில் குஜராத் கட்ச் பகுதி சுரங்கம் ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட தொல் உயிர் பாம்பு படிமம் ஒன்றுக்கு முன்னர் அதன் வகை இல்லாததால் புதிய பெயர் இட வேண்டி வாசுகி என பெயர் இட்டிருக்கிறார்கள். அதுதான் சர்வ வல்லமை பொருந்திய இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஆகிய பத்திரிக்கை ஊடக வாயில் விழுந்து இந்த கதிக்கு ஆளாகி இருக்கிறது.

இது பரவினால் இந்தியாவுக்குள் இது சார்ந்து தொல்லியல் அறிவு இரண்டு எல்லைகளில் புறக்கணிக்க படும். ஒன்று ஆளும் ஆட்சி அதன் சார்பான மக்கள் சேர்ந்து உருவாக்கும், தொன்மத்துக்கு வரலாற்று ஆதாரம் கண்டு விட்டதான முட்டாள்தனமான பார்வை. அது சார்ந்த புனிதங்கள் வழிபாடுகள் இன்னபிற. இரண்டாவது அதன் எதிர் தரப்பு முட்டாள்கள் உருவாக்கும் வாசுகி பாம்போட டெட் பாடி கிடைச்சிட்டுச்சாம் வகையறா கெக்கலி இன்னபிற அறிவீனங்கள். இரண்டுமே இன்றைய நமது தொல்லியல் அறிவு அடுத்த நகர்வுக்கு செல்லாதிருக்க செய்யும் பெரிய முட்டுக்கட்டையாகவே அமையும். முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிக மிகப் பரிதாபகரமான நிலையில்தான் இன்றைய இந்திய அறிவியல் சார் அறிவு நம்மால் சுவீக்கரிக்கப்படுகிறது.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

இந்தியா போன்ற பழம்பெருமை பேசும் நாடுகளில் தொல்லியலாய்வைப்போல சீரழிக்கப்படும் இன்னொரு அறிவுத்துறை இல்லை. முன்பு தொல்லியலாளர்களுக்கு ஓர் அறிவுத்திமிர் இருந்தது. இன்றைக்கு இந்தியத் தொல்லியலாளர்களில் பலர் அரசியல்வாதிகளின் ஆணைக்கேற்ப இயங்குபவர்களும், புகழுக்காக நிர்வாண நடனம்கூட ஆடத் தயங்காதவர்களுமாக ஆகிவிட்டிருக்கின்றனர். (நல்லவேளை இந்த ஆய்வை செய்தவர்கள் நம்மாட்கள் இல்லை)

Vasuki Indicus என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த தொல்லுயிரினம் Eocene காலகட்டத்தைச் சேர்ந்தது. மானுடர்களோ, அல்லது மானுடர்களின் முன்வடிவமாக குரங்குகளோ உருவாவதற்கு முந்தைய காலகட்டம். புவியின் தொடக்க யுகம்  (Eocene சொல்லே கிரேக்கப் புராணம் சார்ந்தது. விடிவைச் சுட்டும் இயோஸில் இருந்து வந்தது)

புவியின் தொடக்ககாலத்தில் இருந்த பேருயிர்கள் அழிந்துவிட்டன. பல லட்சம் ஆண்டுகள் கடந்து ஜுராஸிக் காலம் வரைக்கும்கூட மிகப்பெரிய உடல்கொண்ட உயிர்கள் பூமியிலிருந்தன. பருவநிலை மாறுபாடுகளால் அவை அழிந்தாலும் சில உயிர்கள் தாக்குப்பிடித்தன. குறிப்பாக ஓடு- செதில் கொண்டவை மேலும் பலகாலம் நீடித்தன. அந்த பேருயிர்களின் மரபில் யானை, காண்டாமிருகம், கொமோடோ டிராகன் போன்ற சில உயிர்களே இன்று எஞ்சுகின்றன

அன்று வாழ்ந்த உயிர்கள் தற்செயலாக உளைசேற்றில் பதிந்து பின் சேற்றுப் படிவமாகி, பின்னர் கல்லாகி எஞ்சி இப்படி கிடைக்கின்றன. இதைப்போன்ற பல தடையங்கள் கிடைக்கின்றன. இதற்கு முன்னரும் Titanoboa என்னும் பாம்பின் கல்லெலும்பு வடிவம் கொலம்பியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தி சொல்கிறது.

கட்ச் பகுதி மழை குறைவானது, ஆழமற்ற சேற்றுவெளியாக நெடுங்காலம் நீடித்து பின்னர் வரண்டு பாலைநிலமாக ஆகியது. இன்றும்கூட ஆழமற்ற சேற்றுவெளி அங்கே எஞ்சுகிறது. அப்பகுதிக்கு பலமுறை சென்றதுண்டு. அங்குள்ள நிலவியல் காரணமாக தொல்சின்னங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும். ஆகவே இன்னும்கூட ஏராளமான கல்லெலும்பு எச்சங்கள் அங்கே கண்டெடுக்கப்படலாம்.

சென்ற காலங்களில் ஒரு நினைவுக்காக தொல்தடையங்களுக்கு புராணப் பெயர்களைப் போடுவது வழக்கமாக இருந்தது, அது ஐரோப்பாவிலிருந்து வந்தது. அங்கே கிரேக்கப் புராணப் பெயர்களைப் போட்டார்கள். ஆனால் இப்போது அது மிக ஆபத்தானதாக ஆகிவிட்டிருக்கிறது. குறிப்பாக ராமரின் பெயர் அரசியல் ஆயுதமாக, மதவெறி அடையாளமாக ஆகிவிட்டிருக்கும் நிலையில் ராமபிதகஸ் என தொல்மனிதனுக்கு பெயர் இருந்தால் அது என்ன ஆகும் என எண்ணவே கூசுகிறது. அது இன்னும் பலர் கண்ணுக்குப்படவில்லை.

இந்த வாசுகி என்றபெயர் இப்போதே மதமூடர்களால் சுற்றுக்குவிடப்பட்டுவிட்டது. கேரளத்திலும் வாசுகி வந்தார் என்று செய்திகள் போட்டிருக்கிறார்கள். நாளையே பெரிய ஜூராஸிக் பறவை கண்டெடுக்கப்பட்டால் உடனே ஜடாயு என்று சொல்லிவிடுவார்கள். ஆகா, புராணமெல்லாம் உண்மை என ஆரம்பித்துவிடுவார்கள். அந்த மூடர்களிடம் பேசமுடியாமல் அறிஞர்கள் ஒதுங்கிக்கொள்ள அரசியல்வாதிகள் அதை அறிவியலுண்மையாகப் பரப்பி ஆதாயம் கொய்வார்கள்.

இந்த இலக்கிய ரீதியாகச் சுவாரசியமான இரண்டு விஷயங்கள்தான்.

ஒன்று, இப்படி பேருருவ உயிர்களை மனிதன் அல்லது மனிதனின் மூதாதையாகிய குரங்குகூட தன் கண்ணால் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மனிதனின் கற்பனையில் அவை எஞ்சியிருக்கின்றன. அவனுடைய ஆழ்நிலை நினைவாக நீடிக்கின்றன. அவையே புராணங்களாக ஆகின்றன. உயிர்களின் நனவிலி இயற்கையில் இருந்து உருவாகி வந்தது, அது காலங்களைக் கடந்தது.

இரண்டு, இது டேவிட் அட்டன்பரோ அவருடைய இயற்கையின் பரிணாமம் பற்றிய நூலில் சொல்வது. பாம்புகள் பெரிதாக இருந்தபோது அவற்றுக்கு நஞ்சு இருக்கவில்லை. வேகமும் குறைவாக இருந்தது. உடலின் அளவுதான் அவற்றின் ஒரே பலம். எந்த உயிரும் தாக்கமுடியாது. பற்றிக்கொண்டு இறுக்கினால் உயிர்கள் தப்பமுடியாது. ஆனால் பாம்பின் வாயில் நஞ்சு பரிணாமத்தில் மெல்லமெல்ல உருவாகி வந்தது. பேருருவம் தேவையில்லாமலாகியது. பாம்பு சிறிதாகியது. அழகான ஒரு உருவகம். கவிதையில் கையாளலாம். (டேவிட் அட்டன்பரோ. பரிணாமத்தின் பாதை. தமிழில் டோரதி கிருஷ்ணமுர்த்தி)

இந்த பாம்பின் கல்லெலும்பு தமிழகத்தில் கிடைத்திருந்தால் என்னென்ன கதைகள் யூடியூபில் ஆரம்பித்திருக்கும் (கிண்ணிமங்கலம் விவகாரம் நினைவிலிருக்கும். எவரோ பொய்யாக ஒரு தொல்லாதாரத்தை கிளப்பிவிட அதை வைத்துக்கொண்டு கொலைத்தாண்டவம் ஆடிவிட்டனர் நம்மாட்கள்) இந்த வாசுகி எலும்பை வைத்துக்கொண்டு வடக்கே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே கடோத்கஜனின் எலும்புக்கூடு என்று ஒரு ஃபோட்டோஷாப் படத்தை வைத்து கதறிக்கொண்டிருந்தார்கள். இது அறிவியல்செய்தி, என்ன ஆகப்போகிறதோ. அனேகமாக யாரோ மத்திய அமைச்சர் ஏதாவது உளறிவைப்பார் என எதிர்பார்க்கிறேன்.

தமிழகத்தில் தொல்லியல் சார்ந்து பரப்பப்படும் மூடத்தனங்களைக் கண்டித்தால் முகநூலில் வசைபாடுவார்கள். வடக்கே சூலத்தை தூக்கிக்கொண்டு கொல்ல வந்தாலும் வருவார்கள். சூதானமாக இங்கே இருந்துகொண்டே சொல்லிப் பார்க்க வேண்டியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைசென்ற ஆண்டு ஒரு நினைவு, கடிதம்
அடுத்த கட்டுரைஇதழெல்லாம் துயர் பெருக அந்திச்சுழியில் பூத்தெழும் ஊழ்கத்தின் மாமலர்