கலையின் கிளைவழிகள்

அன்புள்ள ஜெ

ஏ.ஆர்.ரஹ்மான் ‘திருட்டு இசையமைப்பாளர்’ என்றும் அவர் ‘இசையமைப்பாளர் அல்ல இசை ஒருங்கிணைப்பாளர், தொழில்நுட்ப நிபுணர் மட்டுமே’ என்றும் சொல்லும் ஓர் அலை திடீரென்று கிளம்பியுள்ளது.(ராம்கோபால் வர்மாவின் புதிய பேட்டியை ஒட்டி)

இப்படி திட்டுபவர்கள் பெரும்பாலானவர்கள் இளையராஜா ரசிகர்கள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள். ஏற்கனவே இளையராஜாவை கழுவி ஊற்றியவர்கள் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் (வெவ்வேறு கட்சியடையாளத்துடன், முகமூடிகளுடன் இணையத்தில் உலாவருபவர்கள்) மற்றும் அரசியல்கட்சிகளின் தொண்டர்கள், சாதிக்காழ்ப்பு கொண்டவர்கள்.

இந்த அலையை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? சமகால வம்புகளுக்கு செவிகொடுக்கக்கூடாது என்ற நிலைபாட்டை அறிவேன். இருந்தாலும் கேட்கிறேன்.

ஜெ.சிவராஜ்

அன்புள்ள சிவராஜ்,

சமகால வம்புகள் நம்மை வந்தடையாமலிருக்காது. புறக்கணிப்பதே நமக்கு நல்லது. ஆனால் நம் நிலைபாடுகள் தெளிவாக இருக்கவேண்டும். நாம் இந்த வம்பர்களுடன் அமர்ந்து விவாதித்து நேரம் செலவிடலாகாது.

அடிப்படையில் இந்த வம்பு மனநிலையின் நச்சுத்தாக்குதல் எவரையுமே விட்டுவிடுவதில்லை. அரசியல் கருத்து சொல்பவர்கள், பொதுவாகவே விவாதிப்பவர்கள் மட்டுமே இந்த தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. என்னிடம்,  ‘கருத்து சொல்லாமல்  இருந்தால் உங்கள்மேல் தாக்குதல் வராது’ என்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எந்தக் கருத்தும் சொல்லாதவர்களும் தாக்கப்படுவார்கள். முற்றிலும் ஒதுங்கியிருந்தாலும் விடப்படமாட்டார்கள். சிலர் நாள்தோறும் அதிதீவிரக் கருத்து சொன்னாலும் எவரும் கவனிக்க மாட்டார்கள். என்ன வேறுபாடு? வெற்றி மட்டுமே.

இளையராஜா, ரஹ்மான் இருவர் மீதான தாக்குதல்களுக்கு முக்கியமான காரணம் அவர்கள் வெற்றியடைந்தவர்கள், சாதனையாளர்கள், பண்பாட்டின் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான். இளையராஜா இப்படி இருப்பதனால் தாக்குகிறோம் என்பார்கள். ரஹ்மான் அப்படி இல்லாததனால் தாக்குகிறோம் என்பார்கள். தாக்குவதுதான் முக்கியம், அதற்குக் காரணங்கள் கண்டடையப்படுகின்றன.

முதற்காரணம் common man’s grudge எனப்படும் ஓர் சமகால உணர்வு. இன்று சாமானியனுக்கு அவன் சாமானியன் என்பதை நவீன ஊடகங்கள் காட்டிக்கொண்டே இருக்கின்றன.  தன் திறமையின்மை, தன் ஊக்கமின்மை ஆகியவையே தன் சாமானியத்தன்மைக்கான காரணம் என அவன் அறிவான். சென்றகாலகட்டத்தில் அவன் அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளவும் செய்வான். இன்று அப்படி அல்ல. இன்று ஊடகம் அவனுக்கும் ஓர் இடம் அளிக்கிறது. அவனும் தன் ஆயிரம் புகைப்படங்களை வலையேற்றிக்கொள்ள முடியும். நூறுபேருக்குச் செய்தி அனுப்ப முடியும். பாட்டுப்பாடவும் நடனமாடவும் முடியும். ‘நானும் ஒரு ஆள்தான்’ என கற்பனைசெய்துகொள்ள முடியும். அந்த அகங்காரம் உருவாகும்போது அவன் சாமானியனாக இருப்பது அவனை தாழ்வுணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. உண்மையிலேயே வென்றவர்கள் அவனைச் சீண்டுகிறார்கள்.

வென்றவர்கள் மேல் இருவகையில் சாமானியன் எதிர்வினையாற்றுகிறான். வழிபாடு, வசைபாடல். ஒருவரை வழிபடுவது இன்னொருவரை வசைபாடத்தான். ஆகவே எல்லாருக்குமே பல்லாயிரம்பேரின் வசை உறுதி. வசைக்குரிய காரணங்கள் தேவை. ஒன்று அரசியல். இன்னொன்று அறவியல். கடைசியாக ஒழுக்கம். இந்த வசைபாடுபவர்கள் தங்களை ‘சரியான அரசியல்’ சார்ந்து நிற்பவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். அறம்சார்ந்த நிலைபாடுகளை பாவனைசெய்கிறார்கள். ஒழுக்கத்தராசுடன் எடைபோட முனைகிறார்கள். இதெல்லாமே பாவலாக்கள். இதைச் செய்பவர்களுக்கு இவை எவையுமே அவர்களுக்கு உரிய தன்மைகள் அல்ல, அவர்களுக்கு மெய்யாகவே அந்நம்பிக்கைகளும் நிலைபாடுகளும் இல்லை என்று தெரியும். வசைபாடுவதற்கான அடிப்படைகளை அமைக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஆகவேதான் சமூகஊடகங்களில் ஒரு சிறு பிரச்சினை கிடைத்தாலும் ஓடிவந்து எவரையாவது கடிக்க ஆரம்பிக்கிறார்கள். தீர்ப்பு சொல்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள். எல்லாம் ஒருவாரம். வசைபாடி தணிந்ததும் அடுத்த இரை நோக்கிப் பாய்கிறார்கள். சமூக ஊடகவெளியில் இப்படி பல்லாயிரம் கழுதைப்புலிகள் பசிகொண்டு அலைகின்றன. சமயங்களில் எவரும் சிக்கவில்லை என்றால் ஒருவரை ஒருவர் குதறுகின்றன.

இதில் எந்த அளவுகோலும் இல்லை. வசைபாடுவதில் குற்றவுணர்ச்சியும் இல்லை. பெரும்பாலானவர்களுக்குத் தெரியும், நடிகர் சிவக்குமார் பற்றி. ஒழுக்கமானவர், இனியவர், தன் வாழ்நாளில் எவரையும் ஏமாற்றாதவர், பெரியவர் சிறியவர் என வேறுபாடு காட்டாதவர், தனிவாழ்க்கையிலும் சாதிநோக்குக்கு அப்பாற்பட்டவர், திரைவாழ்க்கையில் எவருக்கும் எந்நிலையிலும் எந்த இழப்பையும் உருவாக்கலாகாது என்பதில் உறுதிகொண்டவர், பிறரை பாராட்ட மட்டுமே செய்பவர், அத்துடன் திரையுலகில் உண்மையிலேயே பெரும் அறப்பணிகளைச் செய்பவரும்கூட. ஆனால் அவரையும் வசைபாடுவார்கள். காரணம் அவர் தன் தொழிலும் வாழ்விலும் வெற்றிபெற்றவர் என்பது மட்டுமே.

உதாரணமாக, சிவக்குமார் தன் பாலியகால நண்பர் ஒரு சால்வையை போர்த்தியபோது இயல்பாக அவர் போய்யா என தட்டிவிட்ட ஒரு சிறு காணொளித் துணுக்கு  வெளியானதும் வசைகள் கொட்டின. அவர் தன் பாலியகால நண்பர் என சிவக்குமார் ஆதாரபூர்வமாகச் சொன்ன பிறகு எவரேனும் அந்த வசைகளுக்காக வருந்தினார்களா? இல்லை, மீண்டும் வசை. இந்த வசைபாடுபவர்கள் எல்லாம் அத்தனை யோக்கியர்கள் என்றால் நாடு இப்படியா இருக்கும்?

ராஜா, ரஹ்மான் இருவரையும் வசைபாடுபவர்களை ஒரே கும்பல் என்றுதான் கொள்ளவேண்டும். ஒரே மனநிலை. ராஜாவை வசைபாட ரஹ்மானை துணைகொள்கிறார்கள், ரஹ்மானை வசைபாட ராஜாவை முன்வைக்கிறார்கள். அதீதமான வழிபாட்டுடன் ஒருவரைப் பற்றி பேசுவது என்பது இன்னொருவரை வசைபாடுவதற்கான நிலைபாட்டை எடுக்கும் உத்திதான். ஒரு மனநோய் அது. அத்துடன் எப்போதுமுள்ள சாதி, மதக் காழ்ப்புகள். அக்காழ்ப்புகளை அரசியல் நிலைபாடுகளாக உருமாற்றி காட்டும் பசப்புகள்.

*

இச்சந்தர்ப்பம் கலைசார்ந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பேசுவதற்கு உகந்தது. சிலரால் கவனிக்கப்படும். ஆகவே இதைப் பேசுகிறேன். இலக்கியத்தைச் சார்ந்தே பேசமுடியும். நான் பேசுவது இலக்கியம் – ராஜா, ரஹ்மான் இருவரின் இசையையும் இசையமைப்பு முறையையும் நேரில் அறிந்தவன் என்றமுறையில் அவர்களைப் பற்றியும் பேசுகிறேன்.

கலையில் இரண்டு வகை உருவாக்க முறைமைகள் உண்டு. ஒன்று, ஒருவரின் அகவுணர்வுகள் மட்டும் நேரடியாக வெளிப்படும் முறை. இன்னொன்று, ஒரு கலைஞர் தன்னுடைய கலைத்திறனை வெவ்வேறு பிற அம்சங்களுடன் கலந்து தொகுத்துப் பெருக்கி முன்வைக்கும் முறை.

இந்த இரண்டு முறைகளும் எப்போதுமே கலையில் உண்டு. ஏனென்றால் இவை அடிப்படையானவை. ஷேக்ஸ்பியர் -மில்டன் என்னும் இருமையை ஆங்கில இலக்கியத்தில் குறிப்பிடுவார்கள். ஷேக்ஸ்பியரின் கலை என்பது ஷேக்ஸ்பியர் மட்டுமே. அது தனித்தொழும் ஓர் ஆறு. மில்டன் ஐரோப்பிய பண்பாட்டு- ஆன்மிக மரபின் பல்லாயிரம் குறிப்புகளின் பெருந்தொகுப்பு. மேற்கோள்கள், உட்குறிப்புகள், எடுத்தாள்கைகள் என பெருகும் ஒரு மலையருவிப்பொழிவு. அவையனைத்தும் மில்டனில் இணைகின்றன.

பெரும்பாலும் ஒரு வகை மேதை வந்து தன் வழியை நிலைநாட்டியதுமே நேர் எதிரான மேதை வந்து அடுத்த பக்கத்தை நிலைநாட்டுவார்.பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்கள் கவிதை என்பது அகவயமானது, ஒருவர் தன்னந்தனியாக தனக்குத்தானே பேசிக்கொள்வது போன்றது என்றார்கள். அந்த வகைமை நிலைகொண்டதுமே டி.எஸ்.எலியட் வந்தார். அவருடைய தரிசுநிலம் The Waste Land என்னும் குறுங்காவியம் என்னிடம் ஒரு தனி நூலாக உள்ளது, அடிக்குறிப்புகள் மட்டும் எழுபது பக்கம். கவிதையை விட மூன்று மடங்கு. உபநிடதக் குறிப்புகூட உண்டு (தத்த, தய, தம! சாந்தி சாந்தி சாந்தி!) அந்தக் கவிதை பெருந்திகைப்பை உருவாக்கியது, எதிர்ப்பும் கேலியும்கூட வந்தன. ஆனால் அது இன்று உலக இலக்கியச் சிகரங்களில் ஒன்று.

முதல்வகை கவிதை மட்டுமே கவிதை என நினைப்பவர்கள் தரிசுநிலத்தை ஒருவகை assembling என்று சொல்லக்கூடும். வெறும் அறிவுச்செயல்பாடு என்று விமர்சிக்கக்கூடும். ஆனால் இதிலுள்ளது மகத்தான மேதமை. ஓர் அக எழுச்சி அப்படியே பொங்கி நேரடியாக வெளிப்படவில்லை. அது தன்னை உலக இலக்கியப்பரப்பின் பலநூறு வரிகள் வழியாக மீண்டும் கண்டடைகிறது. அதற்கு கவித்துவ எழுச்சியும் கூடவே மகத்தான இலக்கிய அறிவும் தேவை. முதல்வகை அலைகடலில் எழும் தனிச்சூரியன். இரண்டாம் வகை பலநூறு மலைச்சிகரங்களில் ஒளியை பரப்பியபடி எழும் இமையமலைச் சூரியன்.

நாவல்களையே எடுத்துக் கொள்ளுங்கள். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் அவர்கள் மட்டுமே வெளிப்படும் படைப்புகள். ஆனால் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் ஒரு பெரும் synthesis எனச் சொல்லத்தக்கது. அதிலுள்ள கலையிலக்கியப் பண்பாட்டு உட்குறிப்புகளைப் பற்றி எழுதிக்குவித்திருக்கிறார்கள். யுலிஸஸ் நாவலுடன் அதைவிடப்பெரிய அதைப்பற்றிய குறிப்புவிளக்க நூல் ஒன்றையும் விற்கிறார்கள்.

இரண்டில் ஒன்றை போற்றுபவர்கள் உண்டு. முதல்வகையை போற்றுபவர்கள் இரண்டாம் வகை அறிவுத்தன்மை மேலோங்கியது என்பார்கள். இரண்டாம் வகையை போற்றுபவர்கள் முதல்வகை ஒரு மனிதரை மட்டுமே சார்ந்தது, பலமுனைத்தன்மையும், பல அடுக்குத்தன்மையும் இல்லாதது என்பார்கள். இன்றைய ஐரோப்பிய இலக்கியச் சூழலில் இரண்டாவது வகை கலைக்கே முதன்மையான மதிப்பு உள்ளது. ஏனென்றால் மரபிலும் பெருங்காப்பியங்கள் அப்படித்தான் உள்ளன. யுலிஸஸின் அதே பாணியிலான பெருங்காப்பியம்தான் தாந்தேயின் டிவைன் காமெடி.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவகைமைக்கு மேலதிக முக்கியத்துவம் உருவாவதும் உண்டு. நவீனத்துவம் (Modernism) ஓங்கியிருந்த காலகட்டத்தில் முதல்வகை முன்னிலையில் இருந்தது. காஃப்கா, காம்யூ போன்றவர்களின் ஆக்கங்கள் அவர்கள் மட்டுமே வெளிப்படுபவை. பின்நவீனத்துவம் (Postmodernism) ஓங்கிய காலகட்டத்தில் இரண்டாம் வகை முக்கியத்துவம் பெற்றது. கலைப்படைப்புகள் பெருந்தொகுப்புகளாகவே அமையவேண்டும் என்று சொல்லப்பட்டது.

பின்நவீனத்துவர் கலை என்பதே ஒரு கலவைதான் என்றனர். ஒரு synthesis அது. எழுதுபவனும் சூழலும் முரண்பட்டும் கலந்தும் அதை உருவாக்குகின்றன. அறிந்தும் அறியாமலும் பல்வேறு நபர்கள் அதில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு கலாச்சாரக் கூறுகள் அதில் ஊடறுக்கின்றன. அது ஒருவகை பின்னல் அல்லது முடைதல்தான். பின்நவீனத்துவர் படைப்பு (Creation) கலை (Art) போன்ற சொற்களையே மறுத்தார்கள். அதற்குப் பதிலாக பிரதி (Text) என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

‘அசல்கலை’ என ஒன்று இல்லை என்றும், தனிநபர் மட்டும் வெளிப்படும் கலை என்பதே கிடையாது என்றும் பின்நவீனத்துவர் சொன்னார்கள். தனிநபர் தான் மட்டுமே தன் கலையில் வெளிப்படுவதாகச் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அவர் சொல்லும் அந்த ‘தனிநபர்’ என்னும் தன்னிலை (subjectivity) என்பதே ஒரு பெரும் கலவைதான் என்றனர். எந்த அளவுக்கு அதிகப்பங்களிப்பு உள்ளதோ அந்த அளவுக்கு கலை விரிவும், ஆழமும் கொள்கிறது. கலையின் ஆழம் என்பதே பல்லடுக்கு (Multilayer) தன்மைதான் என்றனர். பலகுரல்கள் ஒலிக்கும்தன்மை (polyphonic) யே நல்ல கலையின் இயல்பு என்றனர்.அந்த வார்த்தையே இசையில் இருந்து வந்ததுதான்.

சினிமாரசிகர்களுக்காக எளிய உதாரணம் இரண்டு. புரூஸ்லி நவீனத்துவர். அவருடைய கலை அவருக்குரியது, அவரே உருவாக்கிக் கொண்டது. அதில் அவர் மட்டுமே உள்ளார். (அவருக்கு கிட்டப்பார்வை. ஆகவே தன் எல்லைக்குள் வருவதை மட்டுமே தாக்கும், தன் எல்லைக்கு அப்பாற்பட்டதை பார்க்காமல் கண்களை தாழ்த்திக்கொள்ளும் ஒரு சண்டைமுறையை அவர் உருவாக்கிக்கொண்டார்) . அவருடையது கராத்தே-குங்ஃபூ மட்டுமே. மிகத்தீவிரமானது அது

புரூஸ்லியின் மாணவர் என்று சொல்லத்தக்க ஜாக்கி சான் பின்நவீனத்துவர். அவர் எல்லாவற்றையும் கலப்பார். சண்டை, ஓட்டம், கோமாளிக்கலை, கழைக்கூத்தாட்டம் எல்லாம் உண்டு. தொழில்நுட்ப ஏமாற்றுதலும் உண்டு. எப்படி ஏமாற்றினேன் என அவரே கடைசியில் காட்டி நம்மை நோக்கி சிரிக்கவும் செய்வார். இந்த இரண்டு வகைமைகளும் எப்படி சதுரங்கத்திலும் உள்ளன என்பதை கே.எம்.நரேந்திரன் எழுதிய கட்டுரை சொல்புதிது இதழில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. (மரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் – சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்)

இந்த அதீத எல்லைகளுக்குள் செல்லாமலேயே ராஜா- ரஹ்மான் என இரண்டு வகை மேதைகளையும் புரிந்துகொள்ள முடியும். ராஜாவின் கலை அவர் மட்டுமே இருப்பது, அதன் எல்லா கூறுகளையும் அவர் முழுமையாகக் கட்டுப்படுத்துவார். அவர் அமர்ந்து எழுதியதைத்தான் பாடவேண்டும். ஒரு சிறிய நுட்பம் அவர் எண்ணியபடியே வருவதற்காக அவர் பாடகர்களையும், இசைக்கலைஞர்களையும் திரும்பத் திரும்ப இசைக்கவைப்பார். மிகமிக நுணுக்கமான பல அவர் உள்ளத்தில் இருக்கும், அதைநோக்கி ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவே கொஞ்சம் கொஞ்சமாக குவிந்து சென்றுகொண்டே இருப்பதைக் காண்பது ஓர் அனுபவம்.

ஆம், அதிலுள்ளது ராஜா மட்டும் அல்ல. நாட்டுப்ப்புறப் பண்கள், கர்நாடக ராகங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளே வந்திருக்கும். இசைக்கலைஞர்களின் திறனும் உள்ளே வந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் ராஜா ஆகித்தான் அந்தப் பாடலுக்குள் செல்லும். ஒவ்வொன்றும் மென்மையாக உருமாறியிருக்கும். பலசமயம் அந்த இசைக்கலைஞர்கள் தடுமாறுவது அந்த உருமாற்றத்தை தங்கள் குரலிலும் வாத்தியத்திலும் கொண்டுவருவதற்காகவே.

ரஹ்மானின் இசையில் பல்வேறு திறன்கள் எப்போதுமே உள்ளன. அவர் அனைவரையும் இசைக்க விடுகிறார். ஒவ்வொருவரையும் அவரவர் போக்குக்கு விடுகிறார். அவர் ஒரு தொகுப்பாளர் போலத்தெரிவார். அப்படியென்றால் அந்தத் தொகுப்பை இன்னொருவரும் செய்யலாமே. அவர் அடைந்த வெற்றிகளை ஏன் இன்னொருவர் அடையமுடிவதில்லை? ஏன் அவருக்கு ஆறுகோடி ரூபாய் கொடுக்கவேண்டும்? இங்கும் கலையின் ஆசிரியன் இருக்கிறான். அவன் கலை நிகழ்வதற்கு முன்னரே இருக்கவில்லை. கலை நிகழ நிகழ தன்னை கண்டடைந்து தொகுத்துக் கொண்டே இருக்கிறான்.

இந்த வகை கலையில் பண்பாட்டின் பலநூறு கூறுகள் மிகமிக விந்தையான முறையில் இணைந்துகொண்டே இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது. முதலில் ஒரு கட்டற்ற கூத்து போல் இருக்கும் அந்த கலைநிகழ்வு மெல்லமெல்ல ஒத்திசைவை அடைந்து ஒரு நடனம்போல் ஆகிறது. அந்த ஒத்திசைவை நடத்துபவனாக, அந்த நடனக்களத்திற்கு வெளியே, கலைஞன் இருக்கிறான். ஓர் அறிவியல் சோதனையை கண்ட நினைவு. வெவ்வேறு ரசாயனங்கள் இணைந்து ஓர் அற்புத ஓவியத்தை அமைக்கின்றன. அவை அவ்வாறு இசைவடையக் காரணம் அந்த கலத்திற்கு வெளியே இருக்கும் ஓர் ஐசோட்டோப்பின் கதிரியக்கம். அதுதான் இத்தகைய கலைப்படைப்பின் கலைஞன்.

ரஹ்மான் கடல் படத்திற்கு அமைத்த பாடல்களின் வெவ்வேறு வடிவை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே வந்தேன். எனக்கு எல்லாமே நன்றாக இருந்தன. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒன்று கூடுதலாகச் சேர்ந்திருந்தது, பாடல் இன்னொன்றாக மாறியது. அந்தப் பயணத்துக்கு முடிவே இல்லை. ஏனென்றால் அது எப்படி இருக்கவேண்டும் என அவர் முன்னரே முடிவுசெய்யவில்லை. படமாக்கப்படும்போது இருந்த பாடல் அல்ல ஒலிக்கலப்பின்போது. படம் வெளிவந்தபோது பாடல் இன்னும் மாறியிருந்தது. அவர் இப்போது அதை தொட்டால் அப்பாடல் இன்னொன்றாக மாறும்.

ரஹ்மானின் இசையில் இன்னொருவரின் பங்களிப்பு உண்டு என்றெல்லாம் அக்கப்போர் சொல்பவர்களுக்கு இந்த கலையுருவாக்க நிகழ்வு பிடிகிடைக்காது. ஒலிப்பதிவுக்கலைஞர்கள்கூட பெரும்பங்காற்றும் இசை அது. பல்வேறு இசைநிபுணர்கள் அதற்குள் செயல்படுகிறார்கள். நான் இளமையில் கண்ட சமையல்மேதை ஒருவர், சமையலின் கடைசிக்கட்டத்தில்தான் வருவார். ஒவ்வொன்றையும் சற்றே திருத்தியமைப்பார், அவருடைய சமையல் அவருடைய படைப்பாகவே இருக்கும்.

ரஹ்மான் இசையில் நான் இதைக்கொடுத்தேன் என எவரும் சொல்லலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக அது அவருடயதாகவே இருக்கும். நான் செங்கல் செய்துகொடுத்தேன், கட்டிடம் என்னுடையது என எவரும் சொல்லிவிடமுடியாது. அதை அவர் இசையில் பணியாற்றிய அனைவரும் அறிவார்கள். சுக்விந்தர் சிங் போன்ற பாடகர் நன்கறிவார். அவரிடம் கேட்டால் அது நானும் பங்காற்றிய பாடல், ஆனால் என் பாடல் அல்ல என்பார்.

பின்நவீனத்துவக் கலைக்கு எதுவுமே வெளியே இல்லை. மின்னொலிகள். கூச்சல்கள். இயற்கையான ஓசைகள். உலகின் எந்த இசையும் விலக்கல்ல. ஆப்ரிக்க இசையுடன் இந்துஸ்தானி இசை ஒன்றாகும் ஒரு புள்ளியை அது கண்டடைய முடியும். ப்ளூஸ் இசையில் ஒரு இந்துஸ்தானி இசைக்கீற்று அற்புதமாக ஊடுருவுவதை ரஹ்மானின் இசையை கேட்பவர்கள் உணரமுடியும். பின்நவீனத்துவ இசை ஒரு நிலப்பரப்புக்கு உரியதல்ல, உலகளாவியது. நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியதன் விளைவு.

நான் ராஜாவின் இசையை அறிந்து, அதில் திளைத்து, அவரை வழிபடுபவன். ஆகவே உறுதியாகச் சொல்வேன், ரஹ்மான் இணையான மேதை. அடுத்த காலகட்டத்திற்குரியவர்.  ஒரு நல்ல இசைரசிகருக்கு ராஜா உகந்தவராக இருக்கலாம், ரஹ்மானுக்குள் நுழைய முடியாமலிருக்கலாம். அவர் இசைரசிகர் என்றால் ‘அது எனக்கானதில்லை, உள்ளே போக முடியலை’ என்ற அளவோடு நிறுத்திக்கொள்வார். ஏனென்றால் அதிலுள்ள இசைத்திறன் அவருக்கு எப்படியோ தெரியும். இதையே ரஹ்மான் இசையின் ரசிகர் ராஜா பற்றியும் சொல்வார். எனக்கு காஃப்கா, காம்யூ இருவரும் மேதைகள் எனத் தெரியும், ஆனால் அவர்கள் எனக்கானவர்கள் அல்ல என்று எப்போதும் சொல்லிவருகிறேன். என் ரசனைக்கு ரஹ்மானும் ராஜாவும் இனியவர்கள். மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் ஜி.தேவராஜனும், சலீல் சௌதுரியும், எம்.கே.அர்ஜுனனும் பிடித்தமானவர்கள்.

இன்று பின்னவீனத்துவக் கலையின் வழிமுறையில் இருந்து இன்னொன்று உருவாகி வருகிறது. அது நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் அல்ல. டிரான்ஸ்மாடர்னிஸம் என்கிறார்கள். பின்நவீனத்துவ உலகளாவிய தன்மையை, பல்லடுக்குத்தன்மையை, கூட்டுக்கலைத்தன்மையை உள்ளிழுத்துக்கொண்டு ஒரு செவ்வியல் ஒருமையை நோக்கிச் செல்வது அது. அந்த மரபில் இன்னொரு இசைமேதை வரலாம். அப்போது நாம் ராஜா,ரஹ்மானுடன் அவரையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்போதும் ராஜா ரஹ்மான் இருவரில் ஒருவரை துணைசேர்த்துக்கொண்டு புதியவரை வசைபாடும் கும்பல் இருக்கும். அவர்கள் வரலாறு முழுக்க இருப்பார்கள். உயிர்கள் என்றுமிருக்கும், நோய்க்கிருமிகளும் இருந்துகொண்டிருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைநடை
அடுத்த கட்டுரைஓவியம் ஏன் அறிவியக்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிறது?