ஓர்மயுண்டோ ஈ முகம்!!!

அன்புள்ள ஜெ

ஓர் இணையப்பதிவை பார்த்தேன்.

உங்களைப் பற்றி ஒரு நூலே வந்துள்ளது!

செ.தியாகராசன்

*

ஜெயமோகன்- இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்’ என்ற தலைப்பில் 22 நபர்கள் ஒன்று சேர்ந்து 35 கட்டுரைகளை ஜெயமோகனை விமர்சித்து எழுதி அதை ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை போல ஜெயமோகனுக்கு எதிராக இதுவரை வந்த நாலு அறிக்கைகளும் இலவச இணைப்பாக உண்டு.

22 நபர்கள். ஒன்றிரண்டு பேர் சிறுபத்திரிக்கை ஆள், மீதி ப்ளாக், பேஸ்புக் பத்தி எழுதுபவர்கள். இத்தனை பேர் வேலை மெனக்கெட்டு ஒன்று கூடி ஒரே ஒரு எழுத்தாளனை திட்டி அதை ஒரு புத்தகமாக வேறு வெளியிடுவது அனேகமாக உலகத் தொலைக்காட்சிகளில் இதுதான் முதல் முறையாக இருக்கக் கூடும். போகட்டும்! இப்புத்தகம் குறித்து ஒரு ஃபிலிஸ்டைன் சமூகத்தை சேர்ந்த சாதா குடிமகனாக எனக்கு எழுந்த சில தேவையில்லாத கேள்விகள்:

– குறைந்த பட்சம் எழுத்தாளருக்கு ஒன்று என்ற அளவுக்காவது 22 காப்பிகள் அச்சடித்திருப்பீர்கள் என்று தெரியும். அதற்கு மேல் எத்தனை காப்பி அடித்தீர்கள்?

– இதற்கான வாசகர்கள் யார்? அதான் ஜெமோ ஒரு சங்கின்னு ஏற்கனவே தெரியுமே இத காசு கொடுத்து வேற படிப்பாங்களா என்று ஒரு சிறு கூட்டம் லெஃப்டிலும், இவனுங்களுக்கு இதே வேலை ஜெயமோகன நோண்டுறத விட்டா வேற பொழப்பு மயிரு கிடையாது என்று ஒரு பெருங்கூட்டம் ரைட்டிலும் இந்த புக்கை டீல் செய்து விட்டுப் போனால் மிச்சமிருப்பது ஏடகத்தில் பிடிஎப் கிடைக்குமா என்று கேட்பவன்கள்தான். அவன்கள் நாய் வாயில் மாட்டிய முழுத்தேங்காய் கணக்காக கிடைக்கும் புக்கை எல்லாம் சேமித்து வைப்பான்களே தவிர எதையும் படித்ததாக சரித்திரமே கிடையாது. எனில் இதை வாங்கிப் படிக்கப் போகிறவர்கள் யார்?

– இந்த புத்தகத்துக்கு 750 ரூபாய் விலை வைக்கலாம் என்று தைரியமாக முதலில் யோசனை சொன்னது யார்?

– காலாவதியான ஜோல்னாப் பை தீவிர இலக்கிய வட்டத்தைத் தாண்டி பேஸ்புக் அளவிலாவது இந்த நூல் கவனம் பெற வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி இந்த புத்தகத்துக்கு ஜெயமோகனே தனது தளத்தில் விமர்சனம் எழுதுவதுதான். ஜெமோ அதை செய்வாரா என்று தெரியாது ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் அதற்கு ஜெமோவுக்கு இதை உங்கள் சொந்த செலவில் இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும். செய்வீர்களா?

ராஜேஷ்குமார்

அன்புள்ள தியாகராசன்

சென்றகாலங்களில் வெவ்வேறு தரப்பினரால் இந்துத்துவ ஃபாஸிஸ்ட் என முத்திரையடிக்கப்பட்டவர்கள்…

 • ராஜா ராம்மோகன் ராய்
 • விவேகானந்தர்
 • காந்தி
 • நேரு
 • பட்டேல்
 • அம்பேத்கர்
 • பாரதி
 • எஸ்.வையாபுரிப்பிள்ளை
 • புதுமைப்பித்தன்
 • க.நா.சு
 • இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு
 • அசோகமித்திரன்
 • சுந்தர ராமசாமி
 • ஜெயகாந்தன்

பட்டியல் மிக நீளம். அவசியம் கருதி சுருக்கியிருக்கிறேன். இப்பட்டியலில் சேர்வது கொஞ்சம் கடினம். நல்ல உழைப்பு தேவை. குறிப்பிடும்படி தேசத்துக்கோ மொழிக்கோ பண்பாட்டுக்கோ பங்களிப்பாற்றியிருக்கவேண்டும். பல படிநிலைகள் உள்ளன.

ஜெ

ஓர்மயுண்டோ ஈ முகம்? சுரேஷ் கோபி

முந்தைய கட்டுரையோகமும் தியானமும் நவீன உள்ளத்திற்கு எதற்கு?
அடுத்த கட்டுரைபுலி உறுமும் நீல மலை