அரசியல்நீக்கம்

ஓவியம்  barb mann

ஜெ,

நான் இரண்டு ஆண்டுக்கு முன்பு, உங்கள் இணையதளம் வழியாகத்தான் இலக்கியம் வாசிக்கத் தொடங்கினேன். என் வயது 25தான். இப்போதுதான் ஒரு வேலைக்குச் சேர்ந்து பொருளாதார தற்சார்பு அடைந்துள்ளேன். உங்கள் புதியவாசகர் சந்திப்புக்கும் வந்திருக்கிறேன். ஒரு வாரம் இரண்டு புத்தகம் வீதம் நவீன இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருந்தாலும் நான் வாசித்தவை மிகக்குறைவு. அந்த உணர்வுடன் தொடர்ச்சியாக வாசித்தபடி இருக்கிறேன்.

அறிவுலகத்தை கவனித்தபடி இருப்பவன் என்பதனால் எனக்கு நிறைய மனக்குழப்பங்கள் உண்டு. அவற்றை நான் உங்களிடம் எழுதியறிவிப்பதும் உண்டு. சிலவற்றுக்குப் பதில் போட்டிருக்கிறீர்கள். என்னுடைய அண்மைக்கால குழப்பங்கள் சில உண்டு. அவற்றைக் கேட்டால் பிழையாக ஆகாது என நினைக்கிறேன்.

இப்போது பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் தீவிரமான நேரடியான அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது அதிகம். கட்சிக்காரர்களைப்போல எல்லாவற்றையும் நியாயப்படுத்தி, சப்பைக்கட்டு கட்டி, எதிரிகளை வசைபாடி ஆவேசமாகச் செயல்படுகிறார்கள்.ஒரு சிலர்தான் ஒதுங்கி இருக்கிறார்கள். அண்மையில் தேர்தலின்போது அப்படி ஒதுங்கி இருப்பவர்களை எல்லாம் கோழைகள் என்றும், போலிகள் என்றும் வசைபாடி ஒருவர் எழுதியிருந்தார்.

இன்னொரு விஷயமும் நெருடலை உருவாக்கியது. அண்மையில் ஒரு கதைபற்றி ஒரு விமர்சகர் -பேராசிரியர் எழுதியிருந்தார். என்னைப்போன்ற ஒரு தொடக்கநிலை வாசகர் வாசித்து புரிந்துகொண்ட அளவுக்குக்கூட அவருக்கு அந்தக் கதை புரியவில்லை. இன்றைய சமகால அரசியலை வைத்து அவர் அந்தக்கதையை புரிந்துகொண்டார். அதிலும் அந்த ஆசிரியரின் அரசியலென்ன என்று இவர் நினைக்கிறாரோ அதுதான் அந்தக்கதையில் உள்ளது என்பது அவருடைய புரிதல். பரிதாபமாக இருந்தது.

இந்த அரசியல்சூழல் சோர்வளிக்கிறது. இதைத்தவிர எதைப்பேசினாலும் எல்லா தரப்பினரும் சேர்ந்து வசைபாடுகிறார்கள். இந்த அரசியல் நம்மை முட்டாளாக மாற்றிக்கொண்டே இருக்கிறது. என்னைப்போன்ற ஒருவருக்கு இது பெரிய சிக்கல்தான்

கே. ரகுராம்

அன்புள்ள ரகுராம்,

பேராசிரியர்களை எல்லாம் பொருட்டாக எடுக்காதீர்கள். அவர்களால் இலக்கியத்துக்குள் நுழைய என்றுமே இயன்றதில்லை. பெருவெட்டாக சூழலில் இருந்து கிடைக்கும் எளிய கருத்துக்களே அவர்களுக்கு புரியும். அரசியல் நிலைபாடுகள், மேலோட்டமான சமூகவியல் கருத்துக்கள், கொஞ்சம் மேற்கோள்கள்- அவ்வளவுதான் அவர்கள் அறிந்ததும் எழுதுவதும். ஓர் ஆரம்பநிலை இலக்கியவாசகனுக்குக் கூட அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஒரு வரி கூட இருப்பதில்லை. இன்னும் ஓராண்டில் பிறரைப்போல நீங்களும் பிரியத்துடன் குனிந்துநோக்கி புன்னகைக்க ஆரம்பித்துவிடுவீர்கள்

*

அரசியல் நீக்கம் பற்றி  பலமுறை எழுதிவிட்டேன், உங்களைப் போன்று புதியதாக வருபவர்களுக்காக மீண்டும்.

இன்று, ஆ. சிங்காரவேலு முதலியார் இருந்திருந்தால் அவரை அபிதான சிந்தாமணி எழுத இன்று கூச்சலிடும் கும்பல் அனுமதித்திருக்காது. அகராதியும் கலைக்களஞ்சியமும் எல்லாம் வெட்டிவேலை, கோழைத்தனம், மோசடி, பாவலா என்று வசைபாடியிருக்கும். வந்து அரசியல் பேசு, வேறேது பேசினாலும் வசைபாடுவோம் என மிரட்டியிருக்கும். சிங்காரவேலு முதலியார் வாழ்வே தவமாக அபிதான சிந்தாமணியை எழுதியது இந்தியச் சுதந்திரப்போர் உச்சம்கொண்டிருந்த காலகட்டத்தில்.

சரி, அரசியலுக்கு வந்தால் என்னாகும்? இன்று நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள் என்று கொள்வோம். நீங்கள் மோடியை எதிர்க்கவேண்டும், அல்லது ஆதரிக்கவேண்டும். மோடியை எதிர்த்தால் மட்டும்போதாது, திமுகவை ஆதரிக்கவேண்டும். திமுகவை ஆதரித்தால் மட்டும் போதாது இந்த ஆட்சியின் எல்லா செயல்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டும். அப்படி ஆதரித்தால் மட்டும் போதாது உதயநிதியை தலைவராக ஏற்கவேண்டும். தலைவராக ஏற்றால் மட்டும் போதாது விமர்சனமே இல்லாமல் கொண்டாடவேண்டும். தலைவர் என்று மெய்சிலிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் வசைதான். அப்படி திமுகவினரிடம் வசைவாங்கும் திமுகவினர் எவ்வளவு என்று பாருங்கள். மறுபக்கம், மோடியை ஆதரித்தால் மட்டும் போதாது. முஸ்லீம்களை வெறுக்கவேண்டும். இந்து வெறியனாகவேண்டும். அதன் எல்லை வரை செல்லவேண்டும். இல்லையேல் வசைதான். அதற்கென்றே கேலிப்பெயர்கள் உள்ளன.

இந்தக் கூட்டுப்பைத்தியக்காரத்தனத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு ஓர் ஆன்மபலம் தேவை. தன்னம்பிக்கை தேவை. அதைவிட முக்கியமாக, தனக்கென்று ஒரு செயற்களமும், அதில் செய்யும் செயல்களுக்கென திட்டமும், நீண்டகாலக் கனவும் தேவை. ஆங்கில அறிவியல்புனைவு சினிமாவில் ஒரு காட்சி. ஒரு விண்கலத்துள் சிலர் இருக்கிறார்கள். வெளியே மாபெரும் வெட்டவெளி. அந்த விண்கலத்தில் ஒரு சிறு விரிசல் விழுகிறது. அதன் வழியாக உள்ளே இருப்பவர்களை வெட்டவெளி பேராற்றலுடன் உறிஞ்சி வெளியே எடுக்கிறது. அவர்களை உடைத்து திறந்து துண்டுதுண்டாக, துகள்களாக ஆக்கி பரப்பிவிடுகிறது. அந்த வெட்டவெளியை, சூனியத்தை, நாம் அஞ்சியே ஆகவேண்டும்.

இந்த கூட்டுப்பைத்தியக்காரத்தனம் என்றும் இருந்தது. ஆனால் இன்று அதற்கு நவீன ஊடகங்களால் பலமடங்கு ஆற்றல் வந்துவிட்டிருக்கிறது. சமூக ஊடகங்கள் வழியாக உங்களை முழுமையாகச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அறிவுத்தளத்தில் மட்டுமல்ல, சொந்தக்காரர்கள் சுற்றத்தவர் என அனைவரும் அந்த மாபெரும் ஊடகப் பேரரக்கனின் கோடிகோடி முகங்களில் ஒன்றாக மாறி நம்மை தாக்கவருகிறார்கள். நம் செவியருகே கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் என்பது இவர்கள் தானாக அடைந்தது அல்ல. இவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதற்கும் நவீன ஊடக வளர்ச்சியே காரணம். மிகைப்பிரச்சாரம் என்பது நவீன ஊடகத்தின் ஓர் உருவாக்கம். உச்சகட்டப் பிரச்சாரம், பிரச்சாரத்தால் ஒவ்வொருவரையும் சூழ்ந்துகொள்ளுதல் (சினிமாவுக்கு அதைத்தான் செய்கிறோம். ஆகவே அது எப்படி என எனக்கு தெரியும்) அரசியல் கட்சிகள் ஊழல் வழியாகச் சேர்க்கும் கோடானுகோடி ரூபாய் பிரச்சாரத்துக்குத்தான் சென்று சேர்கிறது. அது மூர்க்கத்தனமான ஒரு பெருவணிகம். அந்த பெருவணிகம் உருவாக்கும் உற்பத்திப்பொருள்தான் பிரச்சாரம். செய்தி, கருத்து, கேளிக்கை என பல்வேறு வடிவங்களில் அது பரப்பப்படுகிறது. சமூகம் மேல் ஓயா பெருமழை என கொட்டிக்கொண்டிருக்கிறது.

வணிகரீதியிலான நவீன மிகைப்பிரச்சாரத்தை கையிலெடுத்த முதல் இந்திய அரசியல் கட்சி ராஜீவ் காந்தியின் காங்கிரஸ். ரீடிஃப்யூஷன் என்னும் தனியார் விளம்பர அமைப்பை காங்கிரஸ் 1984 தேர்தலில் பயன்படுத்திக்கொண்டதே தொடக்கம்.  பா.ஜ.க. அப்போக்கின் உச்சத்தை தொட்டது. வணிகமயப் பிராச்சாரத்தில் இனி மிச்சம் என்ன என்ற திகைப்பையே பா.ஜ.க இன்று அளிக்கிறது. பிற கட்சிகளும் அதைச் செய்தாகவேண்டியிருக்கிறது.

மிகைப்பிரச்சாரம் ஒவ்வொரு தனிமனிதனின் மண்டையையும் நிறைக்கிறது. அவனை வேறேதும் சிந்திக்காதபடி ஆக்குகிறது. மொத்தமாக ஓர் உணர்வலை, ஒரு சில கருத்துநிலைகளின் பெருக்கு நிகழும். அதில் ஒருதுளியாகத்தான் ஒவ்வொருவரும் இருக்கவேண்டியிருக்கிறது. தனிச்சிந்தனை, தனியான செயல்திட்டம், தனியான உணர்வுகள், தனியான கனவுகள் எதையும் இந்த அரசியல்வெறி அனுமதிப்பதில்லை. தனித்து நிற்கும் ஒருவனை இந்த ஒட்டுமொத்தமே வந்து அறைவதனால் அதன் விசை மிகமிக அதிகம். தாக்குப்பிடிப்பது மிகக்கடினம்.

இந்த அரசியல் அலையில் இருப்பவர்கள் எல்லாம் அரசியல்மயப்படுத்தப் பட்டவர்களா? இல்லை. அவர்கள் வெறும் பிரச்சாரத்தின் இரைகள். அரசியல்ப் பிரச்சாரம் சாதி, மொழி, மதம், இனம் என எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்கிறது. பெரும்பாலானவர்களின் அரசியல் சார்பு என்பது அவர்களின் பற்று சார்ந்த ஒரு நிலைபாடு மட்டுமே. எந்த அரசியல்கோட்பாடும் இல்லை, சாதி மத இன மொழி அடிப்படையிலேயே அவர்களின் நிலைபாடுகள் அமைகின்றன. அத்துடன் அரசியல்ப் பிரச்சாரம் தனிமனிதனின் ஆணவத்தை வளர்க்கிறது. தனியாக நிற்கையில்  பூஞ்சையானவானாக, அமைதியானவனாக இருப்பவன் கட்சிகட்டிக்கொண்டதும் ஆணவமும் வெறியும் கொண்டவனாக ஆகிவிடுகிறான்.

காந்தியின் காலகட்டத்தில் இருந்த அரசியலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இந்த அரசியலில் எந்த இலட்சியவாதமும் இல்லை. எவருக்கும் எந்த கனவும், எதிர்பார்ப்பும், செயல்திட்டமும் இல்லை. முழுக்க முழுக்க எதிர்நிலைபாடுகள்தான். எதிர்ப்பு, அதன் வெளிப்பாடான காழ்ப்பும் கசப்பும் நையாண்டியும். அந்த எதிர்மனநிலை மிகமிக விசைகொண்டது. இலட்சியவாதம் போன்ற நேர்நிலை உணர்வுகளை அனைவரிடமும் கொண்டுசெல்ல முடியாது. எதிர்நிலை உணர்வுகள் மிக எளிதில் பற்றிக்கொள்பவை.

சமூகவலைத்தள யுகத்தின் ‘Hyper Propaganda’  என்பது ஒருவகை வணிகச்சங்கிலி. உங்களை அது பிரச்சார வலையில் வீழ்த்துகிறது, அடுத்து உங்களையே பிரச்சாரகர் ஆக்குகிறது. அவ்வாறு கோடானுகோடி பிரச்சாரகர்கள் உருவாகி பெரும் ராணுவம் போல நம்மைச் சூழ்கிறார்கள். ஒரு தரப்பு அந்த உச்சப்பிரச்சாரத்தை கையிலெடுத்தால் அதே உச்சப்பிரச்சாரத்தை எதிர்த்தரப்பும் எடுத்தாகவேண்டும். ஒரு நிலைபாடு எடுத்தவர்கள் அந்த தரப்பின் கீழ்மைகளை எல்லாம் நியாயப்படுத்தியாகவேண்டும்.

உச்சகட்ட பிரச்சாரம் ஒரு தரப்பை வலுப்படுத்தும்போது இணையான எதிர்த்தரப்பு உருவாகிறது. மூன்றாம் தரப்பே இருக்க முடியாது. இருநிலைகள் உருவாகி  மாபெரும் கத்தரிக்கோல் பிளேடுகள்போல ஒன்றையொன்று எதிர்க்கின்றன. அவை ஒன்றையொன்று வெட்டுவதில்லை, நடுவே செல்லும் அனைவரையும் வெட்டுகின்றன. என் தரப்புக்கு வந்து, என் தரப்பின் எல்லா கீழ்மைகளுக்கும் நீ ஆதரவளிக்கவில்லை என்றால் நீ எதிர்த்தரப்பைச் சேர்ந்தவன், அத்தரப்பின் எல்லாக் கீழ்மைகளுக்கும் ஆதரவளிப்பவன் – இதுதான் இன்றைய பிரச்சார அரசியலின் நிலைபாடு.

இந்த அரசியல் ஒரு மனச்சிக்கலாக ஆகிவிடுகிறது. எதிர்நிலை மிக வேகமாக மனச்சிக்கலாக ஆகும். எந்த எதிர்நிலையும். அதன்பின் வேறேதும் மெய்யாகவே கண்ணுக்குப் படாது. அந்த நோய் கொண்டவர்கள் அடையும் உச்சகட்ட உணர்ச்சிகளான கோபம், வஞ்சம், வன்மம், காழ்ப்பு எல்லாமே அவர்கள் அளவில் மெய். அவர்கள் கொண்டுள்ள அரசியலுக்கு அப்பால் உண்மையாகவே அவர்களுக்கு எதுவுமே புரியாது. அவர்களால் மிக மிக எளிய ஒரு கருத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வேண்டுமென்றே திரிக்கிறார்கள் என்று நமக்குத் தோன்றும், அது உண்மையல்ல, அவர்களுக்கு அப்படித்தான் அது உண்மையிலேயே தெரிகிறது. உச்சப்பிரச்சாரம் வழியாக உருவாகும் கூட்டுமனநோயின் முதல் விளைவே இந்த புரிதலிழப்புதான்.

எவரும் அவர்களை அறியாமலேயே உள்ளே செல்லலாம். ஒரு சுழி போல அது பெருவிசையுடன் உள்ளே இழுக்கிறது ஆனால் வெளியே வருவது மிகமிகக் கடினம்.  அவர்களின் உள்ளத்தை விட பல லட்சம் மடங்கு பெரிய ஒன்று ஒட்டுமொத்தமான பிரச்சாரத்தரப்பு என்கிற கூட்டுமனம். அதை வெல்வது எளிதல்ல. பிரச்சார இயந்திரம் ஒவ்வொருவரின் உணர்வுநிலைகளை அணையாமல் பார்த்துக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அது செய்திகள், காட்சிகள், வேடிக்கைகள், வசைகள், மிகையுணர்ச்சிகள் என கொட்டிக்கொண்டே இருக்கிறது. தனிவாழ்க்கையில் ஏதேனும் நிகழ்ந்து, ஒருவர் வெளியேறினால்தான் உண்டு. தானாக வெளியே செல்ல வழியே இல்லை. ஏனென்றால் தன்னைத்தானே பார்க்க இன்றைய மாபெரும் பிரச்சாரம் அனுமதிப்பதில்லை.

சமூகவலைத்தளங்களை பொறுத்தவரை அது பெரும்பாலும் நடுவயதினர், ஓய்வுபெற்றவர்களின் உலகம். புதியதாக எதையும் கற்கவோ, சாதிக்கவோ இல்லாதவர்கள் அமர்ந்திருக்கும் இடம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அடையும் வெற்றிடத்தை முழுக்க இந்த அரசியல் நிரப்பிவிடுகிறது. இரவுபகலாக அதில் உழன்று உழன்று நேரத்தைப் போக்க முடிகிறது. அவர்கள் அங்கே பொழுதுபோக்கட்டும் என்று நாம் சொல்லலாம், ஆனால் அந்த எதிர்மறை உணர்வுகள் அளிக்கும் சோர்வின் அழுத்தம் அவர்களை மகிழ்ச்சியற்றவர்களாகவும் காலப்போக்கில் நோயாளிகளாகவும் ஆக்குகிறது. அவர்களின் செல்வாக்கால் அந்தச் சுழலில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களும் எந்தத் தனித்தன்மையும் இல்லாதவர்களாக, எந்தச் சாதனையும் இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

நான் மக்கள் அரசியல்படுத்தப்படுவதை எதிர்க்கவில்லை. அது ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் மதம்,மொழி, இனம் என அவர்கள் அரசியல்படுத்தப்பட்டால் அது ஜனநாயகம் அல்ல. எல்லாவகையிலும் அது ஜனநாயகத்திற்கு எதிரானதே. ஒன்று உயர்ந்த விழுமியங்களுக்கான இலட்சியவாத அரசியல், அல்லது தங்கள் வரிப்பணத்தை எப்படிச் செலவழிக்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசியல், இவ்விரண்டும்தான் ஜனநாயகத்திற்கு உகந்தது.

அந்த அரசியலில்கூட ஆர்வமில்லாத ஒரு வட்டம் ஒரு சமூகத்தில் இருந்தாகவேண்டும். இலக்கியம், கலை, ஆன்மிகம் ஆகியவற்றை சார்ந்து செயல்படுபவர்கள். அத்துடன் அராஜகவாதிகள், அமைப்பை  மறுப்பவர்கள் என்றும் ஒரு சிந்தனைக்குழு இருந்தாகவேண்டும். அவர்களின் அரசியல் மறுப்பு என்னும் உரிமைக்கும் இடமளிப்பதே மெய்யான ஜனநாயகம். அவர்களுக்கு இடமில்லாதபடி ஒரு சமூகம் அழுத்தமளிக்குமென்றால் அச்சமூகம் ஜனநாயகம் என்றபேரில் ஃபாசிச ஒடுக்குமுறையையே செலுத்துகிறது.

அரசியல் மறுப்பு பலவகையில் அமையலாம். ஒரு சிந்தனையாளர் அல்லது கலைஞர் சாமானியனுக்குள்ள அரசியலை மட்டுமே ஏற்றுக்கொண்டு, எஞ்சியவற்றை விலக்கிவிடலாம். நாட்டில் நிலவும் மொத்த அரசியல்கூச்சலையும் அவர் செவிகொடுக்க வேண்டியதில்லை. தனக்கான அரசியல் நிலைபாட்டை எடுத்து, வாக்களிக்கையில் மட்டும் அதை செயலாக்கலாம். அதற்கப்பால் தன்னை பிரச்சாரகனாக ஆக்கும் இன்றைய பிரச்சார இயந்திரத்தை அகற்றி நிறுத்தலாம். அதை முற்றிலும் புறக்கணிப்பதொன்றே அதை வெல்லும் வழி.

இன்னும் சிலர் முழுமையாகவே அரசியலை மறுக்கலாம். எந்தவகையிலும் அரசியலில் ஈடுபடாமலிருக்கலாம். வாக்களிப்பதையே தவிர்க்கலாம். ஆன்மிக சாதகர்கள் எவராயினும் முழுமையான அரசியல் விலக்கம் இன்றியமையாதது என நான் நினைக்கிறேன்.

என் வழி முதல் வழிதான்.என் அரசியல் கருத்துக்களை தேவையென்றால் எழுதுவதுண்டு. ஆனால் என்னை அரசியல் பிரச்சாரகனாக ஆக்க அனுமதிப்பதில்லை. என்னை அரசியல் இழுக்கிறதென்று தெரிந்தாலே சட்டென்று கதவுகளைச் சாத்திக்கொள்வேன். இங்கே ஓர் அரசியல் கருத்து சொல்வது என்பது பிசினை தொடுவது போல. அதற்கு எதிர்வினை வரும். நாம் சொன்னது திரிக்கப்படும். நாம் விளக்கமளிக்கவேண்டும், வாதாடவேண்டும், விளக்கங்களுக்கு மறுவிளக்கமளிக்கவேண்டும். நான் அவற்றை தவிர்ப்பேன். அப்படி எதிர்வினைச்சுழல் உருவானால் மிகத்தீவிரமான ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதற்குள் நுழைந்துவிடுவேன். எவ்வளவு வசைகள், சீண்டல்கள் இருந்தாலும் காதுகொடுப்பதில்லை.

ஏனென்றால் என் பணிகள் இருப்பது அரசியல் களத்தில் அல்ல. என் பணிகளுக்கு அரசியல் திசைதிரும்புதலும் தடையும் ஆகும். நான் இதுவரை தொலைக்காட்சியின் அரசியல் விவாதங்களை பார்த்ததில்லை. என் வீட்டில் தொலைக்காட்சித் தொடர்பும் இல்லை. நம் தொலைக்காட்சி அரசியல் விவாதாத்மாக்கள் எவரையுமே எனக்கு முகம் தெரியாது. சிலசமயம் அவர்களை விடுதிகளில் நேருக்குநேர் பார்க்கையில் எவரேனும் உடனிருப்போர் இன்னார் என்பார்கள். நினைவில் நிற்பதில்லை. தமிழக அமைச்சரவையில் எனக்கு ஓரிரு முகங்களே அறிமுகம். அரசியல் என் இடமே அல்ல.

இந்த தேர்ந்தல் நாட்களில் நான் செய்துகொண்டிருந்தது என்ன என என் நண்பர்கள், அணுக்க வாசகர்களுக்குத் தெரியும். முழுக்க முழுக்க வேதாந்தக் கல்வியில், தமிழ்ப்பண்பாட்டு வரலாறு சார்ந்த வாசிப்பில்  ஈடுபட்டிருந்தேன். அதையொட்டி  தமிழ்விக்கி பதிவுகள் போட்டேன். அவற்றில் பல பதிவுகளை சிறு நூல்கள் என்றே சொல்லிவிடலாம், அந்த அளவுக்கு நீளமானவை, முழுமையானவை. (சில பதிவுகள் நான் ஒவ்வாத அரசியல் கொண்டவர்களுக்கு)  ஒருநாளில் சாதாரணமாக 10 மணிநேரம் வாசித்து, எழுதினேன்.

இந்தப் பதினைந்து நாட்களில் தத்துவ வகுப்புகள் எடுக்கச் செலவிட்ட மூன்று நாட்களை தவிர்த்தால் எல்லா நாளும் தத்துவக் கல்வி, இலக்கிய வாசிப்பு.  மிகமுக்கியமான, மிகச்செறிவான, ஐம்பது நூல்களுக்குமேல் ஆராய்ந்திருக்கிறேன். நூறுக்குமேல் இணையதளங்களுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். பதிமூன்று அறிஞர்களிடம் தொடர்புகொண்டு ஐயங்கள் களைந்திருக்கிறேன்

சென்ற சில நாட்களாக ஒருநாளில் சராசரியாகப் 14 மணி நேரத்துக்கும் மேல் வேலைசெய்துள்ளேன். வீட்டில் தனியாக இருக்கிறேன். காலையில் அவித்த முட்டைகள், மதியம் ஒரே ஒரு பெரிய தோசையும் மிளகாய்ப்பொடியும், இரவு பழங்கள் என உணவு. சமையல் சாப்பாடு இரண்டுக்கும் சேர்த்தே 15 நிமிடம் ஒதுக்கினேன். பிற செயல்களுக்கு மொத்தமாக அரை மணி நேரம். ஒரு மணி நேரம் நடை, அப்போது தொலைபேசி பேச்சுக்கள். எட்டுமணி நேரம் தூக்கம் போக எஞ்சிய நேரமெல்லாம் வாசிப்பு, எழுத்து.

நான் வேதாந்தம் பயிலத்தொடங்கி 40 ஆண்டுகளாகின்றது. இந்த தீவிரக்கல்வி முன்னரும் இருந்ததுண்டு. என் இயல்பே அதுதான். ஆனாலும் இந்த நாட்கள் என்னை மிகமிக மேலெடுத்துச் செல்கின்றன. உங்கள் துறை எதுவானாலும் அதில் வெல்ல, ஓர் ஆளுமையென ஆக, இந்த அர்ப்பணிப்பு தேவை. நம் பிரக்ஞை மிக எல்லைக்குட்பட்டது. இந்த நவீன வாழ்க்கை அதில் பெரும்பகுதியை கோருகிறது. எஞ்சியதையும் சிதறடித்துக் கொண்டால் நம் அறிவும் அகமும் கீழே விழுந்த கண்ணாடிபோலத்தான். தங்களையும் அழித்துக்கொண்டு பிறரையும் அழிக்கும் இணையவீணர்களான முதியோரை நோய்த்தொற்று கொண்டவர்களை விலக்குவதுபோல அகற்றிவிடுங்கள்.

அரசியல் நீக்கம் வழியாக ஒரு மாபெரும் வசையுலகை, எதிர்மறைமனநிலைகளின் கடலை, உளச்சோர்வூட்டும் நாட்களை, காழ்ப்புகளில் உழலும் கும்பலை மொத்தமாக தவிர்த்துவிடுகிறீர்கள். செயலாற்றுக. அதன் வழி உங்களைக் கண்டடைக. உங்களுக்கே உங்கள்மேல் மதிப்பு வரும். சூழ்ந்திருக்கும் பெருந்திரள் உங்களை என்ன சொன்னால் உங்களுக்கென்ன?

ஜெ

முந்தைய கட்டுரைகுகப்பிரியை
அடுத்த கட்டுரையோகமும் தியானமும் நவீன உள்ளத்திற்கு எதற்கு?