வம்சம்

ஒரே ஒரு பூனை, அதன் இரண்டு கண்களும் இரண்டு வண்ணங்களில் இருக்கும். அது எப்படியோ எங்கள் வீட்டை தேர்வுசெய்து இங்கே தங்கலாமென முடிவெடுத்துவிட்டது. அதற்கு நாம் அனுமதி கொடுக்கவேண்டியதில்லை. பூனைகள் அதை எதிர்பார்ப்பதில்லை. அதன் வாரிசுகள் வழியாக இங்கே ஒரு வம்சவரலாற்றை அது உருவாக்கியிருக்கிறது. எல்லா பூனைகளுக்கும் இரண்டு கண்களும் இரண்டு நிறம். ஆச்சரியமென்னவென்றால் எல்லாமே பெண்கள்.

ஒரு கடுவன் அவ்வப்போது வந்து என்ன ஏது என்று பார்த்துவிட்டுப் போகும். அவன் ஒரு முதிய போர்வீரன். உடலில் தழும்புகள், ஒரு கண் உடைந்துவிட்டிருக்கும். எந்த வீட்டையும் சேர்ந்தவன் அல்ல. பெரும்பாலான நேரம் ரயில்வே தண்டவாளம் அருகே எதையாவது பிடித்து தின்றுவிட்டு மரத்தின்மேல் சிறுத்தைபோல கால்களை தொங்கவிட்டு ஓய்வெடுப்பவன்.

அவன் வந்தால் ஒரே சத்தமாக இருக்கும். மாறிமாறி இசைபாடுவதுபோல. அவனுடயது கார்வையுள்ள மியாவ். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் ங்க்கியாவ், வந்தால் இங்கிருக்கும் தீனிகளை தொடுவதில்லை. திடீரென பூனைத்தொகை சற்று கூடியிருக்கும். இது கூடவே படுத்து பிற பூனைகள் போலவே வெறித்துப் பார்த்து “என்னவே?” என்று கேட்கும். மறுநாள் காணாமலாகியிருக்கும்

இருபத்தைந்தாண்டுகளாகவே இங்கே பூனைகள் உண்டுதான். இந்த பகுதிகளில் அவை வாழும். இங்கே காலியிடங்களில், ஓடைகளில் எலிகளும் பிற உயிர்களுமுண்டு. ஆகவே தீனிக்குப் பஞ்சமில்லை. நாங்கள் வீடுகட்டிக் குடிவந்த நாளில் இங்கே முதல்முறையாக உள்ளே வந்து “புதுவீடா? குடிவந்தாச்சா?” என்று விசாரித்த வயதானபூனை கருவுற்றிருந்ததை நினைவுகூர்கிறேன்.

அதன்பின் ஹீரோ, டெட்டி என இரண்டு நாய்கள். டெட்டி டாபர்மான். அவை வந்தபின் வளைப்புக்குள் பூனை தரைமார்க்கமாக வர முடியாது. ஆனால் மரம் வழியாக , திறந்த சன்னலுக்குள் நுழைந்து வீட்டுக்குள் புகுந்து வேட்டையாடி திரும்பிச் செல்வதுண்டு. இரவில் ஓசை கேட்டு பார்த்தால் வாலைத் தூக்கி “ஒண்ணுமில்ல, நாந்தான்” என்று நிதானமாக நடந்து செல்லும்.

இந்த உலகில் பூனையை பிடிக்கும் ஆற்றல் கொண்ட நாய டாபர்மான் மட்டுமே. டெட்டி பறக்கும் காகத்தை தாவி காற்றிலேயே பிடிப்பவன். ஏழெட்டு பூனைகளை அவன் கொன்றதுண்டு. பூனை மதில்சுவரில் இருந்து காற்றுவழியாக எங்கள் இல்லத்துச் சாளரம் நோக்கித் தாவும்போது பிடித்துவிடுவான். கொண்டுவந்து வீட்டுமுன் போட்டுவிட்டு என்னை கூப்பிடுவான். அறைகூவல் மாதிரி ஒலி இருக்கும். போய்ப்பார்த்தால் செத்த பூனை.

நாயுலக நெறிப்படி அதன் மந்தைத்தலைவனான நான் அந்தப்பூனையின் ஈரலைத் தின்றுவிட்டு மிச்சத்தை டெடிக்கு கொடுக்கவேண்டும். நான் அதை குழிவெட்டிப்புதைப்பேன். டெட்டி அட முட்டாளே என எம்பி எம்பி தவிப்பான். ஹீரோவுக்கு பூனை அவன் மேலேயே ஏறிச்சென்றாலும் மாற்றுக்கருத்து இல்லை. அவன் ஒருவகையான புத்தர். ஆனால் டெட்டி மறைந்ததுமே மிகத்தீவிரமானவன் ஆகிவிட்டான்.

நாய்கள் இல்லா இடைவெளிகளில் இங்கே பூனைகள் பெருகுகின்றன. டெடி மறைந்து,ஓராண்டு கழித்து ஹீரோவும் மறைந்தபின் ஓராண்டுக்காலம் வீட்டு வளைப்பெங்கும் பூனைகள். அப்போதுதான் சிறுகுட்டியாக டோராவை கொண்டுவந்தோம். அவளை பூனை தூக்கிச் சென்றுவிடும் என வீட்டுக்குள்ளேயே வளர்த்தோம். அவள் வாழ்ந்த காலம் மீண்டும் பூனைகள் இல்லாநிலை. அவள் மறைந்தபின் இந்த பூனைவம்சம் வீட்டு வளைப்பை எடுத்துக்கொண்டது

பூனைகளை அருண்மொழி வளர்க்க ஒரே காரணம், அவை காருக்கு அடியிலும் துவைப்புயந்திரம் அடியிலும் தூங்குவது. அவற்றின் ’ஒயரிங்கு’களை எலி கடித்து பல முறை செலவு வந்துள்ளது. அடியில் வலையெல்லாம் வைத்தாலும் பயனில்லை. அந்த கணக்குக்கு பூனைக்கு வைக்கும் தீனி செலவு அல்ல.

சைதன்யா பூனைகள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருப்பாள். நாய்போல ஆவேசத்தீனி இல்லை. நாசூக்காக கனவான் தீனி. பூனைகள் சாப்பாட்டுக்காகச் சண்டை போடுவதில்லை. பெரிய பூனைகூட குட்டிகள் வந்தால் விலகிவிடும். ஒரு பூனை சாப்பிடுகையில் இன்னொன்று தலைநீட்டினால் முதல்பூனை விலகி இடம் அளிக்கும். கொறிப்பதுபோல் இருக்கும் அவை சாப்பிடுவது. சாப்பிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மை அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்து “நல்லாத்தானேய்  இருக்குங்கோய்” என ஓர் ஓசை.

அமேசானில் பூனைத்தீனி வாங்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பது அருண்மொழி வழக்கம். பூனைகளை வீட்டுக்குள் வரவழைப்பது, தொட்டுக் கொஞ்சுவது வழக்கமில்லை. அது நல்லதல்ல, பூனையின்  உடலிலுள்ள ஒரு வைரஸ் மனிதர்களிலும் வாழக்கூடியது, பலவகையான நரம்புச்சிக்கல்களை உருவாக்கக்கூடியது. வெளியேதான் சாப்பாடு வைப்பது.

அருண்மொழி இல்லாதபோது நான் தேடிப்பார்த்தால் பூனைத்தீனி இல்லை. சும்மா சோறெல்லாம் சாப்பிடாது. ஆகவே கடையில் கருவாடு வாங்கி வந்தேன். கருவாட்டை உடைத்து நீரில் கலந்து சோற்றுடன் கலந்து வைத்தால் சாப்பிடும். சோறு வைத்துவிட்டு சாப்பிடுகிறதா என்று பார்த்து நின்றேன். அம்மாப்பூனை என்னைப் பார்த்து “கண்ணுபோடுறியா பாவி, புள்ளை சாப்பிடுதுல்ல, அந்தாலே போ” என்றது.

முந்தைய கட்டுரைபடுகளம் -6 (நாவல்)
அடுத்த கட்டுரைசாயங்கால வெளிச்சத்தின் கவிதைகள்