பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வணக்கம்.
குஜராத்தில் ஒரு ஜெயின் குடும்பத்தில் 15, 16 வயதில் உள்ள இரு குழந்தைகள் துறவறம் மேற்கொண்ட சில மாதங்களில் அவர்களது பெற்றோர்கள் தங்களது 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களையும் துறந்து துறவறம் மேற்கொண்டதாகவும் இதே போல் பலர் குடும்பமாக துறவறம் மேற்கொள்வதாகவும், நேற்று செய்தித் தாளில் படித்த ஓரு செய்தி என்னை பெரு வியப்பில் ஆழ்த்தியது.
தனிப்பட்ட முறையில் துறவறம் ஏற்பது அவரவர் தேர்வு.
மொத்த குடும்பமும் ஒட்டு மொத்தமாக கடும் துறவு நோக்கிச் செல்ல, எந்த விசை இவர்களை இவ்வாறு செலுத்துகிறது?
அன்புடன்,
அருணா.
அன்புள்ள அருணா,
துறவு பற்றிய இந்திய மரபின் உருவகங்கள் ஒன்றல்ல – நுணுக்கமான வேறுபாடுகள் அவற்றில் உள்ளன.
எல்லா மதங்களிலும் வெவ்வேறு வகையில் துறவு என்னும் கருத்தாக்கம் உள்ளது. அதன் அடிப்படை என்ன என்று பலவாறாக யோசிக்கலாம். மிக எளிமையாகச் சொன்னால் இதுதான். உலகியல் ஒருவனின் அகச்சக்தியில் மிகப்பெரும்பாலான பகுதியை எடுத்துக் கொள்கிறது. அவனை உணர்வுச்சுழலில் சிக்கவைக்கிறது. பொறுப்புகளை உருவாக்கி பலருக்கும் கடன்படச் செய்கிறது. முழு அகவிசையுடன் ஆற்றவேண்டிய செயல்களுக்கு இந்த உலகியல் சுமை பெரும் தடை. ஆகவே துறவு என்னும் முறை உருவாகி வந்தது.
துறவு என்பது எப்போதும் மதத்துடன் இணைந்தது அல்ல. காங்கிரஸ் தொண்டர்கள் தேசவிடுதலையை அடையும் வரை திருமணம் செய்யாமலிருப்பது நல்லது, அதுவரை புலனடக்கம் பயிலவேண்டும் என்று காந்தி சொன்னார். தொடக்ககால கம்யூனிஸ்டுகள் பலர் மணம் புரிந்து கொள்ளாதவர்கள். அதெல்லாம் துறவுதான். பழங்காலத்தில் மாணவர்களுக்கு சொல்லப்பட்ட வாழ்க்கை என்பது துறவுதான். துறவியருக்குரிய எல்லா நெறிகளும் அவர்களுக்கும் உண்டு. பிரம்மசாரி என்ற சொல் மாணவரையே குறிக்கும். பிரம்மத்தின் பாதையில் செல்பவர் என்று பொருள்.
இந்து மரபில் தொல்காலத்தில் துறவு என்பது மெய்ஞானம் தேடுபவர்களில் ஒரு சாராருக்குரியதாக மட்டுமே இருந்தது. ரிஷிகள் உலகியலை துறந்து காட்டுக்குச் சென்றனர், ஆனால் அவர்கள் மணம் புரிந்து தங்கள் ரிஷிபத்னிகளுடன் வாழ்ந்தனர். அவர்களில் சிலரே முழுப்புலனடக்கம் பயிலும் துறவிகளாகவும், இரந்துண்டு வாழ்பவர்களாகவும் முழுமையான துறவை மேற்கொண்டனர்.
துறவுக்கு நாம் இன்று காணும் வரையறையை உருவாக்கியவர்கள் சமணர்கள்தான். பற்றற்ற நிலை என்பதே விடுதலைக்கான முதல் படி என்று சமணம் சொன்னது. அதற்கு விரக்தி என்று பெயர். இல்லறத்தாருக்கே அவர்களின் எல்லைக்குள் முடிந்தவரை விரக்தி தேவை. உலகியலில் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பற்று, உடைமை, அடையாளம் ஆகியவற்றை கைவிடவேண்டும்
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்ற குறள் இந்த சமணக்கருத்தை வலியுறுத்துவதே. அந்த மனநிலையின் முழுமையே உபேக்ஷை என அவர்களால் சொல்லப்படும் துறவு. அது எல்லாவகையான பற்றுகளையும் உடைமைகளையும் அடையாளங்களையும் விட்டுவிடுவது. குறளில் உள்ள துறவு என்னும் அதிகாரம் சமணர்கள் துறவறம் குறித்துச் கொண்டுள்ள எல்லா இலக்கணங்களையும் வரிசையாக வரையறை செய்து சொல்கிறது.
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
துறவு என்னும் நோன்புக்கு இயல்பானது உடைமை இல்லாமை. பிற எல்லாமே உளமயக்களித்து துறவிலிருந்து விலக்குபவை என பொருள் துறத்தலை முதற்படியாகச் சொல்கிறது.
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
யான் எனது என்னும் செருக்கை அறுப்பவன் வானோர்க்கும் அப்பாற்பட்ட உயர்ந்த உலகை அடைவான் என்று அடுத்தபடியாக தன்னிலை, தன்னுணர்வு என்னும் ஆணவநிலையை அழித்துக்கொள்வதைப் பற்றிச் சொல்கிறது
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
இது தொடர விரும்புபவன் யார்? பிறப்பெனும் சுழலை அறுக்க விழைபவனுக்கு உடம்பும் மிகை என்னும் குறள் துறவு கொண்டவனுக்கு தன் உடலும் சுமையே என்கிறது. உடலைப்பேணுவதுகூட துறவுக்கு எதிரானதே என்கிறது
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
என்ற குறளில் முழுத்துறவே துறவு என்று சொல்லும் குறள் மற்றவர்கள் உலகியலென்னும் வலைக்குள் எப்படியோ மீண்டும் சிக்கிக்கொள்வார்கள் என்கிறது. பற்று, தன்னிலை, உடலைப்பற்றிய அச்சம் சிறிது இருந்தால்கூட மீண்டும் சுழல்தான்.
இவ்வண்ணம் துறவை முன்வைக்கும் குறள் பற்றை விடுவதற்குரிய வழி பற்றறுத்து நின்றிருக்கும் தீர்த்தங்காரர் (அ) அருகர்களின் மீதான பற்று மட்டுமே என்கிறது. சமணர்களின் இறுதி நெறி அது. துறவிக்கு இருக்கவேண்டிய ஒரே பற்று துறவுக்கரசர்களான அருகர்கள் மீது மட்டுமே.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
சமணர்களில் துறவு பல நிலைகள் கொண்டது. இல்லறத்தாருக்குரிய ஐந்து அகநெறிகளுடன் பலவகையான அன்றாட நோன்புகளும் அவர்களுக்கு உண்டு. உயிர்க்கொலையுடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளாமல் இருத்தல், உயிர்க்கொலை என கருதத்தக்க பலவகை உணவுகளை ஒதுக்குதல் என்பவை துறவுக்கு நிகரானவைதான்.
துறவின் உச்சம் என்பது சமணர்களின் திகம்பரர்கள். திசையணிந்தோர் என தமிழில் சொல்லலாம். (திக்+ அம்பரர்) குறள் சொல்லும் முழுத்துறவின் இலக்கணம் அவர்களுக்கே பொருந்தும். அருகர் அன்றி பற்றே அவர்களுக்கு இருக்கலாகாது. உடலும் சுமையே. ஆகவே ஆடை அணிவதில்லை. வெறுந்தரையில் வான்கீழ் படுத்து உறங்குவார்கள். வெறுங்கையில் உணவு வாங்கி உண்பார்கள். ஒருநாளில் ஒருவேளை இரந்து உண்பார்கள்.
சமணர்களிடமிருந்து துறவு என்னும் கருத்து பௌத்தத்திற்கு வந்தது. பிக்ஷு என்னும் உருவகம் பௌத்தத்தில் முக்கியமானது. பிக்ஷை எடுப்பவன். அதிலிருந்து உருவானதே பிச்சை என்னும் சொல். பிக்ஷுவுக்கான கடுமையான நெறிகள் பலவற்றை பௌத்தம் வகுத்தது. ஓர் ஊரில் மூன்றுநாட்களுக்கு மேல் தங்கலாகாது, இரவில் ஊருக்குள் தங்காமல் சுடுகாடு முதலிய இல்லறத்தோர் வர அஞ்சுமிடங்களில் தங்கவேண்டும், இரந்து மட்டுமே உண்ணவேண்டும்,உடைமை என அவர்கள் கொண்டு செல்லவேண்டியது அணிந்திருக்கும் ஆடை, உணவை பெற ஒரு திருவோடு ஆகியவை மட்டுமே.
சமணம்,பௌத்தம் ஆகியவை துறவியருக்குரிய அமைப்புகளை உருவாக்கின. சமணப் பள்ளிகள் சமணத்துறவியர் தங்குமிடங்கள்.(பள்ளிகொள்ளும் இடங்கள்) அங்கே அவர்களுக்காக உருவாக்கப்பட்ட கற்படுக்கைகள் இன்று ஏராளமாக கிடைக்கின்றன. பௌத்தம் பிக்ஷுக்களின் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியது. புத்தம், தம்மம், சங்கம் ஆகிய மூன்றும் பௌத்தத்தின் அடிப்படைகள். பௌத்தத்தை ஓர் அமைப்பாக நீடிக்கச் செய்தவை சங்கங்களே. அவை பிக்ஷுக்களுக்கான பயிற்சியிடங்களாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் இடங்களாகவும் செயல்பட்டன.
அத்துடன் சேவை வழியாக மதத்தை பரப்புவதென்பது பௌத்தம், சமணம் ஆகியவை தலைக்கொண்ட வழிகள். அன்னம், அபயம், கல்வி, மருத்துவம், மெய்ஞானம் என்னும் ஐந்து கொடைகள் வழியாக சமணமும் பௌத்தமும் பரவின. துறவு, துறவியர் மடம், சேவை வழியாக மதம்பரப்பு மிஷனரி இயல்பு ஆகிய மூன்றுமே சமண,பௌத்த மதங்களில் இருந்தே கிறிஸ்தவ மதத்திற்குச் சென்றன. கிறிஸ்தவ மரபில் முழுத்துறவு அல்லது கடுநோன்புவாதிகள் ஞானவாதிகள் (Gnosticism) எனப்பட்டனர். தொடக்கத்தில் கத்தோலிக்க அமைப்பால் விலக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட அவர்கள் பின்னர் புனித பிரான்ஸிஸ் காலத்தில் கத்தோலிக்க மரபுக்குள் வந்தனர். கத்தோலிக்க பாதிரியார்கள் துறவிகள்தான். பெண் துறவிகள் கன்யாஸ்திரீகள் எனப்படுகின்றனர்.
இஸ்லாமில்கூட கடுநோன்பாளர்கள் நபிகளின் காலத்திலேயே இருந்துள்ளனர். அவர்களை நபிகளின் குகைத்தோழர்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. நபிகளுடன் இணைந்து தவம்செய்தவர்கள். பின்னர் இஸ்லாமிய மரபுக்குள் இறைநேசர்கள் எனப்படும் துறவியர் உருவாயினர். இறைநாட்டம் கொண்டு பிற அனைத்தையும் துறந்தவர்கள் அவர்கள். சூஃபி மரபிலும் பொது இஸ்லாமிய மரபிலும் அவர்கள் உண்டு. அவர்கள் மறைவுக்குப்பின் அவர்களின் அடக்கவிடமே தர்ஹா ஆக வழிபடப்படுகிறது.
பழைய இந்து மரபில் இரண்டுவகையான துறவுகள் இருந்தன. கல்வி (பிரம்மசரியம்) இல்லறம் (கிருஹஸ்தம்) வானப்பிரஸ்தம் (கானுறைதல்) துறவு (சன்யாஸம்). இவற்றில் வானப்பிரஸ்தம் துறவின் முதல்படி. அரைத்துறவு. அடுத்தபடியான சன்யாஸம் என்பது முழுத்துறவு. நன்மைக்காக தன்னை தூய்மைசெய்து கொள்வது. பிரம்மசரியம் என்பதும் துறவுபோன்றதே. உலகியலைத் துறந்து கல்விக்கென அர்ப்பணித்துக் கொள்ளல்.
பௌத்த சமண மதங்களுக்குப் பின்னரே துறவு என்பது இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது. இந்து மதத்திலும் துறவு முக்கியமான ஓரிடத்தை எடுத்துக் கொண்டது. மதத்தின் பொருட்டு துறவுகொள்ளுதல், மெய்நாட்டத்தின் பொருட்டு துறவு கொள்ளுதல் ஏற்புடையதாகியது. பட்டினத்தார் ‘சோறிடும் நாடு, துணிதரும் குப்பை’ என தன் வாழ்க்கைமுறை பற்றிச் சொல்கிறார். அது சமண திகம்பரர்களின் வாழ்க்கைதான். அவ்வண்ணம் முற்றிலும் பற்றறுத்து வாழ்பவர்கள் இந்து மரபில் பரமஹம்சர்கள், சித்தர்கள் என்று சொல்லப்பட்டனர்.
அதிலிருந்து வேறுபட்டு பலவகையான துறவுகள் இந்து மரபில் உள்ளன. ஏழாம் நூற்றாண்டு முதல் இந்து மரபுக்குள் பக்தி இயக்கம் உருவாகி வலுப்பெற்றபோது இறைவனுக்கு தன்னை அளித்து ஊர் ஊராகச் சென்று இறைவழிபாடும் துதியும் செய்து வாழும் நாடோடித் துறவியர் உருவாயினர். அவர்களுக்கு இந்தியா முழுக்க ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெயர் சொல்லப்படுகிறது. பொதுவான பெயர் பாகவதர். பின்னர் மடங்கள் போன்ற அமைப்புகள் உருவாயின. அவற்றை துறவியர் நடத்துவது முறைசெய்யப்பட்டது. அவை சமணப்பள்ளிகள், பௌத்த சங்கங்களின் அதே பாணியில் அமைந்தன
இந்தியாவில் சைவ, வைணவ மதங்களுக்குரிய பலவகையான துறவியர் அமைப்புகள் உருவாயின. அவை வரலாற்றின் இடர்மிக்க காலகட்டங்களில் உறுதியான அமைப்புகளாக மதத்தை காத்துநின்றன. கல்வி நிலையங்களாக தத்துவத்தை கற்பித்தன. அவற்றில் உள்ள துறவியருக்குரிய நெறிகள் வெவ்வேறானவை. நாடோடிகளான துறவிகளுக்கான நெறிகள் அவர்களுக்கில்லை. அவர்கள் உடைமைகளை வைத்துக் கொள்வதும், செல்வத்தை கையாள்வதும் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களின் நிறுவனத்தலைவர்கள் துறவரசர்கள் (யதிராஜர்) என்றே அழைக்கப்பட்டனர். அரசர்களுக்குரிய அரியணை, பல்லக்கு, கொடி, பரிவாரம் போன்றவை அவர்களுக்கும் உள்ளன.
வைணவ மடங்களில் இளமைத்துறவு இல்லை. இல்லறம் முடிந்து கானேகும் காலகட்டத்தில் துறவு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சைவமரபு துறவு என்பது இளமையிலேயே மேற்கொள்ள வேண்டியது என்கிறது. இளமையிலேயே கற்கும் ஆற்றலும், உடலாற்றலும் மிகுதி. அதை உலகியலுக்காகச் செலவழிக்கலாகாது, கல்விக்கும் ஊழ்கத்திற்கும் செலவழிக்கவேண்டும் என்கிறது. வைணவ மரபு தூயபக்தி, அதன் உணர்வுநிலைகளை முன்வைப்பது.ஆகவே அது புலனடக்கத்தை வலியுறுத்தவில்லை. சைவ மரபு பலவகையான யோகப்பயிற்சிகளை முன்வைப்பதனால் புலனடக்கம் இயல்வதுதான் என்று கூறுகிறது.
துறவு என்பது எவருக்கும் முற்றிலும் அன்னியமானது அல்ல. சிறிய அளவிலேனும் துறவை அறியாத, பயிலாத எவருமில்லை. சபரிமலைக்கு மாலைபோடுவது ஒரு தற்காலிகத் துறவுதான். வெவ்வேறு வழிபாட்டிடங்களுக்குச் செல்லும்பொருட்டு கொள்ளும் நோன்புகள் துறவுகளே. ஏதேனும் ஓர் இலக்கின் பொருட்டு நமக்கு நாமே சிலவற்றை விலக்கிக்கொள்வதும் துறவே. அத்துறவுகள் நம் உலகியலுக்குள் நாம் மேற்கொள்ளும் குறுகிய கால வேறுவாழ்க்கைகள். அவை உலகியலை கொஞ்சம் விலக்க, வேறொன்றாகி நின்று வாழ்க்கையை அணுக நமக்கு பயிற்சி அளிக்கின்றன.
இந்து மரபில் துறவு என்பது ஒருவர் அவரே எடுக்கவேண்டிய முடிவு. முதலில் அவர் பிரம்மசரிய நெறியை ஏற்கவேண்டும். ஆசிரியருடன் வாழ்ந்து துறவை பயிலவேண்டும். ஒரு புள்ளியில் அவர் துறவியாகலாம் என ஆசிரியர்தான் முடிவுசெய்யவேண்டும். ஆசிரியர் காவி அளித்து அவரை துறவியாக ஆக்குகிறார். அது ஒருவகைச் சாவு. உலகியல் வாழ்க்கையில் ஓர் அடையாள அழிவை அவர் அடைகிறார். தன் பெற்றோருக்கும் மூதாதையருக்கும் அவர்கள் உயிரோடிருந்தாலும்கூட அவர் அன்னம் அளித்து நீத்தார்கடன்களை செய்யவேண்டும். பெயர், குலம், குடும்பம் என எல்லாவற்றையும் துறந்து புதிய பெயருடன் அவர் இன்னொரு வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்துத்துறவிகள் திருமணம், சாவு போன்ற உலகியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாகாது. குடும்பத்தினருடன் தொடர்பைப் பேணலாகாது. அவர் தன் முந்தைய வாழ்க்கைக்கு முற்றிலும் அன்னியரே.
சமணர்களின் துறவு வேறுபட்டது. அவர்களின் உலகியலே துறவு அம்சம் கொண்டது. துறவின் அடுத்தபடியை நோக்கிச் செல்லலாம் என அவர்கள் கூட்டாக முடிவெடுக்க முடியும். அது முழுத்துறவு அல்ல. வெள்ளுடை அணிந்து உலகியல் செயல்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வது. முதலில் செல்வத்தையும் பின்னர் உறவுகளையும் துறக்கிறார்கள். துறவியருக்கான அமைப்புகளை சார்ந்து வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் முழுத்துறவை நோக்கிச் செல்லக்கூடும். அது அவர்களின் வளர்ச்சிப்படிநிலை சார்ந்தது.
சமணர்களின் நெறி அது. அதை இந்துவாக நின்று புரிந்துகொள்ள முடியாது. ஒருவர் முற்றிலும் துறந்து தெருவில் பிச்சை எடுத்து வாழ்வதை கிறிஸ்தவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இளம்பெண்கள் துறவிகளாகி கன்யாஸ்திரீகள் ஆவதை இந்துக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எளிய நோக்கில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது வழக்கம். அந்த மதம் அளிக்கும் வழி அது, அதை நம்புபவர்கள் அதை ஏற்கிறார்கள் என்று கொள்வதே சரியானது.
ஜெ
சைவசித்தாந்த வகுப்புகள், முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு [email protected]